Monday, October 31, 2011

சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர்.

சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.

இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏன் சீல்?

முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.

பல்வேறு நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

Sunday, October 30, 2011

என் இனிய பொன் நிலாவே! பகுதி 10

என் இனிய பொன் நிலாவே!
                   பகுதி 10
                         ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} வேலைக்கு வந்த மதுமிதாவை விரும்புகிறான் அபிஷேக். ஆனால் அவனது முறைப்பெண் ஸ்வேதா அபிஷேக்கை மணம் புரிய ஆவலாக உள்ளாள். மதுமிதாவுடன் அவள் வாக்கு வாதம் செய்கையில் அங்கு வந்த அபிஷேக்கின் தாய் அவளை விரட்டுகிறாள். அதே சமயம் தான் யார் என்றும் கூறுகிறாள்.

 என்னம்மா அப்படி முழிக்கிறே இந்த மனோ கம்ப்யூட்டர் சாப்ட் வேர்ஸின் உரிமையாளன் அபிஷேக்கின் அம்மாதான் நான்! இதுமட்டுமல்ல உன்னை என் மகன் விரும்புகிறான் அதில் எனக்கு எந்த தடையேதும் இல்லை என்பதாலும் தான் உன்னை மருமகள் என்று சொல்லாமல் என்னை மாமியார் என்று சொன்னேன். என்றார் அவர்.
    இது என்ன சுத்த லூசு குடும்பமாக இருக்குமோ? என்று நினைத்து கொண்டாள் மதுமிதா! கல்யாணமே ஆகவில்லை! அட்லீஸ்ட் நிச்சயம் கூட ஆகவில்லை! மகன் விரும்புகிறான் அந்த பெண் விரும்புகிறாளா என்று கூடத் தெரியாது அப்படிப் பட்ட ஒரு பெண்ணிடம் நான் தான் உன் மாமியார் என்று ஜம்பம் அடிக்கிறார்களே இவர்களை என்ன வென்று சொல்வது? என்று அவள் நினைக்கையிலேயே அதை படித்தவள் போல பேசலானாள் மனோன்மணி.
   என்னம்மா என்னையும் பையனையும் பைத்தியக் காரணுங்கன்னு நினைக்கிறே இல்லையா? உனக்கு அப்படித்தான் தோணும் உனக்கு மட்டுமல்ல இதை வேற யார் கேட்டாலும் அப்படித் தான் சொல்வார்கள்! ஆனால் எனக்கு என் மகன் மீது இருக்கும் நம்பிக்கையில் பேசி விட்டேனம்மா! அவன் தான் எனக்கு எல்லாம். சிறு வயதில் என் கணவரை இழந்த சமயம் உறவுகள் கழன்று சென்ற சமயம் எனக்கு ஆறுதலும் உறுதுணையுமாக இருந்தது அவன் தான் அம்மா!
   போன இந்த உறவுகள் மீண்டும் ஒருநாள் நம்மிடம் வருவார்கள் அம்மா! வரவைப்பேன் நீ வருந்தாதே என்று எனக்கு தைரியம் தந்தவனும் அவனே! அன்று நாங்கள் இருந்த நிலை வேறு இன்று இருக்கும் நிலை வேறு! இந்த நிலைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்தது எல்லாம் அவன் உழைப்புதான்!.
   இது வரை அவன் எடுத்த எந்த ஒரு முடிவும் பழுதானதில்லை! ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை! இந்த ஸ்வேதா கூட அவனிடம் எவ்வளவோ ஓட்டி பார்த்தும் விலகி ஓடிக் கொண்டிருந்தவன் உன்னை பார்த்ததும் மனதை கொடுத்து விட்டேன் என்கிறான். அவனுடைய தேர்வு நியாயமானது மட்டுமல்ல தகுதியானதும் கூட என்று உன்னை பார்த்ததும் புரிந்துவிட்டது. அந்த உரிமையில் தான் அப்படி சொன்னேன் மதும்மா!
 நீ உடனே சம்மதம் கூற வேண்டியது இல்லை! நன்றாக யோசித்து உன் விருப்பத்தை கூறினாயானால் உன் பெற்றோரை சந்திக்க வருகிறோம் உன்னை பெண் கேட்டு இப்போது வரட்டுமா அம்மா. என்று விடை பெற்றாள் அந்த தாய்.

  பொதுவாக பணக்காரர்களிடம் இருக்கும் ஒரு அகம்பாவம் அவளிடம் காணப்படவில்லை! அவள் வைத்த காரணங்கள் அபியை மேலும் உயர்த்தி காட்டவே அவரைப் போய் பைத்தியம் என்று எண்ணினே என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுமிதா.
  மனோன்மணி கூறிய சில விஷயங்களே அவளுக்கு அபிஷேக்கை பற்றிய ஓர் உயர்வான எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது அதோடு அந்த ஸ்வேதாவிற்கு பயப்பட வேண்டுமா என்ற ஒரு தன்மான உணர்ச்சியும் கிளம்பி விடவே மறுநாள் முதல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மதுமிதா.
     அபிஷேக்கின் பர்சன்ல் அஸிஸ்டெண்ட் என்பதால் பெரும்பாலும் அவனுடையே கழிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அது ஒன்றும் அவளுக்கு கஷ்டமாக இருக்கவில்லை பிடித்தே இருந்தது. அவனது தோற்றம் நிமிர்ந்த நடை கவரும் சிரிப்பு இது எல்லாமே அவனுக்கு ஒரு கம்பீரத்தை தருவதாகவே அமைந்து இருந்ததாக அவள் நினைத்தாள்.
  தோற்றத்தில் மட்டுமல்ல செய்யும் வேலையிலும் அவன் பர்ஃபெக்ட் என்பதை அவள் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே உணர்ந்தாள். கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்கும் நிறுவனமான அந்த நிறுவனத்தில் அவனது நேர்மைக்கும் சொன்ன சொல் தவறாமைக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்து இருந்தனர்.
  வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை விரும்பாது தான் முன்னே சென்று காத்திருக்கும் பழக்கம் அவனது. எனவே அவனது நேரம் தவறாமையும் வாடிக்கையரிடம் அன்பாக பேசுதல் அவர்களுக்கு தேவை யானதை உடனே நிறைவேற்றுதல் போன்ற அவனது சேவையில் வாடிக்கையாளர்கள் பெருகி வந்தனர்.
  சில நிறுவனங்கள் வாடிக்கை பெருகியதும் பழைய சேவைகளை மாற்றிக் கொள்ளும் அது போலல்லாது சிறிய வாடிக்கையாளர் ஆனாலும் பெரிய வாடிக்கை யாளர்கள் ஆனாலும் ஒன்று போலவே நடத்துவான். இவரால் பெரிய வியாபாரம் ஆகிறது என்று அவரை விழுந்துவிழுந்து கவனிப்பதும் சிறிய பொருட்களை வாங்குவோரை துச்சமாக கருதுவது என்பது அவனிடம் அறவே இல்லை.
  இதுவே அவன் தொழிலில் வெகு சீக்கிரம் முன்னேறக் காரணம் என்பதை வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே மது உணர்ந்துகொண்டாள். எனவே வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கிறோம் என்று ஏனோ தானோவென்று இல்லாமல் உண்மையிலேயே உழைக்கத் தொடங்கினாள்.
   ஒரு பர்செனல் அஸிஸ்டெண்ட் என்ற முறையில் அவனது நிகழ்ச்சிகளை தயாரித்து அதை அவனுக்கு நினைவூட்டுவது அவளது வேலை. அது மட்டுமல்லாமல் அவனோடு அந்த நிகழ்ச்சிகளில் கூட்டங்களில் கலந்து கொண்டு தேவையான குறிப்புகளும் எடுத்து கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவள் செவ்வனே செய்து வந்தாள்.
    வேலைக்கு சேர்ந்து ஒரு வாரங்கள் ஓடியிருந்தது. அன்று ஒரு புதிய வாடிக்கையாளரை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது வாடிக்கை மட்டும் கிடைத்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் ஆனால் அவர் எளிதில் அசைந்து கொடுப்பவரில்லை. எப்படியாவது அவரது வாடிக்கையை பெற்று விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான் அபிஷேக்.
   அதற்கான எல்லா குறிப்புகளையும் எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் மது. அந்த வாடிக்கையாளருடனான சந்திப்பு மாலை மூன்று மணிக்கு இருந்தது. காலையில் அலுவலகம் வந்த அபிஷேக் ஓர் அரை மணி நேரமே அலுவலகத்தில் இருந்தான்.
   ஒரு போன் வரவும் மது நான் அவசரமாக வெளியே போகவேண்டி உள்ளது மதியம் தான் வருவேன் நீ பார்த்துக் கொள் என்று சொன்ன போது சார் இன்று மூன்று மணிக்கு ... என்று மது ஆரம்பிக்கவும் ம்ம்.. நினைவில் இருக்கிறது அதற்குள் வந்து விடுவேன். மற்றபடி எனது காலை புரோகிராம்களை கேன்சல் செய்து விடு காரணம் கேட்டால் அவசர வேலையாக சென்றிருப்பதாக கூறி சமாளித்துவிடு என்று சொன்னவன். ஓக்கே பை என்று வெளியேறினான்.

மாலை மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது.அவன் இன்னும் வராதது மதுவிற்கு எரிச்சலாக இருந்தது. நல்ல வாடிக்கையை இழக்க போகிறோமோ என்று அவள் நினைக்கையில் எப்படிப் போனால் என்ன நமக்கா இழப்பு அவனுக்குத் தானே என்று சொன்னது மனசு.
   அவனுக்குத் தான் இழப்பு என்றாலும் நமக்கும் கூடத்தானே! இந்த வாடிக்கை கூடி லாபம் அதிகரித்தால் அது நமக்கும் பலன் தரும் தானே என்றும் நினைத்தது. இப்படி மனதோடு போராடிக் கொண்டிருந்த மது மணி மூன்றை கடந்தும் அவன் வராததால் திகைத்தாள்.
   இப்படி செய்ய மாட்டானே என்ன ஆயிற்றோ? போன் செய்யலாமா? என்று யோசித்தாள்.அவன் கோபித்துக் கொண்டாள் என்ன செய்வது தொந்தரவு செய்ய வேண்டாம் என்றல்லவா கூறினான். முக்கியமான வாடிக்கை அல்லவா கை நழுவிப் போகப் போகிறது என்று அவனது செல்லிற்கு அழைப்பு விடுத்தாள்.
   இருமுறை ரிங்க் முழுதும் சென்றும் எடுக்க வில்லை! போனைக் கூட எடுக்காமல் அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறான்? பல்லைக் கடித்தபடி மூன்றாவது முறையாக டயல் செய்கையில் போன் எடுக்கப் பட்டது.
  ஆவலுடன் . சார் நான் மது என்றுஅவள் கூறி முடிக்கும் முன்னே
 என்ன அதற்குள் போன் போட்டு விட்டாயே அபி இல்லாமல் அரை நாள் கூட உன்னால் இருக்க முடியாதா எல்லாம் இவர் கொடுக்கிற இடம் என்று பொறிந்தாள் அந்த ஸ்வேதா.
  பதில் பேச முடியாது திகைத்து நின்றாள் மதுமிதா!

நிலவு வளரும்(10)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

நான் ரசித்த சிரிப்புக்கள்! 5


நான் ரசித்த சிரிப்புக்கள்! 5

1.சுப்பு நாங்க புது நாய் வாங்கி இருக்கோம் வந்து விளையாடி பார்க்கிறாயா?
  கடிக்குமா?
 அதை தெரிஞ்சுக்கத்தானே உன்னை கூப்பிடறேன்!

2.இந்தாங்க மருந்து சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு ஸ்பூன் சாப்பிடனும்!
  எங்க வீட்டுல ரெண்டு ஸ்பூன் தான் இருக்கு டாக்டர்!
3.உன் சட்டையில ஓட்டை இருக்காடா?
 ஊஹூம் கிடையவே கிடையாது!
 அப்போ கழுத்து, கை எல்லாம் எப்படி நுழைக்கிறே?
4.அவன் மன்மதன் மாதிரி இருக்கான்னு சொன்னது தப்பா போச்சு!
 ஏன்?
 எப்போதும் கரும்பும் கையுமாவே அலைஞ்சுகிட்டு இருக்கான்!
5.எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?
 நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!
                        நன்றி சாவி வார இதழ்!

6.தீபாவளி கொண்டாடினதுக்கா உங்களை ஜெயில்ல போட்டுட்டாங்க எப்படி?
  பட்டாசு கடைக்கு தீ வைச்சேன்!
                          -சோனா
7.அவரு போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?
வயித்து வலிக்கு பாம்பு மாத்திரை கொடுத்தாராம்!
                       -கார்வண்ணன்

8.சுவர் கடிகாரம் மேலேயிருந்து விழுந்ததுங்க எங்கம்மா மயிரிழையிலே உயிர் தப்பிச்சாங்க!
   சனியன் அந்த கடிகாரம் எப்பவும் ஸ்லோ!
                            -சதானந்த்

9.அந்த அரசியல் வாதியை எதுக்கு கைது பண்றாங்க?
   சட்டத்துல இருக்கற ஓட்டையை அடைக்கிறேன்னு நூறு கோடி ரூபாய் வாங்கினாராம்!
10 அவரு பயங்கரமா ஜொள் விடுவாராமே?
 ஆமாம் அவர் விட்ட ஜொள்ளுல அவரே வழுக்கி விழுந்துட்டாருன்னா பார்த்துக்கங்க!
                             - சம்பத்
                        நன்றி குமுதம்
11.நான் ஊர்ல இல்லாதப்போ வேலைக்காரிக்கு அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்தீங்களா?
    சேச்சே எனக்கு எப்பவும் நீதான் ஒசத்தி! அவளுக்கு வெறும் கேசரியும் கனகாம்பரமும்தான் வாங்கிக் கொடுத்தேன்!
                  -சேளூர் எம்.ஏ சந்திரசேகரன்.
12. ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே...?
    நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க...!
                              - வி. சாரதி டேச்சு.
13.பல் டாக்டரா இருக்க உங்க பையனுக்கும் உங்களுக்கும் என்ன தகறாறு?
     என் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டான்!
                               -வி.சாரதி டேச்சு.
14.நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனா அமைவான்!
    குறிப்பா யாருன்னு சொல்லாம இப்படி பொதுவாச் சொன்னா எப்படிங்க?!
                           -கே. தண்டபாணி
15.நம்ம தலைவர் எதுக்கு தன்னோட பையனை ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போறாரு?
    அவனுக்கு படிப்பு வாசனையே இல்லையாம்!
                             -வி.சாரதி டேச்சு.
                       நன்றி விகடன்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Friday, October 28, 2011

கேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்?: உண்மையை சொல்கிறார் பி.சி.சி.ஐ., செயலர்

"வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டதால் தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை,''என, பி.சி.சி.ஐ., முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின். "பேட்டிங்கில்' எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், கேப்டனாக ஏமாற்றம் அளித்தார். கடந்த 1996ல் அணிக்கு தலைமையேற்ற இவர், 25 டெஸ்டில் 9 தோல்வியை சந்தித்தார். 73 ஒரு நாள் போட்டிகளில் 43ல் தோல்வியை தழுவினார். இதையடுத்து கேப்டன் பதவியை 2000ல் ராஜினாமா செய்தார். கேப்டனாக இவரது வீழ்ச்சிக்கான காரணம் குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜெயவந்த் லீயே கூறியிருப்பதாவது:
 கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகிய போது, எனது கண்கள் குளமாகின. கேப்டனாக இருந்த காலத்தில், அவருடன் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவரது பிரச்னையே யார் சொன்னாலும் கேட்பது தான். அமைதியான குணம் கொண்ட இவர், 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை வழக்கமாக கொண்டார். அவர்கள் சொல்வதை எல்லாம் அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். அப்படி செய்யும் போது தனது சுயபுத்தியை பயன்படுத்த தவறினார். இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்த, கேப்டன் பதவிக்கு சிக்கலானது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அப்போது, யாரோ ஒருவர் சிபாரிசு செய்தார் என்பதற்காக தனக்கு சற்றும் அறிமுகமில்லாத நிலேஷ் குல்கர்னியை தேர்வு செய்ய வேண்டுமென சச்சின் வலியுறுத்தினார்.
உடனே தேர்வுக் குழு தலைவராக இருந்த கிஷண் ருங்தா ,""நீங்கள் அவர் பவுலிங் செய்வதை பார்த்திருக்கிறீர்களா,''எனக் கேட்டார். சர்வதேச போட்டிகளில் மிகவும் "பிசி'யாக இருந்த சச்சின், ரஞ்சி டிராபி போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் குல்கர்னியை தெரிய வாய்ப்பு இல்லை. இந்நிலையில்,""எனக்கு தெரியாது சார். ஆனால், குல்கர்னி 26 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். மிகச் சிறந்த பவுலர்,''என்று சொன்னார்.
இதற்கு பதில் அளித்த ருங்தா,""டியர் கேப்டன். குல்கர்னி பந்துவீசுவதை பார்த்திருந்தாலாவது, உங்கள் சிபாரிசை ஏற்றுக் கொண்டிருப்பேன். ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியே குல்கர்னியை தேர்வு செய்யவில்லை. அவரை நீக்கி விட்டனர். உள்ளூர் அணியிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வீரரை தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்,''என்றார்.
இதற்கு, பதில் சொல்ல முடியாமல் தவித்த சச்சினின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது.
இவ்வாறு ஜெயவந்த் லீலே குறிப்பிட்டுள்ளார்.

முடிவை மாற்றிய அஞ்சலி
கடந்த 1999-2000ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில், முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. உடனே கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தாராம் சச்சின். இதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இது குறித்து ஜெயவந்த் லீலே கூறுகையில்,""இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே இந்தியா தோல்வி அடைவது உறுதியானது. அன்று மாலை ராஜினாமா கடிதத்தை என்னிடம் சச்சின் கொடுத்தார். பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் துவங்க உள்ள நிலையில், இவரது முடிவு அதிர்ச்சி அளித்தது. தொடர் முடியும் வரை பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். இதனை ஏற்க மறுத்தார். உடனே சச்சின் மனைவி அஞ்சலியை தொடர்பு கொண்டு பேசினோம். இதற்கு பின், ஒருவழியாக இரண்டாவது டெஸ்டில் கேப்டனாக பணியாற்ற சம்மதித்தார்,''என்றார்.

நன்றி தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!


தனக்கு வந்தால் தெரியும்!

கிருஷ்ணாவரம் என்ற சிற்றூரில் கோபு என்ற சிறுவன் வசித்து வந்தான். அந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவனிடம் கெட்டபழக்கம் ஒன்று இருந்தது. நல்ல பழக்கங்கள் ஒருவனை உயர்த்திவைக்கும் மாறாக தீயபழக்கங்கள் ஒருவனிடம் குடி கொண்டால் அவனை வீழ்த்திவிடும் அல்லவா? ஆனால் நல்லவனான கோபுவிடம் எப்படியோ இந்த தீயபழக்கம் குடி கொண்டு விட்டது.
    அந்த பழக்கம் எது என்று கேட்கிறீர்களா? மற்றவர்களின் உடைமைகளை ஒளித்து வைத்து அவர்கள் தேடும்போது மகிழ்ச்சி அடையும் குணம் தான் அந்த தீய குணம். மற்றவர்கள் பொருட்கள் காணாமல் தவிக்கும் போது துள்ளி குதிக்கும் அவனது உள்ளம். அவர்கள் படும் அவஸ்தைகளை ரசித்துவிட்டு சாவதானமாக பொருட்களை கண்டெடுப்பது போல நடித்து அவர்களிடம் ஒப்படைப்பான் கோபு.
இது அவர்களுக்குத் தெரியாது பொருட்களை தேடித் தந்தமைக்கு பாராட்டிச் செல்வார்கள் பொருள் கிடைத்தவர்கள் உள்ளூர மகிழ்ந்துகொள்வான் அவன். இந்த விளையாட்டு விபரீதமானது என்று அவன் உணரவில்லை. அவனது நண்பன் மணி இந்த விளையாட்டை கண்டித்தான்.
   அடப் போடா வாழ்க்கையில ஒரு த்ரில் வேணும்டா! நான் தான் பொருளை எடுத்துக்கிறது இல்லையே திருப்பிக் கொடுத்துவிடுகிறேனே! திருடினாத் தான் தப்பு! ஒளிச்சு விளையாடினா ஒண்ணும் தப்பில்லை! போடா நீயும் உன் அட்வைசும்! என்று அவனை கிண்டலடித்து கேலி செய்தான் கோபு.
  டேய் கோபு ஒருநாள் நீ கட்டாயம் அவஸ்த்தை படுவே நீ அப்ப நான் சொல்றது உனக்கு புரியும் என்று கழன்று கொண்டான் மணி. ஆனால் அவனையும் விடவில்லை கோபுவின் விளையாட்டு!
  முக்கியமான கணக்கு பாடவேளையில் மணியின் பென்சிலைஎடுத்து ஒளித்து வைத்து விட்டான். கணக்காசிரியர் பென்சிலையும் நோட்டையும் எடுக்கச் சொன்னபோது பென்சிலை காணாது தவித்தான் மணி. அவனை அடித்து துவைப்பதை மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருந்த கோபு பின்னர் மணியிடம் பென்சிலை தந்தான்.
  கோபு நான் அடிவாங்குவது உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷமா? நீ திருந்தவே மாட்டாயா? என்றான் மணி! அடப் போடா! நீ அடி வாங்கறப்ப எவ்வளவு ஜாலியா இருத்தது தெரியுமா? என்று சிரித்தான் கோபு.
  தம்மை அழவைத்த கோபுவை எப்படியாவது திருத்த முடிவு செய்தான் மணி. அதற்கான நேரம் வந்தது. பள்ளியின் அரையாண்டுத் தேர்வு துவங்கியது. தேர்வுக்கு முன் தினம் கோபுவின் தமிழ் புத்தகத்தை எடுத்துஒளித்துவைத்துவிட்டான் மணி. தேர்வுக்கு முந்தின தினமே படிக்கும் வழக்கமுள்ள கோபு புத்தகத்தை காணாது தவித்தான். நாளை தேர்வுக்கு என்ன செய்வது? ஒன்றுமே படிக்கவில்லையே? தமிழில் பெயிலானால் அதைவிட அவமானம் வேறு ஒன்றூம் இல்லையே? ஆசிரியர் அடிப்பது இருக்கட்டும் வீட்டில் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று பல்வேறு கேள்விகள் அவனைத் துளைத்து எடுத்தது.
    எங்கு தேடியும் புத்தகம் கிடைக்க வில்லை. இரவலும் யாரும் கொடுக்க முன் வரவில்லை! அழுதே விட்டான் கோபு. அப்போது அங்கு வந்த மணி ஒன்றும் தெரியாதவன் போல கோபு ஏன் அழுகிறாய்? பிறரை அழவைக்கும் நீ இன்று அழுதுகொண்டு இருக்கிறாயே? என்று கேட்டான்.
   மணி நீ வேறு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறாயா? நான் என் புத்தகம் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்றுமே படிக்கவில்லை! நாளைக்கு தமிழ் தேர்வு என் நிலையை நானே நொந்து கொண்டிருக்கிறேன் என்றான் கோபு.
   இப்படித்தானே கோபு பொருள்களை தொலைத்தவர்கள் மனம் வேதனைப் பட்டிருக்கும்! அப்போது நீ எப்படி கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாய்! இப்போது உன் பொருள் காணாததும் துடிக்கிறாயே! என்று ஊசியாய் குத்தினான் மணி.
    கோபு தலை குனிந்தான். ஆம் மணி இப்போதுதான் என் தவறு எனக்கு உரைக்கிறது. அவர்கள் இட்ட சாபம்தான் இன்று என்னை பிடித்துவிட்டதோ? நாளை நான் எப்படி தேர்வு எழுதுவேன்! என்று விசும்பினான் கோபு.
   இந்தா கோபு உன் தமிழ் புத்தகம்! நீ திருந்தவே நான் இவ்வாறு செய்யும் படி ஆயிற்று! இனி பிறர் பொருளை ஒளித்து வைக்க மாட்டாயே? என்று அவனிடம் புத்தகத்தை தந்தான் மணி.
  எல்லாம் உன் வேலைதானா? இன்று எனக்கு புத்தி வந்தது! இனி இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்! என்னை திருத்திய நீதான் என் நல்ல நண்பன் என்று அவனை அணைத்துக் கொண்டான் கோபு.

அறவுரை!

ஆசாரக் கோவை!

எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.

விளக்கம்} உண்மையான அறிவுடையவர் தமக்கு கிடைப்பதற்கு அருமையானவற்றை விரும்பார். கழிந்து போன பொருளைப் பற்றி எண்ணி வருந்த மாட்டார்.நீக்குவதற்கு இயலாதபடி வந்த துன்பத்திற்கும் உள்ளம் வருந்தார்.

உங்களுக்குத் தெரியுமா?

யோகா முறையைக் கண்டுபிடித்தவர் பதஞ்சலி முனிவர்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Thursday, October 27, 2011

தளிர் அண்ணா கவிதைகள்!


உலகை வலம் வா பெண்ணே!

பெண்ணே!
உன்னைத் தெய்வமென்று
சொன்னது தவறாகிவிட்டது!
கல்லாக சமைந்து
கிடக்கிறாயே?
தெய்வமாக வாழ்ந்தது
போதும் பெண்ணே!
மனுஷியாக வாழக்
கற்றுக்கொள்!
மனதைத் திற!
நீ நினைத்தால்
நிழல்கூட சுடும்!
நினைவில் வை!
உன்னை நீ
உணர்ந்துகொள்!
உலகை வலம் வா!
பெண்ணே!


தடைகளைக் கண்டு தளராதே!

எத்தனைதான்
தடைகள் வந்தாலும்
தளரவேண்டாம் தோழா!
தட்டி தட்டி போகிறதே என
வெட்டியாகத் திரியாதே!
கட்டி கட்டிப் போடுகிறார்களே
என்று கலங்கி நிற்காதே!
முட்டி முட்டி மோதியே
முட்டை குஞ்சு பொறிக்கிறது!
கூட்டை விட்டு குளவி வர
உடைத்து உடைத்து முயல்கிறது!
உலகைக் காணும் ஆவலில்
சிசுவும் உதைத்தே வெளியில் வருகிறது!
தடையில்லா வாழ்வில்லை!
தயங்கி நிற்காதே! தடைகளையே
தடமாக்க கற்றுக்கொள்!
தடைகள் நம்மை புடம் போடும் கலன்கள்!
தடைக் கற்களை
படிக்கற்களாக்கு!
துடிப்போடு படி ஏறிவா!
பாரதம் உன்னை வறவேற்கும்!
பாரினுள் உன் புகழ் நிற்கும்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

சாதித்துக் காட்டினார் தோனி!:

கோல்கட்டா: இந்திய கேப்டன் தோனி தொட்டதெல்லாம் மீண்டும் பொன்னாகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பட்டையை கிளப்பிய இவர், பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்தார். அணியை அருமையாக வழிநடத்திய இவர், இளம் வீரர்களுக்கு உரிய ஊக்கம் அளித்தார். இதன் காரணமாக சச்சின், சேவக், ஜாகிர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி, தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது. சுழற்பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதல் கட்டமாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று முன் தினம் கோல்கட்டாவில் நடந்த ஐந்தாவது போட்டியில் தோனியின்(75) அதிரடி கைகொடுக்க இந்திய அணி(271/8), இங்கிலாந்தை(176) மீண்டும் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர, இங்கிலாந்து மண்ணில் சமீபத்தில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இம்முறை இந்திய அணியின் வெற்றிநடைக்கு கேப்டன் தோனி முக்கிய காரணம். ரன் மழை பொழிந்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இத்தொடரில் தோனியின் சில சாதனைகள்:
* கோல்கட்டாவில் 75 ரன்கள் எடுத்த தோனி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அசார்(5, 239), கங்குலிக்கு (5104) பிறகு இப்பெருமையை பெறும் மூன்றாவது இந்திய கேப்டன் ஆனார்.
* ஒரு தொடரின் நான்கு இன்னிங்சில் அவுட்டாகாத முதல் இந்திய வீரரானார். இம்முறை 87(ஐதராபாத்), 35(மொகாலி), 15(மும்பை), 75 ரன்கள் (கோல்கட்டா) எடுத்தார். டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் "பேட்' செய்யவில்லை. இவர், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 6 இன்னிங்சில் அவுட்டாகாமல் 340 ரன்கள் எடுத்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
* கோல்கட்டாவில் தனது 43வது அரைசதம் அடித்தார். ஏற்கனவே 7 சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் 50 முறை(43+7) எடுத்த நான்காவது விக்கெட் கீப்பரானார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(72), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்(69), ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர்(50) உள்ளனர். தவிர, இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் 25 "கேட்ச்' பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றார்.
* ஒருநாள் அரங்கில் ஆறாவது முறையாக தொடர் நாயகன் விருது வென்றார். இது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது முறை.
தோனிக்கு அடுத்து ரவிந்திர ஜடேஜா அசத்தினார். கோல்கட்டாவில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இத்தொடரில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தினார். சுழலில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் 10 விக்கெட் கைப்பற்றினார்.
இத்தொடர் குறித்து கேப்டன் தோனி கூறியது:
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இதை கர்வத்துடன் சொல்லவில்லை. புள்ளிவிவரங்களை பார்த்தால் உண்மை தெரியும். இங்கு நடந்த கடந்து மூன்று (2006, 2008, 2011) ஒருநாள் தொடரில் இந்தியா 16 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆனால், பேட்டிங் தான் எடுபடவில்லை. தொடரை 5-0 என வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை இங்கிலாந்தில் சந்தித்த தோல்விக்கு பழிதீர்த்ததாக கருதக் கூடாது. ஏனென்றால் விளையாட்டில் பழிவாங்குவதற்கு இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. தற்போதைய தொடரில் கூட நமது வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக 10 ஓவர்கள் வீச முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால், பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ரெய்னா, திவாரி போன்றவர்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படாது.
"பேட்டிங்' வரிசையில் 6வது வீரராக களமிறங்கி விளையாட பழகிக் கொண்டேன். "பவர் பிளே' விதிமுறை மாற்றம் காரணமாக இந்த நிலையில் மிகவும் கவனமாக "பேட்' செய்ய வேண்டும். இங்கிலாந்து மண்ணில் தோற்ற போது கடுமையாக விமர்சித்தார்கள். இதைப் பற்றி கவலைப்படவில்லை. வெற்றி பெற்றால் பாராட்டுவார்கள் என்பது எனக்கு தெரியும். சச்சின், சேவக், யுவராஜ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும், சீனியர் வீரர்களின் இடத்தை எளிதில் நிரப்ப முடியாது.
உலக கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். சச்சின் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை. இதனால், ஈடன் கார்டனில் குறைவான ரசிகர்கள் வந்திருக்கலாம். தவிர, இந்தியாவின் மிகப் பெரிய மைதானமான இங்கு அனைத்து நேரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு இல்லை.
இவ்வாறு தோனி கூறினார்.
தோல்விக்கு என்ன காரணம்: குக்
""இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் சோபிக்காததே, தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது: இத்தொடரில் எங்கள் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. நிறைய வீரர்கள் முதன்முறையாக இந்திய மண்ணில் விளையாடினர். இங்குள்ள மைதானத்தின் தன்மை, தட்பவெப்பநிலை குறித்து முழுமையாக அறியமுடியவில்லை.
இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பின், இந்திய வீரர்கள் முழு நம்பிக்கையுடன் விளையாடினர். எங்கள் அணியின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. ஆண்டர்சன், பிராட் இல்லாத நிலையில் ஸ்டீவன் பின் வேகத்தில் நம்பிக்கை அளித்தார். தோனி, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு சுலப வெற்றி கிடைத்தது. வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியை காண குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தது ஆச்சரியமாக இருந்தது.
இவ்வாறு அலெஸ்டர் குக் கூறினார்.
கோஹ்லி முதலிடம்
ஒருநாள் தொடரில் இம்முறை அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவில் விராத் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் "டாப்-7' வீரர்கள்:
வீரர்    போட்டி    ரன்
கோஹ்லி(இந்தியா)    5    270
காம்பிர்(இந்தியா)    5    213
தோனி(இந்தியா)    5    212
டிராட்(இங்கிலாந்து)    5    202
ரகானே(இந்தியா)    5    182
ரெய்னா(இந்தியா)    5    179
பீட்டர்சன்(இங்கிலாந்து)    4    170
ஜடேஜா அபாரம்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் "டாப்-7' வீரர்கள்:
வீரர்    போட்டி    விக்கெட்
ஜடேஜா(இந்தியா)    5    11
அஷ்வின்(இந்தியா)    5    10
ஸ்டீவன்(இங்கிலாந்து)    5    8
வினய் குமார்(இந்தியா)    5    6
பிரஸ்னன்(இங்கிலாந்து)    5    5
வருண் ஆரோன்(இந்தியா)    2    4
உமேஷ் யாதவ்(இந்தியா)    3    4    


நன்றி  தினமலர்

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போர்ப்ஸ்

புதுடில்லி : போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல் உள்ளிட்ட பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் நிலவிவரும் அசாதாரணபொருளாதார ஸ்திரத்தன்மை, ரூபாயின் மதிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்திலேயே இருக்கிறார். இவரது சொத்து மதிப்பில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழந்திருந்த போதிலும், அவர் 22.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவரது சகோதர் அனில் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 6.9 பில்லியன் டாலர்களை இழந்ததோடு மட்டுமல்லாமல், பட்டியலில், 10ம் இடத்தில் இருந்த அவர் 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போதைய இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் லட்சுமி மிட்டல் 19.2 பில்லியன் டாலர்களோடு, பட்டியலில் 2ம் இடத்தி<லும், விப்ரோ நிறுவனர் அஜிம் பிரேம்ஜி 3ம் இடத்திலும் உள்ளனர். 9.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை கொண்டுள்ள சாவித்ரி ஜிண்டால், 5ம் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ராகுல் பாட்டியா, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட 14 புதிய முகங்கள் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளனர். ராகுல் பாட்டியா 51வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில், இப்பட்டியலில் முன்னணி இடங்கள் வகித்த வினோத் கோயங்கா மற்றும் சாஹித் பால்வா உள்ளிட்டோர் தற்போது இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாஷித் பால்வா, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்வர் என்பது நினைவிருக்கலாம்

நன்றி தினமலர்

Wednesday, October 26, 2011

வயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்

இப்பொழுதெல்லாம் வெளியாகும் புதிய தொழில் நுட்பங்களை ஒவ்வொரு நிறுவனங்களும் விளக்கிக் கூறுகையில்தான் தெளிவாகப் புலப்படுகிறது. அந்த வசதிகள் அனைத்தும் அவ்வளவு நுணுக்கம் கொண்டதாக இருக்கின்றது.

மெமோ என்ற மொபைலை இசட்டிஇ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மொபைலை 3ஜி வசதியுடன் பெற்றுக் கொள்ளலாம். இதனால் கிரிகெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் இதில் கிரிக்கெட் வயர்லெஸ் சேவையைப் பெறலாம். இது அமெரிக்காவில் வெளியாக உள்ளது.

அதோடு இந்த மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியினைப் பெற்றிருக்கிறது. இசட்டிஇ மெமோ மொபைல் குறைந்த விலை கொண்ட மொபைலாகும். ஆனால் இதனுடைய வடிவமைப்பைப் பார்த்தால் அதிக விலை கொண்ட மொபைல் என்றுதான் அனைவரையும் நினைக்க வைக்கும்.

2.4 கியூவிஜிஏ கலர் திரை தொழில் நுட்பத்தைக் கொடுக்கும் இந்த மொபைல் 320 X 240 திரை துல்லியத்தையும் வழங்குகிறது.

புகைப்படம் எடுக்கவும், வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிக்கும் இதில் 2 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேம்கார்டர் வசதியினால் எம்பி3 ப்ளேயர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைப் பெற முடியும். இந்த மொபைல் மைஹோம்ஸ்கிரீன் திரை மூலம் வாடிக்கையாளர்களை குதூகலிக்க வைக்கிறது.

மெமோ மொபைல் கூடுதலாக ஸ்டீரியோ புளூடூத் 2.1 வெர்ஷன் வசதியைக் கொடுக்கும். 16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரிக்கு சப்போர்ட் செய்கிறது.

மொபைல் என்றாலே மெமரி வசதி தேவைப்படுகிறது. ஏனென்றால் முன்பெல்லாம் வெறும் போன் நம்பர்களை மட்டும் ஸ்டோர் செய்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் இப்பொழுதெல்லாம் நிறைய தகவல்களை சேகரிக்க துவங்கிவிட்டனர். மொமோ மொபைல் மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி ஸ்லாட் வசதியையும் வழங்கும்.

இது 111 கிராம் எடையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் ஸ்டோர்களின் மூலம் இந்த இசட்டிஇ மெமோ மொபைலைப் பெறலாம். இந்த மொபைல்போன் ரூ.5,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

நன்றி தட்ஸ் தமிழ்!

இன்று கொண்டாடுவோம் இனிதாய்...!

இன்று கொண்டாடுவோம் இனிதாய்...!

ஏற்றுவோம் தீபஒளியை!-பறை
சாற்றுவோம் பாரதப்புகழை!

கூற்றுவனாய்க் கலவரங்கள்!
மாற்ற முடியா மனிதர்கள்!

ஏற்றி விடப்படும் சா‘தீ’
தூற்றி விடப்படும் வதந்‘தீ’

அட்டையாய் ஒட்டிய லஞ்சப் பேய்!
சட்டைக் கூட இல்லாத ஏழ்மை!

பட்டங்கள் தராத வேலை!
சட்டங்களில் உள்ள ஓட்டை!

கற்க மறுக்கும் அறியாமை!
நிற்க நிழலில்லா மனிதர்கள்!

போகப் பொருளாய் பெண்மை!
போக வழிதேடும் போதை!

ஆண்டுக் கொருமுறை தேர்தல்!
ஆண்டவன் பெயரால் சுரண்டல்!

எங்கும் எதிலும் ஊழல்கள்!
கங்குகரைக் காணா பூசல்கள்!

இவைதான் இந்தியாவைப்
பிடித்த இருள்கள்!

பாரதத்தின் முதுகில்
படிந்துவிட்ட கறைகள்!

காலம் காலமாய்
மறையாத் தழும்புகள்!

விலகட்டும் இந்த இருள்கள்!
பரவட்டும் புது ஒளிவெள்ளம்!

இன்று கொண்டாடுவோம்
இனிதாய் தீபாவளி!


இந்த கவிதை 1998 தீபாவளியில் எழுதப்பட்டது எனது கையெழுத்துப் பத்திரிக்கையில். இன்றும் பொறுத்தமாக இருப்பதால் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்! நன்றி!

Tuesday, October 25, 2011

அத்திரிபாச்சா! அத்திரிபாச்சா!

இந்த ஞாபகமறதி இருக்கே...அது மனுஷனை பாடாய் படுத்திடும்! ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று சொல்வதைப் போல. உலகத்திலேயே, தங்களை ஜாம்பவான்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் ஞாபக மறதிக்காரர்கள் தான்.
ஒரு மனுஷன் மாமியார் வீட்டுக்கு தலை தீபாவளிக்குப் போவதாக இருந்தான். கிளம்புகிற வேளையில், மனைவிக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம்... மருத்துவச்சியிடம் கூட்டிப் போனான். அவள் நாடி புடிச்சு பார்த்துட்டு, ""இது அது சாமியோவ்! புள்ளைய பத்திரமா பாத்துக்கோ! இப்போ பஸ்சுலே போகக் கூடாது!'' என்று எச்சரித்து அனுப்பினாள்.
மனைவி கர்ப்பமா இருக்கிறது ஒருபுறம் சந்தோஷம் தான் என்றாலும், தலை தீபாவளி சீர் வாங்குறதை விட முடியுமா என்ன! நான் மட்டும் போயிட்டு வரேன்னு அவன் கிளம்பிட்டான்.
மகள் கர்ப்பமாக இருக்கிற விபரத்தைக் கேட்டதும், அம்மாகாரிக்கு ஏக மகிழ்ச்சி. மருமகனுக்கு மோதிரம் போட்டா!! பலகாரங்களை அடுக்கித் தள்ளிட்டா! மாமியார் செஞ்ச ஸ்பெஷல்
கொழுக்கட்டை ஒன்று இவன் மனதில் நின்று விட்டது. அவ்ளோ ருசி!
""என் மகள் என்னை விட, இதை நல்லா செய்வா,'' என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தாள். மறுநாள் நம்ம ஆள் ஊருக்கு கிளம்பிட்டான்.
வீட்டிற்கு வந்து, மனைவி கையால் அந்த பலகாரத்தை செஞ்சு சாப்பிடணுங்கிறதுக்காக, மறக்காமல் இருக்க அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே பஸ்சில் வந்தான். ஒரு இடத்தில் பெரிய பள்ளம்! பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கவே, ஒரு குலுக்கு குலுக்கியது. அந்த ஆட்டத்தில், பதறிப்போன நம்ம ஆள், அதிர்ச்சியிலே பண்டத்தின் பெயரை மறந்துட்டான்.
""அத்தை ஏதோ சொன்னாளே! அத்திரிபாச்சாவோ, கித்திரிபாச்சாவோன்னு! கரெக்ட்...அத்திரிபாச்சா தான்!'' என அவனாகவே, முடிவு செய்து கொண்டு, வீட்டில் வந்து மனைவியிடம் ""அத்திரிபாச்சா செய்யுடி'' என்றான். அவள் விழித்தாள்.
""என்னையா உளர்றே!'' என்றாள். அவனுக்கு கோபம் வந்துட்டு! ""ஏய்! புருஷன் ஒரு பலகாரம் கேட்டா அதைச் செய்ய வலிக்கவா செய்யுது! சோம்பேறிக் கழுதை! ஒழுங்கா சொன்னதை செய்யுடி,'' என்று கத்தினான்.
அவள் ஒன்றும் புரியமால் அழுதேவிட்டாள்.
""அடியே! அழவா செய்யுறே! வேலை பார்க்கிறதுக்கு உனக்கு வலிக்குதோ!'' என்றவன் நையப்புடைத்து விட்டான்.
அவள் தன் அம்மாக்காரிக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டாள். அம்மாக் காரி பதறிப்போய் ஓடிவந்தாள்.
மருமகனைப் பார்த்து, ""அடப்பாவி! ஒரு பிள்ளைத்தாச்சி பொண்ணை இப்படியா அடிப்பே! பாருடா! கொழக்கட்டை கொழக்கட்டையா வீங்கியிருக்கு!''....
இப்போது, நம்ம ஆள் துள்ளிக் குதித்தான். ""அடியே! அதுதாண்டி! அதைத்தான் அத்திரிபாச்சான்னு மாத்திச் சொல்லிட்டேன். சரி! நான் அடிச்சலே மனசிலே வச்சுக்காதே! போய் கொழுக்கட்டை செய்,'' என்றானே பார்க்கலாம்!

நன்றி ஆன்மீகமலர்!

தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எது நல்ல நேரம்?

சென்னை: நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எந்த நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்பது குறித்து ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் மிக முக்கியமானது. தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வதற்கும் கூட நல்ல நேரம் பார்ப்பது அவசியம்.

வழக்கமாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நிறைய பார்க்க வேண்டும் என்பார்கள். இரவு நேரங்களில் குளிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனம், உதய காலங்கள், பிறப்பு நேரம், மரண நேரம் உள்ளிட்டவற்றிலும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளக் கூடாது. சனி, புதன், திங்கள் ஆகிய கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என பல சம்பிரதாயங்கள் உள்ளன.

இருப்பினும் தீபாவளிக்கு இதிலிருந்து விதி விலக்கு உண்டு. காரணம், அன்றைய தினம் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் இதற்கு கங்காஸ்னானம் என்று பெயர்.

இப்படிப்பட்ட தீபாவளிக் குளியலுக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம் இல்லையா. இந்த ஆண்டு அதாவது நாளை அதிகாலை 3 மணி முதல் 4.53 மணிக்குள் குளிப்பது நல்லது என்கிறார்கள். அந்த நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் தீபமேற்றி பூஜை செய்வது உகந்தது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. அப்படிப்பட்ட அருமையான புதன்கிழமையன்று இந்த ஆண்டு தீபாவளி வருவது கூடுதல் சிறப்பாகும். அதை விட மகா சிறப்பான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவுக்கு உகந்த இந்த நாளில், இந்திரனின் நட்சத்திரமான சித்திரையும் கூடி வருவதுதான். எனவே இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பான நேரத்தில் வருகிறது.

இப்படிப்பட்ட தீபாவளிப் பண்டிகையை உரிய குளியல் நேரத்தில் தலைக்குக் குளித்து தீபமேற்றி கடவுள்களை வணங்கி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சகிதம் இனிய முறையில் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி தட்ஸ் தமிழ்!

நிலவே கலங்காதே!


நிலவே கலங்காதே!

விடிந்தாள் தீபாவளி. இது எனது தலை தீபாவளியாக இருந்திருக்க வேண்டும் ரத்னா மட்டும் சம்மதித்து இருந்தால். மனோகர் சற்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தான். அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை அந்த நினைவுகள் சற்றுக் கட்டிப் போட்டன.
    ரத்னா அவனது அத்தை மகள் மனோகருக்கென்றே நிச்சயமானவள். அவளும் மனோகரை மிகவும் நேசித்தாள். எது வரை? வெளியூருக்கு கல்லூரி படிப்பிற்கு செல்லும் வரை! கல்லூரி படிப்பு அவளை மாற்ற்விட்டதா இல்லை மனோகரை அவளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை! இப்போதெல்லாம் அவள் மனோகரிடம் முகம் கொடுத்தும் பேசுவதில்லை!. மனோகரை மணக்கவும் மறுத்துவிட்டாள்.
         சொல்லப் போனால் அவள் யாரையுமே மணக்க விரும்பவில்லை என்று கூறினாள். அவளின் கல்லூரி படிப்புக்கு அச்சாரம் போட்டதே மனோகர்தான்.அதுவே அவனுக்கு பாதகமாகிவிட்டது. மூன்று வருடங்கள் முன் அவளது அப்பா ஏன் மாப்ள? இந்த வருசத்தோட ஸ்கூல் படிப்பு முடியுது வர்ர ஆவணியில உனக்கும் ரத்னாவுக்கும் கல்லாணத்த முடிச்சிப் போடலாமுன்னு நினைக்கேன் நீ என்ன சொல்ற? என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். வெள்ளை மனதுக்காரர் அவர். சூது வாது தெரியாதவர். அவர் கேட்கும் பொழுது உடனிருந்த ரத்னாவைன் முகம் சிவப்பதற்கு பதில் வாடிப் போனது. பள்ளி இறுதியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவள். படிப்பை மிகவும் நேசிப்பவள்.அவளைப் போல் படிக்க வேண்டாம் என்றால்... வாடிய பயிராய் நின்றாள்.
    மனோகர் யோசித்தான். மாமா கிணற்று தண்ணியை ஆற்று வெள்ளமா கொண்டு போயிடப் போகுது என்னிக்கு இருந்தாலும் ரத்னா எனக்குத் தான்னு முடிவு ஆகிப் போச்சு பாவம் சின்ன பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படுது அது படிச்சி பட்டம் வாங்கினா நம்ம குடும்பத்துக்குதானே பெருமை படிச்சிட்டு வரட்டும் மாமா! இன்னும் மூணு வருஷம் தானே! மூணே நிமிஷமா கரைஞ்சி போயிடும் என்று வாதாடி சென்னையில் ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டான்.
    இரண்டு வருடங்கள் வரை அவல் அவனுடன் சகஜமாகத்தான் எப்பொழுதும் போல் பழகி வந்தாள்.இந்த கடைசி வருடத்தின் போதுதான் அவனைப் பார்த்தால் ஒதுங்கி ஒதுங்கி போக ஆரம்பித்தாள். ஏதோ வெட்கம் போல பட்டணத்திற்கு சென்று படிக்கிறாள் அல்லவா என்று இவனும் சும்மா இருந்து விட்டான். ஆனால் கல்லூரி படிப்பு முடிந்துவந்ததும் திருமண ஏற்பாட்டை தொடங்கும் சமயம் அவள் தடுத்து விட்டாள்.
   வேண்டாம் எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை!என்னை கட்டாயப் படுத்தாதீங்க என்றபோது பெற்றவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தார்கள் அவள் வழிக்கு வரவில்லை. மீறினால் இறந்து போவேன் என்று மிரட்டவே வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டார்கள்.அவளை சரமாறியாக தூற்றவும் செய்தார்கள் ஆனால் அவள் அதற்கெல்லாம் கலங்கினாள் இல்லை!.
    மனோகருக்குக் கூட முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்டான்.கல்லூரிக்கு சென்றவள் ஆயிற்றே! வேறு யாரையாவது மனதில் வைத்துள்ளாள் போலும். அதனால்தான் நம்மிடம் கூட சரியாக பேசாமல் ஒதுங்கினாலோ என்னவோ அப்படி ஏதாவது இருந்தாலும் அவனை கட்டி வைக்கலாம் என்று அவள் பெற்றோரை கேட்டுப் பார்க்க சொன்னான்.
   ஆனால் அவள் மனோகரை மட்டுமல்ல வேறு யாரையும் மணக்க மறுத்துவிட்டாள்.எனக்குத் திருமணமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அவளின் இந்த முடிவால் பெற்றவர்கள் மனம் கலங்கினர். அவர்களை பார்க்கவே மனோகருக்கு வருத்தமாக இருந்தது.
  பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டான் மனோகர்.அதோ ரத்னா வெளியே கிளம்புகிறாள். அனேகமாக ஆற்றங்கரைக்குத் தான் இருக்கும். மாலை வேளைகளில் அவள் இவ்வாறு உலாவுவது வழக்கம் தான். ஆனால் இரவு வேளையில் இவள் செல்வது எங்கே? இன்று இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தான். தீபாவளி ஊரெங்கும் உற்சாகமாக கொண்டாடும் வேளையில் இவர்கள் மட்டும் மூலையில் முடங்கி கிடக்கும் சூழலாகிவிட்டதே இதை மாற்ற வேண்டும் என்று ரத்னாவை தொடர்ந்தான் மனோகர்.
 ரத்னா வேகமாக நடந்தாள். ஊரின் ஒதுக்குப் புறமான அந்த பாழுங்கிணற்றை வேகமாக நெருங்கினாள். அதில் குதிக்க முயன்ற போது மனோகர் விரைந்து வந்து தடுத்தான். ரத்னா என்ன இது? ஏன் இப்படி நடந்துக்கிற? சாகிற அளவுக்கு அப்படி என்ன நடந்து போச்சு? உன் மனசில என்ன இருக்கு என்கிட்ட தைரியமா சொல்லு! வேற யாரையாவது காதலிக்கிறையா? அப்படி எதுவானாலும் தயங்காமல் சொல்லு நான் உன்னை அவனுக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். உன் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன். இந்த முடிவு வேண்டாம் ரத்னா! என்றான் மனோகர்.
    ரத்னா! விக்கி விக்கி அழுதாள். மாமா நீங்க எவ்வளவு நல்லவர்? ஆனா நான் உங்களுக்குச் சிறிதும் அருகதையற்றவள்! நான் சாக வேண்டும் இதே மாதிரி போன வருட தீபாவளியில் தான் நான் கெட்டுப் போனேன்! ஆம் நான் சுத்தமானவள் இல்லை! என் கற்பை இழந்து நிற்கிறேன் மாமா! ஐயோ நான் ஏன் தான் கல்லூரிக்கு போனேனோ என்று குலுங்கி அழுதாள் ரத்னா.
  ரத்னா! அழாதே! நடந்தது என்ன? நீ நீ கெட்டுப் போனாயா? என்னால் நம்பமுடியவில்லை! என் காதுகளில் தானா இந்த சொற்கள் விழுந்தது! என்றான் மனோகர்.
  ஆம் மனோ இது உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும் சென்ற தீபாவளிக்கு நான் விடுமுறையில் ஊர் வரவில்லை! தோழிகளோடு கொண்டாடினோம் தீபாவளியை ஒரு தோழியின் வீட்டில் அங்குதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஆண் பெண் நண்பர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை சீரழித்து விட்டான் ஒருவன். சினேகிதன் என்ற போர்வையில் ஒரு காம வெறியன் என்னை கலங்கபடுத்திவிட்டான் மாமா. நான் சுயநினைவில்லா சமயத்தில் இந்த விபரீதம் நடந்து விட்டது. நான் அப்போதே இறந்திருக்க வேண்டும். ஆனால் தோழிகள் தடுத்து விட்டார்கள்.
   நான் எப்படி மாமா உங்களை மணப்பேன்? அந்த நிகழ்வு என் மனதை குத்திக் கொண்டிருக்கிறது? என்னால் பெற்றவர்களுக்கும் கஷ்டம்? அன்றே இறந்து போயிருந்தால் சில நாள் துக்கத்தில் மறந்திருப்பார்கள். உயிரோடு இருந்து நான் வதை படுவதோடு அவர்களையும் வதைக்கிறேனே! என்றவள் அழ ஆரம்பித்தாள்.
 மனோகர் மௌனித்தான். நிதானமாக அவள் கண்களை துடைத்தேன்.ரத்னா! கலங்காதே! நீ என் நிலவு உன் களங்கம் யாரையும் பாதிக்காது! நீ இதை எப்பொழுதோ சொல்லியிருக்கலாம்! ஆகட்டும் விடு நான் உன்னை மணக்க ஆவலாக உள்ளேன் உன் விருப்பம் என்ன? என்றான் மனோகர்.
  மாமா என்ன சொல்கிறீர்கள்! நடந்ததுஅனைத்தும் தெரிந்துமா?
மனோகர் அவள் வாயைப் பொத்தினான். இதை மீண்டும்மீண்டும் சொல்லி வேதனைப்படாதே! அன்று நடந்தது ஒரு விபத்து! நீயாக தவறு செய்யவில்லையே? பெண்களுக்கு கற்பு அவர்களின் மனதில் இருந்தால் போதும் உடலில் அல்ல.நீ குற்ற உணர்ச்சியால் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை! உன் மீது தவறு ஏதும் இல்லை! இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும் பெரியவர்களை சங்கடப்படுத்த வேண்டாம். சேற்றில் தவறி விழுந்தாள் கழுவிக் கொள்வதில்லையா? அதே போல நினைத்துக் கொள் அதுகூட நீயாக விழவில்லை! தள்ளிவிடப்பட்டுள்ளாய்! கலங்காதே! உன் விருப்பத்தைச் சொல் எனக்கு உன்னை மணக்க சம்மதம் உன் பதில் என்ன கண்மணி என்றான் மனோகர்.
 அவள் அத்தான் என்றவாறு ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள  அப்போது திருமணத்திற்கு நாள் பார்க்க சொல்ல வேண்டியதுதான்! என்று அவள் தலை வருடினான் மனோகர்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
  

Monday, October 24, 2011

ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்

மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

வெட்பாலைப் பூக்கள்

வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும்.

புங்கைப்பூ

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து அருந்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.

சிற்றகத்திப்பூக்கள்

சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ் செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர். எந்த நிறத்தில் பூப்பதாக இருந்தாலும் அவரவர் ஊர்களில் கிடைக்கின்ற பூக்களைக் கொண்டு மருந்தாக தயாரித்து உண்ணலாம்.

சிற்கத்திப்பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.

பனம்பூ

ஆண் பனை பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும் போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சை சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

மகிழம் பூ

மகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும். பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும்.

கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.

சம்பங்கிப்பூக்கள்

சம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஏறவைத்து அதிலிருந்து பூக்களை எடுத்து விடவேண்டும். அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேலை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

எலுமிச்சைப் பூக்கள்

எலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும்.

களாப்பூ

களா என்பது காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணப்படும் ஒரு முட் செடி. இதனுடைய பூச்சாறு கண் நோய்களுக்குக் கூறப்பட்ட மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கண்களில் பூ விழுந்து அது முற்றுவதற்கு முன்னால் களாப் பூவைக் கசக்கி பிழிந்து சாறு மூன்று துளி கண்களில் பிழிந்து வர குணமாகும்.

நன்றி தட்ஸ் தமிழ்!

அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!


அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!
 1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
 2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
 3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.
 4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
 5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.
 6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
 7. ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
 8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
 9. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.
 10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.
 11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
 12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
 13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
 14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
 15. உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.
 16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
 17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
 18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
 19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
 20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.


பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து தொகுப்பு.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...