குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!

குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!


ஓர் அடர்ந்து வளர்ந்த காட்டின் நடுவே மாமரம் ஒன்று தனது அழகிய கிளைகளை விரித்து படர்ந்து இருந்தது. அந்த மரத்தில் பொந்து ஒன்றில் குயில் ஒன்று வசித்து வந்தது. மாலை வேளைகளில் அந்த குயில் குரலெடுத்து பாடும். அதன் குரல்வளத்தின் மீது அதற்கு அலாதியான பெருமை. காட்டில் விறகு பொறுக்க வருபவர்களும், அந்த வழியாக செல்லும் வழிப்போக்கர்களும் குயிலின் குரலை பெருமையாக பேசிச் செல்வார்கள். அதனால் அந்த குயில் தனது குரலினிமையை பற்றி கர்வம் கொண்டது.
   ஒரு நாள் அந்த மரத்தின் அடியில் மயில் ஒன்று வந்தது.இரைதேடி வந்த மயிலுக்கு மாமரத்தின் அடியில் நிறைய பூச்சிகளை கண்டதும் மகிழ்ச்சி அதிகமாகி விட்டது. அந்த மகிழ்ச்சியில் அது அகவத்தொடங்கியது. பார்க்க அழகாக காட்சி தரும் மயிலின் அகவலோ கர்ண கடூரமாக இருந்தது.
   மரத்தின் மீதிருந்த குயிலுக்கோ இதைக் கேட்டு ஆத்திரமாகவும் வந்தது. அதே சமயம் சிரிப்பாகவும் இருந்தது.குயில் வாய்விட்டு சிரிப்பதை கண்ட மயில் குயிலாரே! ஏன் சிரிக்கிறீர்கள்? அப்படி என்ன நையாண்டித்தனம் நான் செய்துவிட்டேன்! என்று கேட்டது.
  ஓய் மயிலாரே! நீ தனியாக நையாண்டி வேறு செய்ய வேண்டுமா என்ன? உன் குரல் ஒன்று போதுமே எள்ளி நகையாட? அதென்ன அத்தனை கர்ண கடூரமான ஒரு குரல்! நீ பேசுவதையே சகித்துக் கொள்ள முடியவில்லை! இதில்பாட வேறு செய்கிறாயே! இது உனக்குத் தேவையா? என்றது. மேலும் என்னைப் பார்த்தாவது நீ பாடக் கற்றுக் கொள்! என்று சொல்லிவிட்டு மயிலின் பதிலுக்கு காத்திராமல் குயில் பாட ஆரம்பித்துவிட்டது.
     மயிலுக்கு அவமானமாக போய்விட்டது. ஆனாலும் அது என்ன செய்யும்? இறைவன் அதனை அப்படி படைத்துவிட்டான். மவுனமாக இரைதேடத்துவங்கியது. குயிலுக்கு இத்தனை வளமான குரலைக் கொடுத்த இறைவன் அதில் சிறிதாவது தமக்கு கொடுத்திருக்கலாமே என்று அது எண்ணிக் கொண்டது. அந்த சமயம் அந்த வழியாக வந்த வழிப்போக்கர்களும் ஆஹா! இந்த குயிலின் கீதம் என்னே இனிமையாக இருக்கிறது. இந்த மாலை வேளையில் இதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது என்று புகழ்ந்தனர். இதைக்கேட்டதும் குயிலுக்கு புல்லரித்துப் போனது. பார்த்தாயா மயிலே! என்னை இவர்கள் பாராட்டுவதை? என்று கோடிக் காட்டியது.
   ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு. உனக்கு அழகான குரலைக் கொடுத்த இறைவன் எனக்கு அழகான தோகையை கொடுத்துள்ளான் என்றது.
   எதற்கு சப்பைக் கட்டு கட்டுகிறாய்? உன் தோகையால் என்ன பிரயோசனம்? என்னுடைய குரலை விரும்புவோர் உன் குரலை எள்ளி நகையாடுவார்கள்! என்று சிரித்தது. அதற்கேற்றார் போல மயிலின் குரலை கேட்ட வழிப்போக்கர்களும் சே! அழகான குயிலின் இசையை இந்த மயில் அகவி கெடுக்கிறதே! என்று சொல்ல குயிலுக்கு மேலும் கர்வம் அதிகரித்து பார் அவர்கள் சொல்வதை நீ பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு! என்று சொல்லியது.
   அந்த சமயம் திடீரென வானம் கருத்தது. மேகங்கள் சூழ்ந்தது. தூறல் விழத்தொடங்கியது. உடனே மயில் தனது தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. அதன் ஆட்டம் களை கட்டியது.

   வழிப்போக்கர்கள் இப்போது மயிலை புகழத்தொடங்கினார்கள். ஆஹா! மயிலின் நடனம் என்னே அழகு! அதன் தோகை என்ன அழகு! என்று பாராட்டத்தொடங்கினார்கள். குயிலுக்கு இப்போது முகம் கறுத்துப்போனது. மயில் தோகை விரித்து ஆடுவதை காண கண்கோடி வேண்டும். அருமையான காட்சி என்று வழிப்போக்கர்கள் கூற குயில் வாயை மூடிக்கொண்டது.
   இப்போது மயில் பேசியது, என்ன குயிலே வாயை மூடிக்கொண்டாய்? முடிந்தால் நீயும் என்னோடு வந்து ஆடுவதுதானே? என்று கேட்டது.
    குயில் தலையைக் கவிழ்ந்து கொண்டது. மயில் சொன்னது, குயிலாரே! ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். தான் தான் உயர்ந்தவன் என்று பெருமை பேசி கர்வப்படக் கூடாது. பாராட்டுபவர்கள் திறமையைத்தான் புகழ்கிறார்களே தவிர நம்மை அல்ல என்று உணர வேண்டும் என்றது.
   உண்மைதான் மயிலாரே! என் கர்வம் அழிந்தது என்றது குயில்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!. நன்றி!



Comments

  1. கருத்துள்ள கதை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வுகளைத் தந்து மகிழும் தங்கள் உள்ளம் போல்
    இல்லமும் செழித்து விளங்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    சகோதரா .பிறக்கப் போகும் இப் புத்தாண்டில் எண்ணியது ஈடேற
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  3. அருமையான கதை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நல்ல கதை.. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2