ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!

ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!


   ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்! இந்த மாதம் இது இரண்டாவது வெள்ளிக்கிழமை! இந்த வெள்ளிக்கிழமையில் ஆனந்த வல்லி என்ற பெயரில் அருள் பாலிக்கும் எங்கள் பக்கத்து சில அம்பிகைகளை தரிசனம் செய்யலாமா?
    நத்தம் ஸ்ரீ ஆனந்தவல்லி!

         இது எங்கள் ஊர் அம்மன்! வாலீஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு இடபாகத்தில் தென் திசை நோக்கி எழுந்தருளி உள்ள அம்பிகை! முக்கண் நாயகி! மேலிரு கரங்களில் பாச அங்குசத்துடன் கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தாங்கி காலில் சதங்கையோடு நாட்டிய கோலத்தில் அழகுற அருள் பாலிக்கின்றாள் அன்னை ஆனந்தவல்லி!
     நம் வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்ப்பது சந்தோஷம் ஆனந்தத்தை! ஆனந்தம் இல்லாத வாழ்வு கசக்கும்! நம்முடைய வாழ்க்கையில் என்றும் ஆனந்தத்தை தரக்கூடிய வல்லமை கொண்டவள் என்பதால் ஆனந்த வல்லி என்ற திருநாமம் அம்மனுக்கு ஏற்பட்டது. அன்னை வழிபாட்டைத் தவிர வேறு எந்த வழிபாடும் இத்தகைய ஆனந்தத்தை தருமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.
     நத்தத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லியின் தல வரலாறு சுவையானது. ஆனந்த தாசன் என்பவன் அம்பிகை தாசன்! சதா அம்பிகையையே வழிபட்டு அவள் புகழ் பாடி துதித்து பூஜை செய்பவன். அவனது வாழ்க்கையில் புகுந்தார் ராகு. கிரகங்கள் மனிதனை பீடிப்பது இயல்பு! ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராகு ஆனந்த தாசனை பீடித்த போது  அவன் அன்னையிடம் முறையிட்டான். உன்னுடைய பக்தனான எனக்கு இந்த ராகுவால் தொல்லை ஏற்பட்டுவிட்டதே! என்னால் இந்த துயரை தாங்க முடியவில்லை! என்னை காப்பாற்று தாயே! என்று அழுது புலம்பினான். மனம் இரங்கிய அம்பிகையும் ராகுவை ஆனந்த தாசனை பீடிக்காத படி தனது சக்தியால் தடுத்தாள். கோபம் அடைந்த ராகு பாம்பு வடிவம் கொண்டு அன்னையை தீண்டி விட்டது.
     பாம்பின் விஷம் அன்னையை மூர்ச்சை அடைய செய்துவிட்டது! சக்தி இன்றி சிவனால் தன் தொழில் செய்ய முடியவில்லை! உலகமே அன்னையை இழக்க வேண்டிய நிலையில் சிவன் ஒரு உபாயம் சொன்னார். பூலோகத்தில் நெல்லிவனத்தில் நான் சுயம்புவாக உறைகிறேன்! அம்பிகை அங்கு வந்து என்னை வழிபட்டால் அம்பிகையின் விஷம் நீங்கும்! உலகம் உய்வடையும் என்கிறார்.
     அனைவரும் அம்பிகையை நெல்லிவனத்தில் சேர்ப்பித்தனர்! சற்று மூர்ச்சை தெளிந்த அம்பிகை அங்கிருந்த சுனையில் நீராடி, செவ்வல்லி மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். இறைவனும் அம்பிகையின் விஷத்தை ஏற்றுக் கொண்டார். விஷம் தீண்டியதால்  கருமை நிறமான அம்மன் மேனி பொலிவுற்றது. விஷம் உண்ட லிங்கத் திருமேனி கருமையானது.   இதனால் இங்கு அம்மனையும் ஈசனையும் வழிபாடு செய்தால் ராகு- கேது பரிகாரம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது புராண வரலாறு.
       இங்கு சிவதாண்டவம் பிரம்மாவிற்கு காட்டியமையால் அம்மன் காலில் சதங்கை அணிந்து நாட்டிய கோலத்தில் உள்ளார். வெள்ளி மற்றும்செவ்வாய் கிழமை ராகு காலத்தில் சகஸ்ர நாமம் பாராயணம் செய்து விளக்கேற்றி வழிபட  இந்த ஆனந்த வல்லி நம்முடைய வாழ்க்கையில் ஆனந்தத்தை தருவாள் என்பது ஐதீகம்!


பஞ்ஜேஷ்டி ஆனந்த வல்லி!
       அகத்தீஸ்வரர் ஆலயத்தில்  ஈசனுக்கு இடபாகமாய் கம்பீரத்தோற்றத்துடன் காட்சி தருகிறார் இந்த ஆனந்தவல்லி! அகத்தியர் பிரதிஷ்டை செய்த அம்பிகை! அகத்திய மாமுனிவரால் எதிரிகளை வெல்லக்கூடிய மந்திரம் பொருந்திய எந்திரம் இந்த அம்மன் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இவளும் முக்கண்களுடன் மேலிரு கரங்களில் பாச அங்குசத்துடன் கீழிரு கரங்கள் அபய வரதம் அளிக்க ஒரு காலை முன் வைத்த கோலத்தில் எதிரிகளை சம்ஹாரம் செய்யும் கோலத்துடன் அழகுற காட்சி அளிக்கிறாள்.
      இந்த அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வெள்ளி ,செவ்வாய், ஞாயிற்று கிழமைகளில் எலுமிச்சை விளக்கு ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும்! திருமணம் கை கூடும்! புத்திர பாக்கியம் கிட்டும்!  என்பது தல புராண தகவல்!

பொன்னேரி ஸ்ரீ ஆனந்த வல்லி!
    பொன்னேரி அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனந்தவல்லி அம்பிகை அருள் பாலித்து வருகிறார். இங்கும் அழகுற நான்கு திருக்கரங்கள்  உடன் சிறப்பாக  காட்சி தரும் அம்பிகை வாழ்வில் ஆனந்தத்தை தருபவளாக உள்ளார்.
காட்டூர் ஸ்ரீ ஆனந்தவல்லி!
      காட்டூரில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும் அம்பிகையின் நாமம் ஆனந்த வல்லி! இங்கும் அபயவரதம் பாச அங்குசத்துடன் எழிலுற அமைந்துள்ளார் அம்பிகை!
திருக்கள்ளில் எனும் திருக்கண்டலம் ஸ்ரீ ஆனந்தவல்லி!
  ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கள்ளில் தலத்தில் ஆட்சி செய்பவள் ஆனந்தவல்லி அம்பிகை! இங்கு சோமாஸ்கந்த வடிவத்தில் இடையில் முருகருடன் காட்சி தருகிறாள் ஆனந்தவல்லி!


சின்னம்பேடு என்னும் சிறுவாபுரியில் ஸ்ரீ ஆனந்தவல்லி!
           சிறுவாபுரி முருகர் ஆலயம் அமைந்துள்ள  இடத்திற்கு அருகாமையில் சிவன் ஆலயத்தில் ஆனந்தவல்லி அம்பிகை காட்சி தருகிறாள்!

  இவ்வாறு பல இடங்களில் ஆனந்தவல்லி என்ற நாமம் தாங்கி அருள் பாலிக்கும் அன்னையை தொழுது வாழ்வில் ஆனந்தம் அடைவோம்!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஸ்தல புராணம் மற்றும் தகவல்கள் அறியாதவை.
    நன்றி சுரேஷ்.
    நீங்களும் கேட்டுக் கொண்டபடி கணினி அனுபவம் பற்றி எழுதிவிட்டேன்.
    நன்றி

    ReplyDelete
  2. ஆனந்தவல்லி சிறப்புகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2