சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!

சனி மஹா பிரதோஷம்!


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.
         கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இத்தகு கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.
     பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.


பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
  
  பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.


தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐந்து வகைப் பிரதோஷம் :
1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
சோமசூக்தப் பிரதட்சணம்:

        சிவாலயங்களை பிரதோஷ  காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
  நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும் பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமாக இந்த பிரதட்சணம் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும்.


நாளை சனிக்கிழமை சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. // ஒருநாழிகை என்பது 45 நிமிடங்கள். //

  இது தவறான தகவல்.

  24 நிமிடங்கள் என்பதே ஒரு நாழிகையாகும்.

  1 மணிக்கு [60 நிமிடங்களுக்கு] இரண்டரை நாழிகைகள்.

  ஒரு முழு நாளாக்கு 60 நாழிகைகள்.

  24 Hours x 60 minutes = 1440 minutes = 1 full day

  1440 நிமிடங்களை 60 நாழிகைகளால் வகுத்தால் வருவது : 24

  ஆகையினால் 24 நிமிடங்கள் = 1 நாழிகை என்பதே சரியாகும்.

  ReplyDelete
  Replies
  1. அவசரத்தில் தவறு ஏற்பட்டுவிட்டது. கவனச்சிதறலால் ஏற்பட்ட தவறு! வருந்துகிறேன்! உடனே திருத்திவிடுகிறேன்! உடனடியாக கருத்திட்டு நினைவூட்டியமைக்கு நன்றி!

   Delete
  2. எழுத்தில் பிழைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் கணக்கில் பிழை இருக்கக்கூடாது அல்லவா!

   அதனால் என் கண்களில் பட்டதைச் சொல்லும்படியாக ஆனது. இப்போது தகுந்த திருத்தம் செய்துள்ளதற்கு நன்றி.

   மற்றபடி எல்லோருக்கும் இது மிகவும் பயனுள்ள பதிவு.

   Delete
  3. மிக்க நன்றி ஐயா! என் தளத்திற்கு முதல் முறையாக வந்து கருத்திட்டமைக்கும் கணிதப்பிழையை கண்டு நீக்க உதவியமைக்கும் நன்றி! நேரம் கிடைக்கையில் உங்களின் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

   Delete
 2. பிரதோஷம் என்ன என்றால் என்று எனக்கு வெறும் மேம்போக்காகத் தான் தெரியும். இந்த பதிவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, மிக்க நன்றி

  ReplyDelete
 3. பிரதோஷம் பற்றிய தகவல்கள் நன்று. பாராட்டுகள்.

  ReplyDelete
 4. சகோதரருக்கு வணக்கம்
  பிரதோசம் பற்றிய தகவல்களை மிக அழகாக தொகுத்து தெரிந்து கொள்ள தந்தமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. எனது தளத்தில்---- படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?
   http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_13.html

   Delete
 5. தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. பிரதோஷம் பற்றிய சிறப்பான தகவல் பகிர்வுக்கு என் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
 7. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 8. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 9. மிகவும் பயனுள்ள தகவல்கள் ஓம் நமசிவாய நமஹ...

  ReplyDelete
 10. மிக்க நன்றி நண்பரே பிரதோஷ வழிபாடு பற்றி நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள் எனக்கு நல்ல பயனுள்ளதாக இருந்தது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?