கூடன்குளத்தில் நடப்பது என்ன?

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும்போராட்டத்தில் அணுஉலைக்கு எதிரான இயக்கத்தினர் பொதுமக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

1988ம் ஆண்டு மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்க முடிவு செய்து கட்டுமான பணிகளும் நடந்து வந்தது.

இதற்கு கூடன்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது யாரும் இந்த எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த எதிர்ப்புகளை சமாளித்து மத்திய அரசு, மாநில அரசு உதவியுடன் விறுவிறுவென கட்டுமான பணிகளை நடத்தி வந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் நாளடைவில் அதனை மறந்து அணுமின் நிலைய கட்டுமான பணிகளில் வேலை செய்து வந்தனர்.தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்து முதல் அணு உலையில் மின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ளது. அணுஉலையின் பல்வேறு கட்ட சோதனைகளை அணு விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சுனாமியால் ஜப்பான் நாட்டில் புக்குஷிமோவில் அணுஉலை பாதிக்கப்பட்டு அணுக்கசிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தையடுத்து கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள், போராட்ட்தைக் கையில் எடுத்துக் கொண்டு மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கும் அணுமின் நிலையத்தினால் இப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற பீதியையும், அச்சத்தையும் கிளப்பிவிட்டனர். இது இப்பகுதி மக்களிடையே காட்டு தீ போன்று பரவி அமைதியாக இருந்த பொதுமக்களை பல்வேறு போராட்டங்களை செய்ய தூண்டியது. அதன்படி கூடன்குளம் பகுதி பொதுமக்கள் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடன்குளம், இடிந்தகரை மற்றும் சுற்றுக் கிராம பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம், பஸ் மறியல் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த கூடன்குளம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் கடையடைப்பு, மீனவர்கள் வேலைநிறுத்தம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து இடிந்தகரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு கூடன்குளம், இடிந்தகரை மற்றும் சுற்றுக் கிராம பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பொதுமக்களாகவே திரண்ட இந்த உண்ணாவிரத பந்தலில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் உள்ளே புகுந்து அணுஉலை குறித்து பேசி, மக்கள் பிரச்னைக்கு உதவுது போன்று மக்களோடு, மக்களாக இணைந்தனர். அந்த அணுஉலை எதிர்ப்பாளர்கள் யார் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்று தெரியாமலேயே மக்களும் அவர்களின் பின்னால் செல்ல தொடங்கினர்.

இதனை சாதகமாக்கி கொண்ட எதிர்ப்பாளர்கள் மக்களை அணுஉலைக்கு எதிராக திசை திருப்பி போராட்டத்தை இழுத்தடித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது சென்ற குழுவில் சம்பந்தமே இல்லாத சில அணுஉலை எதிர்ப்பாளர்களையும், குறிப்பிட்ட சில பங்குதந்தைகளை மட்டுமே கலந்து கொள்ள வைத்ததிலிருந்து அவர்களின் உள்நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதை போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்து ஈடுபட்டு வந்த பாலபிரஜாபதி அடிகளாரும் கண்டித்துள்ளார், விமர்சித்துள்ளார்.

அணுஉலையே வரக்கூடாது,அணுஉலையினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால், பீதியினால் பொதுமக்கள் போராடும் நிலையில் சுயநல எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் திசை திருப்பி வருகின்றனர். இந்த அணுஉலை எதிர்ப்பாளர்கள் போராட்ட களத்தில் கூடியிருக்கும் மக்களிடம் ஒருவிதமாகவும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் கருத்துக்களை வேறுவிதமாகவும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையின் போது இந்த இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாத வகையிலும் பேசி வருகின்றனர்.

இதனை உணர்ந்து கொண்ட பொதுமக்களில் சிலர் அணுஉலை எதிர்ப்பாளர்கள் போராட்டக்குழு என்ற பெயரில் தங்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்று உணர்ந்து போராட்டக் குழுவிற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆரம்பத்தில் பொதுமக்களிடம் இருந்து வந்த அணுஉலை எதிர்ப்பு வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்ல இதன் பின்னணியில் ஏதேனும் சதி மறைந்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 1500 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இவர்களுக்குப் பிழைப்பும் போய் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மீனவ குடும்பங்கள் பல நாட்கள் வறுமையில் பசியுடன் வாடி உணவிற்கு வழியின்றி பல ஊர்களில் கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி குடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

கடைகள் அடைத்து ஆதரவு தெரிவித்த வியாபாரிகள் வருமானமின்றி பாதிப்படைந்து மிகவும் கஷ்டப்பட்டனர். பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள செய்து அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு சென்றது. பிரச்சினையை பேசித் தீர்த்து முடிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அதை போராட்டக் குழு சரிவர பயன்படுத்திக் கொள்ள மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

அணு மின் நிலையத்தை மூட முடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது. இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்!

டிஸ்கி}  காப்பி- பேஸ்ட் இதெல்லாம் ஒரு பதிவா? என்று முகம் காட்ட துணிவில்லா நண்பர் ஒருவர் கேட்டுள்ளார். இதுவும் அதே வகைதான்! சூர்ய ஜீவா, நிவாஸ் போன்றவர்களும் முதலில் படித்துவிட்டு வந்து பதிவிடுங்கள் என்றும் தினமலரை மட்டும் படிக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்கள்! வழிகாட்டலுக்கு நன்றி! மூட வேண்டும் என்று எதிர்ப்பாளர்களும் மூட முடியாது என்று அரசும் சொல்லி வரும் வேளையில் இதற்கு தீர்வு தான் என்ன?
 கண்டிப்பாக அணு உலையில் விபத்து அல்லது தவறோ ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் கூடங்குளம் மட்டுமல்ல மற்ற பகுதிகளும் பாதிக்கப்படும் என்று அறியாத மூடன் அல்ல நான்! தமிழகத்தின் அன்னிய முதலீடும் பொருளாதாரமும் குறைந்து விடும் என்று எண்ணுபவனும் அல்ல! வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பது போல இறுதிக் கட்ட பணியில் கூடங்குளம் அணு மின் நிலையம் இருக்கையில் அதை உடனே மூட முயற்சிகள் நடப்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு கூடங்குளத்திற்கே இத்தனை எதிர்ப்பு இருக்கையில் தமிழகம் முழுதும் அணு உலை அமைக்கலாமா? மக்களை கொன்று குவிக்கலாமா? வேண்டாம்! பல பேரை நோகடிக்கும் ஒரு செயலால் சில நன்மைகள் கிடைப்பினும் அது வேண்டாம்! என்றும் அணு உலையால் பாதிப்பு ஏற்படும் எனில் அது நமக்கு தேவையில்லை! தமிழகம் இருளில் மூழ்காமல் இருந்தால் போதும் ! ஒரு விசயத்தை பற்றி எழுதும் முன் அதைப் பற்றி அறிந்துகொண்டு  எழுதவும் என்று சொன்னவருக்கும் நன்றி! இதைப் பற்றி தொடர்ந்து படித்து வருகிறேன். எளிமையாக எல்லோருக்கும் புரியும்படியானதை பகிர்ந்து கொள்கிறேன். சிலதை பின்னர் என் பதிவில் சுயமாக வெளியிட முயற்சிக்கிறேன் கடவுள் சித்தமிருந்தால் ! அனைவருக்கும் நன்றி!

Comments

 1. அணு உலை எதிர்ப்பாளர் திரு. உதயகுமார் அவர்கள் 2007 ஆவது வருடம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டு , பாதுகாப்பு அம்சங்களை குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து திரும்பியுள்ளார். பின் ஏன் 2011 ஆவது வருடம் போராட்டம் செய்ய வந்திருக்கிறார் என்பது கொஞ்சம் விளங்காத உண்மை தான்.

  ReplyDelete
 2. சிறந்த அலசலுடன் கூடிய பதிவு . உண்மை வெல்லும்

  எனது இன்றைய பதிவை பாருங்கள்

  http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 3. http://pamaran.wordpress.com/2011/09/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

  ReplyDelete
 4. அன்பு சகா,

  உங்களை காயப் படுத்தும் எண்ணத்தில் நாங்கள் பதிவிடவில்லை, அப்படி மீறியும் உங்களை அது காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கோ தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கோ முட்டுக்கட்டை போடுபவர் அல்ல நாங்கள். நமது சூழ்நிலை அப்படி இருக்கிறது. நாம் முட்டுக் கட்டை போடுபவர்களாக இருந்திருந்தால் கல்பாக்கம் இத்தனை நாள் இயங்கி இருக்காது.

  இதே அணுமின் நிலையத்தை ராஜச்த்தானில் அமைக்கலாம், ஏன் மக்கள் பயன்படுத்தாத எவ்வளவோ இடங்கள் இந்தியாவில் இன்னும் இருக்கிறது அங்கு பயன்படுத்தலாம். இயற்க்கை சக்திக்கு முன் நாம் எந்த வித அறிவியல் பாதுகாப்பு என்று சொன்னாலும் அது நம் முட்டாள் தனமே.

  ஜப்பானியரைவிட நாம் தொழில் நுட்பத்தில் வளர்ந்தவரில்லை அவர்களுக்கே இந்த கெதி என்றால் சமீபத்தில் இந்தியாவை பதித்த சுனாமி வரலாறு காணாத பதிப்பு என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

  இத்தனை பலவீனமான, சாதகமில்லாத
  விடயங்கள் இருக்கும் பொழுது ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பணயம் வைப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனம் அல்லவா?

  மீண்டும் எனது பதிவுகளை படித்து பாருங்கள், எனது வலைப்பூவில் எனக்கு வருமானம் இல்லை, அதிப்போல் நான் அதில் வாய்ப்பளிக்க வில்லை, சமூக சேவைக்காகவே பயன்படுத்துகிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  மீண்டும் ஒருமுறை மனிப்பு கோருகிறேன், எங்களது பின்னூட்டம் உங்களைப் காயப்படுத்தி இருந்தால். அதையே நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் உங்களுக்கு என் ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகள்

  வாழ்க தமிழினம்

  வீழ்வது நாமாய் இருப்பினும்
  வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  ReplyDelete
 5. அன்பு நிவாஸ்! உங்களின் கருத்துக்களை நீங்கள் முன் வைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை! அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை அதன் நாசத்தினை நான் அறிவேன்! ஏற்கனவே தமிழகத்தில் தொழில்கள் நசிவுற்று பல கோடிகள் விரயமாகி உள்ளது. மாநில அரசுகளின் தவறான கொள்கையால்! இந்த அணுமின் திட்டமும் குலைந்தால் தமிழகம் என்னாகும்! என்பது ஒரு கவலையே! மற்றபடி இந்த திட்டம் ஓட்டை என்று நிருபித்து எதிர்ப்பாளர்கள் வெற்றி பெறுவதில் நானும் மகிழ்வடைகிறேன்! நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2