இறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபியின் உடல்.. ரகசியமாகப் புதைக்கத் திட்டம்?

திரிபோலி: புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள இறைச்சிக் கூடத்தில் கிடக்கிறது. அவரது உடலை ரகசியமாகப் புதைக்க இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புரட்சிப் படையினரால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரடா பகுதியில் இறைச்சி கூடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.

ஆனால், பின்லேடன் உடலை கடலில் புதைத்தது மாதிரி கடாபியின் உடலையும் ரகசியமாகப் புதைக்க வேண்டும் என இடைக்கால அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் உடலை தங்களது இனத்தைச் சேர்ந்த லிபிய பழங்குடியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் உடலை எங்கே புதைப்பது என்பது குறித்து லிபிய அதிகாரிகள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஒசாமா பின் லேடனை புதைத்தது போல் கடாபியின் உடலை கடலில் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருவதாகத் தெரிகிறது. எதிர்காலத்தில் கடாபியின் கல்லறை புனிதச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதில் நேடோ நாடுகள் தீவிரமாக உள்ளன.

இதற்கிடையே கடாபி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் புரட்சிப் படையினர் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேடோ போர் விமானங்கள் அவரது வாகனத்தை குண்டு வீசித் தாக்கி சிதறடித்ததும், காயமடைந்த அவர் ஒரு சாக்கடைக் குழாயில் பதுங்கியபோது புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந் நிலையில் அவரை எடுத்தவுடன் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவரிடம் போர்க் குற்றங்கள் குறித்து சில மணி நேரம் அடித்து, உதைத்து விசாரணை நடத்திவிட்டு, தெருவில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி விட்டே சுட்டுக் கொன்றதாகவும் தெரிகிறது. அவரை தெருவில் உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோவும், அவர் கெஞ்சுவது போன்ற வீடியோவும் இப்போது வெளியாகியுள்ளது.

இந் நிலையில் தங்களது 'லிபியப் பணி' முடிவடைந்து விட்டதாக நேடோ அறிவித்துள்ளது. கடாஃபி இறந்துவிட்டார் என்றால், லிபியாவில் நேட்டோவின் ராணுவத் தலையீடும் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் என்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸி கூறியுள்ளார்.

ஐஆர்ஏ உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து இங்கிலாந்திலும் தீவிரவாதத்தை வளர்த்த கடாபி கொல்லப்பட்டது, தீவிரவாதிகளால் பலியான குடும்பங்களுக்கு நிம்மதி தரும். கடாபியின் அரசை முடிவுக்குக் கொண்டு வருவதில் இங்கிலாந்தும் பங்கு வகித்தது பெருமை என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

கடாபியை கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே திட்டமிட்டு அமெரிக்கா தலைமையின நாடுகள் கொன்று விட்டன என்று வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ் கூறியுள்ளார்.


டிஸ்கி} உலகின் சர்வாதிகாரிகளின் இறுதிக்காலம் இப்படித்தான் முடிகிறது! எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே! 

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

Comments

  1. நல்வரோ கெட்டவரோ இறந்த பின் அவருக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2