நிலவே கலங்காதே!
நிலவே கலங்காதே!
விடிந்தாள் தீபாவளி. இது எனது தலை
தீபாவளியாக இருந்திருக்க வேண்டும் ரத்னா மட்டும் சம்மதித்து இருந்தால். மனோகர்
சற்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தான். அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை அந்த
நினைவுகள் சற்றுக் கட்டிப் போட்டன.
ரத்னா அவனது அத்தை மகள் மனோகருக்கென்றே
நிச்சயமானவள். அவளும் மனோகரை மிகவும் நேசித்தாள். எது வரை? வெளியூருக்கு கல்லூரி
படிப்பிற்கு செல்லும் வரை! கல்லூரி படிப்பு அவளை மாற்ற்விட்டதா இல்லை மனோகரை
அவளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை! இப்போதெல்லாம் அவள் மனோகரிடம் முகம்
கொடுத்தும் பேசுவதில்லை!. மனோகரை மணக்கவும் மறுத்துவிட்டாள்.
சொல்லப் போனால் அவள் யாரையுமே மணக்க
விரும்பவில்லை என்று கூறினாள். அவளின் கல்லூரி படிப்புக்கு அச்சாரம் போட்டதே
மனோகர்தான்.அதுவே அவனுக்கு பாதகமாகிவிட்டது. மூன்று வருடங்கள் முன் அவளது அப்பா
ஏன் மாப்ள? இந்த வருசத்தோட ஸ்கூல் படிப்பு முடியுது வர்ர ஆவணியில உனக்கும்
ரத்னாவுக்கும் கல்லாணத்த முடிச்சிப் போடலாமுன்னு நினைக்கேன் நீ என்ன சொல்ற? என்று
நேரடியாகவே கேட்டுவிட்டார். வெள்ளை மனதுக்காரர் அவர். சூது வாது தெரியாதவர். அவர்
கேட்கும் பொழுது உடனிருந்த ரத்னாவைன் முகம் சிவப்பதற்கு பதில் வாடிப் போனது. பள்ளி
இறுதியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவள். படிப்பை மிகவும்
நேசிப்பவள்.அவளைப் போல் படிக்க வேண்டாம் என்றால்... வாடிய பயிராய் நின்றாள்.
மனோகர் யோசித்தான். மாமா கிணற்று தண்ணியை ஆற்று
வெள்ளமா கொண்டு போயிடப் போகுது என்னிக்கு இருந்தாலும் ரத்னா எனக்குத் தான்னு
முடிவு ஆகிப் போச்சு பாவம் சின்ன பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படுது அது படிச்சி
பட்டம் வாங்கினா நம்ம குடும்பத்துக்குதானே பெருமை படிச்சிட்டு வரட்டும் மாமா!
இன்னும் மூணு வருஷம் தானே! மூணே நிமிஷமா கரைஞ்சி போயிடும் என்று வாதாடி சென்னையில்
ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டான்.
இரண்டு வருடங்கள் வரை அவல் அவனுடன்
சகஜமாகத்தான் எப்பொழுதும் போல் பழகி வந்தாள்.இந்த கடைசி வருடத்தின் போதுதான்
அவனைப் பார்த்தால் ஒதுங்கி ஒதுங்கி போக ஆரம்பித்தாள். ஏதோ வெட்கம் போல
பட்டணத்திற்கு சென்று படிக்கிறாள் அல்லவா என்று இவனும் சும்மா இருந்து விட்டான்.
ஆனால் கல்லூரி படிப்பு முடிந்துவந்ததும் திருமண ஏற்பாட்டை தொடங்கும் சமயம் அவள்
தடுத்து விட்டாள்.
வேண்டாம் எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை!என்னை கட்டாயப் படுத்தாதீங்க
என்றபோது பெற்றவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லிப்
பார்த்தார்கள் அவள் வழிக்கு வரவில்லை. மீறினால் இறந்து போவேன் என்று மிரட்டவே வேறு
வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டார்கள்.அவளை சரமாறியாக தூற்றவும் செய்தார்கள்
ஆனால் அவள் அதற்கெல்லாம் கலங்கினாள் இல்லை!.
மனோகருக்குக் கூட முதலில் அதிர்ச்சியாகத்தான்
இருந்தது. ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்டான்.கல்லூரிக்கு சென்றவள் ஆயிற்றே! வேறு
யாரையாவது மனதில் வைத்துள்ளாள் போலும். அதனால்தான் நம்மிடம் கூட சரியாக பேசாமல்
ஒதுங்கினாலோ என்னவோ அப்படி ஏதாவது இருந்தாலும் அவனை கட்டி வைக்கலாம் என்று அவள்
பெற்றோரை கேட்டுப் பார்க்க சொன்னான்.
ஆனால் அவள் மனோகரை மட்டுமல்ல வேறு யாரையும் மணக்க மறுத்துவிட்டாள்.எனக்குத்
திருமணமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அவளின் இந்த முடிவால் பெற்றவர்கள் மனம்
கலங்கினர். அவர்களை பார்க்கவே மனோகருக்கு வருத்தமாக இருந்தது.
பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டான் மனோகர்.அதோ ரத்னா வெளியே
கிளம்புகிறாள். அனேகமாக ஆற்றங்கரைக்குத் தான் இருக்கும். மாலை வேளைகளில் அவள்
இவ்வாறு உலாவுவது வழக்கம் தான். ஆனால் இரவு வேளையில் இவள் செல்வது எங்கே? இன்று
இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தான். தீபாவளி ஊரெங்கும்
உற்சாகமாக கொண்டாடும் வேளையில் இவர்கள் மட்டும் மூலையில் முடங்கி கிடக்கும்
சூழலாகிவிட்டதே இதை மாற்ற வேண்டும் என்று ரத்னாவை தொடர்ந்தான் மனோகர்.
ரத்னா வேகமாக நடந்தாள். ஊரின் ஒதுக்குப் புறமான
அந்த பாழுங்கிணற்றை வேகமாக நெருங்கினாள். அதில் குதிக்க முயன்ற போது மனோகர்
விரைந்து வந்து தடுத்தான். ரத்னா என்ன இது? ஏன் இப்படி நடந்துக்கிற? சாகிற
அளவுக்கு அப்படி என்ன நடந்து போச்சு? உன் மனசில என்ன இருக்கு என்கிட்ட தைரியமா
சொல்லு! வேற யாரையாவது காதலிக்கிறையா? அப்படி எதுவானாலும் தயங்காமல் சொல்லு நான்
உன்னை அவனுக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். உன் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற
பயம் வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன். இந்த முடிவு வேண்டாம் ரத்னா! என்றான்
மனோகர்.
ரத்னா! விக்கி விக்கி அழுதாள். மாமா நீங்க
எவ்வளவு நல்லவர்? ஆனா நான் உங்களுக்குச் சிறிதும் அருகதையற்றவள்! நான் சாக
வேண்டும் இதே மாதிரி போன வருட தீபாவளியில் தான் நான் கெட்டுப் போனேன்! ஆம் நான்
சுத்தமானவள் இல்லை! என் கற்பை இழந்து நிற்கிறேன் மாமா! ஐயோ நான் ஏன் தான்
கல்லூரிக்கு போனேனோ என்று குலுங்கி அழுதாள் ரத்னா.
ரத்னா! அழாதே! நடந்தது என்ன? நீ நீ கெட்டுப் போனாயா? என்னால்
நம்பமுடியவில்லை! என் காதுகளில் தானா இந்த சொற்கள் விழுந்தது! என்றான் மனோகர்.
ஆம் மனோ இது உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும் சென்ற தீபாவளிக்கு
நான் விடுமுறையில் ஊர் வரவில்லை! தோழிகளோடு கொண்டாடினோம் தீபாவளியை ஒரு தோழியின்
வீட்டில் அங்குதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஆண் பெண் நண்பர்கள் கலந்து கொண்ட
அந்த விருந்தில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை சீரழித்து
விட்டான் ஒருவன். சினேகிதன் என்ற போர்வையில் ஒரு காம வெறியன் என்னை
கலங்கபடுத்திவிட்டான் மாமா. நான் சுயநினைவில்லா சமயத்தில் இந்த விபரீதம் நடந்து
விட்டது. நான் அப்போதே இறந்திருக்க வேண்டும். ஆனால் தோழிகள் தடுத்து விட்டார்கள்.
நான் எப்படி மாமா உங்களை மணப்பேன்? அந்த நிகழ்வு என் மனதை குத்திக்
கொண்டிருக்கிறது? என்னால் பெற்றவர்களுக்கும் கஷ்டம்? அன்றே இறந்து போயிருந்தால்
சில நாள் துக்கத்தில் மறந்திருப்பார்கள். உயிரோடு இருந்து நான் வதை படுவதோடு
அவர்களையும் வதைக்கிறேனே! என்றவள் அழ ஆரம்பித்தாள்.
மனோகர் மௌனித்தான். நிதானமாக அவள் கண்களை
துடைத்தேன்.ரத்னா! கலங்காதே! நீ என் நிலவு உன் களங்கம் யாரையும் பாதிக்காது! நீ
இதை எப்பொழுதோ சொல்லியிருக்கலாம்! ஆகட்டும் விடு நான் உன்னை மணக்க ஆவலாக உள்ளேன்
உன் விருப்பம் என்ன? என்றான் மனோகர்.
மாமா என்ன சொல்கிறீர்கள்! நடந்ததுஅனைத்தும் தெரிந்துமா?
மனோகர் அவள் வாயைப் பொத்தினான்.
இதை மீண்டும்மீண்டும் சொல்லி வேதனைப்படாதே! அன்று நடந்தது ஒரு விபத்து! நீயாக தவறு
செய்யவில்லையே? பெண்களுக்கு கற்பு அவர்களின் மனதில் இருந்தால் போதும் உடலில்
அல்ல.நீ குற்ற உணர்ச்சியால் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை! உன் மீது தவறு ஏதும்
இல்லை! இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும் பெரியவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.
சேற்றில் தவறி விழுந்தாள் கழுவிக் கொள்வதில்லையா? அதே போல நினைத்துக் கொள் அதுகூட
நீயாக விழவில்லை! தள்ளிவிடப்பட்டுள்ளாய்! கலங்காதே! உன் விருப்பத்தைச் சொல் எனக்கு
உன்னை மணக்க சம்மதம் உன் பதில் என்ன கண்மணி என்றான் மனோகர்.
அவள் அத்தான் என்றவாறு ஓடி வந்து அவனை அணைத்துக்
கொள்ள அப்போது திருமணத்திற்கு நாள்
பார்க்க சொல்ல வேண்டியதுதான்! என்று அவள் தலை வருடினான் மனோகர்.
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment