காம்பிர்- ஜாகிர் அவுட் கலக்கத்தில் இந்தியா!நாட்டிங்காம்: இன்று டிரன்ட்பிரிட்ஜில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியை பெரும் கவலையுடன் சந்திக்கிறது இந்தியா. முன்னணிப் பந்து வீச்சாளரான ஜாகிர்கான் இப்போட்டியில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேபோல காயமடைந்த கெளதம் கம்பீரும் ஆட மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு வரை பெரிய பில்டப்போடு இந்திய அணியை பேசி வந்தனர். ஆனால் அங்கு இந்தியா சொதப்பி வருவதைப் பார்த்து இந்திய ரசிகர்கள் எரிச்சலடைய ஆரம்பித்துள்ளனர்.

சச்சின் லார்ட்ஸ் மைதானத்தைக் கலக்கப் போகிறார், செஞ்சுரி அடிக்கப் போகிறார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் அவரை காய்ச்சல் வந்து ஆடிப் போய் விட்டார். அடுத்து ஜாகிர்கானுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கம்பீருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. இந்த அலங்கோலத்தால், டோணியே பந்து வீச வேண்டிய நிலையை லார்ட்ஸ் கண்டது. மேலும் முதல் போட்டியில் படு தோல்வியையும் இந்தியா சந்தித்தது.

வழக்கம் போல, டிராவிடும், வி.வி.எஸ். லட்சுமணும் மட்டும் தனியாக பள்ளம் பறிக்க வேண்டிய நிலை. முன்னணி வீரர்களில் சுரேஷ் ரெய்னா மட்டும் சற்று சொல்லிக் கொள்ளும்படி ஆடினார். மற்ற வீரர்கள் எந்த வகையிலும் டிராவிட், லட்சுமணுக்கு உதவியாக இல்லை.

இந்த நிலையில் இன்று டிரன்ட்பிரிட்ஜில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதிலாவது இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது. ஆனால் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கம்பீர், ஜாகிர்கான் இப்போட்டியி்ல ஆட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனால் பந்து வீச்சு பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜாகிர்கானுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தும், கம்பீருக்குப் பதில் யுவராஜ் சிங்கும் ஆடக் கூடும் என்று தெரிகிறது.

அதேசமயம், சச்சின் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்தப் போட்டியிலாவது இந்தியா வெல்வதற்கு சச்சின் உதவியாக இருக்க வேண்டும்.

அதேபோல கேப்டன் டோணியின் பேட்டிங் மோசமாக இருப்பதும் ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அவரும் சற்று பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவிக்க முயற்சிப்பது அணிக்கு நல்லது என்று அனைவரும் கருதுகின்றனர்.

இந்திய அணியில் ஷேவாக் இல்லாதது அணியை படு பலவீனமாக்கியுள்ளது கண் கூடாகத் தெரிகிறது. மேலும் டிரன்ட்பிரிட்ஜில் ஷேவாக் அதரடி செஞ்சுரியை அடித்தவர் என்பதால் இன்றைய போட்டியில் ஷேவாக் இல்லாதது இந்தியாவுக்கு மிகப் பெரிய பலவீனம் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் அடைந்த தோல்வியை மிகக் கேவலமாக விமர்சித்து வருகிறார்கள் இங்கிலாந்து முன்னாள் ஆட்டக்கார்ரகள். ஏதோ இந்தியாவின் கதை இத்தோடு முடிந்து விட்டது என்பது போலவும் பேசி வருகிறார்கள். அவர்களது வாயை அடைக்கவாவது இந்தியா இன்றைய போட்டியை அதரடியாக தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதை விட முக்கியம், இன்றைய போட்டியில் இங்கிலாந்து வென்று விட்டால், டெஸ்ட் தொடரை வென்று விட்டால், இந்தியா தர வரிசையில் தனது முதலிடத்தை இழக்க நேரிடும் என்ற அபாயமும் உள்ளது என்பதால் இன்றைய போட்டியும், இனி வரும் போட்டிகளும் இந்தியாவுக்கு மிக மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 நன்றி தட்ஸ் தமிழ்
 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே கமெண்ட்ஸ் பகுதியில்! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2