Thursday, June 30, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  பகுதி 71


1.   கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லேன்னு தலைவர் சொல்லிட்டாராமே!
கொடுத்தாலும் வாங்கிறதுக்கு அங்கே தொண்டர்கள் யாரும் இல்லையே!

2.   அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க?
சூரணம் விக்கிறதா சொல்லி பல பேரோட சொத்துக்களை ஜீரணம் பண்ணிட்டாராம்!

3.   பேஸ்புக்குல நம்ம படத்தோட டீசருக்கு நிறைய வரவேற்பாமே!
ஆமா! சின்ன குழந்தை கூட டீஸ் பண்ணி  கமெண்ட் பண்ணிகிட்டு இருக்கு!


4.   தன்னோட வழக்கை சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க தலைவர் விரும்பலையாமே?
கோடி கோடியா சொத்து இருக்கிறப்ப சைபர் போலீஸ் விசாரிக்கிறது இழுக்குன்னு நினைக்கிறாராம்!

5.    ஆனாலும் அந்த சர்வருக்கு நக்கல் அதிகம்?
  எப்படி சொல்றே?
சோலாப் பூரி உப்பலா இருக்க வேணாமான்னு கேட்டா நீங்க ஏற்கனவே உப்பி இருக்கீங்க! இன்னமும் உப்பணுமான்னு கேக்கறான்!

6.   எதிரி எல்லை தாண்டி விட்டான் மன்னா!
  நம் கொல்லைக் கதவை திறந்தே வைத்துவிடுங்கள் அமைச்சரே!

7.   அந்த வக்கீல் டேபிள் மேல ஏன் ஸ்பேனர் செட் வைச்சிருக்காரு?
அவர் கேஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேய்ஞ்சிடுவாராம்!


8.   ”கேஸ் ட்ரபுள்”னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?
அடைச்சி  வெச்சி பீஸை பிடுங்கிட்டுதான் விட்டாரு!

9.   சீரியல் நடிகையை பொண்ணு பார்க்க போனது தப்பா போச்சு!
  ஏன்?
காலையில வரச்சொல்லிட்டு நைட்டு தான் பொண்ணையே காமிச்சாங்க!

10. ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடுவேன்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே எதுக்கு?
ஆத்துமணல் வியாபாரம் பண்றதைதான் அப்படி சிம்பாலிக்கா சொல்றாரு!

11.  பிறந்த நாளும் அதுவுமா உன் பொண்டாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டான்னு சொல்லிட்டிருந்தேயே என்ன ஆச்சு!
புதுசா ஒரு பட்டுப்புடவை வாங்கி கட்டிக்கிட்டான்னு சொன்னேன்!

12. புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?
  மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!

13.  தலைவருக்கு நடிக்க தெரியாது….!
ஓ அதனாலே தான் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தாரா?!

14.  எங்க அம்மா கூட சண்டை போடலைன்னா என் மனைவிக்கு தூக்கமே வராது…!
அதுக்காக ஊருக்கு போயிருக்கிற உங்க அம்மா கூட வாட்ஸப் சாட்டீங் ல சண்டை போடறதெல்லாம் ரொம்ப ஓவர்!

15. புதுசா கிரகப்பிரவேசம் ஆன வீட்டுல சிலைகளை பதுக்கி வச்சி இருந்தாங்களாமே?
அப்ப அது விக்கிரக பிரவேசம் ஆன வீடுன்னு சொல்லு!

16.  அந்த சாமியார் போலின்னு எப்படி சொல்றே?
முக்தி அடைய வழி காட்டுங்கன்னு சொன்னா கூகூளில் போய் தேடுன்னு சொல்றாரே!

17.  உங்க கணவருக்கு வந்திருக்கிறது சிவியர் அட்டாக்! எந்த அதிர்ச்சியான தகவலையும் சொல்லக் கூடாது…!
   நீங்கதான் அவருக்கு வைத்தியம் பாக்கறீங்கன்னு கூட சொல்லக் கூடாதா டாக்டர்!

18.  நம் மன்னர் எதிரியை கிட்டே நெருங்கவே விடமாட்டார்!
  துரத்தி அடித்து விடுவாரா?
 இவர் தூரமாய் ஓடிவந்துவிடுவார்!

19. தலைவர் கட்சியை தன் கைக்குள்ள வைச்சிருந்தார்!
  இப்ப?
எல்லோரும் கையை கழுவிட்டு போயிட்டாங்க!


20.  வீடு கட்ட லோன் வேணும்!
   எப்படி கட்டுவீங்க!
செங்கல்லும் சிமெண்ட்டும் வச்சுத்தான்!

21.  அந்த டாக்டரை பேஷண்ட் எல்லோரும் தெய்வமா மதிக்கிறாங்க!
எங்க டாக்டர் பேஷண்ட் எல்லோரையும் தெய்வமா மாத்திருவாரு!

22.  எடை கொறைச்சலா இருக்குதுன்னு இன்குபேட்டரில வச்சிருக்கிற குழந்தை யாருது?
       ரேசன் கடைக் காரரோடுதாம்!

23. மன்னர் இப்போதெல்லாம் காஷாயம் உடுத்திக் கொண்டு வருகிறாரே ஏன்?
    தவ வாழ்க்கை வாழ்வதாக சிம்பாலிக்கா சொல்கிறாராம்!

24.  போர் என்று வந்ததும் மன்னர் “வீறு” கொண்டு எழுந்துவிட்டார்!
       அப்புறம்!
  வேறு வழியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கிவிட்டார்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!Wednesday, June 29, 2016

சாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு!

கதம்ப சோறு!

சுவாதி கொலை!

        நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை வேளையில் பலர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கிறார் சுவாதி. ரயில்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க ஒருவர் கூட இதை தடுக்கவோ கொலையாளியை விரட்டி பிடிக்கவோ முனையவில்லை என்பது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் செத்துப்போனதை காட்டுகிறது. இதற்கிடையில் பேஸ்புக்கில் சிலர் இறந்த பெண்ணிண் ஜாதியை காரணம் காட்டி அவர்கள் திமிர் பிடித்தவர்கள் வருந்த வேண்டாம் ஜாதி மோதலை உருவாக்கி வருகின்றனர். ஒய். ஜி மகேந்திராவும் தன் பங்கிற்கு முஸ்லிம் நபர்தான் கொலை செய்தது என்று ஒரு பெயரைச் சொல்லி பின்னர் நான் சொல்லவில்லை என்று பல்டி அடிக்கின்றார். பட்டப்பகலில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பலர் கூடும் இடத்தில் நடந்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதை பேசாமல் இப்படி ஜாதிய நோக்கோடு இந்த கொலை பேசப்படுவது ஆரோக்கியமானது இல்லை!

 கெஜ்ரிவால்- மோடி மோதல்!

     டெல்லியில் ஆட்சியை பிடித்தாலும் அர்விந்த் கெஜ்ரிவால் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் இருக்கிறார். இந்திய தலைநகர் என்பதால் சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் டெல்லி மாநிலத்தை நிர்வகிப்பதில் மாநிலத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. துணை முதல்வர் உட்பட பல எம்.எல்.ஏக்களை கைது செய்து விடுவித்து உள்ளனர். இந்த மோதல் தொடருமாயின் மாநிலத்திற்கு அது நன்மையளிக்காது. அதே சமயம் தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை இப்படி மோதல் போக்குடன் நடந்து கொள்வது மத்திய அரசுக்கு உகந்தது இல்லை.

ஐரோப்பன் யூனியனில் இருந்து பிரிட்டன் விலகல்!
   ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது பாதிக்கும் மெற்பட்டோர் இந்த விலகல் முடிவை ஆதரித்ததால் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலக இருக்கிறார். அவர் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பினார். தெற்காசியாவில் பொது நாணயமாக ரூபாயை அறிவிக்க வேண்டும் ஒரு கோரிக்கை இருந்தது. யூரோவின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த கோரிக்கை வலுவிழந்து உள்ளது. பிரிட்டன் விலகலால் பங்கு சந்தைகளில் 140 லட்சம் கோடிகள் இழப்பை சந்தித்தது கவனித்தக்க ஒன்று.

சாதனைப் பெண் டுட்டி சந்த்!

   ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தகுதிபெற்றுள்ளது. இந்த சாதனையை படைத்த பெருமைக்குரியவர் டுட்டி சந்த். கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச தடகளப்போட்டியில் நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.32 விநாடிகளில் எட்டினால் ஒலிம்பிக் வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் கலந்துகொண்ட டுட்டிசந்த் நூறு மீட்டர் தூரத்தை 11.30 விநாடிகளில் கடந்து முடித்தார்.  இதன் மூலம் பி.டி உஷாவிற்கு பிறகு ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் வீராங்கணை என்ற பெருமையை பெற்றார் டுட்டிசந்த். இந்த போட்டியில் பைனலில் 11.24 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும் வென்ற டுட்டி சந்த் தனது சொந்த தேசிய சாதனையையும் தகர்த்தார்.

விஷால் வரலட்சுமி காதலா?

     நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமாரை எதிர்த்து போட்டியிட்டாலும் அவரது மகல் வரலஷ்மியோடு காதலில் மோதல் இல்லாமல் உள்ளாராம் விஷால். விழாக்களில் இணைந்து காணப்படும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் இருவரும் இணைந்திருப்பது போன்ற படம் வெளியாக ரசிகர்கள் கல்யாணம் ஆகிவிட்டதா? என்றும் காதலிக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்விக்கணைகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால் அந்த படமே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என்று மழுப்பலாக பதில் தெரிவித்தாலும் விரைவில் இருவரும் கைகோர்ப்பார்கள் என்று அவர்களது ரசிகர்கள் நம்புகின்றனர்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
   மழைக்காலத்தில் ஜன்னல் கதவுகள் சட்டத்தோடு ஒட்டிக் கொண்டு திறக்க சிரமமாக இருக்கும் சிறிது கோல மாவை உப்புத்தூளுடன் ஜன்னல் விளிம்பில் தூவினால் திறக்க இலேசாக இருக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் பாலில் மஞ்சள்தூள், சுக்குத்தூள் சிறிதளவு போட்டு குடித்துவர மூட்டுவலி குணமாகும்.

மாதவிடாய் வயிற்றுவலி பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி பிரச்சனை வராது,

சிங்கில் பாத்திரங்களை தேய்க்கும் போது நாளடைவில் அந்த இடம் சொரசொரப்பாகிவிடும். இதை தவிர்க்க அங்கு ரப்பர் ஷீட் போட்டு அதன் மீது பாத்திரங்களை வைத்து துலக்கினால் சத்தமும் வராது. இடமும் தேயாது.

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும் போது மஞ்சள் வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். சப்பாத்தி மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

கிச்சன் கார்னர்!
  ரெடி தோசை!
    கோதுமை 2 கப், புழுங்கல் அரிசி 1 கப், பச்சரிசி 1 கப்  உ.பருப்பு ¼ கப் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன். இவற்றை நன்கு சுத்தம் செய்து மாவு மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
   தோசை அவசரமாக தேவைப்படும் நேரத்தில் ஒரு மணி நேரம் முன்பாக இந்த பொடியை தேவையான அளவு நீரில் கரைத்து வைத்து விட வேண்டும். பின்னர் மாவுடன்  புளித்த மோர், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தோசை வார்த்து எடுக்கவும்.
    குறிப்பு உதவியவர்: கே.ஆர் மோகனா, ஹரியானா ( பழைய மங்கையர்மலரில் இருந்து)

மெஸ்ஸி ராஜினாமா!

    கோபா கோப்பை கால்பந்து தொடர் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் தோற்று வெளியேறியது அர்ஜெண்டினா. அந்த சோகம் தீர்வதற்குள் தனது கேப்டன் பதவியை துறந்தார் மெஸ்ஸி. முக்கியமான நேரத்தில் தனக்கு வந்த ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணாக்கிய  அவர்  மூன்று முறை முக்கிய தொடர்களில் அர்ஜெண்டினா அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றும் ஒருமுறை கூட  வெற்றி பெற வைக்கத் தவறினார். இந்த சோகத்தில் தனது ராஜினாமாவை அறிவித்தார் மெஸ்ஸி.

படித்து ரசித்தது:

 ஒரு முறை சேதுபதி மன்னரை அவரது மாளிகையில் சந்திக்கச் சென்றார் உ.வே. சாமிநாதையர். அப்போது மன்னர் வெளியில் சென்றிருந்தார். அங்கு மன்னரை சந்திக்க வருவோர் அமர்வதற்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்து காத்திருந்தார் உ.வே. சா.
   தனக்காக தமிழறிஞர் காத்திருப்பதை அறிந்து அவசர அவசரமாக அவைக்கு வந்த சேதுபதி மன்னர்  ஐயரை வணங்கினார். பின்னர் தன்னுடைய ஆசனத்தில் அமராமல் ஐயர் அமர்ந்திருந்த ஆசனத்தின் பக்கத்தில் அமர்ந்தார். மன்னர் தன்னுடன் அமர்ந்தது கண்டு மகிழ்ந்த உ.வே.சா  சமஸ்தான அதிபதி அவர்களே! எனக்கு சம ஸ்தானம் தந்தீர்கள் மகிழ்ச்சி! என்றார். மன்னரும் புரிந்துகொண்டு சிரித்தார்.  பின்னர் நெடுநேரம் அளவளாவினர். மன்னர் தன் கைக்கெடிகாரத்தை பார்த்தார். குறிப்பறிந்த ஐயர் அவரிடம் ‘போது மானது. எனவே போதுமானது.  போது( பொழுது) என்ற வார்த்தை சிலேடையை மன்னர் மட்டுமல்ல சபையோரும் மிகவும் ரசித்தனர்.
(பழைய வாரமலர் திண்ணை பகுதியில் படித்தது)

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, June 28, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 11

போகாதே!

”காலம் கெட்டுக்கிடக்கு! ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட் பக்கம் கூட்டம் இருக்கே பயமில்லைன்னு    தனியா போய்  உயிரை விட்டுறாதே  ஜாக்கிரதை! ஆமாம் சொல்லிப்புட்டேன்!” என்று காலேஜுக்கு கிளம்பிய பேத்தியை எச்சரித்தாள் பாட்டி!

அட்வைஸ்!
    ஜங்க் புட் நிறைய எடுத்துக்காதீங்க! அது உடம்புக்கு நல்லதில்லை! அது முழுசும் கொலஸ்ட்ரால் நிறைய இருக்கு! எப்ப செஞ்சதுன்னு தெரியுமா? குர்குரெ! லேஸ், பர்கர், பீட்ஸான்னு நிறைய சாப்பிட்டா அப்புறம் உடம்பு கெட்டுப் போகாம என்ன செய்யும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவனிடம் அறிவுரை வழங்கியவன் கைகளில் இருந்தது பெரியதொரு மிக்சர் பாக்கெட்.

வீக் எண்ட்!
   ”ஊருல தாத்தா செத்து போயிட்டாராம்!” ஞாயிறு அதிகாலையில் செய்தி வந்ததும் ”இந்த வீக் எண்டும் பாழாப் போச்சா! ஞாயிற்றுக்கிழமை பார்த்தா சாகனும்!” என்று புலம்பிக் கொண்டிருந்தான் பேரன்.


இனிப்பு!
   சொற்பொழிவில் இனிக்க இனிக்க பேசிய சொற்பொழிவாளர் பேசி முடித்ததும் கேட்டார் “ சக்கரை இல்லாம கொஞ்சம் காபி கிடைக்குமா?”

முழம்!

   முல்லை கதம்பம் முழம் முப்பது ரூபா! அதுக்கு கொறைச்சு தரமுடியாது! இஷ்டபட்டா வாங்கு என்று கறாராக கூறிய பூக்காரி குறைத்துக் கொடுத்தாள் கால் முழம் குறைவாக.

லஞ்சம்!
   பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரியை விடுவித்தார்கள் ஐம்பதாயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு.  

எஸ்கேப்!

    காலையில் இருந்து போன் அடித்துக் கொண்டிருந்தது. ஆஹா இவர்கிட்டே சிக்க கூடாதே என்று எடுக்காமல் அவாய்ட் செய்ய எஸ். எம். எஸ் வந்து பேசச் சொன்னது. டபாய்த்துவிட்டு ஆபீஸ் சென்று வாட்ஸப் பார்க்க சாட்டில் வந்தார். பிஸியாக இருப்பதாக சொல்லி கட் செய்ய லஞ்ச் ப்ரேக்கில் நேரே வந்துவிட்டார். அவாய்ட் பண்ணாதீங்க சார்! ரொம்ப கம்மியான இண்ட்ரஸ்ட்! செக் கொடுத்தா போதும்! எங்க பேங்க்ல நீங்க ஹோம் லோன் வாங்கிடலாம். செக்யூரிடி எல்லாம் நான் பாத்துக்கறேன்! என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த மேனேஜர்.

 அஹிம்சை!
  அஹிம்சையை வலியுறுத்தி ஊர்வலம் போனவர்களுக்கு ஆளுக்கொரு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.

  பரிசு!
    டீசல் சிக்கனம் என மெதுவாக சென்று கொண்டிருந்தார் அரசுபஸ் ஓட்டுனர். பரிசு கிடைத்தது தனியார் முதலாளிகளிடம் தனியாக.

பகிர்வு!
   வேலையை பகிர்ந்து கொடுங்க சார்! ஒரே ஆள் இத்தனை வேலையை எப்படி செய்வது? கொஞ்சம் யோசியுங்க! என்று மேனேஜரிடம் சண்டை போட்டு வந்தவர்  இன்னிக்கு கொஞ்சம் பசங்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லி கொடுங்களேன் என்ற மனைவியிடம் ஏன் இதைக் கூட உன்னால செய்ய முடியாதா? என்று கோபித்துக் கொண்டார்.

போதனை!
     படிக்கலைன்னா உருப்படாம போய் பெயில் ஆயிருவே! 
     தெரியும்பா!
    தெரிஞ்சுமா படிக்காம பசங்க கூட ஊர் சுத்தறே?
     குடிச்சா உடம்பு கெட்டு போய் செத்துருவோம்னு தெரிஞ்சும் நீங்க குடிச்சுட்டு வரலையாப்பா?
 மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றான்.

 எடை!
     எடையை ஒழுங்கா நிறுத்துப் போடுப்பா! நீ போடுற எடை கிலோவுக்கு கால்கிலோ குறையும் போல இருக்கே? இப்படி கொள்ளை லாபம் அடிக்க கூடாது!  பழைய பேப்பர் வியாபாரியிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் ரேசன் கடை ஊழியன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

Monday, June 27, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

    தளிர் ஹைக்கூ கவிதைகள்!


    குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது
    குளத்தில் இறங்கிய
    நிலா!

    மேகம் மூடிய வானம்!
    சோபை இழந்தது
    பூமி!

   அழுக்கினை விரட்ட
   உயிரை விட்டது
   சோப்பு!

   பூத்துக் கொட்டியது
   பறிக்க ஆளில்லை!
   நட்சத்திரங்கள்!

  வெட்டுபட்டாலும்
  கட்டு போட்டதும்
  வரவேற்றது வாழை!

 வெளிச்சத்தை நாடியதும்
 மிச்சத்தை இழந்தன
 பூச்சிகள்!

 நாசியைத் துளைத்தது
 மண்வாசம்.
 தூறல் மழை!


மறையும் ஒளி!
மயக்கத்தில் ஆழ்ந்தது
பூமி!

செம்பழத்தை சிறிதுசிறிதாய்
விழுங்கியது மலை
மாலைச்சூரியன்!

கடத்தி வருகின்றான்
பிடித்தால் விட மறுக்கின்றான்!
மின்சாரம்!

மூட்டை சுமக்கும் தாத்தா
முகத்தில் பரவுகிறது மகிழ்ச்சி!
உப்பு மூட்டை!

 வருத்தவில்லை சுமை
 உருத்தவில்லை பாரம்
 உப்புமூட்டை!


உடைகின்ற பேச்சினால்
சேர்த்துவைக்கிறது உறவை
குழந்தைகள்!

புதைந்து கிடக்கும்
கற்பனை சுரங்கங்கள்!
குழந்தைகள்!

இருள் கவ்வுகையில்
ஓலம் எழுப்பியது பூமி!
சில்வண்டுகள்!

மூச்சிறைக்காமல் ஓடியும்
மூன்றடி கூட நகரவில்லை!
மின்விசிறி!


வீழ்ந்தாலும்
வாழ வைத்தது
அருவி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, June 26, 2016

இண்ட முள்ளு!

இண்ட முள்ளு!

 இண்ட முள்ளுவின் ஆசிரியர் அரசனின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழ்த்தோட்டம் என்னும் வலையில் நானும் எழுதியபோது பழக்கம். பின்னர் அவரது வலைப்பூவில் அவரது மண்வாசனை கமழும் படைப்புக்களை படித்து ரசித்து வியந்திருக்கிறேன். மண்மணம் கமழும் அவரது படைப்புக்கள் அவரின் திறமையை பறைசாற்றும். அவரது முதல் நூல் இது.

நூலின் தலைப்பே வித்தியாசமாக அமைந்திருப்பதை நம்மை கவர்கிறது. இண்ட முள் என்பதன் விளக்கத்தை அட்டையிலேயே தந்திருக்கிறார் எழுத்தாளர் அரசன். தான் படர்ந்திருக்கும் பரப்பினை கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது இண்ட முள். அதே போல இண்ட முள்ளு கதையை வாசிக்கின்ற மனிதனின் மனதை கொத்தாய் பிடித்திழுக்கும் இயல்பில் படர்ந்துள்ளது என்று நம்பிக்கையோடு கூறும் அரசனின் வார்த்தைகள் பொய்க்கவில்லை
.
    ஒன்பது அழுத்தமான சிறுகதைகளை தொகுப்பாக்கி நமது மனசில் அந்த கதை மாந்தர்களை சுமக்க வைத்து அழுத்தமாக பதிய வைத்துள்ளார் அரசன். ஒவ்வொரு கதையும் அவர் பிறந்து வளர்ந்த உகந்த நாயகன் குடிக்காடு கிராமத்தையும் அதன் மண்ணின் மைந்தர்களையும் கண் முன்னே நிறுத்துகிறது.

   இயல்பான மனிதர்கள், அவர்களின் இயல்பான பேச்சுவழக்கு, பாரம்பரியங்கள், உழவு முறை, கிராமத்தில் இன்னும் மறையாமல் இருக்கும் பாரம்பரியமான நடைமுறைகள் ஆகியவை நகரத்து மனிதர்களுக்கு வியப்பு தந்தாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது பிழைப்புக்காக நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்து வாசியையும்  மண்வாசனையை உணர்ந்து ரசிப்பார்கள்.

      வெள்ளாமை என்ற கதையில் கிராமங்களில் எப்படி உழவு செய்யப்படுகின்றது என்பதை கண்முன்னே நிறுத்துகின்றார். இன்று விவசாயத்திலும் நவீனகருவிகள் வந்துவிட்ட போதும் உழவு செய்வது பயிர் அறுவடை மெனை பிரித்து தாள் அறுப்பது, தூற்றுவது போன்றவற்றை அவர் விவரிக்கும் பாங்கு அற்புதம்.

முதல் கதையான பெருஞ்சொம படித்து முடித்தவர்கள் மனதிலும் பெரும்சொம தாங்கி நிற்கும். சில கிராமங்களில் ஏதோவொரு பெண் யார் பேச்சுக்கும் அடங்காமல் திமிர்க்காரியாக சித்தரிக்கப் படுவாள். அப்படி நடந்தும் கொள்வாள். ஆனால் அவள் மனது யாருக்கு புரியும்? சாந்தி கதை அதை சிறப்பாக சொல்கிறது.

   கெடாவெட்டி, காயடிப்பு, போன்ற கதைகளின் கதை மாந்தர்கள் நம் கண் முன்னே வந்து போவார்கள். தெற்கத்திய கிராமங்களில் இன்னும் இது போன்ற மாந்தர்கள் வசித்து வருவதை கண்கூடாக காணலாம். தாய் மடி, தாய்ப்பாசத்தின் அருமையை உணர்த்த நலுவன் பண்ணையாருக்கு அடிமைப்பட்ட ஒருவன் வீறுகொண்டு எழுவதை அருமையாக சொல்கிறது. எதிர்காத்து குறும்பட போட்டியில் பரிசுபெற்ற சிறப்பானதொரு கதை.

  நவரத்தினங்களாய் ஜொலிக்கும் ஒன்பது கதைகள்! அரசன் தம்முடைய ஊர் பாஷையில் அருமையாக  சித்தரித்துள்ளார்.  தம் தாயின் பெயரில் பதிப்பகம் தொடங்கி இந்த புத்தகத்தை பதிப்பித்து பெருமை படுத்தியுள்ள அவரின் தாய்ப்பாசம் போற்றத் தக்கது.

  புத்தகத்தின் அட்டையும் வடிவமைப்பும் அழகுற அமைந்துள்ளது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ 100.
வெளியீடு: வளர்மதி பதிப்பகம், 3/214 உகந்தநாயகன் குடிக்காடு, செந்துறை தாலுக்கா, அரியலூர் மாவட்டம்.

புத்தகம் கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ்

முனுசாமி சாலை, கே.கே நகர் மேற்கு. சென்னை 78

Friday, June 24, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70


1.   தலைவர் ஜெயிலுக்குள்ளே நுழைஞ்சதும் கண் கலங்கினாராமே!
பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சாம்! அப்ப லூங்கியோட போனவர் இப்ப வேட்டியோட போயிருக்கார் இல்லையா!

2.   இன்னைக்கு சட்டசபை கூடிச்சுன்னு எப்படி கரெக்டா சொல்றீங்க?
எதிர்கட்சிக்காரங்க அரைமணிநேரத்துல வெளிநடப்பு செஞ்சு கேண்டீன் ல நிக்கறாங்களே!

3.   தலைவர் தூங்கிட்டு இருக்கும்போது சத்தம் போட்டா யாருக்கும் பிடிக்காது…
அப்புறம் என்ன செய்வார்!
வெளிநடப்புதான்!

4.   படம் ஒரே சொத்தையா இருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தியே அப்படி என்ன படம் பார்த்தே?
  முத்தின கத்திரிக்காய்!

5.   மக்கள் மனசிலே இடம்பிடிக்கிறா மாதிரி எதையாவது செஞ்சு அசத்தனம்யா!
முதல்ல சட்ட சபையில இடம்பிடிக்கிற வழியை பாருங்க தலைவரே!

6.   அந்த ஆஸ்பிட்டல்ல ஏன் அவ்ளோ கூட்டம்?
அங்க நர்ஸுங்க பேஷண்ட்டுக்கு டிரெஸ் பண்ணி விடறதோட மேக்கப்பும் போட்டு விடறாங்களாம்!

7.   நெட்கார்டு போட்டு விடுன்னு பொண்டாட்டி சொன்னதை மறந்து வீட்டுக்கு போயிட்டேன்…
அப்புறம்?
வீட்டுக்குள்ளே நுழைய ரெட்கார்டு போட்டுட்டா!


8.   அந்த படத்தோட ஹீரோயின் டைரக்டர் மேல புகார் சொல்றாங்களாமே!
  அப்ப படத்துலே வில்லன் ரோல் அவருதான்னு சொல்லு!

9.   நம் மன்னர் எப்போதும் சாட்டிங்கில் இருப்பது எதிரிகளுக்குச் சாதகம் ஆகிவிட்டது.
  எப்படி?
”சீட்டிங்க்” பண்ணி நாட்டை அபகரித்து விட்டார்கள்!

10.  அமைச்சர் செக்ஸ் புகார்ல சிக்கிட்டதா சின்ன சின்னதா நியுஸ் வந்துகிட்டு இருக்கு!
  “பிட்டு பிட்டா” போட்டு தாக்கிட்டாங்களோ!

11.  கபாலி இப்ப ஒழுங்கா மாமூல் கட்ட மாட்டேங்கிறானாமே!
   ஆமாங்க ஐயா! கேட்டா “நெருப்புடா”ங்கிறான்!

12.   அதோ போறாரே அவர் பல குடும்பங்களை தினமும் அழ வைச்சிக்கிட்டு இருக்காரு!
     எப்படி?
டீவி சீரியல் டைரக்டரா இருக்காரு!

13. தலைவர் பேசும்போது உளறி கொட்டிட்டார்!
அப்புறம்?
வழக்கம் போல மக்கள் கைதட்டி சிரிச்சிட்டு போயிட்டாங்க!


14.  மன்னர் இன்று மவுனவிரதம் இருக்க போகிறாராமே?
   நீ வேற ராணியார் செய்த அல்வாவை தின்ற பின் வாய் திறக்க முடியவில்லையாம்!

15. அந்த புரட்யூசர் எடுத்த படங்கள்லாம் சரியா ஓடலையாம்!
  அப்புறம்?
வாங்கின கடனை கொடுக்க முடியுமா அவரே ஓடிப்போயிட்டாராம்!

16. அவர் முன்னாடியே யோசிச்சிருந்தா பின்னாடி இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டார்?
மனைவிதானேன்னு ஏடி.எம் பின் நம்பரை சொல்லிட்டு இப்ப அவஸ்தை படறாரே!

17.  அந்த ஆபிஸர் யாரையும் கிட்ட நெருங்கவே விட மாட்டேங்கிறாரே!
அவர் தொலைதூரக் கல்வியிலே படிச்சி வேலைக்கு வந்தவராம்!


18.  ராணியார் மன்னர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்!
   எப்படி சொல்கிறாய்?
மன்னர் அந்தப்புரத்தில் நுழைந்ததும் ராணியார் இந்தப்புரம் வெளியே வந்துவிடுகிறாரே!

19.  மந்திரியாரே போரென்று வந்துவிட்டால்…!
  ஓடி ஒளிந்து கொள்ளலாமே மன்னரே!

20.  மன்னர் எப்போதும் ராணியோடு பல்லாங்குழியே கதியென்று இருந்தாரே என்ன ஆயிற்று!
  போரில் தோற்று பதுங்கு குழியே கதியென்று உள்ளார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  
 


Related Posts Plugin for WordPress, Blogger...