உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 23
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 23
சென்ற வாரம் உருவகம் பற்றி
பார்த்தோம். இந்த வாரம் பார்க்க போவது ஆகு பெயர். ஆகி வந்த பெயர்தான் ஆகு பெயர் ஆயிற்று.
ஆகுபெயர் மொத்தம் பதினாறு வகைப்படும். முதலில் ஆகுபெயர் என்றால் என்னவென்று பார்ப்போம்.
ஒரு பொருளின் பெயர் தனக்குரிய பொருளை குறிக்காமல்
தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா)
இந்தியா மிகப்பெரிய நாடு.
மட்டைப்பந்தில் இந்தியா வென்றது.
இந்த இரு தொடர்களிலும்
அமைந்துள்ள இந்தியா என்னும் சொல்லை கவனியுங்கள். முதல் தொடரில் இந்தியா ஒரு இடத்தை குறிக்கிறது. இரண்டாவது தொடரில் உள்ள
இந்தியா இந்திய வீரர்களை குறிக்கின்றது.
இவ்வாறு தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு பெயராகி வருவது ஆகுபெயர்
ஆகும்.
ஆகுபெயர் பதினாறு வகைப்படும் என்று பார்த்தோம். பொருளாகு பெயர், சொல் ஆகுபெயர், தானிய ஆகுபெயர்,
கருவியாகுபெயர், காரிய ஆகுபெயர் , கருத்தாவகுபெயர், அளவையாகுபெயர், உவமையாகுபெயர் என்று
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம். ஒருவரை பார்த்து வந்தாண்டா சனியன்! என்று சொல்கிறோம்!
உண்மையில் அவர் பெயர் சனியன் இல்லை! ஆனால் அவர் வந்தால் தொல்லை என்பதால் அப்படி கூறுகிறோம்.
இது உவமித்து கூறப்படுவது. இது உவமையாகுபெயர்.
நான் சமையல் கற்றேன்! இந்த தொடரில் சமையல் என்னும்
காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு அதாவது கருவிக்கு பெயராகி வந்தமையால் காரியவாகுபெயர்
எனப்பெயர் பெற்றது.
தானியவாகுபெயர்: பாலை இறக்கு!
இந்த தொடரில் பாலின் பெயர் பாலை குறிக்காமல் பால் சுமந்துள்ள பாத்திரத்தி குறிக்கிறது.
ஓர் இடத்தில் பொருளின் பெயர் (தானி)அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு)
பெயராகி வருவது தானியாகுபெயர்.
ஒன்று பெற்றால் ஒளி மயம்
இத்தொடரில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அவ்வெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு பெயராகி
வந்தமையால் எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்பட்டது.
ஒன்று கொடு, நான்குகிலோ தா, இரண்டுலிட்டர் தேவை,
ஐந்து முழம் வேண்டும் என்பவை அளவுத்தொடர்பான ஆகுபெயர்கள். இதையே ஒரு மாம்பழம் கொடு,
ஐந்துமுழம் வேட்டி கொடு இரண்டுகிலோ சர்க்கரை வேண்டும் என்றால் ஆகுபெயர் ஆகாது.
ஓரளவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சில நல்ல தமிழ் சொற்களை
அறிவோமா?
சுவிட்ச் - பொத்தான்
ஐஸ்வாட்டர் - குளிர் நீர்
கூல்டிரிங்க்ஸ்- குளிர்பானம்
கிரைண்டர்- மின் அரைவை
ஃப்ரிட்ஜ்- குளிர்பதனப்பெட்டி
டீ-
தேநீர்
வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
டெலிபோன் -தொலைபேசி
இனி இலக்கிய சுவையில் நுழைவோம்!
குறுந்தொகை பாடல் ஒன்றை பார்ப்போம்!
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!
தேவ குலத்தார்.
தலைவி தோழிக்கு சொல்லுவதாய் அமைந்துள்ள பாடல்
இது. தனக்கும் தலைவனுக்கும் உள்ள நட்பை இவ்வாறு கூறுகிறாள் தலைவி. எவ்வாறு?
மலைப்பகுதியில் குறிஞ்சியின் கரிய கொம்புகளில்
குறிஞ்சிப்பூக்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களில் இருந்து வண்டுகள் தேனைத் திரட்டுவதற்கு
இடமாகிய நாட்டை உடையவன் என் தலைவன். அந்த தலைவனோடு
நான் கொண்ட நட்பு நிலத்தை விட பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது. என்கிறள்
தலைவி.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய பார்ப்போம்!
பதிவு குறித்த உங்கள் பின்னூட்டங்கள் இந்த பகுதியை மெருகேற்ற உதவும்! உங்களின் வருகைக்கும்
கருத்துரைக்கும் நன்றி!
நல்ல விளக்கங்கள்... இது போல் தொடர்க... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteகுறுந்தொகை பாடல் விளக்கம் நன்று
ReplyDeleteஅருமை தொடர்க
ReplyDeleteதெரியாத பல தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொண்டேன் நண்பா நன்றி....!
ReplyDeleteகுறுந்தொகைப் பாடலும், இலக்கணமும் அழகாக தொகுத்துள்ளீர்கள்... நல்வாழ்த்துகள்.
ReplyDelete