இங்கிலீஷ் மீடிய ஸ்டுடண்டிடம் ஏமாந்த கதை!
இங்கிலீஷ் மீடிய ஸ்டுடண்டிடம்
ஏமாந்த கதை!
தளிர் டியுசன் செண்டர் ஓரளவுக்கு நல்ல பெயர் எடுத்த
சமயம் அது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்த சமயம் பி.டி.ஏ எனப்படும் பெற்றோர்
ஆசிரியர் கழகத்தினரால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின்
கல்வி பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டனர். இவர்களுக்கான சம்பளம் பெற்றோர் ஆசிரியர்
கழக நிதியில் இருந்தும் நன்கொடை பெறப்பட்டும் சமாளிக்கப்பட்டு வந்தது.
சிலபள்ளிகளில் இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
கூட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
வேலை இல்லாத இளைஞர்கள் தகுந்த வேலை கிடைக்கும் வரை இந்த பணியில் குறைந்த சம்பளத்தில்
பணிபுரிவார்கள். இப்படி பணிபுரிந்த சிலர் அதே பள்ளியில் அரசு ஆசிரியர்களாக வேலைகிடைத்தும்
பணிபுரிவதுண்டு.
அப்படி ஒரு சில வாய்ப்புகள் என்னைத்தேடி வந்தது
2006-07ம் ஆண்டுகளில். என்னுடைய வேலை நெருக்கடி காரணமாக இந்த பணியை வேறு யாருக்காவது
மாற்றிக் கொடுத்து விடுவேன். 2006, ஆம் ஆண்டு இறுதியில் கவரைப்பேட்டை அரசுப்பள்ளி தலைமை
ஆசிரியர் திரு வரத ராஜன் அவர்கள் ஒரு நாள் என்னை சந்தித்தார்கள். கவரைப்பேட்டை பள்ளியில்
வணிகவியல் பிரிவில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. நீங்கள்
வணிகவியல் படித்துள்ளமையால் வந்து உதவி செய்ய முடியுமா? ஆனால் சம்பளம் எல்லாம் பெரிதாக
கிடைக்காது நீங்கள் உதவி செய்தால் அந்த மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று
கேட்டார்கள்.
சரி என்று ஒத்துக் கொண்டேன். அதற்கு காரணம்
பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற கனவும், ஆசிரியர்களுன் பழகினால் இன்னும் சிறப்பாக டியுசனை
நடத்த முடியும் அவர்கள் நடத்தும் பாங்கினை அறிந்து நமக்கு பிடித்ததை பிடித்துக் கொள்ளலாம்
என்பதே. மறுநாள் முதல் பள்ளிக்கு சென்றேன்.
அன்று
வணிகவியல் ஆங்கிலவழி வகுப்பு மாணவர்களுக்கு என்னை கிளாஸ் டீச்சராகவே போட்டுவிட்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் 6,7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், வரலாறு சொல்லிக் கொடுக்கவும்
எனக்கு பாடவேளைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டது. நான் படித்ததோ தொலைவழிக் கல்வி தமிழ்
மீடியம். பாடம் நடத்தவேண்டியதோ ஆங்கிலவழியில் கொஞ்சம் திணறித்தான் போனேன்.
அந்த மாணவர்கள் அப்படி ஒன்றும் ஆகாயத்தில் இருந்து
குதித்து வந்துவிடவில்லை! அவர்களும் தமிழ் படித்தவர்கள்தான், இப்போது ஆங்கிலவழியில்
பயிலுகிறார்கள் தைரியமாக பாடம் நடத்து என்று அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த
திரு நாராயண மூர்த்தி அவர்கள் பெரிதும் ஊக்கம் கொடுத்தார்கள். வணிகவியல் ஆசிரியர் பசுபதி,
பொருளியல் ஆசிரியர் பாபு, இயற்பியல் ஆசிரியர் குணசீலன், தமிழாசிரியர் நாராயணன் ஆகியோரும்
என்னை ஊக்கப்படுத்தினர்.
முதல் இரண்டு நாட்கள் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது.
ஆனால் மாணவர்கள் அதுவரை ஆசிரியர் இல்லாமல் இருந்தமையால் என் பாடம் நடத்தும் திறனை ஒன்றும்
சொல்லவில்லை. கிண்டல் கேலி வரும் என்று நினைத்ததற்கு மாறாக பணிவுடன் நடந்து கொண்டனர்.
இத்தனக்கும் இவர்கள் வெகேஷனல் பிரிவு மாணவர்கள். நான் படிக்கும் காலத்தில் வெகேஷணல்
பிரிவு மாணவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால் அதற்கு மாறாக இவர்கள் நடந்து கொண்டனர்.
மரியாதையாக நடந்து கொண்டமையால் எனக்கும் அவர்களை பிடித்துப் போனது. முடிந்தவரை நல்ல
முறையில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து முன்கூட்டியே பிரிப்பேர் செய்து
கொண்டு சென்று நடத்துவேன்.
இப்படி நல்ல முறையில் ஒரு இரண்டுமாதங்கள் ஓடிவிட்டது.
அப்போது பள்ளியில் அரையாண்டுத்தேர்வுகள் ஆரம்பம் ஆயின. கலைஞர் ஆட்சி, சுற்று சூழல்
கல்வி, மற்றும் அறிவியல் தமிழ் என்று இரண்டு பாடங்கள் கூடுதலாக அறிமுகம் ஆகியிருந்தன.
இந்த பாடங்களை யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் தேர்வு வைப்பார்கள் 25 மதிப்பெண்களுக்கு
வினாக்கள் வரும். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் பாஸானாலும் பெயில்
ஆனாலும் கணக்கில் வராது.
இதற்கான கால அவகாசம் ஒரு மணி நேரம்தான். ரெகுலர்
பரிட்சைக்கு இடையில் ஒரு நாள் இந்த இரண்டு பரிட்சைகள் காலை மாலையில் வைக்கப்படும்.
அன்று நான் யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. உடல் நலமும் கொஞ்சம் சரியில்லை!
சளி பிடித்து கொஞ்சம் டல்லடித்தது. பள்ளிக்கே ஒரு பத்து நிமிடம் தாமதமாக வேறு சென்றேன்.
அவசர அவசரமாக எந்த ரூமிற்கு போட்டிருக்கிறார்கள் என்று விசாரித்து நான் கண்காணிக்க
வேண்டிய அறைக்குச் சென்றேன்.
அங்கு இருந்தவர் விடைத்தாள்களை கொடுத்து விட்டு
கொஸ்டின் பேப்பரை கொடுத்துடுங்க சார்! என்று என் கையில் திணித்துவிட்டு சென்றுவிட்டார்.
அன்று அறிவியல் தமிழ் தேர்வு. அந்த வகுப்பு ப்ளஸ் டூ வகுப்பு ஆங்கில வழி மாணவர்கள்.
நான் ஓவ்வொருவருக்குமாக வினாத்தாளை கொடுத்து
முடித்துவிட்டு எழுத துவங்கலாம் என்று சொன்னேன். திடீரென ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
என்னப்பா? என்றேன். சார் கொஸ்டீன் தமிழ்லே இருக்கு நாங்க இங்கிலீஷ் மீடியம் என்றான்.
எனக்கு லேட்டாக வந்த பதட்டம்,அறிவியல் தமிழ்
என்ற பரிட்சை என்ற நினைவு வரவில்லை! அவன் என்னை
கலாய்ப்பதற்கு கூறுகிறான் என்று எதுவுமே தோன்றவில்லை. மாணவர்களை நோக்கி நீங்க எல்லாரும் இங்கிலீஷ் மீடியமா?
என்று கேட்டேன். எஸ் சார்! என்றார்கள் சரி சரி! யாரும் எழுதாதீங்க! இதோ வரேன்! என்று அவசரமாக வெளியே வந்தேன்.
எதிரில் எச். எம். என்ன சுரேஷ்! ஏன் அவசரமா வர்றீங்க?
சார்! கொஸ்டீன் மாறிப் போயிருச்சு? இங்கிலீஷ் மீடியம்
பசங்களுக்கு தமிழ்ல கொஸ்டீன்ஸ் வந்திருக்கு!
எச்.எம். என்னை பார்த்த பார்வை ஒரு மாதிரி இருந்தது?
என்ன விளையாடறீங்களா? என்றார்.
இல்ல சார்! நிஜம் தான்! பசங்க ஒரே கலாட்டா பண்றாங்க!
என்றேன். அப்போதும் நிலைமை உணராமல்.
இதற்குள் உதவி தலைமை ஆசிரியர் நாராயண மூர்த்தி
வந்தார். என்னசார்! என்ன ஆச்சு?
விஷயத்தை சொன்னதுதும் கலகலவென சிரித்தார். சுரேஷ்!
உங்களுக்கு என்ன ஆச்சு? அறிவியல் தமிழ் எக்ஸாம் தமிழ்ல வராம எப்படி வரும்? பசங்க நீங்க
புதுசுங்கறதாலே கலாய்க்கிறாங்க! வாங்க நான் கூட வரேன். என்று உடன் வந்தார். நான் ‘பே’ என முழித்தபடி அவர் பின்னால் நடந்தேன்.
அடி செருப்பாலே! இங்கிலீஷ் துரைக்கு பிறந்த பசங்களா?
கலாய்க்கிறீங்களா? அறிவியல் தமிழ் தமிழ்ல வராம இங்கிலீஷ்ல வருமா? தெரிஞ்சதை எழுதி பத்து
நிமிசத்துல கொடுத்திட்டு கிளம்புங்க! சார்! அரை மணி நேரத்துல பேப்பரை வாங்கிடுங்க!
ஒழுங்கா எழுதுங்கடா கழுதைங்களா? என்று திட்டிவிட்டு அவர் சென்று விட்டார்.
நான் அப்பாவியாய் நின்று கொண்டிருக்க! க்ளுக் என
சிரித்தபடி தேர்வு எழுத ஆரம்பித்தது மாணவர் கூட்டம்.
அட நம்மளை இப்படி கேணப்பயலா ஆக்கிப்புட்டுதுங்களே!
இதுக! என்று விதியை நொந்த படி பணியை.தொடர்ந்தேன்
நான்
எப்படி நான் ஏமாந்த கதை சுவாரஸ்யமா இருக்கா?
பின்னூட்டத்தில் உங்கள்
கருத்துகளை கூறி உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
மிக சுவாரஸ்யம்... கலக்குதுங்க..
ReplyDeleteபடிக்க சுவையாக இருந்தது..
ReplyDelete