புதிர் போட்ட இளவரசி! பாப்பா மலர்!
புதிர் போட்ட இளவரசி!
பாப்பா மலர்!
ரொம்ப காலத்துக்கு
முன்னாடி அவந்தி நாட்டுல ஒரு அழகான ராஜகுமாரி இருந்தாங்க. அழகு மட்டும் இல்லே அறிவாளியும்
கூட. அவங்களை கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ ராஜகுமாரர்கள் தவமிருந்தாங்க. ஆனா ராஜகுமாரி
மசிஞ்சி கொடுக்கலை. இளவரசனா இருந்தாலும் அறிவாளியைத்தான் கல்யாணம் செய்துப்பேன் அப்படின்னு
உறுதியா நின்னாங்க.
சரி! எப்படி வர மாப்பிள்ளையோட புத்திசாலித்தனத்தை
தெரிஞ்சிக்கிறதுன்னு அரசர் கேட்டாரு. “ அப்பா நான் ஒரு புதிர் போடறேன்! அந்த புதிரை
யாரு விடுவிக்கிறாங்களோ அவங்களை நான் கல்யாணம் பண்ணிப்பேன். அது யாராய் இருந்தாலும்
நீங்க சம்மதிக்கணும்” அப்படின்னு ராஜகுமாரி சொல்லிட்டாங்க.
மறுநாளே அரசவையைக் கூட்டி ராஜா அறிவிச்சிட்டாரு.
இளவரசி ஒரு புதிர் போடப்போறாங்க! அந்த புதிரை அவிழ்த்து விடையை சரியா சொன்னவரை இளவரசிக்கு
திருமணம் செய்து கொடுக்க போறேன். அவங்களே இந்த நாடாளும் ராஜாவா ஆகப்போறாரு. இதுலே யாரு
வேண்டுமானாலும் கலந்துக்கலாம். யார் புத்திசாலியோ அவர்தான் என்னோட மருமகன்! அப்படினு
அறிவிச்சாரு.
அரச குமாரி அந்த சபைக்கு வந்து எல்லோரும் வணக்கம்
சொல்லி தன்னோட புதிரை சொல்ல ஆரம்பிச்சாங்க. ”எனக்கு நாலு பழங்கள் வேணும். அந்த பழங்களை
யாரு கொண்டு வந்து தர்றீங்களோ அவங்களை நான் கல்யாணம் செஞ்சிப்பேன்!” அப்படின்னு சொன்னாங்க.
“அட! இவ்வளவுதானா?
நாலுபழங்கள் எந்தெந்த பழங்கள் வேண்டும்னு சொல்லுங்க உடனே கொண்டு வந்துடறோம்!”னு எல்லோரும்
கூச்சல் போட்டாங்க.
“அது அவ்வளோ
சுலபம் இல்லை! எனக்கு வேண்டிய முதல் பழம் இதுதான். பழமானாலும் காயாவே இருக்கும். ரெண்டாவது
காய்காய்ச்சாலும் பழம் பழுத்தாலும் அதுல பூ இருக்கும் மூனாவது பூ பூத்தா அழகா இருக்கும்
அது காயாகி பழமானா யாரும் விரும்ப மாட்டாங்க, நாலாவது பழத்தை திங்கும் போது கொட்டை
தட்டுப்படாது. ஆனா கொட்டை அப்படியே பழத்துல இருக்கும். இந்த நாலு பழத்தையும் யாராவது
கொண்டு வர முடியுமா?” இளவரசி கேட்கவும் கூட்டம் அமைதியாயிருச்சு.
”இப்படியெல்லாம் பழம் இருக்கா? இளவரசிக்கு பைத்தியம்
தான் பிடிச்சு இருக்கு!” அப்படின்னு சலசலப்பா பேசிக்கிட்டாங்க.
இவங்களுக்கு நிச்சயமா கல்யாணம் ஆவப் போறது இல்லே!
இப்படி ஒரு பழம் இனிமேத்தான் உற்பத்தி பண்ணனும்
அப்படின்னு சிலர் பேசாம கிளம்பிப் போயிட்டாங்க.
இந்த இளவரசிக்கு நாம ஏத்தவங்க இல்லை! ரொம்ப புத்திசாலியா
இருக்காங்க! இந்த பழங்களை தேடி அலைஞ்சா நம்ம நேரம்தான் வீணாகும்னு சிலர் கிளம்பிட்டாங்க.
ராஜா தொண்டையைக் கணைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
இன்னும் ஒரு மாதம் நேரம் எடுத்துக்கோங்க! அதுக்குள்ள விடையை கண்டுபிடிச்சு சொல்ற நபருக்கு
இளவரசியை திருமணம் செய்து தரேன் அவை கலையட்டும்னு அறிவிச்சாரு. சபை கலைந்து போனது.
இரண்டு வாரங்கள் கழிந்ததும் சபை கூடியது. இளவரசியோட
புதிருக்கு விடை யாராவது கண்டுபிடிச்சு இருக்கீங்களா?ன்னு கூடியிருந்தோரை பார்த்து
அரசர் கேட்டாரு. எல்லோரும் மவுனித்தார்கள்.
அப்போது ஏழை வாலிபன் ஒருவன், அரசர் பெருமானே! இளவரசி
கேட்ட பழங்களை நான் கொண்டு வந்துள்ளேன்! என்று உரக்கக் கத்தினான்.
அவனை உள்ளே அழைத்த அரசர், இளவரசியிடம் பழங்களைத்
தருமாறு சொன்னார்.
அவன் அரசரை வணங்கி
விட்டு, ”இளவரசி தாங்கள் கேட்ட முதல் பழம் பழமானாலும் காயாகவே இருக்க கூடிய பழம். அது
இதுதான்!” என்று தேங்காய் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
”இது தென்னைமரத்தில் பழுத்து கீழே விழுந்தது. ஆனாலும்
இதை தேங்காய் என்று சொல்வார்களெ தவிர தேம்பழம்னு சொல்றது இல்லை! பழுத்தாலும் காயாக
இருப்பது இது ஒண்ணுதான்” என்றான்.
அரசகுமாரி தலையசைத்தாள்.
”உண்மைதான்! அடுத்து நான் கேட்டது காய்ச்சாலும் பழுத்தாலும் பூவோடு இருப்பதை கொண்டு
வந்திருக்கிறீர்களா?” என்றாள்.
இதோ இளவரசி என்று வாழைக் குலை ஒன்றை எடுத்துக் காண்பித்த
அவன், இதோ இந்த வாழைக் குலையில் காயும் இருக்கிறது பழமும் இருக்கிறது. அடியில் பூவும்
இருக்கிறது. என்றான்.
இளவரசி முகம் மலர்ந்து
பாராட்டினாள். அற்புதம்! அடுத்து…!
பூவாக இருக்கையில்
அழகாய் இருக்கும் காய்த்து பழுத்தால் யாரும் விரும்பாத பழம் இதோ என்று நெருஞ்சிப் பழத்தை
காண்பித்தான் வாலிபன்.
இந்த பூ மஞ்சளாக
அழகாக இருக்கும்! பழமானால் யாருக்கும் பிடிக்காது!
இப்போது சபை கைத்தட்டி
ஆரவாரித்தது. இன்னும் ஒரே பழம் இதிலும் வாலிபன் ஜெயித்துவிட்டால் இளவரசியை கைப்பிடிக்கலாம்
எல்லோரும் ஆர்வமுடன் பார்க்க, இளவரசி கேட்டாள், சாப்பிடும் போது கொட்டை தென்படாது ஆனால்
கொட்டை இருக்க கூடிய பழத்தை கொண்டு வந்திருக்கிறீர்களா?
இதோ நீங்கள் கேட்ட நாலாவது பழம்! என்று முந்திரிப்
பழத்தை எடுத்து காண்பித்தான் வாலிபன்.
இதில் கொட்டை வெளியில் இருக்கிறது பழத்தை உண்ணும்
போது கொட்டை வாயில் சிக்காது. ஆனால் கொட்டை இருக்கிறது பழத்தை உண்ணுகையில் கொட்டை தனியாக
இருக்கும் என்றான்.
இளவரசி உற்சாக மிகுதியில் கைதட்டி பாராட்டி முகம்
நாணினாள்.
வாலிபரே! நீர்
யார்?
"அரசரே! நான் இந்த
ஊரில் வசிக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்".
"ஆனாலும் உன் புத்திசாலித்தனம் சிறப்பானது! இத்தனை
கூர்மையான திறன் கொண்ட உன்னிடம் இளவரசியை மட்டுமல்ல நாட்டையும் ஒப்படைப்பதில் மகிழ்வடைகிறேன்!" என்றார் ராஜா.
அப்புறம் என்ன?
இளவரசிக்கும் வாலிபனுக்கும் தடபுடலா கல்யாணம் ஆச்சு! நீண்டகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து
வந்தாங்க!
(செவிவழிக் கதை)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
தளிர் வாசகர்கள்,
நண்பர்கள், அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கதையை மிகவும் ரசித்தேன் நண்பரே அவன் முந்தி விட்டான் இல்லையேல் சான்ஸ் எனக்குத்தான்.
ReplyDeleteஹூம்... கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே சாத்தியமான விஷயங்கள்! ரசித்தேன்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கதை. ரசித்தேன் நண்பரே......
ReplyDeleteகதையினை ரசித்தேன்நண்பரே
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்திசாலித்தனம் சிந்திக்கவைக்கும் கதை. ரசித்தோம்.
ReplyDeleteகதை அருமை நண்பரே...
ReplyDeleteரசித்தேன்.