Monday, December 28, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56


1.   வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்?
நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க!

2.    எங்க தலைவர் பேசினா அப்படியே தெறிக்க விடுவாரு..!
என்னது அனலா..!
இல்லை எச்சில்…?!

3.   தலைவருக்கு கொஞ்சம் கூட விவரமே பத்தலை
  ஏன்..?
பீப் சாங் கேட்டீங்களான்னு கேட்டா நமக்கு எப்பவும் மட்டன் தான் பிடிக்கும்னு சொல்றாரே!


4.   உனக்கு அறிவிருக்கா..?
அதை விற்கிறதுக்காக உங்ககிட்ட நான் வரலை!

5.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கஜானாவைத் திறக்க சொன்னேனே என்ன ஆயிற்று?
உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறந்து திறந்து இப்போது அது காலியாக இருக்கிறது மன்னா!


6.   அரசியல் களத்துல ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு முன்னேறினவரு எங்க தலைவரு..!
அடுத்தவங்களை அடிச்சி அடிச்சியே பின்னுக்கு வந்தவரு எங்க தலைவரு!

7.   அதோ போறாரே அவர் பசையான ஆளு!
பெரிய பணக்காரரா?
இல்லே கம் தயாரிச்சு விக்கிறாரு!

8.   மழைவெள்ளத்துல சரக்கெல்லாம் அடிச்சிக்கினு போயிருச்சுன்னு புலம்பறாரே பெரியவியாபாரியா?
நீ வேற அவர் வீட்டுல வாங்கி வெச்சிருந்த டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு போனதை சொல்றார்!

9.   கூட்டணியிலே சேர இத்தனை பேர் அழைப்பு விடுத்தும் தலைவர் ஏன் சும்மா இருக்கார்?
’குழம்ப’ வைச்சிட்டாங்களாம்!

10. வெள்ள நிவாரணமா புடவை கொடுத்தும் உன் மனைவிக்கு திருப்தியா இல்லையா ஏன்?
மேட்சிங் ப்ளவுஸ் கொடுக்கவே இல்லையாம்!

11. மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே...?
     ஆம்...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, December 27, 2015

இன்றைய வாரமலரில் எனது ஜோக்!

வலைப்பூவில் வாரம் தோறும் ஜோக்ஸ் எழுதி வந்தாலும் வார இதழ்களில் வெளிவரும்போது அதன் மகிழ்ச்சியே தனி. அதுவும் பல லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள இதழ்களில் நமது படைப்புக்கள் வெளிவரும்போது உற்சாகம் ஊற்றெடுத்து நம்மை ஊக்குவிக்கும்.

கடந்தமாதத்தில் பாக்யா வார இதழில் எனது சில ஜோக்ஸ் வெளிவந்தும் என்னால் படிக்கவோ பார்க்க முடியவில்லை! எங்கள் பகுதியில் பாக்யாவார இதழ் கிடைக்க வில்லை. நண்பர் பூங்கதிர் அவர்கள் மூலம் வெளிவந்த விஷயம் மட்டுமே அறிய முடிந்தது.

இன்று எனது ஜோக் ஒன்று தினமலர்- வாரமலரில் பிரசுரம் ஆகியுள்ளது. கடந்தவருடம் ஒன்று வெளிவந்தபின்னர் நான் பத்திரிக்கைகளுக்கு சில ஜோக்ஸ் அனுப்பி வெளிவராமல் சோர்ந்திருந்தேன்.

ஒன் இண்டியா இணையத்தில் ராஜேஷ்குமார் தொடரை படித்தபோது முதலில் அவரது படைப்புக்களும் வெளிவராமல் திரும்பி வந்ததாகவும் குமுதத்திற்கு நிறைய அனுப்பி வெளிவராததால் சண்டையிட சென்றதாகவும் அவர்கள் குமுதத்திற்கு ஏற்றமாதிரியும் புதுமையாகவும் இருந்தால் கட்டாயம் வெளிவரும் என்றும் சொன்னார்கள். அதன்படி புதுமையாக மும்பையை வைத்து ஒரு கதை எழுதி பிரசுரம் ஆனதாக சொன்னார். ஆனால் அதற்கு முன் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகள் பிரசுரம் ஆகவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் விடா முயற்சியினால் இன்று பெரிய எழுத்தாளராய் மிளிர்கின்றார்.

அந்த தொடரை படித்ததும் எனக்கும் உற்சாகம் ஊற்றெடுத்து நிறைய ஜோக்ஸ்களை குமுதம், பாக்யா, விகடன், வாரமலர் என்று பல்வேறு இதழ்களுக்கு மெயில் மூலம் அனுப்பினேன். ஒரு மாதமாக ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை! ஆனால் சோர்வடையவில்லை! கணிணி பழுதால் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வு கொடுத்து உள்ளேன்.

வாரமலரில் கட்டாயம் ஒரு ஜோக்காவது பிரசுரம் ஆகும் என்று எண்ணியிருந்தேன். கிட்டத்தட்ட வாரம் இருபது ஜோக்ஸ் என நூறு ஜோக்ஸ் அனுப்பி இருந்தேன். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை! இன்றைய வாரமலரில்( சென்னைபதிப்பு) எனது ஜோக்ஸ் ஒன்று வாசகர் பம்பர் பரிசாக 1000 ரூபாய் பரிசுடன் பிரசுரம் ஆகியுள்ளது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

பிரசுரம் செய்த வாரமலருக்கும், ஊக்கமூட்டிய எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கும் ஆதரவளிக்கும் நட்புக்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!
படைப்பை வாசிக்க இங்கேhttp://www.dinamalar.com/supplementary_detail_story.asp…

Saturday, December 26, 2015

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.


ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும் ஓர் சர்ச்சை எழுந்தது.அவர்களில் திறமை மிக்கவர் கணவனா மனைவியா என்பது தான் அது.

   அந்த சர்ச்சை முற்றி பெண்கள்தான் தந்திரத்தில் வல்லவர்கள், அவர்கள் நினைத்தால் ஆயிரம் தந்திரங்கள் செய்து ஆண்களை வெற்றிக் கொள்ள முடியும் என்றாள் மனைவி.அத்துடன் இல்லாமல் ஆண்கள் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். உங்கள் நல்ல காலம் இன்னும் உங்களை நான்  தந்திரம் ஏதும் செய்து இதுவரை ஏமாற்றவில்லை என்றாள் அவனது மனைவி.

   இதைக்கேட்ட கணவன் மிகுந்த கோபம் கொண்டான். " உங்களுக்கு சமைப்பதை தவிர வேறு என்ன தெரியும்? உங்கள் தந்திரங்களை கண்டு ஏமாற நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ வேண்டுமானால் ஆயிரம் தந்திரங்கள் செய்து என்னை ஏமாற்றிக் காட்டு பார்க்கலாம். அப்போது நான் ஒத்துக்கொள்வேன் பெண்கள் புத்திசாலிகள்" என்று சவால் விடுத்தான் கணவன்.

   அன்றைய பொழுது விடியும் நேரத்தில் கணவன் எழுந்திருக்கும் முன் எழுந்த அவனது மனைவி கணவன் அறியாமலேயே கடைக்குச் சென்று ஒரு பெரிய மீனை வாங்கி கணவன் அன்று உழப்போகும் வயலில் புதைத்து வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி ஒன்றும் அறியாதவள் போல படுத்துக் கொண்டாள்.

    பொழுது விடிந்ததும் விழித்த கணவன் காலைக் கடன்களை முடித்து வயலுக்கு சென்றான். ஏர் பூட்டி உழுதான். அப்போது அவனது மனைவி புதைத்து வைத்த மீன் கலப்பையில் சிக்கி வெளியே வந்தது. நிலத்தில் பெரிய மீன் கிடைத்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆகா! எவ்வளவு பெரிய மீன்! இதை இன்று சுவையாக ஆக்கி உண்டு மகிழலாம் என்று அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்ததே தவிர நிலத்தில் மீன் எப்படி கிடைக்கும் என்று புத்தி செயல்படவில்லை. அந்த மீனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

   மனைவியை அழைத்து " நான் நிலத்தில் உழும்போது பெரிய மீன் கிடைத்தது. இதை சமைத்து வை! மதியம் உண்ணலாம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் வயலுக்குச் சென்று விட்டான். மதிய நேரம் வந்தது. "ஆகா! இன்று மீன்குழம்பு மனைவி சமைத்திருப்பாள்! ஒரு வெட்டு வெட்டலாம்" என்று ஆவலோடு வந்தான் உழவன்.

  முகம் கால் கழுவி சாப்பிட உட்கார்ந்தான். உழவனின் மனைவி வழக்கம் போல பழைய சோறும் ஊறுகாயும் வைத்த போது உழவன் கடுப்பானான்.  "ஏய்! நான் கொண்டுவந்த மீனை சமைக்க வில்லையா? "என்று கத்தினான்.
   " மீனா? ஏது? எப்போது கொண்டுவந்தீர்கள்?" என்று அப்பாவியாய் கேட்டாள் மனைவி.
   "காலையில் நிலத்தை உழுதபோது பெரிய மீன் கிடைத்ததே! அதை சமைக்கச்சொல்லி உன்னிடம் கொடுத்தேனே? அதை சமைக்காமல் ஏமாற்றுகிறாயா? "என்றான் உழவன்.

  " நீங்கள் மீன் எதையும் கொண்டுவரவில்லை! திடீரென்று மீன் குழம்பு கேட்டால் நான் எங்கே போவேன்? " என்று பதில் சொன்னாள் மனைவி.
  தன் மனைவி பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் அல்லது அவள் மட்டும் மீனை சமைத்து சாப்பிட்டு விட்டாள் என்று உழவனுக்கு கோபம் மனைவியை போட்டு உதைத்தான். உழவனின் மனைவி கத்திக் கொண்டே வெளியே வந்து  "ஐயோ! இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா?  " என்று கூச்சல் போட்டு அழவும் கும்பல் கூடிவிட்டது.

    அப்போது கூட்டத்தில் ஒருவர்  "என்ன நடந்தது எதற்கு உன் மனைவியை போட்டு அடிக்கிறாய்?" என்று கேட்டார்.

   நான் இன்று காலையில் நிலத்தை உழுத போது மீன் ஒன்று கிடைத்தது. அதை சமைத்து வைக்க சொன்னேன். அதை சமைத்து இவளே சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் பழைய சோறு போடுகிறாள் என்று சொன்னான் உழவன்.

   " ஏய் மடையா! நிலத்தை உழும்போது மீன் கிடைக்குமா? இப்படி முட்டாள் தனமாக பேசாதே! உன் மனைவியிடம் அன்பாக நடந்துகொள் "என்று அறிவுரை கூறினார் அந்த பெரியவர். வந்த எல்லோரும் சென்று விட்டனர். அப்போது அவன் மனைவி சட்டிக்குள் இருந்து ஒரு மீன் துண்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.

  இதைப்பார்த்த உழவனுக்கு ஆத்திரம்! எல்லோரும் என்னை முட்டாள் என்றார்களே! இவளை கையும் களவுமாக பிடித்துகொடுக்கிறேன் பார்! என்று வெளியே வந்து , "என்னை நம்ப மறுத்தீர்களே! இப்போது வாருங்கள் வீட்டில் என் மனைவி மீன் குழம்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கு தராமல் அவளே திண்ணவே ஏமாற்றுகிறாள் "என்றான்.

  எல்லோரும் அவன் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இதற்குள் அவனது மனைவி சட்டியை எங்கோ மறைத்து வைத்து விட்டு. அழுது கொண்டே வெளியே வந்து " இவர் என்னை அடித்து என் உடம்பெல்லாம் புண்ணாகிவிட்டது. இவர் மீனே கொண்டுவரவில்லை. இல்லாத மீனை எப்படி சமைப்பது நான் சொல்வதை நம்புங்கள் இவர் இப்படி என்னை கொடுமைப் படுத்தினால் சாவதை தவிர வேறு வழியில்லை! " என்று அழுதாள்.

  கணவனோ,  "ஐயா மக்களே! இவள் பெரிய கைகாரியாக இருக்கிறாள் , நான் நிலத்திலிருந்து மீன் பிடித்து வந்தது உண்மை! அதை இவள் சமைத்து உண்டதும் உண்மை என் பேச்சை நம்புங்கள்!  "என்றான்.

   வந்திருந்த எல்லோரும் உழவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்! இவனுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது! இல்லை பேய் பிடித்து இருக்க வேண்டும். நிலத்தில் மீன் பிடித்ததாக உளறுவதோடு இல்லாமல் மனைவியை அடித்து நம்மையும் ஏமாற்றுகிறானே!  இவனை பிடித்த பேயை விரட்ட வேண்டும் என்று வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு விளாசினார்கள்.

   "ஐயோ! அடிக்காதீங்க! நான் சொல்றது நிஜம்!  நிலத்தில் தான் பெரிய மீனை பிடித்தேன்! " என்றான் உழவன்.

    "விடாதீர்கள் இவன் பைத்தியம் தெளியும் வரை அல்லது பேய் ஓடும் வரை விடக்கூடாது "என்று ஆளாளுக்கு வேப்பிலையிலும் துடைப்பத்திலும் உழவனை அடிக்க ஆரம்பித்தார்கள்.  "அடேய்! என்னை நம்ப மறுக்கிறீர்களே! அநியாயமாக அடிக்கிறீர்களே!" என்று அலறியபடி ஓடத்துவங்கினான் உழவன்.

  " பேய்தான் ஓடுகிறது! இந்த ஊர் எல்லை வரை சென்று விரட்டி விட்டு வருவோம் "என்று அவனை துரத்தினர் மக்கள்.  "என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! இல்லை நான் மீன் பிடிக்க வில்லை! என் மனைவியை அடிக்க மாட்டேன்!" என்று கையெடுத்து வணங்கினான் உழவன்.

  இப்போதுதான் பேய் வழிக்கு வந்திருக்கிறது! ஆனாலும் இப்படியே விடக்கூடாது வேப்ப மரத்தில் இன்று முழுவதும் கட்டி வைப்போம்.  நாளை விடுவிப்போம் என்று அவனை கட்டி வைத்தார்கள்.

   மறுநாள் உழவன் தளர்ந்து இருந்தான். அவனை விடுவித்ததும் வீட்டிற்கு வந்தான். வலி தாங்க முடியாமல்  "ஐயோ! அம்மா!" என்று முனகியபடியே இருந்த அவனை பார்த்து அவன் மனைவி சொன்னாள்.  "ஒரே தந்திரம் தான் செய்தேன்! இதையே உங்களால் தாங்க முடியவில்லை! நான் ஆயிரம் தந்திரங்கள் செய்தால் நீங்கள் என்ன ஆவீர்களோ? இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள் பெண்கள் தந்திர சாலிகள் !"   என்றாள்.

    சமைத்து வைத்த மீன் குழம்பையும் சோறையும் கணவனுக்கு போடவும் செய்தாள். கணவனும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.  "உண்மையிலேயே நீ ரொம்ப கெட்டிக் காரிதான்! " என்ற கணவன் ஆசையோடு குழம்பு சோறை உண்டு முடித்தான்.

 (செவிவழிக் கதை).

 (மீள்பதிவு)

இரண்டு மூன்று நாட்களாக வேலைப்பளு அதிகம்! ஒன்றாம் தேதிவரை தொடரும் போல! இணையம் வர முடியவில்லை! வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, December 22, 2015

மறுபக்கம்!

மறுபக்கம்!


அன்று காலை மார்க்கெட் சென்ற போது அலுவலகத்தில் பணிபுரியும் மகேந்திரனை சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! மகேந்திரன் கறார்ப்பேர்வழி! சிக்கனவாதி! அனாவசியமாக ஒரு பைசா செலவழிக்கமாட்டார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுவார். என்ன மகேந்திரன் சார்! ஒரு டீ சாப்பிட்டு வரலாமே! என்று அழைத்தால் கூட சாரி சார்! எனக்கு டீ காபி பழக்கமெல்லாம் இல்லை! நீங்க போயிட்டு வாங்க என்று நாசூக்காக மறுத்துவிடுவார்.
      அவரை மார்க்கெட்டில் பார்த்ததும் ஆச்சர்யம்! மார்க்கெட்டிற்கு கூட மனுசன் வருவாரா? என்று தோன்றியது. இரண்டு கட்டை பைகள் வைத்திருந்தார். அது நிறைய காய்கறிகள்! இவ்வளவு காய் அவர் வாங்குகிறாரா? ஆச்சர்யம் எனக்கு?அவரும் என்னைப் பார்த்துவிட்டார்.  “என்ன கோபால் சார்? நீங்களும் என்னைப் போலவே காய்கறி வாங்க வந்துட்டீங்களா? என்று உரக்க அழைத்தவர் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்கலாம்! நமக்கு தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்கு! காயெல்லாம் பிரெஷ்ஷா இருக்கும்” என்று அழைத்துச் சென்றார்.
    மறுக்க முடியாமல் தொடர்ந்தேன். அலுவலகத்தில் யார் அழைத்தாலும் டீ குடிக்க கூட வராதவர் இன்று நம்மை உடன் அழைக்கிறார் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அவருடன் நடந்தேன்.
     “என்ன சார் வீடு ஒண்ணு கட்டிக்கிட்டு இருக்கிறதா சொன்னீங்களே! வேலை எப்படி போயிக்கிட்டு இருக்கு என்று அவராகவே விசாரித்தார். நல்லபடியா போய்க்கிட்டிருக்கு சார்! இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலையும் பிணிஷ் ஆயிரும்! கிரகப்பிரவேசம் போயிற வேண்டியதுதான்” என்றேன்.
   “ பரவாயில்லையே! ரொம்ப சீக்கிரமாத்தான் முடிச்சிருக்கீங்க! ” என்றவர் அந்த காய்கறி கடையினுள் நுழைந்தார். காய்கறிக் கடைக்காரன் வாங்க சார்! வாங்க என்று வரவேற்றான். ஒவ்வொரு காயாக பொறுக்கி எடுத்து எடை போட்டு விலை கேட்டு இதென்ன இவ்வளவு விலை? சரியில்லை! ரெண்டுரூபா கொறைச்சுப் போடு! என்று பெண்களை விட பிரமாதமாக பேரம் பேசினார் மகேந்திரன்.
    ”என்ன சார் இப்படி பேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க! சட்டுபுட்டுன்னு நாலு காய் வாங்கிட்டு பணத்தை கொடுத்திட்டு போக வேண்டியதுதானே! இந்த ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சேமிக்கிறதுல என்ன பெரிசா கிடைச்சிறப் போவுது?” என்றேன்.
   “அப்படியில்லே கோபாலு! வியாபாரம்கிறது பேரம்தான்! வியாபாரி சொல்ற விலைக்கே நாம வாங்கணுங்கிறது அவசியம் கிடையாது! எந்த பொருளுக்கும் உண்மையான விலை அவங்க சொல்ல மாட்டாங்க! இப்ப நாம கொறைச்சு வாங்கிறதுலேயே அவங்களுக்கு கட்டாயம் லாபம் இருக்கும். நாம கொறைக்காம வாங்கினா இன்னும் கூடுதல் லாபம் அவனுக்கு போவுது இல்லே!  அப்படி லாபம் இல்லேன்னா நாம கேட்ட விலைக்கு தருவானா கடைக்காரன்?”
    “ நாம பொருளை வாங்கி அனுபவிக்கப் போறோம்! நமக்குத்தான் அதனோட மதிப்பு தெரியும். விற்கறவன் ஆயிரம் பொய் சொல்லுவான்! நாமதான் விழிப்பா இருந்துக்கணும்! பேரம் இல்லாம நான் பொருளை வாங்க மாட்டேன்! அதே போல சூப்பர் மார்க்கெட் பக்கமும் தலை வைச்சு படுக்க மாட்டேன்.” என்றார்.
   ‘ ஏன் சார்?” என்றேன்.
 “அங்க பகல் கொள்ளை இல்லை அடிக்கிறானுங்க! சாதாரண மளிகை கடையில ஒரு ரூபா லாபம் வச்சு வித்தா இவனுங்க அஞ்சு பத்துன்னு இல்லே லாபத்தை ஏத்தி வைச்சு நம்ம தலையிலே கட்டறானுங்க! வாடகை அது இதுன்னு எல்லாம் நம்ம தலையில வந்து விடியும். அதனால எப்பவும் சின்ன மளிகை கடையா பார்த்து வாங்கினா நமக்கு லாபம்” என்றார்.
    ‘நல்ல சிக்கனவாதிதான்! சார் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! நம்ம ஆபிஸ்லேயே நீங்கதான் சீனியர்! நல்ல சம்பளம் வாங்கறீங்க! பசங்களும் செட்டில் ஆயிட்டாங்க! இப்ப இப்படி சிக்கனம் பிடிச்சி கஞ்சத் தனம் பண்ணி என்ன சாதனை பண்ணப் போறீங்க?”
   “ பார்த்தியா பணத்தை சிக்கனமா செலவு பண்ணா கஞ்சன்னு சொல்றீங்களே! ஒவ்வொரு காசும் நாம வியர்வை சிந்தி சம்பாதிக்கிறதுப்பா! இதை ஏன் வீண் பண்ணனும்? அனாவசிய செலவு எதுக்குன்னு கேட்டா கஞ்சன்னு பட்டம் கட்டறீங்க! இருந்துட்டு போவட்டும் சரி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றார்.
    “என்ன சார் ஹெல்ப் அது இதுன்னு கேட்டுக்கிட்டு தயங்காம சொல்லுங்க!”
   “உங்க வண்டியிலே என்னை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா? ”
     ‘உங்க வீட்டுலதான சார்! வாங்க விட்டுடறேன்!’
   “நோ! நோ! கோபால்சார்! வீட்டுக்குன்னா நிதானமா போயிப்பேன்! இப்ப நான் சொல்ற இடம் ஒரு அனாதை இல்லம்.”
   ”அங்க எதுக்கு சார்? இப்ப…”

 “இந்த காய்கறியெல்லாம் அந்த இல்லத்துக்குதான் கோபால்! வாரம் ஒரு முறை அந்த இல்லத்துக்கு நான் காய்கறி வாங்கி கொடுக்கிறது வழக்கம்! இப்பவே மணி பத்து ஆயிருச்சு! இன்னும் ஒரு அரை மணி நேரத்துல கொண்டுபோய் கொடுத்தா இன்னிக்கு சமையலுக்கு ஆகும். ஒரு நாற்பது பேர் வயிறார சாப்பிடுவாங்க! இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு! இல்லேன்னா இந்நேரம் அங்க இருந்திருப்பேன்! அதான் நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன்.” இப்போது நான் அவரை பார்த்த பார்வையில் மரியாதை கூடியிருந்தது.
      “சார்! நீங்க உண்மையிலேயே பெரிய மனுசன் தான் சார்! உங்களைப் போய்.. கஞ்சன் அது இதுன்னு பேசிட்டேன்!”

 “இருக்கட்டும் கோபால்! நான் எதையும் விளம்பரம் பண்ணிக்கிறது கிடையாது. என்னால முடிஞ்ச அளவுக்கு சிக்கனமா இருக்கேன்! அதை இல்லாதவங்களுக்கு செலவு பண்றேன்! இது உங்களுக்கெல்லாம் தெரியாது இல்லையா? உங்க பார்வையில நான் கஞ்சனாவே தெரிஞ்சதுல தப்பு இல்லை!”
  “ அதில்லை சார்! ஒரு ரூபா கூட அதிகமா செலவு பண்ண யோசிக்கிற நீங்க இப்படி ஆயிரக் கணக்குல செலவு பண்ணுவீங்கன்னு நினைச்சுக்கூட பார்க்க முடியலை!”
   மகேந்திரன் சிரித்தார். “ காசை வீணாத்தான் செலவழிக்க கூடாதுன்னு சொல்றேன்! அவசியமானதுக்கு செலவு செய்யலாம் இல்லையா? நான் சேமிக்கிற ஒவ்வொரு ரூபாயும் இவங்களுக்கு பயன்படுது!”
  “இல்லே சார்! இந்த காலத்துல சொந்தக் காரங்களுக்கு உதவறதே பெரிய கஷ்டம்! அதுல இப்படி யாருமே இல்லாதவங்களுக்கு வாராவாரம் காய்கறி வாங்கிக் கொடுக்கிறது பெரியவிசயம் இல்லையா? உங்களைப் போய் தப்பா நினைச்சிட்டேனே!”
     “இதெல்லாம் பெரிய விசயமே இல்லை கோபால்! யார் எது பேசினாலும் நான் அதை காதில வாங்கிக்கிறது இல்லை! என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படி நடந்துக்குவேன்! அதனால யார் என்ன பேசினாலும் எனக்கு வருத்தம் கிடையாது! உன்னை நான் தப்பா நினைக்கலே!  சரி சரி டைம் ஆவுது.. என்னை அந்த ஹாஸ்டலாண்ட ட்ராப் பண்ணிடறியா?”

 “வாங்க சார் நீங்க சொன்ன விடுதிக்கு போகலாம்” என்று அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன்.
   முதலில் தூசியாக தெரிந்த அவர் இப்போது பெரும் சிகரமாக மாறியிருந்தார்.

(மீள்பதிவு)

வாத்தியார் பாலகணேஷ் அவர்கள் பாராட்டிய எனது சிறுகதை இது! நிறைய பேரை சென்றடையாத ஓர் வருத்தமும் உண்டு.  சில தினங்களாய் கற்பனை வறட்சியில் இருக்கிறேன். அது வெள்ளமென திரண்டு வரும் வரை இப்படி மீள்பதிவுகள் தொடரும் என்று எச்சரிக்கையும் தருகிறேன்! பொறுத்துக் கொள்ளவும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, December 21, 2015

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


 பழுத்ததும்
 விழுந்தது பழம்!
 மாலைச்சூரியன்!

மேடுபள்ளம்
சமமாக்கியது!
மழைவெள்ளம்!

வெள்ளப்பெருக்கில்
விரைந்து பூத்தது
மனிதம்!

ஒளி மறையவும்
ஊடுருவி விடுகின்றது
பனி!

சமாதான தூது
வெள்ளைப்போர்வையில்பூமி!
காலைப்பனி!

கும்மிருட்டு
ரசிக்க வைத்தன
மின்மினிகள்!

சிறகு விரிக்கையில்
வெட்டப்படுகின்றன!
குழந்தையின் கற்பனைகள்!

காரிருள்
மறைந்த மரங்கள்
வெளிச்சப்படுத்திய மின்மினிகள்!

 வண்ணப்பூக்கள்
வண்டுகள் மொய்க்கவில்லை!
கோலம்!

பழுத்தது
உண்ண முடியவில்லை!
இலை!

ஆறுவழிச் சாலைகள்
கூறு போட்டன
கிராமங்கள்!

வீதிகளில் வழிந்தது பால்!
விபத்து ஏதும் இல்லை!
வான் நிலா!

தள்ளி வைக்கப்பட்டது
குளிர்!
நெருப்பு!

அரண்களையும்
அணைத்துக் கொண்டது
பனி!

மாரி
மாறி அணைத்ததில்
மரணித்தது பூமி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, December 20, 2015

சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?

சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?


சென்னைப் பெருமழை செய்த ஒரே நல்ல காரியம் பலகாலமாய் வாங்கி வைத்து வாசிக்காது இருந்த பல நூல்களை என்னை வாசிக்க வைத்தது. அடை மழை! மின்சாரம் இல்லை. அகல் விளக்கொளி அல்லது சிம்னி விளக்கொளியில் நூல்களை வாசிப்பது என்பது ஓர் சுகானுபவம்.

  சின்ன வயதில் ஆசானபூதூரில் படிக்கையில் பாடங்களை சிம்னி விளக்கொளியில் படித்து இருக்கிறேன். அதே போல மின்சாரம் இல்லா சமயங்களில் நத்தத்திலும் பாடங்களோ இல்லை கதைப் புத்தகங்களோ படித்து இருக்கிறேன். மழைக்காலத்தில் மழையின் பேரிரைச்சல் தவளைகளின் சத்தம் அந்தகாரமான இருட்டில் ஓர் அறையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் சிறு விளக்கொளியில் இரவு விழித்து இருந்து கதை படிப்பது அதுவும் சுஜாதாவின் இந்த அமானுஷ்யம் கலந்த நாவலை படிப்பது செம திரில்!

      இந்த நாவல் 90களில் தொலைக்காட்சி தொடராகவும் வந்து இருக்கிறது. பகல்பொழுதில் ஒளிபரப்பானது. பல எபிசோட்கள் மின்சாரம் தடைபட்டு பார்க்க முடியாமல் போனது. இறுதிப்பகுதியும் அப்படித்தான் பார்க்க முடியவில்லை. அது மிகவும் குறையாகவே இருந்தது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில்  இந்த நாவலை வாங்கத்தூண்டியது அந்த தொலைக்காட்சித் தொடரே!

       லீனா என்ற இளம்பெண் ஏகப்பட்டு சொத்துக்கு சொந்தக்காரி. அவரது கார்டியன் குமாரவியாசன், காதலன் தீபக், இந்த சொத்தை அபகரிக்க வியாசன் முயல்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தீபக் கணேஷ் வசந்தை லீனாவின் பண்ணை வீட்டிற்கு அனுப்புகிறார்.

   லீனாவிற்கு சேர வேண்டிய சொத்துக்கள் பற்றி உயில் போன்றவற்றை சரிபார்க்க வரும் கணேஷிற்கு லீனா ஓர் கொலை செய்துவிட்டாள். அவள் புத்தி சரியில்லை. அவள் மீது புத்திரவதி என்ற ஆவி இறங்கி கொலைசெய்கிறது  அதுவும் குறிப்பிட்ட தினத்தில் கார்த்திகைமாதம் திரிதியை திதியில் அந்த கொலை நடந்தது. புத்திரவதியின் சாபம் இந்த சொத்தை தாக்கும். என்று குமாரவியாசன் பீதி கிளப்புகிறார்.

  அங்கேயே தங்கும் கணேஷ் வசந்திற்கு அமானுஷ்யமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இடையில் இன்னும் சில கொலைகளும் விழுகின்றன. குமாரவியாசனும் கூட இறந்து போகிறார். வசந்த் ஒருதலையாக லீனாவை விரும்ப அவளோ தீபக்கோடு திருமணம் செய்து  ஊட்டிக்கு ஹனீமூன் சென்று விடுகிறாள்.

   அமானுஷ்யம் கிடையாது விஞ்ஞானப்பூர்வமாக சில சித்து வேலைகள் செய்து பேய் கொலை செய்வதாக நம்ப வைக்கப்படுகிறது. அப்படி செய்து லீனாவை கொலைகாரி அல்லது பைத்தியக் காரி என்று நம்பச் செய்து சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் என்று கணேஷ் நம்புகிறார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள்.

   அதை தீர்த்துக் கொள்ள புரபசர் ராமபத்திரனை நாடுகிறார். அவர் விஞ்ஞானத்தில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. குறிப்பாக ஹோலோகிராம் துல்லியமாக செய்ய வாய்ப்பில்லை என்று சாதிக்கிறார். ஆனால் வசந்த் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் விஞ்ஞானத்தில் அது சாத்தியம் என்று நிரூபிக்கிறான்.
    குமார வியாசனின் சகோதரர்தான் ராமபத்திரன் என்று தெரியவர அவர் ஊட்டிக்கு சென்றிருப்பதும் தெரிய வர லீனாவை காப்பாற்ற விரைகின்றனர் கணேஷிம் வசந்தும்.

    ஆனால் ராமபத்திரன் முந்திக் கொள்கிறார். ஊட்டியில் லீனாவை சந்திக்கிறார். அவருடன் போட்டிங் செல்கிறாள் லீனா. ராமபத்திரனிடம் இருந்து லீனா தப்பித்தாளா? 

    விஞ்ஞானம்தான் என்று சில நிரூபணங்கள் மூலம் நியாயப்படுத்தினாலும் அமானுஷ்யத்தையும் ஆசிரியர் மறுக்கவில்லை! அதன் காரணமாகவே முடிவும்  விஞ்ஞானத்தை ஆதரிப்பதாக அமையவில்லை! அதே சமயம் அமானுஷ்யத்தையும் ஏற்கவில்லை! வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறார்.

 1980களில் குமுதத்தில் இந்த தொடர் வெளிவந்து இருக்கிறது. பல அறிவியல் சொற்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் அப்போது வாசகர்களுக்கு புரியாது. தெரியாது. அதையும் மீறி இந்த தொடர் வெற்றிபெற்றது சுஜாதாவின் எழுத்துலக ஆளுமைக்கு ஓர் சான்று.

   ஆனால் எத்தகைய ஒரு நல்ல நாவலையும் எழுத்துப்பிழைகள் படிப்பவனின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பதற்கு இந்த நாவலே எனக்கு சான்று. பாரதிபதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலில் மூ என்ற எழுத்து வரவேண்டிய இடத்தில் வரவில்லை. நூ என்று வரவேண்டிய இடமெல்லாம் மூ  புகுந்து அட்டகாசம் செய்கிறது. நூறு தப்படி என்று கணேஷ் சொல்வது மூறு தப்படி என்று வருகிறது.

  முதல் பக்கத்தில் தொடரும் எழுத்துப்பிழை இறுதிவரை தொடர்ந்து அலுப்படைய வைக்கிறது. பதிப்பகத்தார் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகவும் சுவாரஸ்யமான சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் நாவலான இதை பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ 120.00.


வெள்ள பாதிப்பில் பதிப்பகங்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் வாசகர்கள் பதிப்பாளர்களை ஆதரிக்க வேண்டியது மிகவும்  அவசியமானது. நல்ல நூல்களை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட நூல்களை விலைகொடுத்து வாங்கி ஆதரிக்க வேண்டியது அவசியமாகும்.


 தளிர் வாசகர்களே! உங்களால் இயன்ற அளவில் மாதம்தோறும் நூல்களுக்கென ஒரு தொகையினை சேமித்து புத்தகக் கண்காட்சியின் போது நூல்களை விலைகொடுத்து வாங்கி பதிப்பாளர்களை ஆதரியுங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, December 17, 2015

மொக்க ஜோக்ஸ்!

 1. கூட்டணியை வலுப்படுத்துங்கன்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டாரு போல!
ஏன் என்ன ஆச்சு?
ஒரு டன் இரும்பு கம்பிக்கு ஆர்டர் கொடுத்து இருக்காரே!

 1. தலைவருக்கு பொது அறிவு சுத்தமா இல்லை!
     ஏன்?
  நெட்ல 300 எம்.பி ஃபிரின்னு சொன்னா உடனே வாங்கு செண்ட்ரல்ல ஆட்சியை பிடிச்சிடலாம்னு சொல்றாரே!

 1. மன்னருக்கு போர்க்களம் என்றால் மிகவும் விருப்பமாமே?
ஆமாம்! அந்தப்புரத்தை விட அங்கு அடி கம்மியாக அல்லவா விழுகிறது!

 1. அந்த டாக்டர் கிண்டல்பேர்வழின்னு எப்படி சொல்றே?
தலைவலி பின்னியெடுக்குது டாக்டர்னு சொன்னா ஏன் கொண்டை போட்டுவிடலையான்னு கேக்கறாரே!

 1. அரசியல்வாதியோட பொண்ணை காதலிச்சியே என்ன ஆச்சு?
கூட்டணியிலே முறிவு ஏற்பட்டு போச்சு!


 1. பணவீக்கம் அதிகரிச்சு போச்சுங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்?
பேங்கில பணம் கொடுக்கும்போது கூடவே ஒரு தைல புட்டியும் தரனும்னு அறிக்கை விட்டிருக்கார்!

 1. அந்த ஜூஸ் கடையில என்ன தகறாரு?
பழரசம்னு சொல்றீங்களே! ரசம் இருக்கு பழம் எங்கேன்னு கேட்டு அடம்பிடிக்கிறாராம் ஒருத்தரு!

 1. கடையெல்லாம் கலைச்சுப் போட்டப்புறம்தான் கிடைச்சுது!
என்னது நீ விரும்புன புடவையா?
நீ வேற புடவை எடுக்க போன என் பொண்டாட்டி!

 1. மன்னர் இப்போதெல்லாம் நகர்வலம் போவதில்லையே ஏன்?
மக்களின் முற்றுகையை சமாளிக்க முடியவில்லையாம்!

 1. நம்ம தலைவர் கேட்டதை பார்த்து எலக்‌ஷன் கமிஷன் ஒரு நிமிஷம் ஆடிப்போச்சு?
அப்படி என்ன கேட்டார்?
புயல் சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கணும்னுதான்!


 1. அந்த நாட்டு வைத்தியர் போலின்னு எப்படி சொல்றே?
இவ்விடம் விதண்டாவாதத்துக்கு மருந்து தரப்படும்னு போர்டு வைச்சிருக்காரே!

12.ஜட்ஜ்: பூட்டை உடைச்சு ஏன் சிலை திருடனே?
  திருடன்: கள்ளசாவி கிடைக்கல அதனால பூட்டை உடைக்கவேண்டியதா போச்சு எசமான்?

 1. தலைவர பாக்கிறதுக்கு எதுக்கு குளோப் ஜாமூனோட போறே?
அவர்தானே ஜாமூன் வாங்கிட்டு வரச்சொன்னாரு!
  அது ஜாமூன் இல்லேடா ஜாமீன்!

 1. மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு நியுஸ் வந்ததும் தலைவர் ஏன் பதற்றப்படறார்?
அவருக்கு வரக்கூடிய  ‘மாமூல்’ பாதிச்சிடப்போவுதுன்னுதான்!

14. பையன் ஓடி ஓடி சம்பாதிக்கிறான்னு சொல்றீங்களே? என்ன பண்றார்?
   கிரிக்கெட் ப்ளேயரா இருக்கார்!

15. தலைவர் பண்ற லொள்ளு தாங்க முடியலை!
    ஏன் என்ன ஆச்சு?
  சிக்கன நடவடிக்கைன்ற பேர்ல கவர்ச்சி நடிகையை பிரச்சாரத்துக்கு வரவழைச்சிருக்காரு!


மீள்பதிவு}

மழை வெள்ளம், கணிணி பழுது, வேலைப்பளு என தொடர இணையம் பக்கம் வர இயலவில்லை. கணிணி பழுது நீங்கி இன்றுதான் இணைய உலா வர முடிந்தது. பழைய பதிவொன்றை மீள்பதிவாக்கி உள்ளேன்! விரைவில் எனது புதிய பதிவுகளோடு சந்திக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


 
Related Posts Plugin for WordPress, Blogger...