அனுமார் ஆன ஹர்ஷத் அலி! கதம்ப சோறு

கதம்ப சோறு! 

தெலுங்கானா உதயம்!
         
கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனி மாநில கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் செய்த தெலுங்கானா மக்களின் தனி மாநில கோரிக்கை நேற்று 30-5-2013 நிறைவேறியது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க நேற்று ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவும் காங்கிரஸ் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆந்திராவின் அடிலாபாத், மேடக், மெகபூப்நகர் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரித்து தனித் தெலுங்கான அமையப்போகிறது. இதற்கு ஒப்புதல் இப்போது கிடைத்தாலும் அதிகாரப்பூர்வமாக பிரித்து மாநிலம் அமைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சனை ஐதராபாத் யாருக்கு? என்று ஒருபோட்டி காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனையாக இருந்த தெலுங்கான உதயமானாலும் இன்னும் சில மாநிலங்களில்  விதர்பா, கூர்க்காலாந்து, போடோ லேண்ட், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கனகாவுக்கு என்ன ஆச்சு?
     
  சில தினங்கள் முன்பு நடிகை கனகா புற்று நோயால் அவதிப்படுவதாகவும் பாலக்காட்டில் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. நம் தளத்திலும் இதை பகிர்ந்தேன். திறமையான ஒரு நடிகைக்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று வருந்தினேன். நேற்று ஆனந்தவிகடன் உள்ளிட்ட சில தளங்களும் சில சேனல்களும் நடிகை கனகா இறந்துவிட்டதாக செய்தி பரப்பின. இந்த நிலையில் ஆர்.ஏ புரத்தில் உள்ள வீட்டில் நடிகை கனகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் நலமாக இருப்பதாகவும். புற்றுநோய் எதுவும் தம்மை பீடிக்கவில்லை என்றும் கூறிய அவர் ஆண்களை பிடிக்காமையால் தனித்து வாழ்வதாகவும் மனிதர்களைவிட விலங்குகள் பாசமாக இருப்பதால் பூனை, கோழிகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வருவதாகவும் கூறிய அவர், தந்தை என்று கூறிக்கொள்ளும் தேவதாஸ் என்பவர்தான் தன்னைக் குறித்து இப்படி வீண் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். நான் நல்லபடியாக இருப்பதாக தெரிவித்த அவர் இது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் தன்னை விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
      இதை படித்தவுடன் சொத்துக்காக நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மனதை வருத்தியது. திரையில் மின்னும் பல நட்சத்திரங்கள் சொந்தவாழ்வில் மின்ன முடியாமல் மங்கி போவது விதியின் விளையாட்டா? தெரியவில்லை!

 அனுமார் ஆன ஹர்ஷத்!


        பஞ்சாப் மாநிலம் பதேஹ்கர் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமத்தில் 2001ம் ஆண்டு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார் ஹர்ஷத் அலி! பிறக்கும் போதே இடுப்பின் பின் பகுதியில் வால் போன்ற அமைப்பு இருந்தது. ஹர்ஷத்தின் தந்தை இறந்த நிலையில் தாய் சல்மாவும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். ஹர்ஷத்தின் தாத்தா ஹர்ஷத்தின் வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியுமா என மருத்துவர்களிடம் ஆலோசித்தார். மருத்துவர்கள் அது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்லிவிட்டனர்.
     இந்த நிலையில் ஹர்ஷத் வளர வாலும் வளர்ந்து கொண்டே வந்தது. இப்போது 12 வயதாகும் ஹர்ஷத் மற்ற பிள்ளைகளுடன் பழகவும் விளையாடவும் முடியாமல்  வருத்தத்தில் உள்ளான். இந்த நிலையில் ஹர்ஷத் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தாலும் அவரது வால் அவரை கடவுளாக்கி விட்டது. ஹனுமன் என்று சுற்றுபக்கத்தில் உள்ளவர்கள் அவனை வணங்கி வருகின்றனர். வால் மட்டும் இல்லாமல் உள்ளங்காலில் தாமரைச் சின்னம் உள்ளிட்ட  ஒன்பது தெய்வீகக் குறிகள் உள்ளதாக  பொதுமக்கள் கூறுகின்றனர். இது செய்தித்தாள்களிலும் உள்ளூர் சேனல்களிலும் பரவ இப்போது நிறைய பேர் ஹர்ஷத்தை ஹனுமானின் அவதாரம் என்று சொல்லி வழிபட்டு ஆசிபெற்று செல்கின்றனராம்.
      விந்தையாக இருந்தாலும் ஒரு சமூக நல்லினக்கத்தை இது ஏற்படுத்தினால் நல்லதுதானே!

முடி திருத்தும் பி.காம் பட்டதாரிப்பெண்.

            திருப்பூரில் பல்லடத்தில் முனியப்பன் கோவில் எதிரே சலூன் கடை வைத்து முடிதிருத்துகிறார் பிகாம் படித்த பட்டதாரி பெண் தேவி.அரசு வேலைக்கு முயற்சித்து கிடைக்காமல் போனதால் குடும்பத்தொழிலான இந்த தொழிலை செய்வதாக கூறும் தேவி ஏழ்மையான குடும்பம் தந்தைக்கு நோய் பாதிப்பினால் கடை நடத்த முடியாத சூழலில் துணிந்து இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் கடை அமைக்க 50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பிச் செலுத்த அந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் காலை 9மணி முதல் 5 மணி வரை வேலை செய்வதாகவும் காலை 6.00 முதல் 9.00 வரையும் மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை கடையில் முடி திருத்துவதாகவும் கூறுகிறார் தேவி.
      முதலில் ஆண்கள் கடைக்கு வர கூச்சப்பட்டதாகவும் இப்போது தனது தொழில் திறமையால்  நிறைய பேர் வருவதாகவும். கடனை அடைத்து முடித்ததும் முழு நேரம் தொழில் செய்யப் போவதாகவும் தெரிவித்தார் தேவி.
    தன்னம்பிக்கை மனுஷியான தேவியை வாழ்த்துவோம்!

  வீட்டுக்குறிப்புக்கள்!

    சீரகத்தை வறுத்து பொடித்து நீரில் கொதிக்க வைத்து தினமும் 200 மில்லி முதல் 300 மில்லிவரை பாலூட்டும் தாய்மார்கள் பருகிவர பால் சுரப்பு அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் நல்லெண்ணை இரண்டு சொட்டுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்துக்கும் கைகால்களுக்கும் தடவி வரவும். பனிவெடிப்பு ஏற்படாது. முகம் பொலிவுடன் இருக்கும்.
நீலகிரித்தைலம் சுத்தமானதா கலப்படமா என கண்டுபிடிக்க அந்த பாட்டிலை தலைகீழாக கவிழ்த்தால் குமிழ்கள் வந்தால் அது கலப்படம். வராமல் இருந்தால் அது சுத்தமானது என்று அறியலாம்.
 எலுமிச்சம் பழத்தை ஒரு நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து பிழிந்தால் நிறைய சாறு வரும்.
நெல்லி வற்றல் சந்தனத்தூள் தனியா மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்பு குறையும்.
ஜவ்வரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
புண் பொடுகுக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவிட்டு குளித்தால் பொடுகுப் புண் குணமாகும்.

வேடிக்கை எப்படி செய்ய வேண்டும்?

     இரு பையன்கள் ஒரு ஏரி ஓரமாக போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுப்பிள்ளை, மற்றவன் ஏழைச்சிறுவன். ஏரியோரத்தில் ஒரு ஜோடி செருப்புக்கள் இருப்பதை இருவரும் பார்த்தனர். தூரத்தில் ஒரு விவசாயி கை கால் அலம்பிக் கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே இருவரும் ஒரு வேடிக்கை செய்யத்தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான் “இந்த செருப்பை வீசியெறிந்துவிடுவோம். விவசாயி வந்து பார்த்து அங்கு மிங்கும் தேடி ஓடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்..” இதை ஏழைப்பையன் மறுத்தான். அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால் உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு அவனுக்கு தொலைந்துவிட்டால் அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும் இதல்ல வேடிக்கை! நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பை கீழே வை! உன் ஜேபியிலிருருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேல் வை! நாம் அந்த மரத்தின் மீது ஒளிந்து கொள்வோம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்! என்றான் ஏழைச்சிறுவன்.
     இருவரும் ஒளிந்து கொள்ள அந்த ஏழை விவசாயி  வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக அதனுள் ஒரு ரூபாய் இருப்பதை பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு வரையும் காணாத படியால் ஆண்டவன் தான் பணத்தை கொடுத்ததாக எண்ணி அதை கண்ணில் ஒற்றிக் கொண்டான் கூப்பிய கரங்களுடன்  ‘ஆண்டவனே! ஏழைக்கு இரங்கும் கருணா மூர்த்தி..” என்றான்
   ஏழைப்பையன் பணக்கார பையனை பார்த்து ஒரு ஒரு இடி இடித்து, ‘பார்த்தாயா! உன்னை கருணா மூர்த்தி என்கிறான். நீ செருப்பை தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடு பட்டிருப்பான் இப்போ பாரு அவனுக்கும் சந்தோஷம்! நமக்கும் ஆனந்தம்! இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும் என்று சொல்லி சிரித்துக் கொண்டே போயினர்.
                           1949ல் என்.எஸ் கிருஷ்ணன் பேசிய வானொலி உரையில் இருந்து வாரமலர் சுட்டதை நான் சுட்டேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. கதம்பம் கலக்கல்... இன்னும் நிறைய விசயங்களை தேடிப்போடுங்க... சூப்பராக இருக்கும்..

  ReplyDelete
 2. எத்தனை எத்தனை தகவல்கள்... கதம்பம் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. kathampam arumai!

  kanakaa vivakaaram pathirikkai seythiyai nampuvathaaaaa.... !?

  kelvi kuriye...!

  ReplyDelete
 4. எஸ்.சுரேஷ் அத்தனையும் அருமையான தகவல்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!