Wednesday, July 31, 2013

அனுமார் ஆன ஹர்ஷத் அலி! கதம்ப சோறு

கதம்ப சோறு! 

தெலுங்கானா உதயம்!
         
கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனி மாநில கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் செய்த தெலுங்கானா மக்களின் தனி மாநில கோரிக்கை நேற்று 30-5-2013 நிறைவேறியது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க நேற்று ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவும் காங்கிரஸ் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆந்திராவின் அடிலாபாத், மேடக், மெகபூப்நகர் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரித்து தனித் தெலுங்கான அமையப்போகிறது. இதற்கு ஒப்புதல் இப்போது கிடைத்தாலும் அதிகாரப்பூர்வமாக பிரித்து மாநிலம் அமைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சனை ஐதராபாத் யாருக்கு? என்று ஒருபோட்டி காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனையாக இருந்த தெலுங்கான உதயமானாலும் இன்னும் சில மாநிலங்களில்  விதர்பா, கூர்க்காலாந்து, போடோ லேண்ட், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கனகாவுக்கு என்ன ஆச்சு?
     
  சில தினங்கள் முன்பு நடிகை கனகா புற்று நோயால் அவதிப்படுவதாகவும் பாலக்காட்டில் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. நம் தளத்திலும் இதை பகிர்ந்தேன். திறமையான ஒரு நடிகைக்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று வருந்தினேன். நேற்று ஆனந்தவிகடன் உள்ளிட்ட சில தளங்களும் சில சேனல்களும் நடிகை கனகா இறந்துவிட்டதாக செய்தி பரப்பின. இந்த நிலையில் ஆர்.ஏ புரத்தில் உள்ள வீட்டில் நடிகை கனகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் நலமாக இருப்பதாகவும். புற்றுநோய் எதுவும் தம்மை பீடிக்கவில்லை என்றும் கூறிய அவர் ஆண்களை பிடிக்காமையால் தனித்து வாழ்வதாகவும் மனிதர்களைவிட விலங்குகள் பாசமாக இருப்பதால் பூனை, கோழிகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வருவதாகவும் கூறிய அவர், தந்தை என்று கூறிக்கொள்ளும் தேவதாஸ் என்பவர்தான் தன்னைக் குறித்து இப்படி வீண் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். நான் நல்லபடியாக இருப்பதாக தெரிவித்த அவர் இது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் தன்னை விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
      இதை படித்தவுடன் சொத்துக்காக நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மனதை வருத்தியது. திரையில் மின்னும் பல நட்சத்திரங்கள் சொந்தவாழ்வில் மின்ன முடியாமல் மங்கி போவது விதியின் விளையாட்டா? தெரியவில்லை!

 அனுமார் ஆன ஹர்ஷத்!


        பஞ்சாப் மாநிலம் பதேஹ்கர் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமத்தில் 2001ம் ஆண்டு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார் ஹர்ஷத் அலி! பிறக்கும் போதே இடுப்பின் பின் பகுதியில் வால் போன்ற அமைப்பு இருந்தது. ஹர்ஷத்தின் தந்தை இறந்த நிலையில் தாய் சல்மாவும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். ஹர்ஷத்தின் தாத்தா ஹர்ஷத்தின் வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியுமா என மருத்துவர்களிடம் ஆலோசித்தார். மருத்துவர்கள் அது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்லிவிட்டனர்.
     இந்த நிலையில் ஹர்ஷத் வளர வாலும் வளர்ந்து கொண்டே வந்தது. இப்போது 12 வயதாகும் ஹர்ஷத் மற்ற பிள்ளைகளுடன் பழகவும் விளையாடவும் முடியாமல்  வருத்தத்தில் உள்ளான். இந்த நிலையில் ஹர்ஷத் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தாலும் அவரது வால் அவரை கடவுளாக்கி விட்டது. ஹனுமன் என்று சுற்றுபக்கத்தில் உள்ளவர்கள் அவனை வணங்கி வருகின்றனர். வால் மட்டும் இல்லாமல் உள்ளங்காலில் தாமரைச் சின்னம் உள்ளிட்ட  ஒன்பது தெய்வீகக் குறிகள் உள்ளதாக  பொதுமக்கள் கூறுகின்றனர். இது செய்தித்தாள்களிலும் உள்ளூர் சேனல்களிலும் பரவ இப்போது நிறைய பேர் ஹர்ஷத்தை ஹனுமானின் அவதாரம் என்று சொல்லி வழிபட்டு ஆசிபெற்று செல்கின்றனராம்.
      விந்தையாக இருந்தாலும் ஒரு சமூக நல்லினக்கத்தை இது ஏற்படுத்தினால் நல்லதுதானே!

முடி திருத்தும் பி.காம் பட்டதாரிப்பெண்.

            திருப்பூரில் பல்லடத்தில் முனியப்பன் கோவில் எதிரே சலூன் கடை வைத்து முடிதிருத்துகிறார் பிகாம் படித்த பட்டதாரி பெண் தேவி.அரசு வேலைக்கு முயற்சித்து கிடைக்காமல் போனதால் குடும்பத்தொழிலான இந்த தொழிலை செய்வதாக கூறும் தேவி ஏழ்மையான குடும்பம் தந்தைக்கு நோய் பாதிப்பினால் கடை நடத்த முடியாத சூழலில் துணிந்து இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் கடை அமைக்க 50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பிச் செலுத்த அந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் காலை 9மணி முதல் 5 மணி வரை வேலை செய்வதாகவும் காலை 6.00 முதல் 9.00 வரையும் மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை கடையில் முடி திருத்துவதாகவும் கூறுகிறார் தேவி.
      முதலில் ஆண்கள் கடைக்கு வர கூச்சப்பட்டதாகவும் இப்போது தனது தொழில் திறமையால்  நிறைய பேர் வருவதாகவும். கடனை அடைத்து முடித்ததும் முழு நேரம் தொழில் செய்யப் போவதாகவும் தெரிவித்தார் தேவி.
    தன்னம்பிக்கை மனுஷியான தேவியை வாழ்த்துவோம்!

  வீட்டுக்குறிப்புக்கள்!

    சீரகத்தை வறுத்து பொடித்து நீரில் கொதிக்க வைத்து தினமும் 200 மில்லி முதல் 300 மில்லிவரை பாலூட்டும் தாய்மார்கள் பருகிவர பால் சுரப்பு அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் நல்லெண்ணை இரண்டு சொட்டுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்துக்கும் கைகால்களுக்கும் தடவி வரவும். பனிவெடிப்பு ஏற்படாது. முகம் பொலிவுடன் இருக்கும்.
நீலகிரித்தைலம் சுத்தமானதா கலப்படமா என கண்டுபிடிக்க அந்த பாட்டிலை தலைகீழாக கவிழ்த்தால் குமிழ்கள் வந்தால் அது கலப்படம். வராமல் இருந்தால் அது சுத்தமானது என்று அறியலாம்.
 எலுமிச்சம் பழத்தை ஒரு நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து பிழிந்தால் நிறைய சாறு வரும்.
நெல்லி வற்றல் சந்தனத்தூள் தனியா மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்பு குறையும்.
ஜவ்வரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
புண் பொடுகுக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவிட்டு குளித்தால் பொடுகுப் புண் குணமாகும்.

வேடிக்கை எப்படி செய்ய வேண்டும்?

     இரு பையன்கள் ஒரு ஏரி ஓரமாக போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுப்பிள்ளை, மற்றவன் ஏழைச்சிறுவன். ஏரியோரத்தில் ஒரு ஜோடி செருப்புக்கள் இருப்பதை இருவரும் பார்த்தனர். தூரத்தில் ஒரு விவசாயி கை கால் அலம்பிக் கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே இருவரும் ஒரு வேடிக்கை செய்யத்தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான் “இந்த செருப்பை வீசியெறிந்துவிடுவோம். விவசாயி வந்து பார்த்து அங்கு மிங்கும் தேடி ஓடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்..” இதை ஏழைப்பையன் மறுத்தான். அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால் உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு அவனுக்கு தொலைந்துவிட்டால் அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும் இதல்ல வேடிக்கை! நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பை கீழே வை! உன் ஜேபியிலிருருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேல் வை! நாம் அந்த மரத்தின் மீது ஒளிந்து கொள்வோம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்! என்றான் ஏழைச்சிறுவன்.
     இருவரும் ஒளிந்து கொள்ள அந்த ஏழை விவசாயி  வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக அதனுள் ஒரு ரூபாய் இருப்பதை பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு வரையும் காணாத படியால் ஆண்டவன் தான் பணத்தை கொடுத்ததாக எண்ணி அதை கண்ணில் ஒற்றிக் கொண்டான் கூப்பிய கரங்களுடன்  ‘ஆண்டவனே! ஏழைக்கு இரங்கும் கருணா மூர்த்தி..” என்றான்
   ஏழைப்பையன் பணக்கார பையனை பார்த்து ஒரு ஒரு இடி இடித்து, ‘பார்த்தாயா! உன்னை கருணா மூர்த்தி என்கிறான். நீ செருப்பை தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடு பட்டிருப்பான் இப்போ பாரு அவனுக்கும் சந்தோஷம்! நமக்கும் ஆனந்தம்! இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும் என்று சொல்லி சிரித்துக் கொண்டே போயினர்.
                           1949ல் என்.எஸ் கிருஷ்ணன் பேசிய வானொலி உரையில் இருந்து வாரமலர் சுட்டதை நான் சுட்டேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, July 30, 2013

புகைப்பட ஹைக்கூ 44

புகைப்பட ஹைக்கூ 44

   1.வெளிப்பட்ட
   மிருகத்திடம் அடிபட்டது
   மனிதம்!

  2. வலி தெரிந்தும்
  வழி தெரியவில்லை!
  பாவம் குதிரை!

 3 மனிதம்
  மரணிக்கையில் பிறக்கிறது
  மிருகம்!

 4.ஓடாய் தேய்ந்து
  முடங்கிப் போனது
  குதிரை!

 5. பிழைக்க உழைத்ததில்
  பிழை!
  அடிபட்டது குதிரை!

 6 காசு பிரதானமானதில்
   மறைந்து போனது
   காருண்யம்!

 7 ஓடுங்கும் ஜீவனை
   பிடுங்கும்
   மிருகம்!

 8 தடம் மாறியதால்
   தடுமாறிப் போனது
   குதிரையின் வாழ்வு!

 9 வேடிக்கை பீடித்ததில்
    வேதனை மறந்த மனிதர்கள்
    பாவம் குதிரை!

 10  இரக்கமில்லா அரக்கன்
    இனி மீளுமா
    குதிரை!

 11   வீரம் மிகுகையில்
      விரைந்து குறைகிறது
      ஈரம்!

 12  வாலிபனுக்கு
      உறைக்கவில்லை!
      வாயில்லா குதிரையின் வலி

  13 லாபம் சுமந்தவன்
     பாவம் சுமக்கிறான்
     பாவம் பாறம் சுமந்த குதிரை!

   14 காய்ந்தமையால் சாய்ந்தது
      மேய்ச்சலில்லா
      குதிரை!
        
   15 நடுவீதியில் பாடம் கற்றது
      நன்றி மறந்தவனை
      சுமந்தகுதிரை!

   16 அடி வைக்க முடியாதால்
      அடி படுகிறது
      அடிபட்ட குதிரை! 

17. வற்றிப்போனது
வயிறு மட்டுமல்ல!
 ஈரமும்!

    18. பசி விரட்டல் முன்
       பணிந்து போனது
       எசமான் கட்டளை!

    19 கல்நெஞ்சம்
       கருணை பஞ்சம்
       அடிபட்டது குதிரை!

    20 ஊமைகள் ஆன மனிதர்கள்
       ஊனப்பட்டது
       குதிரை!
            
   தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Monday, July 29, 2013

புகைப்பட ஹைக்கூ 43

புகைப்பட ஹைக்கூ 43


  பேரணிக்கு அல்ல
  ஊறுணிக்கு அணிவகுப்பு
  கால்நடைகள்!

 ஊர்வலம் வந்தன
 உணவைத்தேடி!
 மாடுகள்!

 ஒரே கொள்கையில்
  பேரணி!
உணவைத்தேடி மாடுகள்!

தீவனம் தேடி
தீயில் ஊர்வலம்
மாடுகள்!

அடிதடி கலவரம் இல்லா
அமைதி ஊர்வலம்!
மாடுகள்!

காடுகள் வீடுகளாகையில்
மாடுகள் பெயர்ந்தன
இரையைத்தேடி!

தள்ளுமுள்ளு இல்லா
ஊர்வலம்
மாடுகள்!

இரைதேடி
நடைபயின்றன
கால்நடைகள்!

மேய்ச்சலைத்தேடி
மேய்ந்தன
கால்நடைகள்!

‘கா’வைத்தேடி
கால்நடைப்பயணம்
கால்நடைகள்!

உடையாத கூட்டணி
அமைத்தன
கால்நடைகள்!

தொலைந்தது இயற்கை
தேடின
கால்நடைகள்!

நடை பயிற்சியில்
கால்நடைகள்!
நலியும் இயற்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Sunday, July 28, 2013

இலவசமாய் குடிநீர் வழங்கும் ஆட்டோ டிரைவர்!

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.

தண்ணி கிடைக்கல...:

ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.


ரூ 4 ஆயிரம் :

இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.


வரவேற்பு:

நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?

Click Here
நன்றி: தினமலர்;                                                                                                                                         டிஸ்கி: நல்ல செய்தி கண்ணுல பட்டது பகிர்கிறேன்! ஆட்டோக்காரர்கள் என்றாலே அடாவடி பேர்வழிகள் என்று நினைக்கிறோம்! இப்படிப்பட்ட சில நல்ல உள்ளங்களும் நம்மிடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டவாவது செய்யலாம் அல்லவா?  பாராட்டுக்கள் ரகுபதி! உங்கள் சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24
 சென்ற வாரம் ஆகுபெயர்கள் குறித்து கொஞ்சம் அறிந்துகொண்டோம்! இந்த வாரம் இலக்கியவகைச்சொற்களை பார்க்க போகிறோம். அதற்கு முன் சொல் எத்தனைவகைப்படும் என்று அறிந்துகொள்வோமா?
  சொல் நான்கு வகைப்படும் என்று  சின்ன வயதில் படித்திருப்போம்! நினைவுக்கு வருகிறதா?
  1.பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3.இடைச்சொல், 4. உரிச்சொல். 
 இவை இலக்கண வகையால் பிரிவுபட்டன.
  இலக்கியவகையால் சொற்கள் நால்வகைப்படும் அவை 1. இயற்சொல், 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வட சொல் என  நால்வகைப்படும்.
 1.இயற்சொல் :  எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். உதாரணம் தீ, காடு, மரம், புத்தகம், அருவி
 காற்று, நிலவு, ஞாயிறு, பலகை இந்த சொற்களும் எளிதில் பொருள் விளங்கக்கூடிய பெயர்சொற்கள். இவை பெயர் இயற்சொற்கள் எனப்படும்.
படித்தான், உறங்கினான், உண்டான், வந்தான் இவையும் எளிதில் விளங்க கூடிய வினைச்சொற்கள் இவை வினை இயற்சொற்கள் எனப்படும்.

2.திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் திரிசொல் எனப்படும்.
   பீலி, உகிர்,ஆழி இந்த சொற்களின் பொருள் கற்றாருக்கு மட்டுமே தெரியும் பாமரருக்குத்தெரியாது.
இவை திரிசொல்லாகும். பீலி என்றால் மயில் தோகை, உகிர் என்றால் நகம், ஆழி என்றால் கடல் மற்றும் சக்கரம். இதை கற்றவர் அறிவர்.
 திரிசொல்லும் பெயர் திரிசொல், வினை திரிசொல் என இருவகைப்படும்.
 எயிறு- பல், வேய்- மூங்கில்:  மடி- சோம்பல்; நல்குரவு- வறுமை என்பன பெயர் திரிசொல்கள்.
வினவினான்-கேட்டான், விளித்தான்-அழைத்தான், நோக்கினார்-பார்த்தார் போன்றவை வினைத்திரிச்சொற்கள் 

3. திசைச்சொல்;  தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள்.
  ( எ.கா) கேணி -கிணறு , பெற்றம்- பசு

4. வடமொழி சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.
    கமலம்- தாமரை, விஷம்- நஞ்சு, புஷ்பம்-மலர் இவை வடமொழி கலந்த வடசொற்கள்

  இலக்கியவகைச் சொற்களை அறிந்து கொண்டோம்! இனி இனிக்கும் இலக்கிய சுவையை பருகுவோமா?

      ஐங்குறுநூறு பாடல் ஒன்றை பார்ப்போம்!
     ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே!
   மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
   புனலாடு மகளிர்க்கு புணர்துணை உதவும்
   வேழம் மூதூர் ஊரன்
   ஊரானாயினும் ஊரன் அல்லன்னே!
  
   இப்பாடல்  ஐந்து திணைகளுள் ஒன்றான மருதத் திணைக்குரிய பாடல் எழுதியவர் ஓரம் போகியார். இது வேழப்பத்து என்னும் துறையின் கீழ் வரும். மருத நில கருப்பொருள்களில் வேழம் ஒன்று. வேழம் பற்றிய கருப்பொருள் கொண்ட பத்து பாடல்களை கொண்டது வேழப்பத்து.

     தலைவனோடு தலைவி முரண்பட தோழி, ஏன் இந்த வேறுபாடு என்று தலைவியிடம் கேட்டபோது தலைவி சொல்வதாக அமைந்த பாடல். இங்கு வேழம் என்பது தலைவனையும் யானையையும் குறிக்கும்.
   மணலை அளைத்தபடி வருகின்ற பெருவெள்ளத்தில் விரும்பிய ஒள்ளிய தழையை உடுத்து புனலாடும் மகளிர்க்கு புணை துணையினை செய்யும் வேழம் நிறைந்த மூதூரை உடைய ஊரன் உறைதலால் தலைவன் நம் ஊரில் உள்ளவனே ஆயினும் புறதொழுகுதலால் ஊரன் அல்லாதவன் ஆனான்.
       புது வெள்ளத்தில் பரத்தையர் மலர்களாலும் தழையாலும் செய்யப்பட்ட ஒருவகை ஆடையை அணிந்து புணலாடுவர். அதற்கு உதவியாக வேழமான யானை இலை தழைகளை பறித்துப் போடும். அத்தகைய ஊரை சேர்ந்தவன் தலைவன். அதாவது பரத்தியரோடு சேர்ந்துள்ளான். அதனால் அவன் ஊரில் இருந்தும் இல்லை என்று தலைவி வருத்தம் மேலிட கூறினாள். தலைவன் ஒழுங்கீனன், புறத்தொழுக்கம் உடையவன் அதனால் அவனோடு வேறுபாடு கொண்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றாள்.

 மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல செய்திகளோடு சந்திப்போம்! இப்பதிவு குறித்த உங்கள் கருத்துரைகள் பதிவை மேம்படுத்த ஏதுவாக இருக்கும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

Saturday, July 27, 2013

நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!

 நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!


      வேளகாபுரம் என்ற அழகிய கிராமத்துல ஒருத்தர் தனது வளர்ப்புக் கிடாயை குளிப்பாட்ட கம்மாயிக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அந்த கிடா நல்லா தீனி திண்ணு கொழுத்து கிடந்தது. தண்ணீய கண்டதும் அதுக்கு சந்தோசம் பிடிபடலை! கம்மாயில குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சிடுச்சு!
      ஆடு இந்த குதியாட்டம் போடறதை கரையோரமா வளைக்குள்ளயிருந்த நண்டு மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்துச்சு!  ஆடு சந்தோசமா  நாலுகாலும் எம்பி எம்பி குதிச்சு விளையாடிச்சு! அப்படி விளையாடறப்ப நண்டு வளையை மிதிச்சு நாசம் பண்ணிடுச்சு! நல்ல வேளை நண்டு அதன் காலிலே மிதிபடாம தப்பிருச்சு!
     தன் வளையை நாசம் பண்ண ஆட்டின் மீது நண்டுக்கு கோபம்னா கோபம் அப்படி ஒரு கோபம் வந்துருச்சு! “ நாலு காலு பட்ட மன்னா! உனக்கு நாளைக்கு இந்நேரம் சாவு!” ன்னு கிடாயை பார்த்து எரிச்சலா கோபத்தோட சாபம் கொடுத்தது.
  அடடா! இதென்ன வம்பா போயிருச்சே! சந்தோசமா கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டதுக்கு நண்டு இப்படி சாபம் கொடுக்குதேன்னு கிடாய்க்கு ரொம்ப பயமா போயிருச்சு! இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம கெத்தா நண்டை பார்த்து கேட்டுச்சு! “ மண்ணுக்குள்ளிருக்கும் மகராசா! உனக்கு யார் சொன்னாங்க?” அப்படின்னு கேட்டுச்சு.
     நண்டுக்கு பெருமை பிடிபடலை! நம்ம சாபம் பலிக்க போவுதுன்னு ஆடு பயந்துருச்சுன்னு சந்தோசமா சிரிச்சுகிட்டே பதில் சொல்லுச்சு.
    “குடல் இல்லாத அண்ணன் கூப்புட்டு சொன்னான்” அப்படின்னு பதில் சொல்லுச்சு!
   அந்த நேரம் “டும் டும் டும்” னு கொட்டு முழக்கம் கேட்டுச்சு! அன்னிக்கு அந்த ஊர் சாமிக்கு பொங்கல் திருவிழா.
    கிடாய்க்கு உதறல் எடுத்திருச்சு! நண்டு சொன்னதை ஞாபகப்படுத்தி பார்த்துச்சு! குடல் இல்லாத அண்ணண் னா யாரு?
   அதுக்கு புரிஞ்சு போச்சு பளீர்னு!
   கொட்டு சத்தம் அடிக்கும் டும் டும் தான் குடல் இல்லாத அண்ணன். மறுநாளு ஊர் கோயில்ல பொங்கல் இடற நாளு, அன்னிக்கு கொழுத்த கிடாவை வெட்டி பொங்க வைப்பாங்க! தன்னோட சாவைத்தான் இப்படி கொட்டடிச்சு சொல்றாங்க! ன்னு அதுக்கு புரிஞ்சதும் ஒவ்வொரு கொட்டு சத்தமும் அதன் காதில் பயங்கரமாய் எமன் வரான் எமன் வரான்!ன்னு ஒலிச்சுது!
   அதனோட சந்தோஷம் பூரா அடங்கி போயிருச்சு!
   என்னை மன்னிச்சுருங்க நண்டாரே! ன்னு சொல்லிட்டு மவுனமாக நடையை கட்டிருச்சு அந்த ஆடு!
  அதுக்கப்புறம் அந்த ஆடு திரும்பவே இல்லை!
நீதி:
நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும்!
(செவிவழிக் கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, July 26, 2013

ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!

ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!


   ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்! இந்த மாதம் இது இரண்டாவது வெள்ளிக்கிழமை! இந்த வெள்ளிக்கிழமையில் ஆனந்த வல்லி என்ற பெயரில் அருள் பாலிக்கும் எங்கள் பக்கத்து சில அம்பிகைகளை தரிசனம் செய்யலாமா?
    நத்தம் ஸ்ரீ ஆனந்தவல்லி!

         இது எங்கள் ஊர் அம்மன்! வாலீஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு இடபாகத்தில் தென் திசை நோக்கி எழுந்தருளி உள்ள அம்பிகை! முக்கண் நாயகி! மேலிரு கரங்களில் பாச அங்குசத்துடன் கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தாங்கி காலில் சதங்கையோடு நாட்டிய கோலத்தில் அழகுற அருள் பாலிக்கின்றாள் அன்னை ஆனந்தவல்லி!
     நம் வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்ப்பது சந்தோஷம் ஆனந்தத்தை! ஆனந்தம் இல்லாத வாழ்வு கசக்கும்! நம்முடைய வாழ்க்கையில் என்றும் ஆனந்தத்தை தரக்கூடிய வல்லமை கொண்டவள் என்பதால் ஆனந்த வல்லி என்ற திருநாமம் அம்மனுக்கு ஏற்பட்டது. அன்னை வழிபாட்டைத் தவிர வேறு எந்த வழிபாடும் இத்தகைய ஆனந்தத்தை தருமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.
     நத்தத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லியின் தல வரலாறு சுவையானது. ஆனந்த தாசன் என்பவன் அம்பிகை தாசன்! சதா அம்பிகையையே வழிபட்டு அவள் புகழ் பாடி துதித்து பூஜை செய்பவன். அவனது வாழ்க்கையில் புகுந்தார் ராகு. கிரகங்கள் மனிதனை பீடிப்பது இயல்பு! ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராகு ஆனந்த தாசனை பீடித்த போது  அவன் அன்னையிடம் முறையிட்டான். உன்னுடைய பக்தனான எனக்கு இந்த ராகுவால் தொல்லை ஏற்பட்டுவிட்டதே! என்னால் இந்த துயரை தாங்க முடியவில்லை! என்னை காப்பாற்று தாயே! என்று அழுது புலம்பினான். மனம் இரங்கிய அம்பிகையும் ராகுவை ஆனந்த தாசனை பீடிக்காத படி தனது சக்தியால் தடுத்தாள். கோபம் அடைந்த ராகு பாம்பு வடிவம் கொண்டு அன்னையை தீண்டி விட்டது.
     பாம்பின் விஷம் அன்னையை மூர்ச்சை அடைய செய்துவிட்டது! சக்தி இன்றி சிவனால் தன் தொழில் செய்ய முடியவில்லை! உலகமே அன்னையை இழக்க வேண்டிய நிலையில் சிவன் ஒரு உபாயம் சொன்னார். பூலோகத்தில் நெல்லிவனத்தில் நான் சுயம்புவாக உறைகிறேன்! அம்பிகை அங்கு வந்து என்னை வழிபட்டால் அம்பிகையின் விஷம் நீங்கும்! உலகம் உய்வடையும் என்கிறார்.
     அனைவரும் அம்பிகையை நெல்லிவனத்தில் சேர்ப்பித்தனர்! சற்று மூர்ச்சை தெளிந்த அம்பிகை அங்கிருந்த சுனையில் நீராடி, செவ்வல்லி மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். இறைவனும் அம்பிகையின் விஷத்தை ஏற்றுக் கொண்டார். விஷம் தீண்டியதால்  கருமை நிறமான அம்மன் மேனி பொலிவுற்றது. விஷம் உண்ட லிங்கத் திருமேனி கருமையானது.   இதனால் இங்கு அம்மனையும் ஈசனையும் வழிபாடு செய்தால் ராகு- கேது பரிகாரம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது புராண வரலாறு.
       இங்கு சிவதாண்டவம் பிரம்மாவிற்கு காட்டியமையால் அம்மன் காலில் சதங்கை அணிந்து நாட்டிய கோலத்தில் உள்ளார். வெள்ளி மற்றும்செவ்வாய் கிழமை ராகு காலத்தில் சகஸ்ர நாமம் பாராயணம் செய்து விளக்கேற்றி வழிபட  இந்த ஆனந்த வல்லி நம்முடைய வாழ்க்கையில் ஆனந்தத்தை தருவாள் என்பது ஐதீகம்!


பஞ்ஜேஷ்டி ஆனந்த வல்லி!
       அகத்தீஸ்வரர் ஆலயத்தில்  ஈசனுக்கு இடபாகமாய் கம்பீரத்தோற்றத்துடன் காட்சி தருகிறார் இந்த ஆனந்தவல்லி! அகத்தியர் பிரதிஷ்டை செய்த அம்பிகை! அகத்திய மாமுனிவரால் எதிரிகளை வெல்லக்கூடிய மந்திரம் பொருந்திய எந்திரம் இந்த அம்மன் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இவளும் முக்கண்களுடன் மேலிரு கரங்களில் பாச அங்குசத்துடன் கீழிரு கரங்கள் அபய வரதம் அளிக்க ஒரு காலை முன் வைத்த கோலத்தில் எதிரிகளை சம்ஹாரம் செய்யும் கோலத்துடன் அழகுற காட்சி அளிக்கிறாள்.
      இந்த அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வெள்ளி ,செவ்வாய், ஞாயிற்று கிழமைகளில் எலுமிச்சை விளக்கு ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும்! திருமணம் கை கூடும்! புத்திர பாக்கியம் கிட்டும்!  என்பது தல புராண தகவல்!

பொன்னேரி ஸ்ரீ ஆனந்த வல்லி!
    பொன்னேரி அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனந்தவல்லி அம்பிகை அருள் பாலித்து வருகிறார். இங்கும் அழகுற நான்கு திருக்கரங்கள்  உடன் சிறப்பாக  காட்சி தரும் அம்பிகை வாழ்வில் ஆனந்தத்தை தருபவளாக உள்ளார்.
காட்டூர் ஸ்ரீ ஆனந்தவல்லி!
      காட்டூரில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும் அம்பிகையின் நாமம் ஆனந்த வல்லி! இங்கும் அபயவரதம் பாச அங்குசத்துடன் எழிலுற அமைந்துள்ளார் அம்பிகை!
திருக்கள்ளில் எனும் திருக்கண்டலம் ஸ்ரீ ஆனந்தவல்லி!
  ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கள்ளில் தலத்தில் ஆட்சி செய்பவள் ஆனந்தவல்லி அம்பிகை! இங்கு சோமாஸ்கந்த வடிவத்தில் இடையில் முருகருடன் காட்சி தருகிறாள் ஆனந்தவல்லி!


சின்னம்பேடு என்னும் சிறுவாபுரியில் ஸ்ரீ ஆனந்தவல்லி!
           சிறுவாபுரி முருகர் ஆலயம் அமைந்துள்ள  இடத்திற்கு அருகாமையில் சிவன் ஆலயத்தில் ஆனந்தவல்லி அம்பிகை காட்சி தருகிறாள்!

  இவ்வாறு பல இடங்களில் ஆனந்தவல்லி என்ற நாமம் தாங்கி அருள் பாலிக்கும் அன்னையை தொழுது வாழ்வில் ஆனந்தம் அடைவோம்!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, July 25, 2013

எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!

எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!

ஒரு காலத்தில் இந்த தொடர் பதிவு சும்மா களை கட்டுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க! அப்ப நான் வலையுலகில் இல்லை! வலையுலகு வந்தபிறகு ஆங்காங்கே ஒன்றிரண்டு இது போல படித்தாலும் நம்மை யாரும் தொடர்பதிவு எழுத அழைத்தது இல்லை! அதனால் அதன் இலக்கணங்கள் நமக்கு சுத்தமாய் நஹி!
     சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பார்கள்! நம்ம ப்ளாக்கே இப்ப சொந்த கதை சோக கதையிலேதான் ஓடிக்கிட்டு இருக்க அட இது ஓவராயிடுச்சே என்று கொஞ்சம் மாத்தி யோசிச்சிகிட்டு இருக்கற வேளையில அண்ணன் குட்டன் திடீர்னு  இந்த தொடர் பதிவுல என்னை கோர்த்து விட்டுட்டாரு!
         சரி! ஒரு காலத்துல இப்படி அழைப்புவருமான்னு ஏங்கி கிட்டு இருந்தோம்! இப்ப அழைப்பு வரும்போது தவிர்க்கலாமா? வேண்டாம்னுட்டுதான் இந்த பதிவு! இந்த பதிவுல வர்ற விசயங்களை ஏற்கனவே நான் ஒரு தனிபதிவுல சொல்லியிருக்கேன்! அதனால அந்த விசயத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா இப்ப சொல்லப் போறேன்.
    அது 1994ம் வருசம்  நான் டிகிரி முதல் வருசம் கரஸ்ல முடிச்சிகிட்டு (ரெண்டு அரியர் வச்சிருந்தேன் அப்பத்தானே டிகிரிபடிக்கிறதுக்கு அழகு) வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு இருந்தேன். அப்பதான் எங்க அக்காவை (என் பெரியம்மா மகள்) சந்திச்சேன். என்ன பண்ணிகிட்டு இருக்கே? என்றார்கள். நான் நம்ம வெட்டி ஆபிசர் வேலையை சொன்னேன். அப்ப கேட்டுகிட்டு போயிட்டாங்க ஒரு வாரம் கழிச்சு பொன்னேரியில நாங்க ஒரு கடையில பேப்பர் வாங்குவோம். அந்த பேப்பர் கடை பாய் மூலம் ஒரு தகவல் சொல்லி அனுப்பிச்சாங்க!
      அது லெட்டர்ல கொடுத்தாங்க அதுல ஒரு அட்ரஸ் கொடுத்து இங்க வந்து என்னை பாருன்னு இருந்தது. அது வரைக்கும் பொன்னேரி பஜாரை தவிர வேற எடம் எனக்கு தெரியாது. இது டி.வி புரம் அட்ரஸ். எப்படியோ என்னோட சைக்கிள்ள சுத்தி அந்த அட்ரஸை கண்டுபிடிக்கிறதுக்குள்ள மத்தியான வெயில்ல எனக்கு நாக்குத் தள்ளிருச்சு!
    ஆனா அந்த அட்ரஸை கண்டுபிடிச்சு வீட்டு கதவை தட்டினதும் அவங்க ரொம்ப நல்லவங்க! என்னோட நிலையை பார்த்து சேரெல்லாம் போட்டு உக்காரவைச்சு தண்ணியெல்லாம் கொடுத்து உபசரிச்சாங்க! அவங்கதான் என் அக்காவோட ப்ரெண்ட் ரமா தேவி. அப்பதான் சொன்னாங்க பொன்னேரியில ஒரு கம்ப்யூட்டர் செண்டர் இருக்கு! அதுலதான் என்னோட அண்ணன் படிச்சான். இந்த வருசம் நான் படிக்க போறேன்! உனக்கும் ஒரு சீட் ( அது என்னமோ எம்.எல்.ஏ சீட்டு போல)  உங்க அக்கா ஏற்பாடு பண்ணியிருக்காங்க! என்ன வந்து படிக்கிறியான்னு கேட்டாங்க!
       நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டேன்! எனக்கு அப்படி ஒண்ணும் கம்ப்யூட்டர் மேல பெரிசா ஆர்வம் ஒண்ணும் கிடையாது. எங்க அக்காவை பார்க்கலாம் பேசலாம்னு ஒரு எண்ணத்துல அப்படி தலையாட்டிட்டேன்! ஏன்னா அந்த அக்கா என் அப்பாவோட முதல் தாரத்து பொண்ணு, அவங்க அம்மா இறந்ததும்தான் எங்க அம்மாவை கட்டிக்கிட்டாரு எங்கப்பா! குடும்ப சண்டையில அவங்க எங்க கூட இல்லாம தாய் வீட்டு பாட்டிகிட்டவே வளர்ந்தாங்க! சின்ன வயசிலேயே அவங்கள பத்தி அப்பா சொல்லியிருந்ததாலே அவங்க மேல எனக்கு பாசம் அதிகம்! அதனாலே அவங்க கூட நல்லா பழக முடியும்னு அந்த கோர்ஸில சேர ஒத்துகிட்டேன்.
      இதுக்கு முன்னாடி  நான் கம்ப்யூட்டர பார்த்தது கூட கிடையாது. எங்க சோழவரம் கவர்மெண்ட் ஸ்கூல்ல கம்ப்யூட்டர் ரூமுன்னு ஒண்ணு இருக்கும் அதுல நாலைஞ்சு கம்ப்யூட்டர் இருக்கறதா பசங்க சொல்லுவாங்க! எங்க மேத்ஸ் சார் சம்பத் சார் மட்டும் அந்த ரூமுக்குள்ள அடிக்கடி போய் வருவாரு! எங்களை யாரும் உள்ளே விட்டதே இல்லை! அதனாலே அவ்வளவோ பெரிய கம்ப்யூட்டர் கோர்ஸ் நாம படிக்க போறேன்னுதும் எனக்கு பெருமை பிடிபடலை!
      அப்ப வறுமையின் பிடியில் இருந்து எங்க குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்ற காலமா இருந்துச்சு! பத்தாயிரம் ரூபா கோர்ஸ் பீஸ் ஒருவருசம் படிப்பு! அதுல 3500 ரூபா ட்ரைசெம் போக 6500 ரூபா மூணு தவணையில கட்டணும்னு சொன்னாங்க! அப்பட் ஒரு தவணைக்கு இரண்டாயிரம் ரூபாவாது வேணும் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப எங்க தாத்தா என் பேர்ல போட்டிருந்த பிக்சட் டெபாசிட் ஒண்ணுமுடிஞ்சது. அதை எடுத்து அப்படியே எம் பேர்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் போட்டு அதுல 2000 ரூபா எடுத்துகிட்டு போய் கோர்ஸில சேர்ந்தேன்.
   அந்த இன்ஸ்டியூட் பேரு பாரத் பிரில்லியண்ட் கம்ப்யூட்டர் செண்டர்! சுருக்கமா பிபிசின்னு சொல்லுவோம்! நாம என்னமோ பிபிசியிலே ஒர்க் பண்றா மாதிரி ஒரு நினைப்புதான்!  மொத்தத்துல நாலு கம்ப்யூட்டர் அங்க இருந்தது. ஒண்ணு மட்டும் கலர் மத்த மூணும் ப்ளாக் அண்ட் ஒயிட்.

      இந்த ஒருவருசம் கோர்ஸ்ல டாஸ், பேசிக், டி பேஸ், ஃபாக்ஸ் ப்ரோ, வேர்ட்ஸ் ஸ்டார், கோபால், என்று ஒரு ஏழெட்டு படிப்பு சொல்லித்தருவதாக கூறினார்கள். முதல் நாள் வகுப்புக்கு சென்ற போது ஒரு அக்கா எங்களோடு வகுப்பில் அமர்ந்து இருந்தது. புடவை எல்லாம் கட்டி குஷ்பு மாதிரி ரேஞ்சில் அந்த அக்கா இருந்ததை பார்த்து நாங்க அவங்கதான் எங்க மிஸ்ஸின்னு நினைச்சுட்டோம்! அப்புறம்தான் தெரிஞ்சது அவங்களும் எங்க கூட படிக்க வந்தவங்கன்னு! அவங்க கொண்டு வந்த தயிர் சாதத்தை என் கூட படிச்ச வெங்கட் குமார் அபேஸ் செய்து ஓரு கட்டு கட்டி முடித்தான்.
   முதல் நாள் அறிமுகத்தோட முடிஞ்சது. அடுத்த நாள் கம்ப்யூட்டர் எப்படி செயல் படுதுன்னு கிளாஸ் எடுத்தாங்க! கிளாஸ் எடுக்க பவானின்னு ஒரு மேடம் வந்தாங்க! இஞ்சினியரிங் முடிச்சுட்டு வந்து சும்மா தஸ் புஸ்ஸுன்னு இங்கிலீஷ்ல பேசவும் ஒண்ணுமே புரியலை! கிளாஸ் முடிஞ்சதும் பார்த்து மேடம் நீங்க பீட்டர் உட்டா நாங்க கிளாசுக்கு ஜூட் விட்டுடுவோம்னு சொன்னோம். அவங்களும் சிரிச்சுட்டு எனக்கு தெரிஞ்ச தமிள்ல சொல்றேன்னுட்டாங்க! நம்ம நடிகைங்க பேசற தமிழ்ல அவங்க பேசினாலும் அந்த தமிழ் எங்களுக்கு இனிக்கத்தான் செஞ்சது. அவங்க தாய்மொழி தெலுங்கு!
     ஒரு மூணு மாசம் எங்களை அந்த கம்ப்யூட்டர் பக்கம் நெருங்கவே விடவில்லை! டாஸ், நம்பர்சிஸ்டம், ஃப்ளோ சார்ட் என்று வகுப்பறையிலேயே கடத்தி விட்டு மூணுமாசம் கழிஞ்சதும் சிஸ்டம் முன்னாடி கொண்டு போய் உட்கார வைச்சாங்க! ஒரு சிஸ்டத்துக்கு நாலு பேரு! ஒரு ப்ளாப்பியை கொடுத்து அதை போட்டு ஆன் பண்ணி வொர்க் பண்ணனும் ஒரு மணி நேரம்தான் ஒரு குருப்புக்கு! அடிக்கடி சிஸ்டங்கள் பழுதாகி விடும்! வைரஸ் வந்துவிட்டது என்பார்கள்! அதெப்படி கம்ப்யூட்டருக்கு வைரஸ் வரும்? என்று யோசிப்பேன்! இந்த வைரஸை எப்படி கிளீன் பண்ணுவீங்க? என்றால் ஆண்ட்டி வைரஸ் போட்டு! என்பார்கள். ஒன்றுமே புரியாது.
      இந்த நாலு கம்ப்யூட்டர்ல கலர் கம்ப்யூட்டர்ல உட்காறதுக்கு ஒரு அடிதடியே நடக்கும்! நான் ரொம்பவே கூச்ச சுபாவமா அப்ப இருந்ததாலே நீங்க  வொர்க் பண்ணுங்க நான் பாத்து கத்துக்கறேன்! என்று விட்டுக் கொடுத்துவிடுவேன்! அதுக்கப்புறம் என் ப்ரெண்ட் கணேசன் தான் வற்புறுத்தி சிஸ்டத்தில் உட்கார வைத்தான். அதை உயிர்பித்து டாஸ் கமாண்ட் சில செய்து அது திரையில் ஒர்க் அவுட் ஆனபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
      அதனாலே! நான் சிஸ்டத்துல அந்த ஒரு வருசத்துல மொத்தமா ஒரு நாள் உட்காந்திருந்தாவே அதிகம்! ஒருவருசம் படிச்சும் ஒண்ணுமே கத்துக்காமே சர்டிபிகேட் வாங்கிட்டோம்! ஆனா சும்மா சொல்லக்கூடாது! வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம ஒண்ணுக்கு ரெண்டாவே கொடுத்தாங்க சர்டிபிகேட்!
    
     95ம் வருசம் கோர்ஸ் முடிஞ்சப்புறம் திரும்பவும் நான் கம்ப்யூட்டரை தொடவே இல்லை!  அதுக்கப்புறம் தான்2005ல திரும்பவும் ஒரு கோர்ஸ் சேர்ந்தேன்! இதுவும் வெட்டியாத்தான் முடிஞ்சது! ஆனா கம்ப்யூட்டர் பத்தின ஒரு பயத்தை போக்கியது! அதற்கப்புறம் 2007ல கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன்! அப்ப இருபத்தையாயிரம் ரூபாய் ஆனது. இன்ஸ்டால் செய்து விட்டு சென்று விட்டார்கள். மறுநாள் ஆன் செய்தால் ஒர்க் ஆகவில்லை! ஏதோ ப்ராப்ளம்! திரும்பவும் இண்ஸ்டால் செய்தவருக்கு போன் செய்து திரும்ப இண்ஸ்டால் செய்தோம்! ஒரு வாரம் ஆவதற்குள் திரும்பவும் பழுது!
   எனக்கு ரொம்பவும் வருத்தமாகிவிட்டது! அதற்கப்புறம் வேறு சிஸ்டம் கொடுத்து சென்றார் விற்பனையாளர்! அதன் பின் தான் நான் கம்ப்யூட்டரே பழக ஆரம்பித்தேன்! இதற்கு நான் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான்! முதலில் ஒரு பத்தாயிரம்! அடுத்து ஒரு பத்தாயிரம்! இப்போது ஒரு இருபத்தி ஐயாயிரம்! என ஏறக்குறைய 50,ஆயிரம் செலவு செய்து இந்த கணிணியை இன்னும் கற்றுவருகிறேன்!
     இது போதும்னு நினைக்கறேன்! இன்னும் நிறைய சொன்னா வளர்ந்துகிட்டே போவும்! அதனாலே இதோட வுடறேன் ஜூட்!
இந்த தொடர்பதிவை தொடர வேண்டி நான் கேட்டுக் கொள்ளும் பதிவர்கள்!
  சீனிகவிதை சீனி
அம்பாளடியாள்
நாஞ்சில் மனோ x   
சங்கவி  x
ஹிஷாலி
நிகழ்காலம் எழில்

ஸ்ஸ்! அப்பாடா ஒரு வழியா கோர்த்து விட்டாச்சு! இனிமே அவங்க பாடு உங்கபாடு! வர்ட்டா!

டிஸ்கி} எச்சூஸ்மி! கொஞ்சம் மன்னிச்சுக்கங்க! காலையில கொஞ்சம் அவசரமா பதிவிட்டதாலே  மனோ அண்ணனும் சங்கவியும் ஏற்கனவே இந்த பதிவை எழுதனது ஞாபகத்து வராம கோர்த்து விட்டுட்டேன்! கவனத்திற்கு கொண்டு வந்த  திண்டுக்கல் தனபாலன் மற்றும் மனோவிற்கு நன்றி! 5 பேருக்கு பதில் ஆறு பேரை  கோர்த்துட்டேன்! அதுக்கும் சாரி! இந்த ரெண்டு பேருக்கு பதில்  இந்த தொடர் பதிவை  மூங்கில் காற்று  டி.என் முரளிதரனை தொடருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, July 24, 2013

கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!

 கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!

உமாசங்கரின் பிதற்றல்கள்!

      ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் இப்போது கிறித்துவ மதத்தில் சேர்ந்து விட்டாராம். மத போதகர் ஆகி பிரச்சாரம் செய்கிறார். அவரின் பிதற்றல்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது. ஏசு வந்து உத்தரகண்ட்டில் இப்படி வெள்ளம் வரும்! ஆயிரக் கணக்கானோர் இறப்பார்கள் என்று சொன்னாராம். மக்கள் மதிக்காமையால்தான் இப்படி உயிரை இழக்க வேண்டியது ஆகிவிட்டதாம். இப்படி ஒரு பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை  எங்கோ உதிர்த்துவிட நமது பேஸ் புக் போராளிகள் கண்ணில் அந்த நியுஸ் பட்டு ஆளாளுக்கு வறுத்து எடுத்துவிட்டார்கள். இப்போது என் பங்கு. எந்த ஒரு மதத்தை பின்பற்றுவதும் அவர்களுடைய தனி விருப்பம். இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது எதுவும் இல்லை! சொல்லப்போனால் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. இடையில் சிலர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக கருத்துக்களை திரித்து பரப்புவதால்தான் மதச்சண்டைகளே ஏற்படுகின்றன. இதே போன்று மதம் மாறும் ஆசாமிகள் இப்படி தாய் மதத்தை குறை கூறி பிதற்றுவதால் வீண் வம்பே விலையாக கிடைக்கும். கிறித்துவ மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட வியாபாரிகள் சிலர் இருக்கின்றனர். அதனால்தான் அந்தந்த மதத்தின் புனிதம் மாசுபடுகிறது. இதை எல்லோரும் புரிந்துகொண்டால் மதச் சண்டைகள் எழாது.

செய்னா நேவல் விலை 72 லட்சம்

    இந்தியன் பிரிமியர் லீக்கின் வெற்றியை தொடர்ந்து ஹாக்கி லீக் ஆரம்பித்தது. இப்போது பேட்மிண்டன் லீக் ஆரம்பித்து வீரர்களை ஏலத்தில் விட்டனர். அதில் நமது இந்திய வீராங்கனை செய்னா நேவல் இரண்டாவது அதிகபட்ச விலைக்கு ரூ 72 லட்சத்திற்கு விலை போனார். கிரிக்கெட் போல கோடிகள் கொழிக்காவிட்டாலும் இந்த அளவுக்கு கிரிக்கெட்டை தவிர்த்த ஒரு விளையாட்டு வீராங்கனை ஏலம் போனது ஆறுதலான விசயம். இது மற்ற விளையாட்டுக்களை ஊக்கப்படுத்த உதவும். உலக அளவில் சாதனை படைத்த இந்த வீராங்கணை ஐபி எல் தொடரிலும் சாதிக்க நமது வாழ்த்துக்கள்.

வாலி- மஞ்சுளா மரணங்கள்!

     இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் இழப்பாக இருக்கிறது. லெஜண்ட்ஸ் எனப்படும் பி.பி சீனிவாசில் ஆரம்பித்து டி,எம்.எஸ், இப்போது வாலி என புகழ் பெற்றவர்கள் புகழுலகு எய்திவிட்டார்கள். எம்.ஜி. ஆருக்கு வாலி எழுதிய பாடல்கள் மிகப்பொருத்தமாக அமைந்து அவருக்கு அரசியல் வானில் பிரகாசிக்க பெரிதும் உதவியாக இருந்தது என்றால் மிகையாகாது. எம்.ஜி.ஆர் வாலியை ஆண்டவரே என்றுதான் அழைப்பாராம். தனது 82ம் வயதிலும் சுறுசுறுப்பாக இருந்த கவிஞர் வாலி வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படத்தில் தனது கடைசிப்பாடலை எழுதியுள்ளார். நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாட்டெழுதி அசத்திய வாலி இப்போது தனது பாடல்களை வானுலகில் எழுத கிளம்பிவிட்டார்.
      எம்.ஜி,ஆரின்  ரிக்சாக் காரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆன மஞ்சுளா, சிவாஜி உட்பட பல நடிகர்களுடன்  நடித்தவர். விஜயகுமாரை மணந்து கொண்ட அவர் தனது மகள்கள், மகனையும் நடிக்க வைத்தார். நட்சத்திர குடும்பமாய் பல நடிகர்களுக்கு நட்புக் குடும்பமாய் திகழ்ந்தது மஞ்சுளா விஜயகுமார் குடும்பம். கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார். இது அந்த குடும்பத்திற்கு பெரிய  இழப்புதான்.  ஆழ்ந்த இரங்கல்கள்!

சில வீட்டுக் குறிப்புக்கள்!
   தரையில் ஈ எறும்பு வந்தால் உப்பு கலந்த நீரை தெளித்து துடைத்தால் இவை அண்டாது.
 வீட்டில் குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சி போடும்போது அதில் துளி எடுத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவடையும்.
 நரைமுடியை தவிர்க்க டை உபயோகிப்பவர்கள் பச்சைத்தேயிலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி அதோடு சியக்காய் கலந்து குளித்தால் தலைமுடி இயற்கையான பளபளப்புடன் இருக்கும்.
தலையணையின்றி  கைகளை மடித்துக் கொண்டு தலைக்கு வைத்து சமதரையில் படுத்து ஓய்வு எடுப்பதால் இடுப்புவலி முதுகு வலி குறையும் சுறுசுறுப்பு ஏற்படும்.
காலை உணவுடன் மாவுச்சத்து நிறைந்த பழமோ பழச்சாறோ சாப்பிடுங்கள் இது நம் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாகவும் நம் உடலை சீராக வைக்கவும் உதவுகிறது.
நான்கு வெற்றிலையுடன் மூன்று மிளகு சேர்த்து மென்று விழுங்கினால் ஜலதோஷம் நீங்கும்.
கண்ணதாசனுக்கு பிடித்த மதம்!

            சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகுநேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்தபாடில்லை.
   கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளர் பாடு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்,சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும், எனக்கு தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தி அவையோரை பார்த்தார்.
    சலசலத்த கூட்டம் அவரது வார்த்தை ஜாலத்தில் மயங்கி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. இப்படி சமயோசிதமாக பேசுவோரால் எந்த சமயத்திலும் தாக்குப்பிடிக்கமுடியும் அல்லவா?

பிடித்த வாசகம்!
     முன்பெல்லாம் நிறைய நாவல்கள் வாசிப்பேன். பெரும்பாலும் க்ரைம் நாவல்கள், சுபா, சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகாநாசர் என்று படித்து பொழுதை ஓட்டுவேன். இந்த நாவல்கள் எல்லாம் இப்போது காயலான் கடைக்கு போய் விட்டது. சுபா எழுதிய முரட்டுக் குதிரை என்ற நாவலில் வரும் வாசகம் என் மனதை அப்படியே பிடித்துக் கொண்டது. இதை என் கையெழுத்துப்பத்திரிக்கையிலும் எழுதி இருந்தேன். இப்போது உங்கள் பார்வைக்கு!
   “ எந்த தருணத்தை கம்பளிப் பூச்சி உலகமே முடிந்துவிட்டதாக பார்க்கிறதோ அந்த தருணத்தை பட்டாம்பூச்சியின் ஆரம்பமாக பார்க்கக் கற்றுக் கொள்”

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!   
Related Posts Plugin for WordPress, Blogger...