Thursday, February 28, 2013

மதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!


காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா?
   நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்தை பார்த்தபோது சசிபெருமாளையும் அவர் நடத்தி வரும் போராட்டத்தை பற்றியும் தெரியும். தமிழகத்தில் ஒரு காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து அரசு மாய்ந்து மாய்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.
  மது குடிக்க பெர்மிட் என்று ஒன்று கொடுத்து அதை வைத்திருப்பவர்கள்தான் குடிக்கலாம் என்று ஒரு சட்டம் இருந்தது. அந்த பெர்மிட்டை பெற பிரபலங்கள் கூட மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று மது ஆறாக  பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளும் குளங்களும் வற்றி வரண்டு கிடக்க மது ஆறு மட்டும் வெள்ளப்பெருக்கில் இருக்கிறது.
   சின்னஞ்சிறு குழந்தைகள் கூட டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் அதிசயக் காட்சிகளை காண்கிறோம். பல இடங்களில் பள்ளி மாணவர்கள் சரக்கடித்துவிட்டு பள்ளிக்கு வருகிறார்கள். நாளிதழ்களில் இதை புகைப்படமாக காணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் இவ்வளவு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து டாஸ்மாக் ஊழியர்களை கெடுபிடி செய்கிறது அரசு.
   அவர்களும் நிர்ணயித்த அளவை விட அதிகம் விற்பனை செய்து சாதனை செய்கிறார்கள். ஆனால் இந்த சாதனையின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையை அரசோ அதிகாரிகளோ அறிந்ததாக தெரியவில்லை! குடியை அரசே ஊக்குவிப்பது மிகவும் கேவலமான விஷயம் அன்றோ! எத்தனை கூலித்தொழிலாளர்கள் தான் சம்பாதித்த காசை டாஸ்மாக்கில் கப்பம் செலுத்தி விட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு செல்கிறார்கள் தெரியுமா? எத்தனை தாய்மார்கள், பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? இதையெல்லாம் கொஞ்சம் கூட உணராமல் மேலும் மேலும் குடியை ஊக்குவித்து வரும் தேசத்தில் காந்தியவாதியான சசிபெருமாளையும் அவர் நடத்தும் போராட்டத்தையும் அரசு ஒரு பொருட்டாக கருதாதுதான்.
  இதோ கார்டூனிஸ்ட் பாலா பகிர்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன்! இதைப்படித்து ஒரு சில குடிமகன்களாவது திருந்தினால் சரி!
    காந்தியவாதி பெரியவர் சசி பெருமாள் கடந்த ஜனவரி 30 தேதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மெரீனா காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருந்தார். உடனே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். ( கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வது பொதுமக்களுக்கு இடையூறு இல்லையாம்.. ) சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 29 வது நாளாக தொடர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தி சசி பெருமாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

அவரது கோரிக்கைக்கு வலு சேர்க்க நம் ஆதரவு அவசியம். அதே சமயம் இப்போது இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் வெள்ளையர்கள் அல்ல.. ஜனநாயக மன்னர்கள். வெள்ளையர்களிடம் உண்ணாவிரத்திற்கு இருந்த மரியாதை இந்த களவாணிகளிடம் துளியும் கிடையாது..

செத்தா செத்துட்டுப்போ.. அப்பாடா.. தொல்லை விட்டது என்றுதான் இந்த யோக்கியர்கள் நினைப்பார்கள் என்பதை காந்தியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அரசின் சாராய வியாபாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை வேறு வடிவில் தொடருவோம்

   காந்தியவாதி சசி பெருமாளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!ஓல்டு ஜோக்ஸ் 8


ஓல்டு ஜோக்ஸ் 8

ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?

ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
                              வெ. சீதாராமன்.


என்ன சார்! நீங்க கூட பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!
 நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி ஓடுது!
                                    எஸ். எஸ். பூங்கதிர்.

உங்க கடை இட்லி மல்லிப் பூ மாதிரி இருக்கு!
 அவ்ளோ  மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்!.. கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்க!
                                   கே. அனந்தன்.

அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே!
அது இருக்கட்டும்! என் வயித்துல “ஸ்டார் ப்ளஸ் வளருதே அதுக்கு ஒரு வழிச் சொல்லுங்க!
                                          க. கலைவாணன்.

அடடா! என் வீட்டுக்காரர் கிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்து வரச்சொல்ல மறந்துட்டேன்!
  கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
                                 கமுதி எஸ். சேதுராமன்.

கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியைக் கொடுத்துட்டு போனாரா.. ஏன்?
 நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டாருன்னு நினைக்கிறேன்!
                          சாயம் வெ.ராஜாராமன்.

நமது மன்னர் ஏன் சோகமாக காட்சி தருகிறார்?
 பி.ஏ படித்து பாஸ் ஆகிவிட்ட பின்னரும் அவரை எல்லோரும் பன்னிரண்டாவது குலோத்துங்க சோழன் என்றே அழைக்கிறார்களாம்!
                                   க. கலைவாணன்

புலவரே போருக்கு போய்விட்டு வந்த மன்னரைப் பார்த்து வண்டலா, கரிசலா, சரளையா என்று நீங்கள் கேட்க களி என்று சொல்லிவிட்டு போகிறாரே அதற்கு என்ன அர்த்தம்?
  மன்னர் போரில் தோற்று கவ்விய மண் எந்த வகை என்று நான் கேட்டேன், மண்ணை கவ்விய மன்னரும் களிமண் என்று கூறினார்.
                                              க. கலைவாணன்.

தேரோட்டி இல்லாமலே குதிரைகளை சரியான பாதையில் ஓடப் பழகியிருக்கிறேன் தளபதியாரே!
  வடக்குப்பக்கம் போர்முரசு சத்தம் கேட்டதும் இவை தெற்கு பக்கம் பாய்ந்தோடும் போதே புரிந்து கொண்டேன் மன்னா!
                                             இளவை ஜோகா.
உங்க நாய் ஏன் என்னை அமைதியா பார்க்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காது பட சொல்லிட்டேன்!
                                   அம்பை தேவா.


கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்! தரைச்சக்கரம் சுத்தமாட்டேங்குது!

முதல்லே கண்ணாடியை மாட்டுங்க! அது கொசுவர்த்தி சுருளு!

                                      தஞ்சை தாமு.

தீபாவளிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர்  அதனாலே  என்ன?
அதிர்ச்சியான செய்தி எதுவும் அவர்கிட்டே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
                                  எஸ்.எஸ் பூங்கதிர்.

மாப்பிள்ளைக்கு காது கேட்காதுங்கற விஷயம் தலைதீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
    எப்படி..?
இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
                                   வி. சாரதி டேச்சு.

புலவரே! இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் இல்லை!

கொடுக்க காசு இல்லைங்கறதை நாசூக்கா சொல்றீங்களா மன்னா!

                                 வசந்தி வள்ளுவன்.

இது ரயில்வே வேலைக்கான தேர்வுதானே சார்?
 சரிதாம்ப்பா.. அதுக்காக இப்பவே ஒரு மணி நேரம் தாமதமா வர்ற உன்னை பரிட்சை எழுத அனுமதிக்க முடியாது!
                                       வசந்தி வள்ளுவன்.

மாப்ளே! நீங்க பிஸினஸ் பண்ற இடம் ஏக்கரா கணக்குல இருக்குன்னு மேரேஜுக்கு முன்னே சொன்னீங்களே!
   மாமா! இப்ப மட்டும் என்ன? பீச் ல சுண்டல் விக்கறேன்! பீச் ஏகப்பட்ட ஏக்கரா இருக்குமே!
                         சென்னிமலை சி.பி. ராதாகிருஷ்ணன்.

கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்து மணி சொல்றதுக்கு முந்நூறு ரூபா ஆகுமா?
  ஆமா! சேட்டுக் கடையில முந்நூறு ரூபாவுக்கு அடகுல இருக்கு, திருப்பினாத்தானே பார்க்கமுடியும்?
                                 இலவை ஜோகா.


எங்க மாதர் சங்க தயிர் கடையும் போட்டியில் எனக்குப் படு தோல்வி!

பட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

                              உ.ராஜாஜி.

என்ன டாக்டர் ஆபரேஷனை பண்ணிட்டு இன்னும் தையல் போடாம போறீங்க?

 அடப்பாவி! இன்னும் நீ  உயிரோடத்தான் இருக்கியா?
                       அறந்தாங்கி. ஷக்தி ஷரவணன்.

நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி மலர் 2005


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, February 27, 2013

சுஜாதா நினைவு நாள்! அஞ்சலி!

                                        இன்று போல இருக்கிறது சுஜாதா மறைந்து! அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்று நினைக்கிறேன். இதே பிப்ரவரி மாதத்தில் முதல் முறையாக நண்பருடன்  திருமீயச்சூர் செல்ல வேனில் அமர்ந்திருக்கிறேன்!  நேரம் இரவு 7.30 இருக்கும். தங்கையிடம் இருந்து அழைப்பு வருகிறது. அண்ணா! சுஜாதா செத்துட்டாராம்!   என்னது? அதிர்ச்சியில் கேட்க! அண்ணா எழுத்தாளர் சுஜாதா செத்து விட்டாராம்!  ஒரு நிமிடம் உறைந்து போனேன்.  பின்னர் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன். திருமீயச்சூர் லலிதாம்பிகை தரிசனத்தின் போதும் அவருக்காக வேண்டினேன்.
   எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது என்னுடைய பதிமூன்று வயதில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனந்தவிகடனில் என் இனிய இயந்திரா தொடராக வந்தபோது அதில் வரும் நாய்க்குட்டி பாத்திரம் பிடித்து படிக்க ஆரம்பித்தேன். மற்றவை புரியாது. அதில் இறுதியில் நாய் இறக்கும் போது அழுகையாக வரும்.  அப்புறம் நான் வளர்கையில் அவரது பல நாவல்களை படித்து வியந்து இருக்கிறென். கற்றதும் பெற்றதும் அவர் விகடனில் எழுதியபோது மிகவும் விரும்பி வாசிப்பேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளராகி விட்டார் அவர்.  கிரிக்கெட் போட்டியைக் கொண்டு அவர் எழுதிய நிலா நிழல்! என்ற நாவல் எனக்கு மிகவும் பேவரைட் ஆக இருந்தது. கணேஷ் வசந்த் பாத்திரங்களை கொண்டு அவர் எழுதிய நாவல்களை மறக்க முடியாது. அவருடைய எல்லா நாவல்களையும் படிக்காவிட்டாலும் அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் படைப்பினை தொலைக்காட்சியில் பார்த்து வியந்து இருக்கிறேன். கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வைத்து ஒரு சிறுகதை எழுதியிருப்பார் என்னால் மறக்க முடியாத கதை அது. 
   பன்முக திறமை கொண்ட மாபெரும் எழுத்தாளர் எளிமையாக வாழ்ந்து மறைந்தாலும் நமது உள்ளங்களில் கொள்ளைக் கொண்டுள்ளார். அவரது நினைவு தினத்தில்  சிலவற்றை பகிர்ந்து கொண்டு அவரை நினைவு கூர்வதில் பெருமை அடைகிறேன்! வாழ்க அவரது புகழ்!இன்று - பிப்.27 : சுஜாதா நினைவு தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!

* முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

* பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!

- நா.கதிர்வேலன்
(ஆனந்த விகடன் 19-05-2010)                                                                                                                        நன்றி: சுஜாதா ஃபேன்ஸ் முகநூல் குழுமம்.

பனிக்காலம் நன்று!

பனிக்காலம் நன்று!

மார்கழி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் குளிர் வாட்டி எடுக்கும். மூடு பனி போர்த்திக் கொண்டு சாலைகள் தெரியாது. வாகனங்கள் முகப்புவிளக்கு ஒளிரவிட்டுச் செல்லும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாசி மாத நிறைவில் சிவராத்திரியுடன் பனிக்காலம் நிறைவு பெறும்.
  பெரியவர்கள் சிவராத்திரியோடு குளிர் “சிவசிவா”ன்னு போயிடும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். அதே மாதிரி நிலை சிலவருடங்கள் முன் வரை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வானிலை மாறி வருகிறது.  மார்கழி மாதத்தில் பனி அவ்வளவாக தெரியவில்லை! மார்கழி மாத இறுதியில் கொஞ்சம் கடுமையான பனி இருந்தது. பின்னர் பனி விலகி வெயில் கொளுத்த ஆரம்பித்தது.
    மாசி மாதம் தொடங்கியவுடன் வெயில் கோடை வெயில் போல கொளுத்த ஆரம்பித்தது. ஆனால் திடீரென இரண்டு மூன்று நாட்களாக அதிகாலையில் கடும் பனி பொழிந்து வருகிறது. எதிரே வருவது தெரியாத அளவிற்கு பனிப்புகை மண்டியுள்ளது. மனிதன் மாற மாற காலநிலையும் மாறி வருவது வேதனைக்குரியது. இயற்கை வளங்களை சுரண்ட சுரண்ட இயற்கை நம்மை கடுமையாக தண்டித்து வருகிறது. மழை சரிவர பெய்யவில்லை! வெயிலின் அதிக தாக்கம், கடும்பனி  போன்றவை மனிதர்களிடையே புதிய நோய்களையும் பரப்பும்.
   ஆனால் இயற்கையை மதிக்காமல் முடிந்த வரை சுரண்டிக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் எங்கள் ஊர் பக்கம் சாலைகளில் இரண்டு புறமும் மரங்கள் அணிவகுத்து நிற்கும். புளியமரங்கள் நான்கு நபர்கள் கை கோர்த்து நின்றால் கூட கட்டிப்பிடிக்க முடியாத பருமன் உடையவை. அவையெல்லாம் நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலை என வெட்டி சாய்க்கப்பட்டு தூங்கு மூஞ்சி மரக் கன்றுகள் நடப்பட்டன. இப்போது அவையும் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏகப்பட்ட வாகனங்கள் புகை கக்கி செல்கின்றன.  சித்திரை மாதங்களில் இந்த புளிய மர மகசூல் ஏலம் விடப்படும். சுற்று வட்டார மக்கள் மூட்டை மூட்டையாக புளியம்பழங்கள் வாங்கி செல்வார்கள். குறைந்தவிலையில் கிடைக்கும். இன்றோ மரங்களையும் இழந்து அதன் பயன்களையும் இழந்து வெறும் சாலைகளை மட்டுமே பெற்று இருக்கிறோம். வளர்ச்சி தேவைதான்! ஆனால் இது போன்ற வளர்ச்சி தேவையா? கிராம விளைநிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டன. மூன்று போகம் விளைந்த நிலங்கள் இன்று கான்கிரிட் காடுகள் ஆகிவிட்டன. ஏரிகுளங்களை தூர் வாராமல் ஆற்று மணலை கண்டபடி அள்ளியதன் விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நன்னீர் உவர் நீராகி கிராமங்களில் கூட குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை! இப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்திக் கொண்டது யார்? நாம்தான்! இதுவரை சுரண்டியதற்கே இந்த நிலை! இன்னும் சுரண்டிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? உலக அழிவுதான்! அழிக்க போவது மனித இனம்தான். ராட்சதர்கள் என்று ஒரு இனம் புராணங்களில் உண்டு. அவர்கள் கூட தன்னை தானே அழித்துக் கொள்ள மாட்டார்கள். எதிரியைத்தான் அழிப்பார்கள்! ஆனால் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்!  அப்படி என்றால் மனிதனுக்கு மனிதனே முதல் எதிரி ஆகிறான்!  இனியாவது விழித்து திருந்தட்டும்.
  இப்போது ஒரு இலக்கியச்சுவையை பார்ப்போம்!  பனிக்காலம் பற்றி பேசினோம் அல்லவா? அதைப் பற்றிய சுவை மிகுந்த  நிகழ்ச்சி இது.
     மார்கழிமாத குளிர் காலம், விடியல்காலை நேரம். கம்பளிப் போர்வையை சுற்றிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் ஒரு புலவர். அந்த சமயம் இன்னுமொரு புலவர் அந்தப் பக்கம் சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்தார்.
வந்த புலவரை பார்த்து முதல் புலவர், “பனிக்காலம் கொடிது” என்றார்.
 இரண்டாமவரோ அதை மறுப்பது போல தலையசைத்து, “ பனிக்காலம் நன்று”  என்றார்.

முதல் புலவர் சற்று யோசித்தார், பின்னர் சிரித்தபடி, ஆமாம்! ஆமாம்! “பனிக்காலம் நன்று” என்று  இரண்டாமவரை ஆமோதித்தார்.
  இருவர் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் குறுக்கிட்டு “ என்ன ஓய் புலவரே! முதலில் பனிக்காலம் கொடிது என்றீர்கள் இவர் சொன்னார் என்பதற்காக இப்போது பனிக்காலம் நன்று என்று கட்சி மாறி விட்டீர்களே? என்று முதல் புலவரை பிடித்து உலுக்கினார்.
    “நானும் கட்சி மாறவில்லை! இவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை! என்று சிரித்தார் முதல் புலவர்.
  “ என்ன குழப்புகிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.
முதல் புலவர் சொன்னார், நான் பனிக்காலம் கொடிது என்று மட்டும் தான் சொன்னேன். இவர் அதை மறுக்கவில்லை. அது எத்தனை கொடிது என்றுதான் சொன்னார். பனிக்காலம் நன்று. பதம் பிரித்து பாருங்கள். பனிக்கு ஆலம் நன்று. ஆலம் என்றால் விஷம். அதாவது பனியைவிட விஷம் நன்று. அப்படியென்றால் விஷத்தை காட்டிலும் கொடியது பனி. இப்போது புரிகிறதா? என்றார்.
    புலவர்களின் சொல்விளையாட்டை புரிந்து கொண்டு வியந்தார் வழிப்போக்கர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, February 26, 2013

புகைப்பட ஹைக்கூ 16


புகைப்பட ஹைக்கூ 16

பூவோடு பூவாக
பூத்து நிற்கிறது
வண்ணத்துப்பூச்சி!

மயங்கியது
மலர் மட்டுமல்ல
மனசும்தான்!

தேன் சிந்தியதும்
தலைகவிழ்ந்தது
பூ

மலருக்கு
மஞ்சள் பூசியது
வண்ணத்துப்பூச்சி!

பூவில் பூத்தது
உயிருள்ள பூ
வண்ணத்துப்பூச்சி!

இயற்கை அழகில்
மூழ்கியது மலர்
வண்ணத்துப்பூச்சி!

திருடு போனது
மகரந்தம் மட்டுமல்ல
மனசும்!

வண்ணம் சிதறினாலும்
எண்ணம் சிதறவில்லை
வண்ணத்துப்பூச்சி!

பூக்களின் சிரிப்பில்
பூத்தது
வண்ணத்துபூச்சி!

சிறகில்
சித்திரம் படைத்தது
வண்ணத்துப்பூச்சி!

மலர்க்கணையில்
மயங்கியது
வண்ணத்துப்பூச்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


வேலூர் விஜயம்! 4


வேலூர் விஜயம்! 4


வேலூர் சென்று வந்த கதை என்ற பெயரில் என் மாமாவின் பழைய நினைவுகளை மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன்! வாசகர்கள் பொறுத்தருள்க.
      யூத் சர்வீஸீசில்  திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்த மாமாவிற்கு ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யூத் சர்வீஸில் இருப்பவர்கள் அனைவரும் திமுக காரர்கள் என்று வேலையை விட்டு நீக்கி விட்டிருக்கிறார்கள். அடுத்த பி.டி.ஒ என்ற கனவில் இருந்தவர்கள் ஒரே நாளில் வேலையை இழந்து தவித்து இருக்கிறார்கள். அன்றும் பலர் இதனால் தற்கொலை வரை சென்று இருக்கின்றனர்.
   ஆனாலும் மாமா மனம் தளரவில்லை! மீண்டும் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு வந்துவிட்டார். இதனிடையே வேலைஇழந்தவர்கள் வழக்குத் தொடுக்க ஒரு தேர்வு வைத்து தகுதியானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதினார் மாமா. தேர்வுமுடிவுகள் வந்தன. மாமா தேர்ச்சி பெற்று விட்டார். என்ன இன்னும் ஒரு மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று இருந்தால் நேரடியாக செகரட்டரியேட் பணியிடம் கிடைத்திருக்கும். சரி கஷ்டப்பட்டதற்கு ஏதோ கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டது என  மகிழ்ந்தபோது அவருக்கு பணியிடம் தொலை தூரத்தில் வழங்கப்பட்டது.
   அவரது அண்ணா வேலூரில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் வேலூரிலேயே பணியிடம் கிடைக்கும். ஆனால் அவர் சிபாரிசு செய்ய மறுத்துவிட்டாராம். கவர்மெண்ட் வேலை எங்கிருந்தால் என்ன? நான் ஜாய்ன் பண்ணிக் கொள்கிறேன் என்று இவரும் பிடிவாதம் பிடித்தாராம்.
   இறுதியில் வேலூரிலேயே வேறொருவர் சிபாரிசின் படி இவருக்கு போஸ்டிங் வழங்கப்பட்டது. தாசில்தார் அலுவலகத்தில் வேலை. வருவாய்த்துறை அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டது. வேலூர் சத்தியவிஜயநகரத்தில் ஆர் ஐ ஆக பணியாற்றியுள்ளார்.
    மிகவும் நேர்மையாகவும் கண்டிப்பானவராகவும் இருந்துள்ளார். இவரிடம் பெரிய அதிகாரிகளுக்கே ஒரு மரியாதை உண்டாம். அப்போது பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமாம். விவசாயிகள் பலர் ஆழ்துளை கிணறு அமைக்க தாசில்தார் அலுவலகம் வருவார்களாம். இவர்களிடம் பணம் கறக்க எளிதில் அனுமதி கொடுக்க மாட்டார்களாம் அதிகாரிகள்.
   ஓர் ஏழை விவசாயி பலமுறை அலுவலகத்திற்கு படையெடுத்து இறுதியில் இவரிடம் வந்தாராம். சார்! இத்தனை வருசமா எனக்கு அனுமதி கொடுக்காம இருக்காங்க! நீங்கதான் பாத்து செய்யணும். ஏதாவது பணம் வேணுமின்னாலும் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இவருக்கு கோபம் வந்து விட்டதாம். எல்லா ரெகார்டும் ஒழுங்கா சப்மிட் பண்ணிட்டீங்கன்னா நான் இன்ஸ்பெக்ஷன் பண்ணி  தாசில்தாருக்கு அனுப்பி விடறேன் எனக்கு எந்த பணமும் வேணாம் என்று கறாராக கூறியவர். அவரது கோரிக்கையை பரிசீலித்து தாசில்தாருக்கு  அனுப்பி விட்டாராம்.
   அங்கு வெகு சுலபத்தில் பர்மிசன் கிடைத்து அவர் போர் போட்டுவிட்டாராம். உங்களால்தான் நான் போர் போட முடிந்தது என்று நூறு ரூபாயை எடுத்து கொடுக்க வந்தாராம். இவர் மறுத்து என் வேலையைத்தான் நான் செஞ்சேன். இந்த மாதிரி பணம் கொடுக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே என்று மறுத்து அனுப்பினாராம். அந்த விவசாயி அப்போது சென்று விட்டாலும் பின்னர் வயலில் விளையும் காய்கறிகள் போன்றவற்றை இவரது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்து இதையாவது மறுக்காம வாங்கிக்கணும் என்று  கட்டாயப்படுத்தி கொடுத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்து வேலூருக்கு இவர் மாற்றலான போது பெரும்பாலான விவசாயிகள்  இவரை கண்ணீர் மல்க வழியனுப்பினார்களாம்.
     இப்படி கஷ்டப்பட்டு வருவாய்த்துறையில் சேரும்போதே வயது முதிர்ந்து விட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. மாமனார் வருவாய்த்துறை கையை நீட்டிட போறே! புள்ளக்குட்டிங்க எதிர்காலம் பாழாயிரும்! என்று அடிக்கடி எச்சரிப்பாராம்!  
    இவர் இப்படி இறுதியில் ஓய்வு பெறும் வரையில் அதிகாரிகள் பாராட்டும் படி பணி செய்து வந்தாலும் இப்போது அவருக்கு ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இவருக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் இவரை முந்தி தாசில்தார் அளவுக்கு  புரமோசன் பெற்றுவிட்டு சென்றுவிட இவர் டெபுடி தாசில்தாராக ஓய்வு பெற்று இருக்கிறார்.
  காரணம் இட ஒதுக்கீடு! திறமையானவர்களை பின்னுக்கு தள்ளும் இந்த இடஒதுக்கீடு குறித்து இவர் வருத்தப்பட்டு பேசினார். இவருக்கு ஜீனியர் ஆன ஒரு அதிகாரி எதுவென்றாலும் இவரை கேட்டு செய்பவர் கூட இவரை முந்தி தாசில்தார் ஆகிவிட்டாராம். என்ன சார்! நீங்க? உங்களுக்கு புரமோசன் கிடைக்கலியே? என்று அவர் வருத்தப்பட்டாராம்.
   இது உண்மைதானே! பிற்படுத்தப்பட்டோர்களுக்கு உதவி  முன்னேற்றுவது அவசியம் தான்! அதே சமயம் இட ஒதுக்கீடு என்று பிரித்து திறமையானவர்களை பின்னுக்கு தள்ளுவது என்ன நியாயம்? ஒரு துணைக் கலெக்டராக மாறி இருக்க வேண்டியவர் இட ஒதுக்கீட்டினால் துணை தாசில்தாராக ஓய்வு பெறவேண்டிய கட்டாயம்.
   இருந்தாலும் அவரது விடாமுயற்சியால் இன்று அவரது மகன்கள் நல்ல வேலையில் உள்ளனர். இந்த இட ஒதுக்கீடு காரணமாகவே அவரது மூத்த மகன் கவர்மெண்ட் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இன்று பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அவர். இன்னொரு மகன் துபாயில் கப்பல் கம்பெனியில் வேலை செய்கிறார்.
  எப்படியோ கஷ்டப்பட்டு மகன்களை நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட்டேன்! இனி கல்யாணம் முடித்துவிட்டால் சந்தோஷப்படுவேன் என்று தன் கதையை முடித்தார் மாமா.

சீக்கிரம் நல்லது நடக்கட்டும்!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, February 25, 2013

அம்மான்னா சும்மா இல்லேடா! கதம்ப சோறு!அம்மான்னா சும்மா இல்லேடா!

நேற்று காவிரி தந்த கலைச்செல்வியின் 65வது பிறந்த நாள். இன்று நட்சத்திரப்படி பிறந்த நாள். நேற்றுதான் அம்மாவின் விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் பிறந்த நாள் தினம் தோறும் இருக்கக் கூடாதா என்ற அளவிற்கு பேராசையும் எழுந்தது. அதில் தவறொன்றும் இருப்பதாகவும் நான் கருதவில்லை! ஆமாங்க! தீபாவளி, பொங்கல், வருசபிறப்பு அன்னிக்கு கூட ஒருமணி நேரமாவது கரண்ட் கட் பண்ணாங்க! ஆனா நேத்து காலையில ஆறுமணியில இருந்து ராத்திரி பத்து மணி வரை கரண்ட் கட்டே ஆகலைங்க! அம்மாவின் பிறந்தநாளுக்கு இந்த மாதிரி ஒரு பரிசை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க! ஆனா என்ன பிரயோசனம்? நேத்து டீவிக்களிலே மொக்கை படங்களா போட்டு அறுத்து எடுத்துட்டாங்க! அதுவும் ஜெயா மூவிலே கூட அம்மா படம் போடாம டாக்டரு விஜய் படம் மதுர போட்டு கொலை பண்ணிட்டாங்க! அந்த படம் கொஞ்ச நேரம் பார்த்த பாதிப்புல பாதி இரவு தூங்காம ஒரே அஜீரண கோளாறா போயிருச்சுங்க!   இப்படியே தினம் பிறந்த நாள் கொண்டாடி கரண்ட விடுவாங்கன்னு எதிர்பார்த்தா இன்னிக்கு காலங்கார்த்தாலேயே மீண்டும் கட் ஆயிருச்சு மின்சாரம்!

தொடரும் ஆசிட் வீச்சுக்கள்!

   வினோதினி இறந்து சில தினங்களே ஆன நிலையில் மீண்டும் ஒரு மரணம். ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு வித்யா இறந்த செய்தி நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. வினோதினி தாக்கப்படும் போதே பதிவு செய்ய நினைத்தும் சோம்பேறித்தனத்தால் ஏதும் பதிவிடாமல் விட்டுவிட்டேன். இந்த இண்டர்நெட் யுகத்தில் காதலின் பரிமாணம் மிகவும் மாறிவருகிறது. காதல் மென்மையானது. அதில் முரட்டுத்தனம் கூட மென்மையாகத்தான் இருக்கும். பழைய பாலச்சந்தர், பாரதி ராஜா படக் காதல் போல அல்லாமல் இப்போதைய ரவுடியை காதலிக்கும் காதல் படங்கள்  காதலில் வன்முறையைக் கலந்துவிட்டன. ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் தற்கொலை செய்து கொண்ட காலம் போய் அவளை கொலை செய்வது ஆசிட் வீசுவது என்று வன்முறை அளவுக்கு மீறிவிட்டது. இது காதலே அல்ல! வெறிபிடித்த செயல்! இதை காதல் என்று கொச்சைப்படுத்தாமல் இது போன்ற கொலை வெறியர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்கள் மீது தொடரும் இந்த தாக்குதல்கள் பற்றி அவர் முதல்வர் ஏதும் இது வரை பதில் சொல்லவில்லை! அவரின் பார்வைக்காவது இந்த செய்தி போனதா தெரியவில்லை! விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்ப்போம்!

நூறு நாள் திட்டமும் சோம்பேறிகளும்!
   தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் முழுச்சோம்பேறிகளை உருவாக்கி வருகிறது மத்திய அரசு! இப்போது இந்த திட்டம் 150 நாள்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் யாதொரு பயனும் ஏற்படவில்லை! வயல் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரநடவு என்ற முன்னேற்றத்தை மட்டுமே இந்த திட்டம் கொண்டு வந்துள்ளது. இதில் பயனாளிகள் அனைவருமே பெரும்பாலும் பெண்கள். காலை ஒன்பது மணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு மண்வெட்டி  சட்டியுடன் வந்து  ஏரி குளம் தூர் வாருகிறேன் பேர்வழி என்று வந்து பேருக்கு ஒரு மணி நேரம் மண் வெட்டி எடுத்து வேலை செய்கிறார்கள். பின்னர் மர நிழலில் அமர்ந்து ஊர்க் கதை பேசி மூன்று மணிக்கு வீட்டுக்கு செல்கிறார்கள். இதற்கு கூலி இப்போது வங்கிகள் மூலம் வழங்கப் படுவதால் வழக்கமான வங்கி பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எழுத்தறிவில்லாத இந்த கூலித்தொழிலாளர்களை வங்கி அதிகாரிகள் அலைகழிப்பது அதைவிட கொடுமை. இதை முறைப்படுத்தி  ஒழுங்க படுத்தினால் திட்டம் பயனுள்ளதாய் மாறும். ஆனால் ஓட்டு என்னும் இயந்திரம் அதை அறுவடை செய்ய விடாது போல தோன்றுகிறது.

நம்பிக்கை நட்சத்திரம்: 
  காரைக்கால் பள்ளி மாணவன் ஒருவன் சூரிய ஒளி மருந்து தெளிப்பான் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளான். மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியும் ஆர்வமும் அதிகரிப்பது நல்ல செயல். மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.
வாழ்த்துக்கள் முகேஷ்.

சபாஷ் தோனி!

  கடந்த இரண்டு மூன்று தொடர்களாக சறுக்கிவந்த இந்திய கேப்டன் தோனி  சென்னை டெஸ்டில் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். இன்றைய நாளிதழ்கள் ஆகா! ஓகோ என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதே நாளிதழ்கள்தான் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபோது கடுமையாக விமரிசித்தன.  விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது நம் நாட்டில்தான். உதாரணமாக பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டால் நாலைந்து பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். கிரிக்கெட் மட்டும் விளையாட்டு அல்ல! எத்தனையோ நல்ல விளையாட்டுக்கள் கிரிக்கெட் மோகத்தால் மறைந்து வருகின்றன. ஒலிம்பிக்கில் நமக்கு சில பதக்கங்களை பெற்றுத்தந்த மல்யுத்தம் கூட அடுத்த ஒலிம்பிக்கிற்கு பிறகு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் கிளம்பியதாக தெரியவில்லை! ஆனால் கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால் மட்டும் தேசத்தையே இழந்துவிட்டது போல அப்படி கொந்தளித்து போகின்றனர் மக்கள்.  பார்மை மீட்ட தோனி இந்த இன்னிங்சில் இரட்டைசதம் அடித்து சச்சின் சாதனையும் முறியடித்து தன் மீதான விமர்சனங்களை முறியடித்து விட்டார். அஸ்வினும் சிறப்பாக பந்துவீசி சாதித்துள்ளார்.  வெல்டன் தோனி!
                                                                        டாக்டர் பில்!
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாராயணசாமி ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் குணமடைந்ததும், மருத்துவர் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்தார்.
பில் தொகை மிக அதிகமாக இருப்பதாக நாராயணசாமி சொன்னார்.

மருத்துவர் சொன்னார்,

"
நான் சிகிச்சைக்காக 15 முறை உன் வீட்டிற்கு வந்துள்ளேன்.ஊசி போட்டிருக்கிறேன்.மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன்அதை எல்லாம் கணக்கு பார்த்தான்நான் குறைவாகவே கேட்கிறேன்"
அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
நான் உடல் நலமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க வந்த பத்துப் பேருக்கு என் நோயைப் பரப்பி அவர்கள் தற்போது உங்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார்களேஅதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டர்."
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...