வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2


வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது?


அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன.


 பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள்  ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு. 


எனவே சில வார மாத இதழ்களை வாங்கி வாசித்து அதன் பகுதிகளை ரசித்து விமர்சித்து வாசகர் கடிதம் அனுப்பி பழகவும். வாசகர் கடிதம் பகுதிக்கும் இப்போது சில இதழ்கள் சன்மானம் வழங்குகின்றது. சென்னை வாரமலர் அதிகபட்சமாக ஒரு வாசகர் கடிதத்திற்கு ரூ 250 சன்மானம் வழங்குகின்றது. எனவே வாசகர் கடிதம் எழுதிப் பழகுங்கள். சும்மா ஒரு ரெண்டு கடிதம் போட்டு நம் கடிதம் பிரசுரமாகிவிட்டதா? என்று எதிர்பார்க்காதீர்கள்.


சென்னை வாரமலருக்கு 100 வாசகர் கடிதம் அனுப்பும் வாசக எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.  100 போஸ்ட்கார்ட் செலவு 50 ரூபாய். ஒரு கடிதம் பிரசுரம் ஆனால் 250 ரூபாய் நிச்சயம். லாபம் 200 ரூபாய் இருக்கிறது. இதில் பம்பர் பரிசு 1500 ரூபாயும் உண்டு.


சென்னை வாரமலர் இதழ் வாசகர்களுக்கு பரிசுகளை வழங்கும் பாரி வள்ளல்.  இது உங்கள் இடம் பகுதி வாசகர்களுக்கானது. இதில் உங்களை பாதித்த உங்கள் அக்கம் பக்கம் நடந்த நிகழ்வுகளை சுவையாக எழுதலாம். மூன்று கடிதங்கள் பிரசுரமாகும். முதல் பரிசு 3000- இரண்டாம் பரிசு 2500. மூன்றாம் பரிசு 1500. அந்துமணி கேள்விபதிலில் சிறப்பு கேள்விகளுக்கு 1000, 750,500 என்ற வகையில் பரிசு உண்டு. கவிதைக்கு 2500ம் கதைகளுக்கு 2500ம் சன்மானம் வழங்கப்படுகிறது. இது தவிர குறுக்கெழுத்துப் போட்டி, எட்டுவித்தியாசங்கள் போட்டி என்று நிறைய பரிசுகள். எனவே சென்னை வாரமலரில் போட்டி அதிகம். இங்கு நிறைய பேர் போட்டியிடுகின்றனர். முட்டி மோதி வெற்றி பெற்று முத்திரை பதித்துவிட்டால் நீங்கள் ஹீரோதான். ஒரு ஜோக் ஒன்றுக்கு 1000 ரூபாய் பரிசு. மொத்தம் ஆறு ஜோக்ஸ்தான் ஒரு வாரத்தில் பிரசுரம் ஆகும் அந்த ஆறில் ஒன்றாய் இடம்பிடிக்க ஆயிரக் கணக்கானோர் காத்திருப்பர். 


தினமலர் சிறுவர் மலரிலும் மொக்கை ஜோக்ஸ், பகுதி உண்டு. 250 ரூபாய் சன்மானம். அது தவிர வாசகர் அனுபவங்கள், குட்டிக்கதைகள் பகுதியும் உண்டு.


அடுத்து குமுதம் வார இதழ். இதில் வாசகர்களுக்கான பகுதிகள் வாசகர் கடிதம், வாசகர் வாய்ஸ், ஜோக்ஸ், அரசு கேள்விபதில்.  வாரமலர் வள்ளல் என்றால் குமுதம் கஞ்சன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பரிசுகள் இருக்கும். ஆனால் இங்கு போட்டிகள் அதிகம். 


வார்த்தை விளையாட்டு ஜோக்ஸ்கள் குமுதத்தில் பிரபலம். சினிமா சம்பந்தமான அரசு கேள்விபதில்கள் அதிகம் வரும்.  வாசகர் வாய்சில் 20 முதல் 30 வார்த்தைகளுக்குள் ஒரு துணுக்குச்செய்தியை நீங்கள் தந்தால் இதழில் இடம்பெறலாம். அது தவிர ஒரு பக்க கதைகள் 100 வார்த்தைகளில் எழுதினால் பிரசுரமாகும். இப்போது அதையும் 70 வார்த்தைகளாக சுருக்கி இலக்கிய சேவை செய்து வருகின்றது குமுதம்.


குமுதம் இதழில் வாசகர் கடிதம் 50 ரூபாய் பரிசும் அரசு கேள்விபதில் 100 ரூபாய் பரிசும் ஜோக்ஸ்களுக்கு 50 ரூபாய் பரிசும் கிடைக்கும். ஒரு பக்க கதைகளுக்கு 200 ரூபாயும் துணுக்குகளுக்கு 50 ரூபாயும் கிடைக்கும். வாசக எழுத்தாளரின் சிறுகதைக்கு 750 ரூபாய் தான் பரிசு.


பணத்தைப் பற்றி கவலைப்படாமல் எழுதிக் குவித்தால் உங்கள் படைப்பு பிரசுரமாக வாய்ப்புண்டு.இங்கும் போட்டி அதிகம். தமிழின் நம்பர் ஒன் இதழ் என்று இங்கு நிறைய பேர் இதில் எழுத விரும்புவர். அவர்களில் ஒருவராக நீங்கள் மாற அதிகம் பொறுமையும் முயற்சியும் வேண்டும்.


அடுத்து ஆனந்த விகடன். இதில் வாசகர்களுக்கான பகுதிகள் மிகக் குறைவு. ஜோக்ஸ் மற்றும் விகடன் மேடை. இரண்டு பகுதிகள்தான். அடுத்து டிவிட்டரில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் உங்கள் டிவிட்டுகள் ரசிக்கும்படி இருந்து அதிகமாக ஆர்.டி ஆனால் உங்கள் டிவிட்டை எடுத்துப் போடுவார்கள்.


ஆன்ந்தவிகடன் ஜோக்ஸ்கள் ட்ரெண்டியாக அரசியல் நையாண்டியாக இருக்கும். அரசியல் நையாண்டிகளுக்கே அதிக வாய்ப்பு. சுருக்கமாக நச்சென்று இருக்கும் ஜோக்ஸ்கள் பிரசுரமாகும். ஜோக்ஸ்களுக்கு தற்போது 200 ரூபாய் வரை சன்மானம் வழங்குகின்றனர்.


விகடன் மேடை பகுதிக்கு பேஸ்புக் விகடன் பக்கத்தில் தினம் தோறும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அனுப்பினால் அவை சிறப்பாக இருந்தால் பிரசுரமாகும் பரிசு ரூ 250. என்னுடைய நான்கு பதில் பிரசுரம் ஆகி அக்கவுண்ட் டீடெயில் அனுப்பியும் பணம் வரவில்லை. அப்புறம் நான் எழுதுவதை தவிர்த்து விட்டேன். தற்போது இது திமுக அனுதாப  இதழாக இருப்பதால் ஆளுங்கட்சியை தாக்கி எழுதும் ஜோக்ஸ்கள் முன்னுரிமை அளித்து வெளியிடுவார்கள்.


கல்கியில் வாசகர் கேள்வி, வாசகர் கடிதம், ஜோக்ஸில் வாசகர்களுக்கு வாய்ப்பு உண்டு. பரிசு ஜோக்ஸ் மற்றும் கடித்த்திற்கு ரூ 50 வாசகர் கேள்விக்கு 50 100 250 என்று மூன்று வகைப் பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்கள். மின்னிதழ் ஆனபிறகு வழங்குகின்றார்களா தெரியவில்லை. வாசகர்களின் படைப்பு பிரசுரமானால் இலவசப் பிரதியை அனுப்பிக்கொண்டிருந்த ஒரே இதழ் கல்கியே.


இதன் குடும்ப இதழான மங்கையர் மலரில் ஜோக்ஸ்,குட்டிக் கதைகள், துணுக்குகள், வீட்டுக் குறிப்புகள் என்று வாசகர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. புத்தம்புதிய வீட்டுக் குறிப்புகள் எழுதி அனுப்பினால் பரிசுகள் கிடைக்கும்.  


கல்கி மங்கையர் மலர் ஜோக்ஸ்கள் அரதப் பழசான ரகம். ஆபிஸில் தூங்குவது. மனைவி அடிப்பது, காதலன் காதலியை ஏமாற்றுவது,பதுங்குகுழியில் மன்னர் பதுங்குவது போன்ற ஜோக்ஸ்களே மாற்றி மாற்றி ஆக்ரமிக்கும். இங்கும் இதிலும் ஒருசிலரின் ஆதிக்கமே அதிகம். அவர்களை கடந்து உங்கள் ஜோக்ஸ் இடம்பெற அதிர்ஷ்டம் கொஞ்சம் இருக்க வேண்டும்.


காமதேனு வார இதழில் வாசகர்களுக்கு ஜோக்ஸ், டயலாக், போட்டோ கமெண்ட் பகுதியில் வாய்ப்பு உண்டு.  ஜோக்ஸ்களுக்கு 100 ரூபாய் சன்மானம் உண்டு. ஒரு இதழில் 12 ஜோக்ஸ்கள் இடம்பெறுகிறது.  5 டயலாக் இடம்பெரும். போட்டோ கமெண்ட் ஒன்று மட்டும் இடம்பெறும். இது தவிர ஒருபக்க ஜோக் ஒன்று இடம்பெறும்.


இந்த இதழிலும் பலத்த போட்டி உண்டு. இதில் தஞ்சைப் பகுதி எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அதிகம் வழங்கப் படுகின்றது. மன்னர் ஜோக்ஸ் ஒருபக்க மன்னர் ஜோக்ஸ் என்று தனி பகுதி இருப்பதால் மன்னர் ஜோக்ஸ் வித்தியாசமான சிந்தனையில் அனுப்பினால்  படைப்பு பிரசுரமாக வாய்ப்பு உண்டு.  


குங்குமம் இதழில் வாசக படைப்பாளிகளுக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. முன்பு ஜோக்ஸ்கள் ஒரு பக்க கதைகள் இடம்பெற்றது. இப்போது அவை இடம்பெறுவது இல்லை.


இது தவிர ராணி, தங்க மங்கை, அவள் விகடன், குமுதம் சிநேகிதி, கோகுலம் கதிர் பொதிகைச்சாரல் போன்ற பத்திரிகைகளில்  சிறு அளவில் வாசகர்களுக்கான பகுதிகளை வழங்கி வருகின்றன.


செய்யது பீடி நிறுவனம் நடத்தும் திருநெல்வேலியில் இருந்து வரும் பொதிகைச்சாரல் இதழில் வாசகர்களுக்கு நிறைய பகுதிகள், ஜோக்ஸ், எக்ஸ்பிரஸ் கதைகள். குட்டீஸ் குறும்பு. லேடீஸ் டாக் மற்றும் ஒருபக்க கதைகள் என்று வழங்கப்படுகின்றது. இவற்றுக்கு ரூ 50 முதல் ரூ 100 அல்லது புத்தகப் பரிசுகளை வழங்கி வாசகர்களை கவுரவித்து வருகிறது சிறு பத்திரிகையாக இருந்தாலும் வாசகர்களை கவுரவிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது.


குமுதம் இதழில் ஜோக்ஸ் அனுப்ப போஸ்ட் கார்டில் அனுப்பினால் ஒரு கார்டுக்கு ஒரு ஜோக் மட்டும் எழுதி  உங்கள் பெயர்- ஊர் முன்பக்கமும் பின்பக்கம் விலாசமும் எழுதி அனுப்ப வேண்டும். மெயில் அனுப்புவதாக இருந்தால் ஒரு மெயிலில்  ஒரு ஜோக்ஸ் மட்டுமே அனுப்ப வேண்டும். அதிலும் உங்கள் பெயர் ஊர் ஜோக்ஸ் அடியில் எழுதி பின்னர் முகவரி எழுதி அனுப்ப வேண்டும்.


விகடன் இதழுக்கு மெயிலில் ஜோக்ஸ் அனுப்புவதானால் ஒரு மெயிலில் ஐந்து ஜோக்ஸ் வரை அனுப்பலாம். ஒவ்வொரு ஜோக்ஸுக்கு அடியிலும் உங்கள் பெயர்- ஊர் எழுதவேண்டும். இறுதியில் முகவரி எழுதி அனுப்ப வேண்டும்.


வாரமலர் இதழுக்கும் ஒரு மெயிலில் 5 ஜோக்ஸ்கள் வரை அனுப்பலாம்.

மற்ற இதழ்களுக்கும் ஒரு மெயிலில் 5 ஜோக்ஸ்கள் வரை அனுப்பலாம்.

ஜோக்ஸ்களை வேர்ட் பைலாக இணைத்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை.  அப்படியே நேரடியாக மெயிலில் டைப் செய்து அனுப்பி விடலாம். 


குமுதம் ,விகடன் என்றால் ஜோக் அனுப்பி 3 வாரங்கள் வரை காத்திருக்கலாம். வாரமலர் என்றால் ஆறுமாதம் முதல் ஒரு வருடம்வரை கூட ஆகும். மற்ற இதழ்களில் ஒரு மாதம் வரை கால அவகாசம் உண்டு. ஒரு மாதம் வரை பிரசுரம் ஆகாவிட்டால் வேறு இதழ்களுக்கு அனுப்பி பார்க்கலாம்.


ஒரு ஜோக்ஸை மெயிலில் ஒரு இதழுக்கு அனுப்பி பிரசுரம் காணாவிட்டால் அதை அப்படியே மற்றொரு இதழுக்கு பார்வேர்ட் செய்யக் கூடாது. அதை காப்பி செய்து புதிய மெயிலில் மற்றொரு இதழுக்கு அனுப்ப வேண்டும். அப்படியே பார்வேர்ட் செய்தால் முன்பு அனுப்பிய விஷயம் தெரிந்துவிடும். அவர்கள் ரிஜெக்ட் செய்ததுதானே என்று நிராகரித்துவிட வாய்ப்பு உண்டு.


மெயிலில் அனுப்பும் போது கையில் எழுதி போட்டோ எடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். நேரடியாக டைப் செய்து அனுப்ப வேண்டும். அப்படி இணையத்தில் அனுப்ப முடியவில்லை எனில் போஸ்ட் கார்டில் அனுப்புவதே உத்தமம். அதே போல் ஒரே ஜோக்ஸை நாலைந்து இதழுக்கு பார்வேர்ட் செய்வதும் கூடாது.


ஜோக்ஸ் அனுப்ப சில மெயில் ஐடிகள்.

jokes@kamadenu.in  -  காமதேனு

jokes@vikatan.com    ஆனந்தவிகடன்.

shp@seyadgroup.com   பொதிகைச்சாரல்

varamalar@dinamalar.in    சென்னை வாரமலர்

dinamalar.vmr@gmail.com    திருச்சி வாரமலர்

 

edtl@kumudam.com       குமுதம்

talk@kamadenu.in      காமதேனு (பேசிக்கிட்டாங்க டயலாக் பகுதி)


thangamangaithamizh@gmail.com      தங்கமங்கை 


thuglak45@gmail.com       துக்ளக்

 

gokulamkathir@gmail.com     கோகுலம் கதிர்


siruvarmalar@dinamalar.in   சிறுவர் மலர்


pavaiyarmalar7@gmail.com    பாவையர் மலர்


mangayarmalar@kalkiweekly.com -  மங்கையர் மலர்


deepam@kalkiweekly.com       தீபம் ஆன்மீக இதழ்.

sakthi@vikatan.com    சக்தி விகடன்.

siruvarmani@dinamani.com   தினமணி சிறுவர்மணி.


எனக்குத்தெரிந்த மெயில் ஐடிகள் கொடுத்துள்ளேன்.  பொதுவாக ஒரு பத்திரிகைக்கு எழுதும் முன் அந்த பத்திரிகையை வாங்கி வாசியுங்கள். அப்போது அந்த பத்திரிகையின் பாணி ஓரளவு உங்களுக்குப் புரியும். அதற்கேற்ப எழுதுங்கள். தற்போது பத்திரிகைகள் குறைவு. எழுதும் வாசக எழுத்தாளர்கள் அதிகம். பழம்பெரும் தலைகளை வெற்றிக்கொண்டு ஒரு பத்திரிகையில் நுழைவது சுலபம் இல்லை. எனவே விடாமுயற்சியோடு உங்கள் படைப்புகளை அனுப்புங்கள். வெற்றி பெறுங்கள்.


காலநேரம் ஒத்துழைப்பின் அடுத்த பகுதியில் இன்னும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Comments

  1. எத்தனை தகவல்கள். அத்தனையும் இங்கே தொகுத்து வழங்கிய உங்களுக்கு, பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. ஆஹா, அருமையா விளக்கம் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி!

    ReplyDelete
  3. விகடனுக்கு சிறுகதை அனுப்ப எந்த மெயில் ஐடியை அணுகவேண்டும்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நன்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. சிறந்த செய்தி அளித்தமைக்கு நன்றி 🙏

      Delete
  6. கவிதையை எந்த ஈமெயிலுக்கு அனுப்ப வேண்டும்

    ReplyDelete
  7. அனுபவத்தை உண்மை நிலையைல் அப்படியே பகிர்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அரிதான தகவல்களை
    அழகான நடையில்
    எளிதாக எடுத்துரைத்த
    உங்களுக்கு
    ஓராயிரம் பாராட்டுகள்!

    இனி
    உங்களால்
    மறுபடியும் இதழ்களுக்கு
    மலைபோல் படைப்புகளை
    அனுப்பி அனுப்பி
    ஆயிரமாயிரம்
    பரிசுகளை அள்ளி வருவேன்!

    தங்களுக்கு என்
    பலமான பாராட்டுகள்
    ஐயா!
    -அணைக்குடி சு.சம்பத்
    தலைமை ஆசிரியர்
    அரசு மேல்நிலைப் பள்ளி பெரியபாளையம் -601102
    திருவள்ளூர் மாவட்டம்
    9788792546

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள தகவல்கள்!

    ReplyDelete
  10. தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் நன்றி 🙏

    ReplyDelete
  12. Arumaiyaana Thgavalgal

    ReplyDelete
  13. சிறப்பான தகவல்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!