அத்திரிபாச்சா! அத்திரிபாச்சா!

இந்த ஞாபகமறதி இருக்கே...அது மனுஷனை பாடாய் படுத்திடும்! ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று சொல்வதைப் போல. உலகத்திலேயே, தங்களை ஜாம்பவான்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் ஞாபக மறதிக்காரர்கள் தான்.
ஒரு மனுஷன் மாமியார் வீட்டுக்கு தலை தீபாவளிக்குப் போவதாக இருந்தான். கிளம்புகிற வேளையில், மனைவிக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம்... மருத்துவச்சியிடம் கூட்டிப் போனான். அவள் நாடி புடிச்சு பார்த்துட்டு, ""இது அது சாமியோவ்! புள்ளைய பத்திரமா பாத்துக்கோ! இப்போ பஸ்சுலே போகக் கூடாது!'' என்று எச்சரித்து அனுப்பினாள்.
மனைவி கர்ப்பமா இருக்கிறது ஒருபுறம் சந்தோஷம் தான் என்றாலும், தலை தீபாவளி சீர் வாங்குறதை விட முடியுமா என்ன! நான் மட்டும் போயிட்டு வரேன்னு அவன் கிளம்பிட்டான்.
மகள் கர்ப்பமாக இருக்கிற விபரத்தைக் கேட்டதும், அம்மாகாரிக்கு ஏக மகிழ்ச்சி. மருமகனுக்கு மோதிரம் போட்டா!! பலகாரங்களை அடுக்கித் தள்ளிட்டா! மாமியார் செஞ்ச ஸ்பெஷல்
கொழுக்கட்டை ஒன்று இவன் மனதில் நின்று விட்டது. அவ்ளோ ருசி!
""என் மகள் என்னை விட, இதை நல்லா செய்வா,'' என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தாள். மறுநாள் நம்ம ஆள் ஊருக்கு கிளம்பிட்டான்.
வீட்டிற்கு வந்து, மனைவி கையால் அந்த பலகாரத்தை செஞ்சு சாப்பிடணுங்கிறதுக்காக, மறக்காமல் இருக்க அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே பஸ்சில் வந்தான். ஒரு இடத்தில் பெரிய பள்ளம்! பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கவே, ஒரு குலுக்கு குலுக்கியது. அந்த ஆட்டத்தில், பதறிப்போன நம்ம ஆள், அதிர்ச்சியிலே பண்டத்தின் பெயரை மறந்துட்டான்.
""அத்தை ஏதோ சொன்னாளே! அத்திரிபாச்சாவோ, கித்திரிபாச்சாவோன்னு! கரெக்ட்...அத்திரிபாச்சா தான்!'' என அவனாகவே, முடிவு செய்து கொண்டு, வீட்டில் வந்து மனைவியிடம் ""அத்திரிபாச்சா செய்யுடி'' என்றான். அவள் விழித்தாள்.
""என்னையா உளர்றே!'' என்றாள். அவனுக்கு கோபம் வந்துட்டு! ""ஏய்! புருஷன் ஒரு பலகாரம் கேட்டா அதைச் செய்ய வலிக்கவா செய்யுது! சோம்பேறிக் கழுதை! ஒழுங்கா சொன்னதை செய்யுடி,'' என்று கத்தினான்.
அவள் ஒன்றும் புரியமால் அழுதேவிட்டாள்.
""அடியே! அழவா செய்யுறே! வேலை பார்க்கிறதுக்கு உனக்கு வலிக்குதோ!'' என்றவன் நையப்புடைத்து விட்டான்.
அவள் தன் அம்மாக்காரிக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டாள். அம்மாக் காரி பதறிப்போய் ஓடிவந்தாள்.
மருமகனைப் பார்த்து, ""அடப்பாவி! ஒரு பிள்ளைத்தாச்சி பொண்ணை இப்படியா அடிப்பே! பாருடா! கொழக்கட்டை கொழக்கட்டையா வீங்கியிருக்கு!''....
இப்போது, நம்ம ஆள் துள்ளிக் குதித்தான். ""அடியே! அதுதாண்டி! அதைத்தான் அத்திரிபாச்சான்னு மாத்திச் சொல்லிட்டேன். சரி! நான் அடிச்சலே மனசிலே வச்சுக்காதே! போய் கொழுக்கட்டை செய்,'' என்றானே பார்க்கலாம்!

நன்றி ஆன்மீகமலர்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2