கேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்?: உண்மையை சொல்கிறார் பி.சி.சி.ஐ., செயலர்

"வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டதால் தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை,''என, பி.சி.சி.ஐ., முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின். "பேட்டிங்கில்' எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், கேப்டனாக ஏமாற்றம் அளித்தார். கடந்த 1996ல் அணிக்கு தலைமையேற்ற இவர், 25 டெஸ்டில் 9 தோல்வியை சந்தித்தார். 73 ஒரு நாள் போட்டிகளில் 43ல் தோல்வியை தழுவினார். இதையடுத்து கேப்டன் பதவியை 2000ல் ராஜினாமா செய்தார். கேப்டனாக இவரது வீழ்ச்சிக்கான காரணம் குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜெயவந்த் லீயே கூறியிருப்பதாவது:
 கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகிய போது, எனது கண்கள் குளமாகின. கேப்டனாக இருந்த காலத்தில், அவருடன் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவரது பிரச்னையே யார் சொன்னாலும் கேட்பது தான். அமைதியான குணம் கொண்ட இவர், 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை வழக்கமாக கொண்டார். அவர்கள் சொல்வதை எல்லாம் அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். அப்படி செய்யும் போது தனது சுயபுத்தியை பயன்படுத்த தவறினார். இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்த, கேப்டன் பதவிக்கு சிக்கலானது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அப்போது, யாரோ ஒருவர் சிபாரிசு செய்தார் என்பதற்காக தனக்கு சற்றும் அறிமுகமில்லாத நிலேஷ் குல்கர்னியை தேர்வு செய்ய வேண்டுமென சச்சின் வலியுறுத்தினார்.
உடனே தேர்வுக் குழு தலைவராக இருந்த கிஷண் ருங்தா ,""நீங்கள் அவர் பவுலிங் செய்வதை பார்த்திருக்கிறீர்களா,''எனக் கேட்டார். சர்வதேச போட்டிகளில் மிகவும் "பிசி'யாக இருந்த சச்சின், ரஞ்சி டிராபி போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் குல்கர்னியை தெரிய வாய்ப்பு இல்லை. இந்நிலையில்,""எனக்கு தெரியாது சார். ஆனால், குல்கர்னி 26 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். மிகச் சிறந்த பவுலர்,''என்று சொன்னார்.
இதற்கு பதில் அளித்த ருங்தா,""டியர் கேப்டன். குல்கர்னி பந்துவீசுவதை பார்த்திருந்தாலாவது, உங்கள் சிபாரிசை ஏற்றுக் கொண்டிருப்பேன். ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியே குல்கர்னியை தேர்வு செய்யவில்லை. அவரை நீக்கி விட்டனர். உள்ளூர் அணியிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வீரரை தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்,''என்றார்.
இதற்கு, பதில் சொல்ல முடியாமல் தவித்த சச்சினின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது.
இவ்வாறு ஜெயவந்த் லீலே குறிப்பிட்டுள்ளார்.

முடிவை மாற்றிய அஞ்சலி
கடந்த 1999-2000ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில், முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. உடனே கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தாராம் சச்சின். இதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இது குறித்து ஜெயவந்த் லீலே கூறுகையில்,""இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே இந்தியா தோல்வி அடைவது உறுதியானது. அன்று மாலை ராஜினாமா கடிதத்தை என்னிடம் சச்சின் கொடுத்தார். பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் துவங்க உள்ள நிலையில், இவரது முடிவு அதிர்ச்சி அளித்தது. தொடர் முடியும் வரை பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். இதனை ஏற்க மறுத்தார். உடனே சச்சின் மனைவி அஞ்சலியை தொடர்பு கொண்டு பேசினோம். இதற்கு பின், ஒருவழியாக இரண்டாவது டெஸ்டில் கேப்டனாக பணியாற்ற சம்மதித்தார்,''என்றார்.

நன்றி தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2