என் இனிய பொன் நிலாவே! பகுதி 10

என் இனிய பொன் நிலாவே!
                   பகுதி 10
                         ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} வேலைக்கு வந்த மதுமிதாவை விரும்புகிறான் அபிஷேக். ஆனால் அவனது முறைப்பெண் ஸ்வேதா அபிஷேக்கை மணம் புரிய ஆவலாக உள்ளாள். மதுமிதாவுடன் அவள் வாக்கு வாதம் செய்கையில் அங்கு வந்த அபிஷேக்கின் தாய் அவளை விரட்டுகிறாள். அதே சமயம் தான் யார் என்றும் கூறுகிறாள்.

 என்னம்மா அப்படி முழிக்கிறே இந்த மனோ கம்ப்யூட்டர் சாப்ட் வேர்ஸின் உரிமையாளன் அபிஷேக்கின் அம்மாதான் நான்! இதுமட்டுமல்ல உன்னை என் மகன் விரும்புகிறான் அதில் எனக்கு எந்த தடையேதும் இல்லை என்பதாலும் தான் உன்னை மருமகள் என்று சொல்லாமல் என்னை மாமியார் என்று சொன்னேன். என்றார் அவர்.
    இது என்ன சுத்த லூசு குடும்பமாக இருக்குமோ? என்று நினைத்து கொண்டாள் மதுமிதா! கல்யாணமே ஆகவில்லை! அட்லீஸ்ட் நிச்சயம் கூட ஆகவில்லை! மகன் விரும்புகிறான் அந்த பெண் விரும்புகிறாளா என்று கூடத் தெரியாது அப்படிப் பட்ட ஒரு பெண்ணிடம் நான் தான் உன் மாமியார் என்று ஜம்பம் அடிக்கிறார்களே இவர்களை என்ன வென்று சொல்வது? என்று அவள் நினைக்கையிலேயே அதை படித்தவள் போல பேசலானாள் மனோன்மணி.
   என்னம்மா என்னையும் பையனையும் பைத்தியக் காரணுங்கன்னு நினைக்கிறே இல்லையா? உனக்கு அப்படித்தான் தோணும் உனக்கு மட்டுமல்ல இதை வேற யார் கேட்டாலும் அப்படித் தான் சொல்வார்கள்! ஆனால் எனக்கு என் மகன் மீது இருக்கும் நம்பிக்கையில் பேசி விட்டேனம்மா! அவன் தான் எனக்கு எல்லாம். சிறு வயதில் என் கணவரை இழந்த சமயம் உறவுகள் கழன்று சென்ற சமயம் எனக்கு ஆறுதலும் உறுதுணையுமாக இருந்தது அவன் தான் அம்மா!
   போன இந்த உறவுகள் மீண்டும் ஒருநாள் நம்மிடம் வருவார்கள் அம்மா! வரவைப்பேன் நீ வருந்தாதே என்று எனக்கு தைரியம் தந்தவனும் அவனே! அன்று நாங்கள் இருந்த நிலை வேறு இன்று இருக்கும் நிலை வேறு! இந்த நிலைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்தது எல்லாம் அவன் உழைப்புதான்!.
   இது வரை அவன் எடுத்த எந்த ஒரு முடிவும் பழுதானதில்லை! ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை! இந்த ஸ்வேதா கூட அவனிடம் எவ்வளவோ ஓட்டி பார்த்தும் விலகி ஓடிக் கொண்டிருந்தவன் உன்னை பார்த்ததும் மனதை கொடுத்து விட்டேன் என்கிறான். அவனுடைய தேர்வு நியாயமானது மட்டுமல்ல தகுதியானதும் கூட என்று உன்னை பார்த்ததும் புரிந்துவிட்டது. அந்த உரிமையில் தான் அப்படி சொன்னேன் மதும்மா!
 நீ உடனே சம்மதம் கூற வேண்டியது இல்லை! நன்றாக யோசித்து உன் விருப்பத்தை கூறினாயானால் உன் பெற்றோரை சந்திக்க வருகிறோம் உன்னை பெண் கேட்டு இப்போது வரட்டுமா அம்மா. என்று விடை பெற்றாள் அந்த தாய்.

  பொதுவாக பணக்காரர்களிடம் இருக்கும் ஒரு அகம்பாவம் அவளிடம் காணப்படவில்லை! அவள் வைத்த காரணங்கள் அபியை மேலும் உயர்த்தி காட்டவே அவரைப் போய் பைத்தியம் என்று எண்ணினே என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுமிதா.
  மனோன்மணி கூறிய சில விஷயங்களே அவளுக்கு அபிஷேக்கை பற்றிய ஓர் உயர்வான எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது அதோடு அந்த ஸ்வேதாவிற்கு பயப்பட வேண்டுமா என்ற ஒரு தன்மான உணர்ச்சியும் கிளம்பி விடவே மறுநாள் முதல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மதுமிதா.
     அபிஷேக்கின் பர்சன்ல் அஸிஸ்டெண்ட் என்பதால் பெரும்பாலும் அவனுடையே கழிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அது ஒன்றும் அவளுக்கு கஷ்டமாக இருக்கவில்லை பிடித்தே இருந்தது. அவனது தோற்றம் நிமிர்ந்த நடை கவரும் சிரிப்பு இது எல்லாமே அவனுக்கு ஒரு கம்பீரத்தை தருவதாகவே அமைந்து இருந்ததாக அவள் நினைத்தாள்.
  தோற்றத்தில் மட்டுமல்ல செய்யும் வேலையிலும் அவன் பர்ஃபெக்ட் என்பதை அவள் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே உணர்ந்தாள். கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்கும் நிறுவனமான அந்த நிறுவனத்தில் அவனது நேர்மைக்கும் சொன்ன சொல் தவறாமைக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்து இருந்தனர்.
  வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை விரும்பாது தான் முன்னே சென்று காத்திருக்கும் பழக்கம் அவனது. எனவே அவனது நேரம் தவறாமையும் வாடிக்கையரிடம் அன்பாக பேசுதல் அவர்களுக்கு தேவை யானதை உடனே நிறைவேற்றுதல் போன்ற அவனது சேவையில் வாடிக்கையாளர்கள் பெருகி வந்தனர்.
  சில நிறுவனங்கள் வாடிக்கை பெருகியதும் பழைய சேவைகளை மாற்றிக் கொள்ளும் அது போலல்லாது சிறிய வாடிக்கையாளர் ஆனாலும் பெரிய வாடிக்கை யாளர்கள் ஆனாலும் ஒன்று போலவே நடத்துவான். இவரால் பெரிய வியாபாரம் ஆகிறது என்று அவரை விழுந்துவிழுந்து கவனிப்பதும் சிறிய பொருட்களை வாங்குவோரை துச்சமாக கருதுவது என்பது அவனிடம் அறவே இல்லை.
  இதுவே அவன் தொழிலில் வெகு சீக்கிரம் முன்னேறக் காரணம் என்பதை வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே மது உணர்ந்துகொண்டாள். எனவே வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கிறோம் என்று ஏனோ தானோவென்று இல்லாமல் உண்மையிலேயே உழைக்கத் தொடங்கினாள்.
   ஒரு பர்செனல் அஸிஸ்டெண்ட் என்ற முறையில் அவனது நிகழ்ச்சிகளை தயாரித்து அதை அவனுக்கு நினைவூட்டுவது அவளது வேலை. அது மட்டுமல்லாமல் அவனோடு அந்த நிகழ்ச்சிகளில் கூட்டங்களில் கலந்து கொண்டு தேவையான குறிப்புகளும் எடுத்து கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவள் செவ்வனே செய்து வந்தாள்.
    வேலைக்கு சேர்ந்து ஒரு வாரங்கள் ஓடியிருந்தது. அன்று ஒரு புதிய வாடிக்கையாளரை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது வாடிக்கை மட்டும் கிடைத்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் ஆனால் அவர் எளிதில் அசைந்து கொடுப்பவரில்லை. எப்படியாவது அவரது வாடிக்கையை பெற்று விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான் அபிஷேக்.
   அதற்கான எல்லா குறிப்புகளையும் எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் மது. அந்த வாடிக்கையாளருடனான சந்திப்பு மாலை மூன்று மணிக்கு இருந்தது. காலையில் அலுவலகம் வந்த அபிஷேக் ஓர் அரை மணி நேரமே அலுவலகத்தில் இருந்தான்.
   ஒரு போன் வரவும் மது நான் அவசரமாக வெளியே போகவேண்டி உள்ளது மதியம் தான் வருவேன் நீ பார்த்துக் கொள் என்று சொன்ன போது சார் இன்று மூன்று மணிக்கு ... என்று மது ஆரம்பிக்கவும் ம்ம்.. நினைவில் இருக்கிறது அதற்குள் வந்து விடுவேன். மற்றபடி எனது காலை புரோகிராம்களை கேன்சல் செய்து விடு காரணம் கேட்டால் அவசர வேலையாக சென்றிருப்பதாக கூறி சமாளித்துவிடு என்று சொன்னவன். ஓக்கே பை என்று வெளியேறினான்.

மாலை மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது.அவன் இன்னும் வராதது மதுவிற்கு எரிச்சலாக இருந்தது. நல்ல வாடிக்கையை இழக்க போகிறோமோ என்று அவள் நினைக்கையில் எப்படிப் போனால் என்ன நமக்கா இழப்பு அவனுக்குத் தானே என்று சொன்னது மனசு.
   அவனுக்குத் தான் இழப்பு என்றாலும் நமக்கும் கூடத்தானே! இந்த வாடிக்கை கூடி லாபம் அதிகரித்தால் அது நமக்கும் பலன் தரும் தானே என்றும் நினைத்தது. இப்படி மனதோடு போராடிக் கொண்டிருந்த மது மணி மூன்றை கடந்தும் அவன் வராததால் திகைத்தாள்.
   இப்படி செய்ய மாட்டானே என்ன ஆயிற்றோ? போன் செய்யலாமா? என்று யோசித்தாள்.அவன் கோபித்துக் கொண்டாள் என்ன செய்வது தொந்தரவு செய்ய வேண்டாம் என்றல்லவா கூறினான். முக்கியமான வாடிக்கை அல்லவா கை நழுவிப் போகப் போகிறது என்று அவனது செல்லிற்கு அழைப்பு விடுத்தாள்.
   இருமுறை ரிங்க் முழுதும் சென்றும் எடுக்க வில்லை! போனைக் கூட எடுக்காமல் அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறான்? பல்லைக் கடித்தபடி மூன்றாவது முறையாக டயல் செய்கையில் போன் எடுக்கப் பட்டது.
  ஆவலுடன் . சார் நான் மது என்றுஅவள் கூறி முடிக்கும் முன்னே
 என்ன அதற்குள் போன் போட்டு விட்டாயே அபி இல்லாமல் அரை நாள் கூட உன்னால் இருக்க முடியாதா எல்லாம் இவர் கொடுக்கிற இடம் என்று பொறிந்தாள் அந்த ஸ்வேதா.
  பதில் பேச முடியாது திகைத்து நின்றாள் மதுமிதா!

நிலவு வளரும்(10)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2