வீண் தர்க்கம்! பாப்பா மலர்


வீண் தர்க்கம்!


கந்தன், குமரன், முருகன் மூவரும் நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும் கூட. எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவரை பார்ப்பது அரிது. ஆனாலும் அடிக்கடி மூவரும் தர்க்கம் செய்து கொள்ளுவார்கள்.
  ஒருநாள் மூவரும் தங்கள் கழனியில் வேலை செய்துவிட்டு வந்து அரச மரத்தடியில் அமர்ந்தனர். அப்பாடா என்ன வெயில்! இதே மாதிரி ஒரு வெயிலை நான் கண்டதே இல்லை என்றார் கந்தன். இதென்ன பெரிய வெயில் வடநாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு முன் இதெல்லாம் தூசி என்றார் குமரன். இல்லை இல்லை கந்தன் சொல்வதுதான் சரி இன்று வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது என்றார் முருகன்.
   அடப்போப்பா! இந்த வெயிலுக்கே பயந்து போனால் எப்படி? இன்னும் கத்தரி வெயில் எல்லாம் இருக்கு இந்த ஊமை வெயிலுக்கு இந்த அலட்டு அலட்டறியே என்றார் குமரன். அப்ப இந்த வெயில் உன்னை ஒண்ணும் பண்ணலைன்னா சொல்றே? அவனவன் வேர்த்து விறுவிறுத்து போயிக் கிடக்கான் என்றார் கந்தன்.
நீங்க சொல்றதுதான் சரி இன்னிக்கு வெயில் அதிகமாத்தான் இருக்கு அதோட புழுக்கமாகவும் இருக்கு என்றார் முருகன்.
   இந்த வெயிலுக்கு இதமா மோர் குடிச்சா நல்லா இருக்கும் என்றார் கந்தன்.
இளநீர்தான் என்னோட விருப்பம் என்றார் குமரன். நல்ல பழச்சாறு குடிச்சா களைப்பே இருக்காது. என்றார் முருகன்.
  அப்ப மோர் குடிச்சா களைப்பு போகாதா? இளநீர் சூட்டை தணிக்காதா என்று கந்தனும் குமரனும் கேட்க யார் இல்லேன்னு சொன்னது நான் என்னோட விருப்பத்தைதான் சொன்னேன் ஆனா பழச்சாரோட சுவைக்கு முன்னே அந்த ரெண்டும் அடிபட்டு போகுமின்னேன் என்றார் முருகன்.
 அந்த சமயமாக அப்பக்கமாக மோர் விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன்.உடனே குமரன், கந்தா மோர் குடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னே இல்லே அதோ பார் ஒருவன் மோர் விற்றுக் கொண்டிருக்கிறான் அவனை கூப்பிடு என்றார். ஏன் நீதான் கூப்பிடேன் நான் மட்டும் தான் மோர் குடிப்பேனா? நீங்கள்லாம் குடிக்க மாட்டீங்களா? என்று மறுத்தார் கந்தன்.
   நாங்கள் குடிக்க மாட்டோம் என்றா சொன்னோம்? ஆனால் மோர் நன்றாக இருக்கும் என்று சொன்னவன் நீதானே அதனால் நீயே கூப்பிட்டு வாங்கி தா என்றனர் இருவரும்.நீகூடத்தான் இளநீர் நன்றாக இருக்கும் என்றாய்? இளநீர் பறித்து தருவது தானே நான் கூப்பிட முடியாது வேண்டுமானால் முருகனை கூப்பிடச்சொல்! என்றார் கந்தன்.
   அடடா என்னை ஏன் கூப்பிடச் சொல்கிறீர்கள்? நான் தான் பழச்சாறுபிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் அல்லவா? மோர் வேண்டுமானால் உங்களுக்காக குடிக்கிறேன் ஆனால் நான் கூப்பிடமாட்டேன் என்றார் முருகன்.
  சே நாம் முவரும் தர்க்கம் செய்வதால் நேரம் தான் வீணாகிறது அதோ மோர்க்காரனே அருகில் வந்துவிட்டான். தர்க்கத்தை விட்டு மோர் குடிப்போம் வாருங்கள்! என்றார் கந்தன்.
  நல்ல யோசனை! ஐயா! மோர்க் காரரே ஒரு மூன்றூ சொம்பு மோர் தருகிறீர்களா? என்றனர்மூவரும்.
  அடடா! இப்போதுதான் மொத்த மோரும் விற்று தீர்ந்தது. சற்று முன் கேட்டிருக்க கூடாதா? விற்று முடித்தபின் சற்று இளைப்பாறலாம் என்றுதான் இங்கே வந்தேன் என்றான் மோர் விற்பவன்.
 மூவரும் தலையில் கை வைத்துக் கொண்டனர். தர்க்கம் செய்த நேரம் மோர்க்காரனை அழைத்திருந்தால் தாகமாவது தீர்ந்திருக்கும்! இப்போது அதுவும் மிஞ்சவில்லை! நம் தர்க்கம் வீணானதுதான் மிச்சம் என்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 அன்பு குழந்தைகளே! எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுங்கள் இல்லையெனில் இந்த மூவரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும்.

அறவுரை!

நான்மணிக்கடிகை

திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானை கைவிட்டு கற்றான்
இளமை பாராட்டும் உலகு
               விளம்பி நாகனார்

விளக்கம்} எரிகின்ற அகல் விளக்கை அது சிறியதாயினும் உலகத்தவர் கை கூப்பி வணங்குவர். விறகிலே எரியும் அடுப்பை கண்டால் பெரியதாயினும் மதியார். ஒரே வீட்டில் படித்த இளையவனை போற்றுவர் படிக்காத மூத்தவனை மதியார்.

உங்களுக்குத் தெரியுமா?
 
உலகிலேயே மிகவும் நீளமான சுரங்கச் சாலை லெர்டால் டியுனல், நார்வே

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2