Thursday, January 28, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.


1.   தலைவர் பத்ம விருது கொடுக்கிற நிகழ்சியிலே உளறி கொட்டிட்டார்!
அப்படி என்ன சொன்னார்?
பத்ம விருதுகள் வாங்கிய இவர்களெல்லாம் கூடியவிரைவில் பரம்வீர் சக்ராவும் வாங்க வாழ்த்துக்கள்னுட்டார்!

2.   தலைவர் புதுசா கால் செண்டர் துவக்கனதும் யாரோ வேண்டாதவங்க  போன் போட்டு கலாய்ச்சிட்டாங்களாம்!
  என்னன்னு?
  கால் செண்டர் நடத்தறீங்களே? ஆட்டுக்கால் கிடைக்குமா? இல்லே கோழிக்கால் கிடைக்குமான்னு கேட்டிருக்காங்க!

3.   ஸ்மார்ட் போனும் புதுப் பொண்டாட்டியும் ஒண்ணுன்னு எப்படி சொல்றே?
தடவிக்கொடுத்து வேலை வாங்கணும் கீறல் பட்டா செலவு அதிகம் வைக்குமே!

4.   பேய்ப்படத்துக்கு கூட்டிக்கிட்டு போகச் சொன்னா கூட்டிக்கிட்டே போகமாட்டேங்கறீங்களே…!
நிஜத்துல பேயை பார்த்தா மக்கள் பயந்து ஓடுவாங்களே!

5.   இராம நாராயணன் விஜயை வைச்சு படம் எடுத்தா என்ன பேர் வைப்பாரு…?
   “குறி”

6.   எங்கள் கட்சி தலைவர் உப்புமா கட்சி தலைவராய் இருக்கலாம்! அதற்காக கூட்டணிக்கு அழைத்து வெறும் உப்புமாவை போட்டு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கின்றோம்!

7.   படத்துல ஹீரோயினை மூணு  பசங்க லவ் பண்றாங்க! அதுல யாரை கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு  ஹீரோயின் ஒரு போட்டி வைக்கிறாங்க! அதுல ஜெயிக்கறவரை கரம் பிடிக்கிறாங்க…!
  படத்தோட டைட்டில் என்ன?
தகுதிச் சுற்று!

8.   அந்த கிளினிக்லே உன்னை அடிக்கடி பார்க்க முடியுதே? ஏதாவது பெரிய வியாதியா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே அங்க புதுசா ஒரு நர்ஸ் வந்திருக்காங்க!

9.    மந்திரியாரே! மக்கள் ஒழுங்காக கிஸ்தி எல்லாம் கட்டிவிடுகின்றார்களா?
  எங்கே மன்னா! குஸ்தி போடத்தெரியாத மன்னனுக்கு எதற்கு கட்டவேண்டும் கிஸ்தி? என்று குரல் எழுப்புகின்றார்கள்!

10.  போர்க்களத்தில் மன்னர் கண்மூடி திறப்பதற்குள்….!
   எதிரியை வீழ்த்திவிட்டாரா?
  காணாமல் போய்விட்டார்!

11.  ஆனாலும் நம்ம ராப்பிச்சைக்கு கொழுப்பு அதிகம்?
   என்ன பண்ணான்?
மூனு நாளைக்கு பிச்சையெடுக்க வரமாட்டேன்! மிச்ச மீதி வைக்காம எல்லா சோத்தையும் ஐயாவுக்கே போட்டுருங்க! வேஸ்ட் பண்ண வேண்டாம்னு வாட்சப் ல தகவல் அனுப்பியிருக்கான்.

12.    அந்த எம்.எல்.ஏ நம்ம கட்சிக்கு டாட்டா காட்டிட்டு போயிட்டாராமே?
   ஆமாம்! எதிர்கட்சியிலே நிறைய ”பேட்டா” போட்டுக் கொடுக்கறேன்னு சொன்னாங்களாம்!


13. மாப்பிள்ளை ஸ்டிக்கர் வியாபாரம் பண்றாரு…!
  அப்ப நல்ல வருமானம் நிறைய எதிர்பாப்பாருன்னு சொல்லு!


14.  தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னே சினிமாவிலே “கெத்தா” இருந்தாராம்!
   இப்ப….!
 “ வெத்தா” போயிட்டார்!

15.   நூறு ஜோக்ஸ் அந்த பத்திரிக்கை எழுதி அனுப்பினதுலே ஒரு ஜோக்கை மட்டும் திருப்பி அனுப்பிட்டாங்களா மீதியை வெளியிட்டுட்டாங்களா?
     ஊகும்…! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லிட்டாங்க!

16. என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே மன்னர் முன் நிறைய சிக்கல்கள் காத்திருக்கின்றனவா?
  ஆமாம்… மஹாராணியாரும் இளவரசியும் முடியில் சிக்கலை அவிழ்த்துவிட சொல்லி  காத்திருக்கின்றார்கள்!

17.  “2016ல்  ….”
    கட்சியில் ஒருத்தரும் இருக்க மாட்டாங்க தலைவரே!

18.  தலைவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டினதை எல்லோரும் அரசியல் ஆக்கிட்டாங்களாமே!
   “ஒட்டி” அரசியல் பண்றாங்கன்னு சொல்லு!

19.  உன் பொண்ணு காதலிக்கிறான்னு சொல்றியே அவ மனசில அவன் எந்த அளவுக்கு இடம் பிடிச்சிருக்கான்…?
  அவ வயித்துல ஒரு பிள்ளைக்கு இடம் கொடுக்கற அளவுக்கு…!

20.  அந்த ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுக்கிறதுல எக்ஸ்பர்ட்…!
   அதுக்காக ஸ்டெத்தாஸ் கோப்புக்கு பதிலா கரண்ட் ப்ளக்கை கழுத்தில தொங்க விட்டிருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை…!

21.  தலைவரை ஏன் கட்சியிலே இருந்து நீக்கிட்டாங்க…?
   தகவல் அறியும் உரிமை சட்டத்திலே கட்சியோட கொள்கை என்னன்னு கேள்வி கேட்டாராம்!


22.  மாலையும் கழுத்துமாக மக்கள் பூமாறி தூவ ஊர்வலத்தில் வருவது போல கனாக் கண்டேன் அமைச்சரே…!
  மன்னா! அதில் நீங்கள் யானைமீது அமர்ந்து வந்தீர்களா இல்லை பல்லக்கில் படுத்து வந்தீர்களா மன்னா?

23.  நம்ம தலைவருக்கு டைமிங் காமெடி நல்லா வரும்...!
  அதுக்காக கட்சியை விட்டு நீக்கனதும் “ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! “ அறிக்கை விடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

24. ரொம்ப நாளா உங்க பையன் தடவிகிட்டே இருக்கான் தடவிகிட்டே இருக்கான்னு சொல்றீங்களே அப்படி என்னத்தை தடவுறான்?
     ஸ்மார்ட் போனைத்தான்!

25. மன்னருடைய ஆட்சியில் மக்கள் எல்லாம் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்று சொல்கிறாயே எப்படி?
      எதிரி மன்னன் மன்னரை கலாய்த்து மீம்ஸ் போட்டு வாட்சப் பேஸ்புக் என உலாவிடுகிறானே அதை பார்த்துதான்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!Wednesday, January 27, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4

 போகாதே!
      சுடுகாட்டு பக்கம் போகாதேடா!  ஏதாவது காத்து கருப்பு அடிச்சிரப்போவுது! எப்ப பாரு வெய்ய நேரத்துல அங்க சுத்தறியாமே? வேணாண்டா சொன்னா கேளு! தினம் தினம் அறிவுரை சொன்ன தாத்தா இப்போது மரணித்து சுடுகாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார்.

 நாற்காலி!
        வீட்டிற்கு புதிதாய் ரோஸ்வுட்டில் நாற்காலி செய்ய கார்பெண்டரை வரச்சொல்லியிருந்தேன். அதோ மூலையிலே கால் உடைஞ்சி தூக்கி போட்டிருக்கேனே அந்த மாதிரி நல்ல வேலைப்பாடா பண்ணனும் சரியா என்று உதாரணம் காட்ட கார்ப்பெண்டர் நாற்காலியை பார்த்தவர் ஐயா இதை ஏன் தூக்கி போட்டுட்டீங்க ஒரு கால்தானே உடைஞ்சிருக்கு சரி பண்ணிடலாம் என்றார்  அப்போதுதான் கவனித்தேன். அவரது ஒரு கால் செயற்கை என்பதை.

 விக்கெட்!
       இன்னும் ஒரே விக்கெட்!  ஆறே பந்துகள் மீதம் இருக்கின்றன! அவுட் ஆகாமல் 12 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெயித்துவிடலாம்..! கிரிக்கெட் ரசிகரான அவர் சீட் நுனியில் அமர்ந்து  பார்த்து கொண்டிருக்க பவுலர் வீசிய புல்டாஸ் சிக்சராக மாறியது. களத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அடுத்து மூன்று பந்துகள் ரன்னில்லை! இரண்டு பந்தில் ஆறு ரன்கள் எல்லோரும் திக் திக்கென்றிருக்க அந்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினான் பேட்ஸ்மேன்…   அப்பாடா! பெட்டிங்கில் ஜெயிச்சாச்சு! கடைசி வரை மேட்சை இழுத்து அடிக்கவுட்டு இன்னிக்கு செம கல்லா கட்டியாச்சு! என்று பெருமூச்சு விட்டார் அந்த புக்கி.

அரட்டை!
     நீ லட்சுமியோட பொண்ணு கல்யாணத்துக்கு கட்டிட்டு வந்த பட்டுபுடவை சூப்பர்டி! பெரிய பார்டர் மயில் பச்சைன்னு அசத்திருச்சு!
நீ மட்டும் என்னவாம் பெரிய அட்டிகை ஒன்னை போட்டு எல்லாரையும் திரும்பி பாக்க வைச்சிட்ட!
அடுத்தவாரம் நம்ம ஹேமா கிரஹப் பிரவேசம் போறாளாமே!
  ஆமாம்டி! நல்ல பெரிய பங்களாவா கட்டி வைச்சிருக்கா! புருஷன் காரன் தாசில்தார் ஆபீஸ்ல வேலை செய்யறார் இல்லே… அவளுக்கென்ன கொறைச்சல் இதை விட பெரிசா கூட கட்டுவா!
சரிடி! குட்நைட்!, ஓக்கே குட்நைட்!
  வாட்சப்பில் இரு தோழிகள் சாட் செய்துகொண்டிருந்தார்கள்.

 வித்தியாசம்!

   எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்! ரெண்டு பேரையும் வித்தியாசம் பாக்காமத்தான் வளர்க்கிறேன்! அவங்கவங்க என்ன விரும்புனாங்களோ அதை படிக்க வைச்சேன். பொண்ணாச்சேன்னு  கட்டுதிட்டம் பண்ணவே இல்லை! என்று சொன்னவர் 100 பவுன் போட்டு பொண்ணை கட்டிக் கொடுத்ததையும் அதே 100 பவுன் வரதட்சணை வாங்கி பையனுக்கு கல்யாணம் செய்ததையும் கடைசிவரை சொல்லவே இல்லை.

வியாதி!
   டாக்டர்! எனக்கு வித்தியாசமான வியாதி வந்திருக்கு! அப்படி என்ன வியாதி? யாரை பார்த்தாலும் இல்லை எதை பார்த்தாலும் முன்கூட்டியே பார்த்த மாதிரி தோணுது. புதுசா ஒரு சினிமா பார்த்தால் அதை எப்பவோ பார்த்த மாதிரி தோணுது. முத முதலா ஒரு நபரை பார்த்தா கூட அவரை முன்னேயே சந்திச்சா மாதிரி தோணுது..  உங்க மூளையில அதீதமான நினைவுகள் சேமிக்க படுதுன்னு நினைக்கறேன். வெல்! இதை கொஞ்சம் கொஞ்சமா குணப்படுத்திடலாம்! நான் சொல்ற டேப்ளட்ஸ் யூஸ் பண்ணுங்க! இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாருங்க!... “ இதையேத் தானே போனவாரமும் சொன்னீங்க டாக்டர்?”

கிசுகிசு!

   அந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே இயக்குனருக்கும் அந்த முன்னனி நடிகைக்கும் காதல் என்று கிசு கிசு கசிந்தது. இரு தரப்பும் ஒன்றும் சொல்லவில்லை! அப்படியே பரவட்டும் இது நம்ம படத்துக்கு நல்ல புரமோட் பண்ணும். இன்னும் ரெண்டு விஷயத்தை கூட சேர்த்து எழுதட்டும்… இதனால நம்ம படம் பிச்சுகிட்டு ஓடும்.. தயாரிப்பாளரும் டைரக்டரும் இப்படி நினைத்து கொண்டிருக்க ரசிகர்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். இனிமே அந்த நடிகை நம்ம ஆளு இல்லே! டைரக்டரோட ஆளூ? எதுக்கு வீணா படத்தை பார்க்கணும்! வேற ஆளை பார்ப்போம்!  படம் ப்ளாப் ஆகிப் போனது.

பத்து செகண்ட் கதை!
    அந்த எழுத்தாளர் பத்து செகண்டில் படிக்க ஓர் கதையை டைப் செய்து கொண்டிருந்தார். டைப் செய்தார் அழித்தார்… மீண்டும் டைப் செய்தார்… அழித்தார்… திருத்தினார்… டைப் செய்தார்… நறுக்கென்று நாலே வரியில் அமைய வேண்டுமே? சிந்தித்து கொண்டே இருந்தார். மீண்டும் அழித்து மீண்டும் டைப்பினார். இறுதியில் அவர் நினைத்த வடிவம் வந்த போது.. பல ஆயிரம் செகண்ட் கடந்து போயிருந்தது.

சேறு!
   நூறு கோடி ரூபாய் ஊழல்! சிரித்துக் கொண்டே கைதானதை நாளிதழ் பேனர்கள் படமெடுத்து தொங்க விட்டுக் கொண்டிருந்தன. வெக்கமில்லாம சிரிச்சுக்கிட்டிருக்கான் பார்!     பொறுமிக் கொண்டிருக்கும் போதே சாலையில் தேங்கியிருந்த சேற்றை வாரி அந்த பேனர் மீது அதுவும் சரியாக மந்திரி உருவத்தின் மீது அடித்து சென்றது லாரி. உன்னால முடியறது கூட எங்களால முடியாது என்று நொந்து கொண்டான் ஏழை பொது ஜனம்.

புரட்சி!
 பசுமைப் புரட்சியை பற்றி பாடத்தில் படித்து கொண்டிருந்த குழந்தையின் வீடு விவசாய நிலத்தை விற்று வந்த வருமானத்தை கொண்டு கட்டப்பட்டு இருந்ததை பாவம் அந்த குழந்தை அறிய வில்லை!

காதல் கல்யாணம்!
      கணேஷிம்- கவிதாவும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் ஓடிப்போக கூட நின்று உதவி ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணி வைத்த நண்பர்கள் உதவி ஏதும் அவர்கள் கருத்து வேறுபாடால் சண்டை போட்டு பிரிந்து விவாகரத்து செய்து கொண்டபோது  தேவைப்படவில்லை.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Tuesday, January 26, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3


வலைக்காதல்!

வாட்சப் குருப்பில் ஆரம்பித்து முகநூல் சாட்டிங்கில் வளர்ந்து இன்ஸ்டாகிராமில் வதனத்தை பதிவு செய்து இதயத்தை ஷேரிட் செய்ததில் ட்விட்டரில் மோதலாகி கோபத்தில் ஹேங்க் அவுட்  ஆனதும் ஒ.எல்.எக்ஸில்  எக்ஸேஞ்ச் செய்து  மேட்ரிமோனியில் அவசரத்தில் மூழ்கி மெசெஞ்சரில் முடிந்து போனது வலைக்காதல்.

  குடிஅரசு!

     மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே குடியரசாகும் பள்ளியில் பிள்ளைகளுக்கு குடியரசு தின உரையாற்றிக்கொண்டிருந்தார்
ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்த எம்.எல். ஏ.

முக்கியஸ்தர்!

      காலையில் கடை திறந்து இன்னும் சொல்லிக்கொள்ளும்படி வியாபாரம் ஆகவில்லை! இன்னும் அரைமணியில் கூட்டம் அள்ளும். அதற்குள் அந்த முக்கியஸ்தர் வந்துவிட்டால் போதும் சமாளித்துவிடலாம். இல்லையென்றால் இன்று திண்டாட்டம்தான். தினம் தினம் ஏழரைக்கெல்லாம் வந்துவிடுவார். அவர் வந்து போனபின்னரே வியாபாரம் சூடுபிடிக்கும் இன்னும் காணவில்லையே!  கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க அவர் வந்தார். மூட்டை ஒன்றை அவிழ்த்து கொட்ட சில்லறை நாணயங்கள் சிதறின. மடமடவென எண்ணி  முன்னூறு இருக்கு! இந்தா என்று நோட்டை தந்துவிட்டு  சில்லறைகளை கல்லாவில் கொட்டினேன். சில்லறை இல்லேன்னா வியாபாரம் படுத்துடும் இல்லே!

பிரபலம்!

     மரியாதை இல்லாத இடத்துக்கு நான் வரமாட்டேன்! வேற எதுவும் முக்கியமில்ல மனுஷனுக்கு மரியாதைதான் முக்கியம்! என்று எப்போதும் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் அந்த பிரபலர் மரணித்துவிட்டார். ப்ளக்ஸ்பேனர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த மாலைகள் குவியத்துவங்க ஒரே அல்லோகலம்! அனைவரும் கலைய  பொணத்தை பாடையிலே கட்டுங்க சீக்கிரம் சுடுகாட்டுக்கு கொண்டுபோகனும் . இறுதியாத்திரையில் அவர் மரியாதை மறைந்து போனது.

சிக்கனம்!

    வண்டியை ஆடவிட்டுக்கிட்டே பேசிக்கிட்டிருக்கியே? நிறைய பணம் வைச்சிருக்கியா பெட்ரோல் போட! .. “ஆஃப் பண்ணிட்டு பேசுப்பா! என்று சொன்ன நண்பன் ,வீட்டு வாட்டர் டேங்க் ஓவர் ப்ளோ ஆகி வீணாக ஓடிக்கொண்டிருந்ததை சட்டை செய்ய வில்லை

எல்லாம் ஒரே சீரீஸ்!

       எப்ப பாரு சீரியல்தான்! காலையிலே பதினோறு மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி பதினோறு மணி வரைக்கும் ஒரு சீரியல் விடறதில்லை! ஒரே அழுகை பழிவாங்கல் வில்லிகள் சுத்த போர்! எப்படித்தான் பாக்கறாங்களோ? தெரியலை மனைவியை பற்றி நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்த அதே வேலையில், சதா பேஸ்புக்குன்னு ஒன்னை கட்டிண்டு அழறார்? பல்லுக்கூட விலக்காம போனை எடுத்து மேய்ஞ்சுகிட்டு அப்படி என்னதான் பார்ப்பாரோ தெரியலைடி!  கணவரை கலாய்த்துக்கொண்டிருந்தாள் அந்த மனைவி.

கடன்!


    ஐம்பதும் நூறும் அடிக்கடி கடன் வாங்கும் நண்பனை அந்த பெட்டி கடையில் முதலாளியாய் பார்த்ததும் சந்தோஷம். எப்படியோ உருப்பட்டால் சரி! வாழ்த்துக்கள் சொல்லி ஆமாம்… எப்படிடா திடீர்னு பெட்டிக்கடை வைக்க பணம்? என்று கேட்டபோது   எல்லாம் பேங்க் லோன் தான் என்றான்.

பேனா!

    வங்கியில் நல்ல கூட்டம்! உள்ளே நிறைய பேர் பார்ம் பில்லப் செய்து கொண்டிருக்க “ சார் கொஞ்சம் பேனா தர்றீங்களா? என்று அந்த இளைஞனிடம் கேட்டேன். இது உங்க பேனாவா? தேங்க்ஸ் என்று கொடுக்க ஒரு மணி நேரமாய் வங்கி முழுக்க சுற்றி வந்த பேனாவை பையில் பத்திரப்படுத்தியபடி வெளியே வந்தேன்.

கிரிக்கெட்!

     இவனுங்க எல்லாம் என்னத்தை ஆடி என்னத்தை கிழிக்கப் போறானுவ! எல்லாம் பணம்? பிக்ஸிங்! இவங்க ஆட்டத்தை பாக்கிறது வேஸ்ட்! தோற்றுப் போன டீமை விமரிசித்த வாய் மறுநாள் ஜெயிக்கையில் மச்சி! மேட்ச் பார்த்தியா! அட்டகாசமா இருந்துச்சு என்கிறது.

இலவசம்!

    இலவசமாய் பொருட்கள் கொடுத்தே நாட்டை அரசியல் கட்சிகள்  கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கிவிட்டதாய் தலையங்கத்தில் காட்டமாய் விமரிசித்து எழுதியிருந்த அந்த வார இதழுடன் இலவசமாய் ஒரு ஷாம்பு சாஷே கொடுத்து இருந்தார்கள்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Monday, January 25, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

ஈரக்காற்று
உஷ்ணமாகியது உடல்!
பனி!

அழைக்காமலேயே
உள்ளேபுகுகிறது தூசு!
சாலையோர வீடுகள்!

கொத்தி தின்றது காகம்
வலிக்காமல் சிரித்தது
வாசலில் கோலம்!

சுற்றி சுற்றி
தேய்ந்து போனது
நிலவு!

சலனப் பட்டது
வாழ்க்கை இழந்தது
நீர்!

பொறுமையின் மரணத்தில்
ஜனனமாகிறது
கோபம்!

மேகப் பொதிகளை
இறக்கிவிட்டது காற்று
மழை!

தொட்டுவிட துடித்தும்
எட்ட முடிவதில்லை!
வானுயர்ந்த கட்டிடங்கள்!

கண்ணை நோண்டியும்
தன்னைத் தந்தது!
நுங்கு!


பல் முளைத்த வானம்!
பார்க்கவந்தன மின்மினிகள்!
பிறைநிலா!

 ஈர்த்ததும்
 இழந்தன உயிர்!
 பழங்கள்!

 புத்தாடை தரித்தன மரங்கள்!
 பூத்து குலுங்கியது!
 வசந்தம்!


 தடங்கள் அழிபட்டது
 தடுமாறிப்போனது!
 வரலாறு!

 பிம்பம் பிரதிபலிக்கும்
 கண்ணாடிகள்!
 குழந்தைகள்!

 கொஞ்சி மகிழ்கையில்
அஞ்சி ஓடுகின்றன துன்பங்கள்!
குழந்தைகள்!

நகர அழுக்குகள்!
நகரமுடியால் உயிர்விட்டன
நதிகள்!

உறங்கிப் போன விவசாயம்!
உயிர்த்து எழுப்பியது
மழை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Friday, January 22, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60


1.   கொத்தனார் கிட்ட நியாயம் கேட்க போனியே என்ன ஆச்சு?
பூசி மெழுகி அனுப்பிச்சிட்டார்!

2.   ஏரியைத் திறந்தது பத்தி விவாதம் பண்ண சபாநாயகர் ஒத்துக்கலையாம்!
  அப்புறம் என்ன?
மொத்த  சட்டசபை கதவையும் திறந்து விட்டுட்டாங்க வெளிநடப்புக்கு!

3.   மருந்து சீட்டை எடுத்துக்கிட்டு போயும் அந்த மெடிக்கல்ல மருந்து தர மாட்டேன்னுட்டாங்களா ஏன்?
நான் பணம் கொண்டு போகலையே!

4.   காலையிலே சாப்பிடாம கோச்சுக்கிட்டு ஆபிஸ்வந்துட்டா சாயந்திரம் என் வொய்ஃப் சமாதானப்படுத்த ஊட்டி விடுவா?
  பரவாயில்லையே என் வொய்ஃப் உள்ள வரவிடாமா பூட்டி விடுவா!

5.   பல தடைகளை கடந்துதான் முன்னேற வேண்டும்னு மன்னர் சொல்றாரே எதுக்கு?
போரில் தப்பித்து ஓடிவருகையில் ஏற்படும் தடைகளைத்தான் சொல்றாரு!

6.   மன்னரின் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டதா என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே!
கரகாட்டகாரியோடு அவர் ஆட்டம் போட்டதை ராணியார் பார்த்து தொலைத்துவிட்டாரே!

7.   எக்ஸ்ட்ரா கவர்லே நிக்கிற பீல்டர் எப்பவும் பந்தை நழுவ விட்டுட்டு இருக்காரே,,,!
ஒரு வேளை “எக்ஸ்ட்ரா கவர்” வாங்கிட்டாரோ என்னமோ!


8.   ஒண்ணை நூறா மாத்திரதிலே நம்ம தலைவர் கில்லாடியா? எப்படி சொல்றே?
பத்துரூபா பொங்கல் இனாம் கொடுத்துட்டு போட்டோ எடுக்க நூறு ரூபா வசூலிச்சிடறாரே!

9.    அவர் போலிச் சாமியாருன்னு எப்படிச் சொல்றே?
  துன்பங்களில் இருந்து விடுபெற சரியான “போதை” யை தேர்ந்தெடுங்கள்னு சொல்றாரே!


10.  மன்னா! நம் இளவரசர் எப்போதும் கார்டூன் சேனல்களாகவே பார்த்துக் கொண்டு இருக்கிறாராம்…!
“போகோ” வென்று வருவான் என்று சொல்லுங்கள்…!

11. நெசவுத்தொழிலாளியா விஜய் நடிச்சா படத்துக்கு என்ன தலைப்பு வைப்பாங்க?
“ தறி”ன்னு தான்!

12.  அவரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
   ப்ளட் குருப் எதுன்னு எழுதிக் கொடுங்கன்னு கேட்டா வாட்ஸ் அப் குருப்பை எழுதிக் கொடுக்கிறாரே!

13.  2016ல் நாம் ஆட்சியை பிடிப்போம்…..!
  கனவு காணனுது போதும் நினைவுக்கு வாங்க தலைவரே!

14.  தலைவரை எங்க தேடியும் போலீஸ்ல கண்டுபிடிக்க முடியலையாமே எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருந்தார்?
   சொந்த தொகுதியிலேதான்! அங்கதானே அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது.!

15. கோலியை கேப்டனாக்கனுன்னு எல்லோரும் சொல்றாங்களே எப்பய்யா கோலி விளையாட்டை கிரிக்கெட்ல சேர்த்தாங்க?
   தலைவரே… அது விராட் கோஹ்லி!

16.   மன்னர் எதற்கு காதில் பஞ்சு அடைத்துக் கொண்டு உலா வருகிறார்?
அவருக்கு எதிரான கோஷ சத்தம் அதிகமாகிவிட்டது என்று மந்திரியார் எச்சரித்தாராம்!

17. நிவாரணப் பணம் வாங்கற இடத்திலே ஒரே தள்ளு முள்ளா போயிருச்சு!
அப்ப நிவா”ரணம்”  ஆகிப்போச்சுன்னு சொல்லு!

18.  அந்த பேச்சாளர் பேச ஆரம்பிச்சா கெட்ட வார்த்தைகளா வந்து விழும்…!
அப்ப ரொம்ப “பீப்” புலரான பேச்சாளர்னு சொல்லுங்க!

19.  முதல் நாள்…. முதல் கையெழுத்து…!
  ஒண்ணுமில்லே தலைவர் முதியோர் கல்வியிலே சேர்ந்து இருக்கார் அதுக்குத்தான் இத்தனை பில்டப் பண்றார்!


20.  ஆத்திரத்துல நேத்து என் மனைவிகிட்டே கொஞ்சம் வாயை விட்டுட்டேன்…!
     அப்புறம்?
  பல்லை பிடுங்கிட்டுத் தான் விட்டா…!

21.   அவரு கமல் ஹாசன் ரசிகரா இருக்கலாம்.. ஆனா பூட்டுக்கடையிலே இப்படியெல்லாம் கேட்க கூடாது…!
      அப்படி என்ன கேட்டார்?
   “லிப்லாக்”  பூட்டு இருக்குதான்னுதான்!


ஜீவி சார் நேற்றைய பதிவில்  ஜோக்ஸுக்கு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் சிரிக்காம சொல்லுங்கன்னு கேட்டிருந்தார்...! சிரிக்காம சொல்ல முடியாது போலிருக்கே ஆனா இது சரியா வருமா  “நகைப்பூ”

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
      

Thursday, January 21, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 59

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 59


1.   மன்னர் போருக்கான மூஸ்தீபுகளை பண்ண ஆரம்பித்துவிட்டாராமே?
ஆமாம்! ஆமாம்! பதுங்கு குழிகள், சுரங்கபாதைகள், காலணிகள் எல்லாம் ரெடியாக பழுது பார்க்கும்படி சொல்லிவிட்டார்!

2.   தலைவர் இன்னமும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே?
அன்னைக்கு கொடுத்த அதே பத்து ரூபாயை இன்னிக்கும் இனாமா கொடுக்கிறதை வச்சுத்தான்!

3.   முதலாளிக்கிட்டே பொங்கல் இனாம் கேட்டியே என்ன சொன்னார்?
  இனிமே நீ இங்கே நிற்க “வேணாம்”னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு!

4.   அந்த டாக்டர்கிட்டே ஏன் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணிக்க கூடாதுன்னு சொல்றே?
பண்ணிக்கிட்டா அதோட வாழ்க்கையே “குளோஸ்” ஆயிருமே!

5.   உங்க ஹஸ்பெண்டுக்கு பார்வையிலே கோளாறுன்னு கூட்டிட்டு வந்திருக்கீங்களே போனவாரம்தானே ஆபரேஷன் பண்ணி எல்லா டெஸ்டும் எடுத்தோம்…!
ஆபரேஷனுக்கு முன்னாடி கண்ணே மணியேன்னு என்னை கொஞ்சிக்கிட்டிருந்தவர் இப்ப சனியனே மூதேவின்னு திட்டிக்கிட்டு இருக்காரே!

6.   வெள்ளம் வந்ததும் தலைவருக்கு தலை கால் புரியலை…!
  அப்புறம்…?
வந்த நிவாரணம் எல்லாத்தையும்  “வாரிச்சுருட்டிக்கிட்டு” கிளம்பிட்டாரு!

7.   மன்னா! எதிரியின் படை தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்டது!
  மந்திரியாரே அப்படியானால் விட்டு விடலாமா ஜூட்…!


8.   தலைவர் ஜெயிலுக்குள்ளே பெரிய கலாட்டா பண்ணிட்டாராமே…?
  ஆமாம்…! சாதா களியெல்லாம் என்னால சாப்பிட முடியாது “ கதகளி” தான் வேணும்னு அடம்பிடிச்சாராம்!

9.   தலைவர் எதுக்கு கூட்டத்துல தனக்கு இவ்ளோ நெட் பேலன்ஸ் டேட்டா இருக்குன்னு புள்ளிவிவரம் சொல்றாரு…?
” அவரு அப்டேட்டா” இல்லைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டு இப்படி பேசிக்கிட்டிருக்காரு!

10.  தன் கட்சி எம்.எல்.ஏக் கள் விலை போறதை தடுக்க தலைவர் ஒரு ஐடியா பண்ணிட்டாரு…!
என்ன பண்ணாறு..?
  ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ஒரு ரேட் அவரா பிக்ஸ் பண்ணி ஏலத்துல விட ஏற்பாடு செஞ்சிட்டாரு..!

11. படத்துல பதினெட்டாவது முறையா அரியர்ஸ் எழுதி பாஸ் பண்றாரு நம்ம ஹீரோ?
“ கஜினி முருகன்”னு சொல்லுங்க!


12. வெள்ள பாதிப்புல இருந்து நம்ம தலைவர் இன்னும் மீளவே இல்லே போலிருக்கு…!
   எப்படிச் சொல்றே?
வடியட்டும், விடியட்டும்னு அறிக்கை விடறாரே!

13. புலவர் ஏன் வருத்தமாக இருக்கிறார்?
மன்னரை கலாய்த்து பாடியதால் வாட்சப் குருப்பில் இருந்து மன்னர் புலவரை நீக்கி விட்டாராம்!

14. எதிரிகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள் தளபதியாரே…!
  உங்களைப் பற்றி இவ்வளவு மீம்ஸ் கிரியேட்டிவ் பண்ணி இருக்கிறார்களே அதை வைத்துத்தான்!

15. டாடி! நான் ஒரு பையனை லவ் பண்றேன்…!
பையன் எப்படி…?
கையை வச்சுக்கிட்டு ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டேங்கிறார் டாடி!

16. நம்ம தலைவரோட முதுகு இப்படி வளைஞ்சிகிட்டே இருக்குதே… எப்பவுவே இப்படித்தானா…?
  ஆமாம்…! ஆமாம்…! அதனாலதான் அவரோட வாழ்க்கை எப்பவுமே நிமிர்ந்துகிட்டே இருக்கு!

17.  வாரத்துல ஆறு நாள் வீட்டில எல்லோருக்கும் நான் தான் சமைச்சு போடனும்.. ஏழாவது நாள்…
  உங்க வொய்ஃப் சமைப்பாங்களா…?
அவ கூட்டிட்ட வர்ற கெஸ்ட்டுக்கும் சேர்த்து சமைக்க வேண்டி இருக்குன்னு சொல்ல வந்தேன்.

18.  நம்ம ஏட்டையா கடமை தவறாத போலீஸ்னு எப்படி சொல்றே கபாலி…?
மழை வெள்ளம் வந்தப்ப கூட நீந்திக் கிட்டு வந்து மாமூல் வாங்கிட்டு போனாரே அதை வச்சுத்தான்!

19.  எதிர்க் கட்சிகள் எழுப்பும் புகாரைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை…!
   திஹார் எப்படியிருக்குங்கிறதுதானே நம்ம கவலை தலைவரே!

20. எதிரி மன்னன் நோகாமல் நுங்கு தின்கிறான் மன்னரே…!
  எப்படி?
நாம் அனுப்பும் படைகளை எல்லாம் அவன் ஸ்டிக்கர் ஒட்டி அவனது படையில் சேர்த்துக் கொள்கிறான்..

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்த்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
      
Related Posts Plugin for WordPress, Blogger...