உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 8


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 8

நல்ல தமிழை அறிய வேண்டும் பழக வேண்டும் என்ற ஆசையில் துவக்கப்பட்ட இந்த தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி! தமிழின் சிலேடை நயத்தையும் தமிழ் எண்களையும் கடந்த வாரங்களில் பார்த்தோம். தமிழ் உச்சரிப்பு இப்போது மிகவும் மோசமாக இருந்து வருகிறது தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள் தமிழை குதறி எடுக்கிறார்கள். குறிப்பாக ழகரம் அவர்களின் வாயில் நுழைவதே இல்லை! ‘ல’விற்கும் ‘ள’ விற்கும் வித்தியாசம் தெரிவதில்லை!
  வாழைப்பழத்தை வாளப்பளம் என்று பலர் உச்சரித்து முகம் சுளிக்க வைக்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் தொலைக்காட்சி மட்டும் கொஞ்சம் தமிழை வாழ வைத்து வருகிறது. அரசியல் கட்சி சார்பான தொலைக் காட்சி என்றாலும் அவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வம் பாராட்டத்தக்கது.
  இன்றைய பகுதியில்  ல ள ழ வேறுபாட்டினை சிறிது பார்ப்போம்!

1 அலை  - கடல் அலை , அலைந்து திரிதல்
 அழை  -  கூப்பிடு
 அளை  - தயிர், பிசை

2. இலை  - மரம், செடி, கொடிகளின் இலை
  இழை  - செய். நூல் இழை
  இளை - மெலிந்து போதல்.
3. உலை  - சமைக்க உலை வைத்தல், உலைக்களம்
  உழை  - பாடுபடுதல் , உழைப்பு
  உளை   - பிடரிமயிர், சேறு.

4. ஒலி  - ஓசை
  ஒழி   - அழித்துவிடு, தொலைத்துவிடு.
  ஒளி  - வெளிச்சம். பதுங்கிக் கொள்

5. கலை  - வித்தை, கலைந்து போதல்
  கழை  -  மூங்கில்
  களை -  வயலில் களை எடுத்தல், முகத்தின் ஒளி.

6. கிலி  - அச்சம், பயம்
  கிளி  -  ஒருபறவை
  கிழி  -   துண்டாக கிழித்தல், கோடு கிழித்தல்

7. தலை  -  முதன்மை, சிரசு
  தழை   -  புல் இலை முதலியன
  தளை -   கட்டுதல்,

8. தாலி  - கணவன் மனைவிக்கு கட்டும் சின்னம், மங்கல நாண்.
   தாழி  -  குடம், வாயகன்ற பாண்டம்.
   தாளி  -  ஒருவகைப் பனை, குழம்பு தாளித்தல்

9. வலை  -  மீன்பிடி வலை
  வழை-   ஒருவகை மரம், சுரபுன்னை மரம்,
 வளை  -  பொந்து, வளையல், வளைவு

10. வால்  -  விலங்கின் வால் பகுதி, வெண்மை
    வாழ்  -  உயிர்வாழ், பிழைத்திரு
    வாள்  -  வெட்டும் கருவி, ஒளிபொருந்திய

11. வாலை  -  இளம்பெண்
    வாழை -  மரவகை
    வாளை  -  மீன்வகை

நல்ல தமிழை நன்றாக பேசுவோம்! தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்ல சொற்களுடன் சந்திப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

Comments

  1. நல்ல தமிழ் அறிவு பகிர்வு

    ReplyDelete
  2. அளை , உளை ,தளை போன்றவற்றின் பொருள் தெரிந்து கொண்டேன்.
    நல்ல பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2