கெஜ்ரிவாலின் எழுச்சியும்! காங்கிரஸின் வீழ்ச்சியும்! கதம்ப சோறு பகுதி 17

கதம்ப சோறு பகுதி 17

கெஜ்ரிவாலின் திடீர் எழுச்சி!


    அவ்வப்போது அரசியல் கட்சிகள் உதித்து எழுச்சிபெறுவது வாடிக்கைதான் என்றாலும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானது. இது மற்றகட்சிகளில் இருந்து பிரிந்து வந்த கட்சி கிடையாது. அன்னா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றிய கெஜ்ரிவால் அரசியலில் குதித்தால்தான் சீர்கேடுகளை களைய முடியும் என்று அரசியலில் இறங்கி கட்சி துவங்கி சில ஆண்டுகளே ஆன நிலையில் டில்லியில் போட்டியிட்டு மொத்த இடங்களில் 28 தொகுதிகளில் வென்று பா.ஜ.கவும், காங்கிரஸும் ஆட்சி அமைக்க முடியாமல் செய்து விட்டார். துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டு 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஆட்சியை அளித்த ஷீலா தீக்‌ஷித்தை துடைத்து எறிந்துவிட்டார். இந்த வெற்றி மக்களிடையே இன்னும் நேர்மைக்கு மதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.காங்கிரஸ் மீதான வெறுப்பு மட்டுமே என்றால் இவர் இத்தனை தொகுதிகள் வென்றிருக்க முடியாது. 
மேலும் நான்கு மாநில இடைதேர்தல் முடிவுகள் காங்கிரஸின் வீழ்ச்சியை பறைசாற்றுகின்றன. ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் விரைவில் காணாமல் போகக்கூடிய வாய்ப்பும் கெஜ்ரிவால் போன்றவர்களால் உருவாகியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு சிறப்பாக கட்சி நடத்தினால் காங்கிரஸ் பா.ஜ வுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவாக வாய்ப்பும் இருக்கிறது.இவரால் கட்சி தொடங்கி சாதிக்க முடியாது என்று பேசியவர்கள் கூட இன்று இவரின் வெற்றியை பார்த்து வியந்து நிற்கின்றனர். ஊழல்கள் மலிந்துள்ள ஒரு நாட்டில் இந்த கட்சியின் வெற்றி பாராட்ட வேண்டிய ஒன்று. இன்னும் சில இடங்களை பிடித்து இருந்தால் இவர் ஆட்சி எப்படி செய்கிறார் என்றும் பார்த்திருக்கலாம். சாதித்து காட்டிய கெஜ்ரிவாலுக்கு ஒரு சல்யூட்!

ஏற்காடு வெற்றி!
    திமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று களத்தில் குதித்த அதிமுக பரவாயில்லை ரகத்தில்தான் வெற்றிபெற்று இருக்கிறது. அதிமுக என்னதான் சாதனைகளை செய்வதாக கூறிக்கொண்டாலும் மின்வெட்டு, தொடர் கொள்ளை, கொலைகள் போன்றவை மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்ற பார்முலா நிறைவேறி இருந்தாலும் இந்த தேர்தல் திமுகவிற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்களின் வேட்பாளர் மோசமாக தோற்கவில்லை! இந்த வெற்றி நாடளுமன்ற தேர்தலில் நாற்பது சீட்களை பெற போதுமானதாக அமையவில்லை என்பது மட்டும் உறுதி. அதிமுக சுதாரித்து கொள்ளாவிட்டால் மத்தியில் மீண்டும் எதிரிகளுடன் உறவாட வேண்டிய நிலைதான் ஏற்படும்.

பதவி இழந்த ராமலிங்கம்!

     அதிமுக அரசாங்கத்தில் பதவி என்பது நிலையில்லை! அமைச்சர் டீ குடித்து வருவதற்குள்ளோ பாத்ரூம் சென்று வருவதற்குள்ளோ கூட முன்னாள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. எப்போதும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டே இருக்கும். நில அபகரிப்பு புகார் உட்பட பல புகார்கள் பாய்ந்ததால் டம்மி ஆக்கப்பட்ட கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். மீண்டும் உதயகுமார் அமைச்சர் ஆகியுள்ளார். 41 நாளில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தேறியுள்ளது. பதவி போய்விடும் என்று தெரிந்தே தவறு செய்யும் அமைச்சர்களை குறை கூறுவதா? அல்லது அமைச்சர்களை நிர்வகிக்க தெரியாத முதலமைச்சரை குறை கூறுவதா? இந்த ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட மந்திரிகளை மாற்றுவதில்தான் வேகமாக செயல்படுகிறது!

சீட்பெல்ட் கட்டாயம்!

  ஒவ்வொரு சீசனில் ஒவ்வொன்று களை கட்டும்! இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டது போல இப்போது காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்தது, நல்லதொருசட்டம் என்று சொன்னாலும் இதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்களோ அறிவிப்புக்களோ குறைவாகவே செய்தார்கள். இந்த நிலையில் திங்கள் கிழமை முதல் கார் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு முதல் நாளிலேயே பன்னிரண்டாயிரம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஏதோ விழிப்புணர்வுக்கு பயன்பட்டால் நன்மைதான்!

நெல்சன் மண்டேலாவின் மறைவு!

      தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் கடந்த வியாழனன்று காலமானார். நிறவெறியை எதிர்த்து போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலா விடுதலை ஆனபோது வயது 71. தன்னலமற்ற அவரது சேவைக்கு நோபல் பரிசு 1993ல் வழங்கப்பட்டது.இந்திய அரசும் அவருக்கு பாரதரத்னா விருதை வழங்கி கவுரவித்தது. 1994ல் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவி ஏற்றார். முதுமை காரணமாக அரசியல் ஓய்வு பெற்ற மண்டேலா விரைப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார். நிறவெறிக்கு எதிராக போராடிய ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது.

பால் கலப்படம்!


  தமிழகத்தில் பாலில் 33 சதவீதம் கலப்படம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் ஒரு முக்கிய உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக நோயாளிகளுக்கு பால் ஒரு சிறந்த உணவாக உள்ள நிலையில் பாலில் கலப்படம் என்பது உயிருக்கே உத்திரவாதம் இல்லாத சூழலை தந்துள்ளது.
பாலில் யூரியா, சீனப்பவுடர், மைதாமாவு போன்றவை கலக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் எஸ் இளங்கோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்கள் பாலில் கலப்படம் செய்வதில் முதலிடத்தில் உள்ளன. பால் கலப்படத்திற்கு உச்சபட்ச தண்டனை ஆறுமாதம் சிறை தண்டணை அல்லது 1500 ரூபாய் அபராதம் என்பதாக உள்ளது. இதனால் கலப்படம் செய்பவர்கள் பிடிபட்டாலும் 1500 ரூபாய் கட்டி வெளியே வந்துவிட்டு மீண்டும் கலப்பட தொழிலில் ஈடுபடுகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் பாலின் கெட்டித்தன்மைக்காக யூரியாவை சேர்ப்பதுதான். இந்த பாலை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். கலப்பட பாலால் டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, நிமோனியா போன்றவை ஏற்படுகிறது. கலப்படம் செய்வோருக்கு உச்ச பட்ச தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும். அதுவரை நாம் பாக்கெட் பால்களை தவிர்ப்பது நலம். இயன்றவரை தனியார் பால்களை தவிர்த்து, ஆவின் போன்றவை பயன்படுத்துவதும் இல்லை மாட்டுப்பால் வாங்கி பயன் படுத்துவதும் நோயிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.

வைரஸ் கணிணிகளில் மூன்றாமிடம்!
    உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் கொண்ட கணிணிகளை உடைய நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கணிணிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் கணிணில் நமக்கே தெரியாமல் பிறர் விவரங்களை சேகரித்துவிடுகின்றனர். ஹேக்கர்கள் எனப்படும் இணைய குறும்பர்களால் மால்வேர்கள் புகுத்தப்பட்டு கணிணிகள் பாழாகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம்,பாதுகாப்பு போன்றவைகளும் பாதிக்கப்படுகின்றன. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஆய்வாளர்கள் சங்கம் என்ற அமைப்பு இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதில் வைரஸ் நிறைந்த கணிணிகளை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் துருக்கி முதலிடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. இதை இந்த அமைப்பின் தலைவர் ஆலன் டையர் தெரிவித்து உள்ளார். உங்க கணிணியை உஷாரா பாதுகாத்து வைச்சுக்கோங்க!

புதுமதுரையை காட்டும் கார்த்திக் சுப்புராஜ்!

  பீட்ஸா என்ற திகில் படத்தை வித்தியாசமாக கொடுத்து பெயர் எடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது ஜிகர் தண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சித்தார்த் – லட்சுமி மேனன் நடித்துவருகின்றனர். இந்த படத்தில் புது மதுரையை காட்டப்போகிறேன். இது ஒரு ஆக்‌ஷன் படம், மதுரை இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கப்போகும் படம் ஜிகர் தண்டா என்கிறார் சுப்புராஜ். இலங்கையைபற்றி குறும்படம் ஒன்று இயக்கியிருந்த அவர் வரும் காலத்தில் இலங்கையை வைத்து படம் செய்ய போவதாகவும் அது வணிக நோக்கமின்றி இருக்கும் அதனால் ஏதாவது மாற்றம் வரும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தோற்றுப்போன தோனியின் படை!

    மேற்கிந்திய தீவுகளை வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க மண்ணில் காலடி வைத்த தோனியின் படைக்கு சறுக்கல்தான் பரிசாக கிடைத்தது. பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணி என்று பெருமை அடித்துக்கொண்ட இந்திய பேட்டிங்கின் பலவீனம் இரண்டு போட்டிகளிலும் நன்றாக தெரிந்தது. தொடக்க வீரர்கள் இரண்டு போட்டியிலும் விரைவில் ஆட்டம் இழக்க மிடில் ஆர்டர் சொதப்ப போட்டிகள் தோல்வியில் முடிந்தது. இந்திய பவுலிங் சொல்லிக்கொள்ளும்படி எப்போதும் இருந்தது இல்லை! சுமாரான பவுலிங் திறமை கொண்ட நம்மவர்களை தென்னாப்பிரிக்க வீரர்கள் விளாசித்தள்ள விழி பிதுங்கி நின்றனர் பவுலர்கள். முகமது ஷமி மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கிறார். இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது தோனியின் அணி.
டிப்ஸ்! டிப்ஸ்!

சாவி கொத்துக்களை கையில் எடுத்து செல்பவர்கள் அதில் அவர்களது செல்போன் நம்பர் பதித்த டோக்கனை இணைத்து வைக்கவும் தொலைந்தாலும் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டூவீலர் வண்டிகளை ஸ்டேண்டுகளிலோ அல்லது வெளியிலோ நீண்ட நேரம் நிறுத்திவிட்டு செல்லும் போது கண்ணாடி தரையை பார்க்குமாறு திருப்பி வைத்து சென்றால் கண்ணாடி காக்கா குருவி கொத்தி பாழாகாது.

எண்ணெயில் பலகாரங்கள் செய்யும் போது எண்ணெயில் சிறு துண்டு இஞ்சி அல்லது வாழைமட்டையை போட்டு பொரித்த பின் பலகாரங்களை பொறித்தால் அதிகம் எண்ணெய் குடிக்காது.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் துளசி இலையை தேங்காய்ப்பால் விட்டு அரைத்து தொடர்ந்து தடவி வர அரிப்பு நீங்கிவிடும்.

கர்ப்பிணி பெண்கள் குளிர் பானங்களை அடிக்கடி குடிக்க வேண்டாம். பாட்டில் பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் கருவை பாதிக்கும்.

கடைசி ஆசை!
  ரஷ்ய சிறையில் மூன்று தூக்குத்தண்டணை கைதிகள் இருந்தனர். இறக்கும் முன் அவர்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்க வேண்டும் என்பதாக இருந்தது. நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது கைதியும் நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று கேட்டான். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது கைதியிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள் அவன் தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை! அதனால் ஆறுமாதம் அவனது தண்டணை தள்ளிப்போனது. அதை நிறைவேற்றி இரண்டாவது ஆசை என்ன என்றார்கள் அவன் செர்ரிப்பழம் கேட்டான் அப்போது சீசன் இல்லை! இதனால் இன்னுமொரு ஆறுமாதம் தண்டனை தள்ளிப்போனது. மூன்றாவது ஆசை என்னவென்று கேட்டபோது அவன் சொன்ன பதில் கேட்டவர்களுக்கு தலையை சுற்றியது. ஆம்! அவன் இப்போதைய அதிபர் சமாதிக்கு பக்கத்தில் புதைக்க வேண்டும் என்றான். அவர் உயிருடன் உள்ளாரே! என்றபோது அவர் சாகும் வரை காத்திருக்கிறேன் என்றால் பின் என்ன செய்வார்கள்!

(பேஸ்புக்கில் படித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்தும் தகவல்களுக்கும் நன்றி... கதம்பம் தொடர்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

  ReplyDelete
 3. கடைசி ஆசை - ஜூப்பரு .

  //காக்கா குருவி கொத்தி பாழாகாது.//

  காக்கா குருவி எல்லாம் இன்னும் இருக்கா என்ன ..?

  ReplyDelete
 4. அருமையான ஒரு கதம்ப சாதத்தை சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு. கடைசியில் அந்த "கடைசி ஆசை" அருமை.

  ReplyDelete
 5. சகோதரருக்கு வணக்கம்
  அனைத்து துறைகளையும் அலசியுள்ளது தங்கள் கதம்பம். வாழ்த்துகள் சகோ. தொடர்க. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2