Sunday, December 29, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36


வணக்கம் வாசக அன்பர்களே! இடையில் இருவாரங்களாக இந்த தொடரை தொடர இயலாமல் போயிற்று. மாமியாரின் மறைவு மற்றும் என்னுடைய உடல்நலக் குறைவினால் இணையம் பக்கம் பத்து நாட்கள் வர இயலாது போயிற்று. கடைசியாக இந்த பகுதியில் வல்லினும் மிகும் மிகா இடங்கள் குறித்து சற்று விரிவாக பார்த்தோம். வல்லினம் மிகாத இடங்களை சென்ற பகுதியில் படித்தோம். இந்த முறை மிகும் இடங்கள் சிலவற்றை படிக்க உள்ளோம்.

வலிமிகும் இடங்கள்.

1 இருபெயராட்டு பண்புத்தொகையில் வலி மிகும்.
  மல்லிகைப்பூ, ஆடித் திங்கள், வரிப்பணம், பசிப்பிணி

2.உவமைத் தொகையில் வல்லொற்று மிகும்.
  மலைத்தோள், குவளைக் கண், அம்புப்பார்வை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.
  ஓடாக்குதிரைகள், பாடாக்கவிஞன்
4.      ‘இகர’ ஈற்று வினையெச்சம் முன் வலி மிகும்.
    அதுபற்றிப் பேச, பேசிக்கெடுத்தான், நோக்கிப்பாய்ந்தான்.

5.என, ஆக, போய், ஆய், தவிர, ஏற்ப வினையெச்சங்களின் பின் வல்லொற்று மிகும்.
    எனக்கூறினார், அதிகமாகக் கிடைக்கும், அதற்கேற்பப் பேசினார்.

6.      அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, பாங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி, அத்துணை, அன்றி, இன்றி, தனி, மற்ற, மற்றை, அவ்வகை, இவ்வகை, அரை, பாதி, இந்த சொற்களின் பின் வலி மிகும்.
அந்தக் குளம், அங்குச்சென்றான், இங்குக் காண்பான், அரைப்படி. அப்படிச்செய்தான்

7.      இரண்டாம் வேற்றுமை விரியில் வலி மிகும்.
பண்பைக் கடைபிடி, புலியைக் கொன்றான்

8.      2,3,4,7, ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லொற்று மிகும்.
தண்ணீர்த்தொட்டி, தங்கக் காப்பு, குழந்தைப்பால், மலைப்பாம்பு

9.      4 ஆம் வேற்றுமை விரியில் உருபிற்குப்பின் வலி மிகும்.
      வீட்டுக்குப்போ, மதுரைக்குத் திரும்பினார்.

10.      6 ஆம் வேற்றுமைத் தொகையில் அஃறிணையாக இருந்தால் வல்லொற்று மிகும்
    கிளிச்சிறகு, குதிரைக்கால்

11.வன் தொடர் குற்றியலுகரம் அடுத்து வலி மிகும்.
  பாக்குக் கூடை, மருந்துக்கடை, கன்றுக்குட்டி, அவலச்செய்தி, வாழ்த்துப்பாட்டு

12. கீழ் என் கிளவி உறழத் தோன்றா. கீழ் என்ற சொல்லின் பின் வலி மிகுவதும் மிகாததும் உண்டு.
     கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்கணக்கு, கீழ்திசை


 இனி இலக்கிய சுவைக்கு செல்வோம்! சென்ற பகுதியில் முத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு கைக்கிளை செய்யுள் பார்த்தோம்.
   இன்றும் அதே போல ஒன்று.

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும் என் நெஞ்சு.

நாணிப்பெருஞ்செல்வர் இல்லத்து நல் கூர்ந்தார் போல: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது பழமொழி அதை உணர்த்தும் வரிகள் இவை. பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் விதி வசத்தால் பொருளிழந்து ஏழையாக போனாலும் யாரிடமும் பொருளுதவி கேட்க தயங்குவார்கள் கேட்கமாட்டார்கள்.  அதே போல இருந்ததாம் சேரநாட்டு பெண்ணின் இதயம். ஏன்?
   சேரன் வீதியில் உலா வந்தான். மாணிக்க கற்கள் பூண்ட அணிகலன்கள் அலங்காரங்களோடு அவன் வருகிறான் என்றதும் அவனது அழகைக் காண வாசல் வரை செல்கிறாள் அந்த சேரநாட்டு மங்கை. பின்னர் பெண்மைக்கே உரிய நாணம் அவளை தடுத்துவிட்டது. வாசல் வரை சென்றவள் அவளே கதவை அடைத்து விட்டாளாம். எப்படி என்றால் செல்வந்தர்கள் ஏழையானால் பொருளுதவி பெற கூசுவார்களே அதே போல அவளது இதயமும் அப்படி நின்றதாம். அது திரும்பவும் மன்னனை பார்க்க சொல்லியும் தடுத்தும் அப்படியும் இப்படியும் விளையாடியதாம் என்று தன் மனதின் இயல்பை இந்த பாடலில் சொல்கிறாள் அந்த மங்கை.


முத்தொள்ளாயிரம் பாடல்கள் இப்படி அழகியலையும் மனவியலையும் அழகாக நமக்கு விருந்தளிக்கின்றன.

மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பதிந்து  ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


 


Saturday, December 28, 2013

குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!

குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!


ஓர் அடர்ந்து வளர்ந்த காட்டின் நடுவே மாமரம் ஒன்று தனது அழகிய கிளைகளை விரித்து படர்ந்து இருந்தது. அந்த மரத்தில் பொந்து ஒன்றில் குயில் ஒன்று வசித்து வந்தது. மாலை வேளைகளில் அந்த குயில் குரலெடுத்து பாடும். அதன் குரல்வளத்தின் மீது அதற்கு அலாதியான பெருமை. காட்டில் விறகு பொறுக்க வருபவர்களும், அந்த வழியாக செல்லும் வழிப்போக்கர்களும் குயிலின் குரலை பெருமையாக பேசிச் செல்வார்கள். அதனால் அந்த குயில் தனது குரலினிமையை பற்றி கர்வம் கொண்டது.
   ஒரு நாள் அந்த மரத்தின் அடியில் மயில் ஒன்று வந்தது.இரைதேடி வந்த மயிலுக்கு மாமரத்தின் அடியில் நிறைய பூச்சிகளை கண்டதும் மகிழ்ச்சி அதிகமாகி விட்டது. அந்த மகிழ்ச்சியில் அது அகவத்தொடங்கியது. பார்க்க அழகாக காட்சி தரும் மயிலின் அகவலோ கர்ண கடூரமாக இருந்தது.
   மரத்தின் மீதிருந்த குயிலுக்கோ இதைக் கேட்டு ஆத்திரமாகவும் வந்தது. அதே சமயம் சிரிப்பாகவும் இருந்தது.குயில் வாய்விட்டு சிரிப்பதை கண்ட மயில் குயிலாரே! ஏன் சிரிக்கிறீர்கள்? அப்படி என்ன நையாண்டித்தனம் நான் செய்துவிட்டேன்! என்று கேட்டது.
  ஓய் மயிலாரே! நீ தனியாக நையாண்டி வேறு செய்ய வேண்டுமா என்ன? உன் குரல் ஒன்று போதுமே எள்ளி நகையாட? அதென்ன அத்தனை கர்ண கடூரமான ஒரு குரல்! நீ பேசுவதையே சகித்துக் கொள்ள முடியவில்லை! இதில்பாட வேறு செய்கிறாயே! இது உனக்குத் தேவையா? என்றது. மேலும் என்னைப் பார்த்தாவது நீ பாடக் கற்றுக் கொள்! என்று சொல்லிவிட்டு மயிலின் பதிலுக்கு காத்திராமல் குயில் பாட ஆரம்பித்துவிட்டது.
     மயிலுக்கு அவமானமாக போய்விட்டது. ஆனாலும் அது என்ன செய்யும்? இறைவன் அதனை அப்படி படைத்துவிட்டான். மவுனமாக இரைதேடத்துவங்கியது. குயிலுக்கு இத்தனை வளமான குரலைக் கொடுத்த இறைவன் அதில் சிறிதாவது தமக்கு கொடுத்திருக்கலாமே என்று அது எண்ணிக் கொண்டது. அந்த சமயம் அந்த வழியாக வந்த வழிப்போக்கர்களும் ஆஹா! இந்த குயிலின் கீதம் என்னே இனிமையாக இருக்கிறது. இந்த மாலை வேளையில் இதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது என்று புகழ்ந்தனர். இதைக்கேட்டதும் குயிலுக்கு புல்லரித்துப் போனது. பார்த்தாயா மயிலே! என்னை இவர்கள் பாராட்டுவதை? என்று கோடிக் காட்டியது.
   ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு. உனக்கு அழகான குரலைக் கொடுத்த இறைவன் எனக்கு அழகான தோகையை கொடுத்துள்ளான் என்றது.
   எதற்கு சப்பைக் கட்டு கட்டுகிறாய்? உன் தோகையால் என்ன பிரயோசனம்? என்னுடைய குரலை விரும்புவோர் உன் குரலை எள்ளி நகையாடுவார்கள்! என்று சிரித்தது. அதற்கேற்றார் போல மயிலின் குரலை கேட்ட வழிப்போக்கர்களும் சே! அழகான குயிலின் இசையை இந்த மயில் அகவி கெடுக்கிறதே! என்று சொல்ல குயிலுக்கு மேலும் கர்வம் அதிகரித்து பார் அவர்கள் சொல்வதை நீ பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு! என்று சொல்லியது.
   அந்த சமயம் திடீரென வானம் கருத்தது. மேகங்கள் சூழ்ந்தது. தூறல் விழத்தொடங்கியது. உடனே மயில் தனது தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. அதன் ஆட்டம் களை கட்டியது.

   வழிப்போக்கர்கள் இப்போது மயிலை புகழத்தொடங்கினார்கள். ஆஹா! மயிலின் நடனம் என்னே அழகு! அதன் தோகை என்ன அழகு! என்று பாராட்டத்தொடங்கினார்கள். குயிலுக்கு இப்போது முகம் கறுத்துப்போனது. மயில் தோகை விரித்து ஆடுவதை காண கண்கோடி வேண்டும். அருமையான காட்சி என்று வழிப்போக்கர்கள் கூற குயில் வாயை மூடிக்கொண்டது.
   இப்போது மயில் பேசியது, என்ன குயிலே வாயை மூடிக்கொண்டாய்? முடிந்தால் நீயும் என்னோடு வந்து ஆடுவதுதானே? என்று கேட்டது.
    குயில் தலையைக் கவிழ்ந்து கொண்டது. மயில் சொன்னது, குயிலாரே! ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். தான் தான் உயர்ந்தவன் என்று பெருமை பேசி கர்வப்படக் கூடாது. பாராட்டுபவர்கள் திறமையைத்தான் புகழ்கிறார்களே தவிர நம்மை அல்ல என்று உணர வேண்டும் என்றது.
   உண்மைதான் மயிலாரே! என் கர்வம் அழிந்தது என்றது குயில்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!. நன்றி!Friday, December 27, 2013

அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!

அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!


ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. வாயுதேவனுக்கும் அஞ்ஜனா தேவிக்கும் மகனாக உதித்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்பலி, மகாவீரர் என்ற பலபெயர்கள் உண்டு.
    சீதையை வனத்தில் கண்ட செய்தியை இராமனுக்கு சமயோசிதமாக கண்டேன் சீதையை என்று சொல்லியதால் சொல்லின் செல்வன் என்ற பெயரும் அனுமனுக்கு உண்டு.ராமனுக்கு பணிவிடை செய்து இராமநாபஜெபம் செய்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர் அனுமன். எத்தனையோ பராக்கிரமங்கள் செய்யினும் அடக்கத்தின் திருவுருவாக திகழ்ந்தவர் அனுமன். அனுமன் கடலைதாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறார் அனுமா! நீ எப்படி கடலைத் தாண்டினாய்?
  அனுமன் அடக்கத்துடன் பதில் அளித்தார். எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் தான்! என்று.இதைவிட அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை. ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவன், விபீஷணன், அங்கதன் முதலானோருக்கு ராஜ்யங்கள் கிடைத்தது. ஆனால் அனுமன் எதையும் கேட்டுப்பெறவில்லை! பயன்கருதாது உதவினார். இதனால்தான் இராமன் சொல்கிறார் அனுமனே நான் உனக்கு கடன் பட்டிருக்கிறேன்! இந்தக்கடனை எப்படி திருப்பிச் செலுத்துவேன்! எப்போதும் நான் உனக்கு கடன் பட்டவனாகவே இருப்பேன். என்னை வணங்குவோர் உன்னையும் வணங்குவர். என் ஆலயம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு உனக்கும் சன்னதி இருக்கும். என்னை வணங்க வரும் முன் உன்னை வணங்கியே என்னை வழிபடுவர் என வரம் அளித்தார்.
     

 “புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
  அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்!

இந்த சுலோகம், எதையும் அறிந்துகொள்கிற ஆற்றல் சூட்சும புத்தி, பலவீனம் விலகி உடல்பலம்விருத்தி, புகழ், கௌரவம் அடைதல், அஞ்சாநெஞ்சம், வாக்குவன்மை, ஆகியவற்றினை ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் என்கிறது.

  ஆஞ்சநேயரின் அனுக்கிரகம் கிடைத்தால் தூணும் துரும்பாகும்.துரும்பும் தூணாகும். வாயுபுத்திரனை வழிபட்டால் பஞ்சபூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகியவற்றினால் கூட உபாதைகள் ஏற்படாது. மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் என்னும் உபாயங்களுக்கு கட்டுப்படாதவர் அனுமன்.
ஸ்ரீராம நாம கீர்த்தனையாலும் உண்மையான பக்தியாலும் மட்டுமே ஸ்ரீ ஆஞ்சநேயரை உபாசிக்கமுடியும்.மலையளவு துன்பங்களும் கடுகளவாய் அவரை வழிபட சிறுத்துப்போகும்.


மார்கழிமாதம் மூல நட்சத்திரத்தோடு வரும் அமாவாசை அவர் அவதரித்த தினமாகும். அன்றைய தினத்தின் அஞ்சனை மகனை அனுமனை வழிபடுதல் சிறப்பாகும்.
 ஸ்ரீ அனுமன் படத்தினில் வால் துவங்கும் இடத்தில் இருந்து வால் நுனிவரை 48 நாட்கல் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு செய்தால் நவகிரகபீட தோஷங்கள் விலகும். நினைத்தவை கைகூடும். காரியங்கள் சித்தியாகும்.

  ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சார்த்தி வழிபடுதலும் வடைமாலை சார்த்தி வழிபடுதலும் நற்பலன்களை கொடுக்கும். வெண்ணெய் உருகுதல் போல அவர்ர் மனம் நம்பால் உருகி நம் பிரச்சனைகள் விலகி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

  அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்துக் காப்பான்.

இந்தப்பாடலை பாடி வழிபட கல்வி, மனநிம்மதி, செல்வவளம் கிடைக்கும்.


திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமைகளில் வெற்றிலைமாலை சார்த்தி வழிபடுதல் சிறப்பாகும்.

அனைத்து கிரக தோஷங்களும் அனுமனை வழிபட விலகும்.அனுமனுக்கு பிடித்த ராமநாம ஜெபம் செய்தால் நம் அல்லல்கள் அனுமன் அருளால் அகலும்.

வரும் ஆங்கிலப்புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று அனுமன் அவதரித்த அனுமன் ஜெயந்தி வருகிறது. அன்றைய தினம் அனுமன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு அனுமனை அருளை பெற்று அல்லல்களை துரத்துவோமாக!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, December 26, 2013

எதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்க முடியாதது ஏன்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்!


1.      மருந்துலேயே சரிபண்ணிடலாம்னு சொன்ன டாக்டர் இப்ப ஆபரேஷன் பண்ணியே ஆகனுங்கிறாரே! ஏன் சிஸ்டர்?
கார்பரேஷன்காரங்க சொத்துவரி, தொழில்வரி உடனே கட்டுங்க இல்லேன்னா தண்ணீர் கனெக்‌ஷன் கட்பண்ணிடுவோம்னு நோட்டீஸ் கொடுத்து இருக்காங்களே!
                   கிணத்துக்கடவு ரவி

2.      கோர்ட்டுக்கு கைதி உடையிலேயே வந்திருக்கீயே ஏன்?
என் வக்கீல் மேல மேல அவ்வளவு நம்பிக்கை எசமான்!
                          ரியாஸ்.

3.      எங்கள் அவமானத்துக்குரிய மன்னிக்கவும் எங்கள் அபிமானதுக்குரிய தலைவர் அவர்களே!
                    வீ. விஷ்ணுகுமார்.

4.      எதிர்கட்சித்தலைவரை பற்றி பேசினால் கேஸ் போடுகிறார்கள் என்பதால் நஸ்ரியாவை பற்றி நாலு வார்த்தைகள் பேசும்படி தலைவரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
                            முகமதுயூசுப்.

5.      தலைவரே சி.பி.ஐ வந்திருக்கு!
ஏன் ஃபேஸ் புக்ல ஸ்டேட்டஸ் போடாம வராங்க?
                        பர்வீன் யூனுஸ்


6.      எதுக்கு ஜெயில் அட்ரஸ் கேட்கறீங்க?
தலைவர் புது விசிட்டிங்க் கார்டு அடிக்க சொல்லி இருக்கார் சார்!
                      ரியாஸ்.

7.      சாவி இல்லேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க எசமான்?
      பூட்டை உடைப்பேன்!
   அதையேத்தான் நானும்  செஞ்சேன்!
                            சிக்ஸ் முகம்.
8.      மன்னா! எதிரிப்படைகள் சென்றுவிட்டன!
வீரர்களே! பதுங்குகுழியில் பதுங்கியது போதும்! பொங்கி எழுங்கள்!
                   வீ.விஷ்ணுகுமார்.

9.      அந்த அமைச்சர் ஏன் டென்ஷனா இருக்கார்?
அவரோட மனைவி கோவிச்சிகிட்டு அம்மாவீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம்! எந்த அம்மா வீடு?ன்னு இவர் பயத்துல இருக்கார்!
                      முகமது யூசுப்

10.  தலைவர் பேசி முடித்த பிறகு மாடல் அழகிகளின் கேட் வாக் நடைபெற இருப்பதால் யாரும் கலைந்து சென்று ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!
                           ரியாஸ்.

11.  தலைவர் டெல்லி தலைமைகிட்ட என்ன கேட்டாராம்?
சீனாக்காரங்க பார்டர் முழுக்க திரியறதாலே அவர் மச்சானுக்கு அங்க ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்ட் வெக்க அனுமதி கேட்டாராம்
                    வி.சகிதா முருகன்.

12.  நிர்வாக வசதிக்காக ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பதில் என்ன தவறு? எங்கள் தலைவர் தனது குடும்பத்தையே மூன்றாக பிரித்து வைத்திருக்க வில்லையா?
                         கி.ரவிக்குமார்.

13.  அந்த நடிகர் அடுத்த படத்துக்காக உடம்பை குறைக்கிறாராம்!
    அதுக்காக ஆறடியா இருந்தவரு எப்படிங்க மூணு அடியா குறைஞ்சு போனாரு?
                      வி.சாரதிடேச்சு
14.  சி.பி.ஐ யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்?
ஏன் என்ன செய்யறார்?
அம்மா உணவகத்துக்கு போய் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடறாரு!
                  ராஜபாளையம் பேச்சி

15.  மக்கள் மாற்றத்தை விரும்பறாங்கய்யா!
அதுக்காக நீங்க டோனி மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிறது பார்க்க சகிக்கலை தலைவரே!
                 பர்வீன் யூனுஸ்

16.  எங்கள் தலைவரின் கனவுகளை காஜல், ஹன்சிகா, அஞ்சலி போன்றோரே ஆக்ரமித்து உள்ளதால் அவருக்கு பிரதமர் பதவி பற்றிய கனவுகள் இல்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!
                        கி.ரவிக்குமார்.
17 தலைவர் பேச ஆரம்பிச்சா முடிக்கிற வரைக்கும் சத்தம் கேட்டுகிட்டே இருக்கும்!
  என்ன கைத்தட்டல் சத்தமா?
 இல்ல தொண்டர்கள் விடற குறட்டை சத்தம்!
                    எம்.ஸ்டாலின் சரவணன்.

17.  நீ செஞ்சிருக்கிற குற்றத்திற்கு என்ன தண்டணை தெரியுமா?
உங்க செலவுல என்னை சட்டம் படிக்க வைங்க எசமான். படிச்சு முடிச்சுட்டு வந்து சொல்றேன்!
                எஸ்.எஸ். பூங்கதிர்.
18.  புலவர் டபுள் பேமண்ட் கேட்கிறாரே ஏன்?
சாமரம் வீசும் பெண்களையும் புகழ்ந்து பாடச்சொன்னீர்களாமே! மன்னா?
                        பர்வீன் யூனூஸ்.

19.  பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன் சோகமா இருக்காரு?
கட்சி ஆபிசுல எவனோ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோன்னு பாட்டு போட்டானாம்!
                    வி.சகிதா முருகன்.

20.உனக்கு ஜாமின் கொடுத்தா தினமும் ஸ்டேஷன்ல வந்து கையெழுத்து போடுவியா?
  போடுறேன் எஜமான் ஆனா… ஸ்டேஷன்ல அது காணாம போச்சு இது காணாம போச்சுன்னு சொல்லக்கூடாது!
                      பர்வீன் யூனுஸ்.

20.  எதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்கவே முடியலைம்மா!
            ஏண்டா?
அவங்களுக்கு நான் பிளையிங் கிஸ் கொடுத்தப்ப சும்மா இருந்தாங்க ஆனா அப்பா அப்படி கொடுத்தப்ப பளார்னு அறைஞ்சுட்டாங்களே!
                      பர்வீன் யூனுஸ்.

நன்றி: ஆனந்த விகடன், தி இந்து.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, December 25, 2013

ராஜாஜி என்ற ராஜரிஷி! தி இந்து கட்டுரை!பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார். சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார்: “ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்என்றார்.

தொண்டூழியம்                                        
சின்னஞ்சிறு வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் மரணித்த போது, ராஜாஜிக்கு 37 வயது. மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தேசத்தொண்டில் முற்றாக மூழ்கினார். சேலம் நகரசபைத் தலைவராக 1917-ல் பொறுப்பேற்ற ராஜாஜி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியரை அக்கிரகாரக் குழாய்களைக் கையாளும் பணியில் அமர்த்திச் சனாதனிகளின் எதிர்ப்பைப் பெற்றார். சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றதால், அவரது குடும்பம்சாதி பிரஷ்டம்செய்யப்பட்டது.

நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜி, ஊதியம் பெறாமல் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் நகரசபை அலுவலகத்தில் சமூகக் கடனாற்றினார். சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937-ல் பொறுப்பேற்றபோது அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியம் 56 ஆயிரம் ரூபாயை ஏற்க மறுத்துவீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உட்பட ஒன்பதாயிரம் ரூபாயை மட்டுமே பெறுவதற்கு இசைந்த பெருமகன் ராஜாஜி.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த ராஜாஜி தனக்கு இலவச நிலம் வழங்கப்படலாகாது என்று மறுதலித்தார்.

முன்னோடி ஆசிரமம்

சென்னைக்குஇந்துகஸ்தூரிரங்க ஐயங்காரின் அழைப்பை ஏற்று வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்தபோதுதான்ரௌலட்சட்டத்தை எதிர்த்துஹர்த்தால்நடத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணயர்ந்த நிலையில் ஒரு கனவுபோல் உதித்தது. காந்தியின்மனச்சான்றுக் காவலர்ராஜாஜி, காந்தியத்தைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்க சேலத்துக்கு அருகில் புதுப்பாளையம் என்ற எந்த வசதியுமற்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து, ஓலைக்கூரை வேய்ந்த குடிசையில் வாழ்ந்தபடி அரும்பணி ஆற்றினார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 17 பேர் கொண்ட அந்த ஆசிரமம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டது.

மதுவிலக்கே உயிர்க் கொள்கை

மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது. வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார். நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது. அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

சூதாடிகளா நாடாளுநர்கள்?

அண்ணாவின் தி.மு.. 1967-ல் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு ராஜாஜியின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை அண்ணா அரசியல் சாதுரியத்துடன் பயன்படுத்திக்கொண்டார். 1967-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதும் தன்னுடைய சுதந்திரா கட்சி ஒடிசாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தந்த மகிழ்ச்சியைவிட, தமிழகத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்விய காட்சியே ராஜாஜிக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது அவருடைய இதயம் வலித்தது.

அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?” என்று வேதனையை வெளிப்படுத்தினார் ராஜாஜி. கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.

ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடிதமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்என்று கெஞ்சினார். “நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்தகல்கிசதாசிவம்.
நினைத்ததைச் சொன்னவர்

என் வாழ்க்கை சுத்தமானது. வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்துகொண்டி ருக்கிறேன். எனக்கு எது சத்தியம், நியாயம் என்று தோன்றியதோ, அதை மட்டுமே பேசியிருக்கிறேன்என்று வாக்குமூலம் வழங்கிய ராஜாஜி, தான் நெஞ்சில் வைத்துப் போற்றிய மகாத்மா காந்தியிடம் மனம் வேறுபட்டபோது, எந்தத் தயக்கமுமின்றி அவரை எதிர்த்தார். காந்தியின் கண் முன்னரே காங்கிரஸிலிருந்து விலகினார். தன்னை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்க முயன்றவர், கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்க வற்புறுத்தியவர், உள்துறை அமைச்சராக்கி மகிழ்ந்தவர், பதவி விலக விரும்பியபோதெல்லாம் ஏற்க மறுத்தவர் நேரு என்பதை நெஞ்சில் நிறுத்தி, நன்றி செலுத்திய ராஜாஜி, நேருவின் நிர்வாகத் தவறுகளை விமர்சிக்காமல் விட்டுவிடவில்லை.
ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப் பட்டோர் ஆலயப் பிரவேசச் சட்டம், ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையில் கட்டிக் காத்தஇலக்குவன் கோடுபோன்றவை ராஜாஜிக்குப் பெருமை சேர்ப்பவை. மேலவை உறுப்பினராகி முதல்வரானது, பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் 1952-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க மாணிக்க வேலருக்கு மந்திரி பதவியளித்து ஆறு எம்.எல்.-க்கள் கொண்ட அவரதுகாமன்வீல்கட்சியை காங்கிரஸில் இணைத்தது, குலக் கல்வியை அறிமுகப்படுத்த முயன்றது இன்றளவும் விமர்சனத்துக்கு உரியவை.
அன்புக்குரிய எதிரிகள்
இன்றைய அரசியல் தலைவர்கள் ராஜாஜியிடம் கற்க வேண்டிய மிக முக்கியமான பண்பு நலன் ஒன்று உண்டு. ஒருவருடைய செயல்முறைகளை மிகக் கடுமையாக விமர்சித்தபோதும், அவரிடம் பகைமை பாராட்டும் தவறான போக்கு ராஜாஜியிடம் இறுதிவரை இருந்ததில்லை. தன்னை எல்லை மீறி விமர்சனம் செய்த பெரியாரை அவர் எப்போதும்அன்பார்ந்த எதிரியாகவே பாவித்தார்.
பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சியின் மூலம் காங்கிரஸ் ஊழலை வளர்த்ததை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய ராஜாஜி, இந்திரா காந்தியின் யதேச்சதிகாரப் போக்கை விமர்சித்தபோது, “இந்திரா சில மாயத் தோற்றங்களால் ஈர்க்கப்படுகிறார். அவற்றிலிருந்து அவர் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைவிடத் தாம்தான் சாமர்த்தியசாலி என்று எண்ணு கிறார். தன்னம்பிக்கையை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அடக்கம் என்ற உன்னதமான குணத்தைப் பெற்றிருப்பதே நல்லது.

தாம் ஒருத்தி மட்டுமே நவீன சிந்தனை உடையவள் என்று அவர் எண்ணக் கூடாது. இந்தியாவில் உள்ள ஏழைகளைத் தாம் நேசிப்பதாக இந்திரா அடிக்கடி கூறுகிறார். ஏதோ நாம் ஒருவர்தாம் இத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பது போலவும் வேறு யாருக்குமே ஏழைகளிடம் அக்கறை இல்லை என்பது போன்றும் அவர் பேசுவது ஒருவகை அகம்பாவமே” (‘சுயராஜ்யா’ 18.10.1969) என்று குறிப்பிட்டார். இன்றும் இந்த வாசகங்கள் யாருக்கோ பொருந்துவதுபோன்று தோன்றவில்லையா? அறிந்தவர் அறிவாராக!
- தமிழருவி மணியன், காந்தியச் சிந்தனையாளர், எழுத்தாளர்.


டிஸ்கி}  தமிழ் இந்துவில் படித்த இந்த கட்டுரை ராஜாஜி பற்றிய சில அறிந்திராத தகவல்களை அறிய உதவியது. இத்தகைய தலைவர்கள் இன்று இல்லாது போய்விட்டார்களே என்ற ஏக்கத்தையும் தந்தது. பொதுவாக தளிரில் இந்த மாதிரி பகிர்வுகளை பகிர்வதை நிறுத்தி இருந்தாலும் கட்டுரையின் சுவாரஸ்யம் பகிர வைக்க தோன்றியது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...