உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9


உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9


வணக்கம் வாசகர்களே! ஞாயிறு தோறும் நாம் நம் தமிழ் அறிவை சற்று விரிவாக்கிக் கொண்டு வருகிறோம். சென்ற வாரத்தில் ல ழ ள வேறுபாடு பற்றி அறிந்து கொண்டோம். இந்த வாரத்தில்
ணகர வேறுபாடு பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு முன் சுவையான ஒரு இலக்கியம் ஒளவைப் பாட்டி பாடியது பற்றி பார்க்க இருக்கிறோம்.

   ஒரு முறை  பாண்டியன் வீட்டுத் திருமண விருந்தில் ஏகப்பட்ட கூட்டம். பந்திக்கு முந்திக் கொண்டு பாய்ந்து சென்றவர்கள் ஒரு பாட்டியைக் கீழே தள்ளிவிட்டனர். அவர்தான் தமிழ் மூதாட்டி ஒளவைப்பாட்டி.
   ஓர் ஓரத்தில் சென்று  அமர்ந்தார் ஒளவை. அப்போது அந்த பக்கமாக  வந்தார் பாண்டிய மன்னன்.ஒளவையிடம் “அம்மையே உண்டீர்களா? விருந்து சுவையாக இருந்ததா? என்று அன்புடன் விசாரித்தான்.
   எரிச்சலாக இருந்த ஔவையார் அதை அடக்கிக் கொண்டு “உண்டேன், உண்டேன் உண்டேன்... ஆனால்  சோறு மட்டும் உண்ணவில்லை! என்று அமைதியாக உரைத்தார். விழித்தான் வேந்தன். விளக்கிச் சொல்லுமாறு வேண்டினான். ஔவையார் சொன்னார்.
  “கூட்டத்திலே நெருக்குண்டேன்;கீழே தள்ளுண்டேன்; பசி மிகுதியால் வயிறு சுருக்குண்டேன்... சோறு மட்டும் உண்ணவில்லை!
  என்று பொருள் வரும்படி ஓர் பாட்டை பாடினார். அது இதோ!
  “ வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
   உண்ட பெருக்கம் உரைக்கக் கேள்  - அண்டி
   நெருக்குண்டேன்: தள்ளுண்டேன்: நீள் பசியினாலே
   சுருக்குண்டேன்..  சோறு கண்டிலேன்!”

பாட்டைக் கேட்ட பாண்டிய மன்னன் மிகவும் வருந்தி தவறுக்கு மன்னிப்பு கேட்டு தன் கையாலேயே ஔவைக்கு விருந்தளித்து அவரை கௌரவித்தானாம்.
இப்படிப்பட்ட மாந்தர்கள் வாழ்ந்த காலம் அது.

இப்போது சில ணகர னகர சொற்களின் பொருள் வேறுபாடுகளை காண்போம்.
1.   மணம் - வாசனை
மனம் -  உள்ளம்

2.   வண்மை  - ஈகை
வன்மை - உறுதி

3.   தண்மை  - குளிர்ச்சி
தன்மை  - இயல்பு

4.   பணி   - தொழில்
பனி   - குளிர்

5.   ஊண் -  சோறு
ஊன்  -மாமிசம்.

6.   அண்ணம் -  உதடு
அன்னம்-  பறவை

7.   கண்ணன் -  கிருஷ்ணன்
கன்னன்  - திருடன்

8.   கண்ணி-    வலை, கயிறு
கன்னி  - இளம்பெண்

9.   ஆணி -   ஆதாரம், இரும்பு ஆணி
ஆனி  -  தமிழ் மாதம்.

10. கணி-    கணக்கிடல், கணிதம்
கனி   -  பழம்

11. மணை  -  இருக்கை, ஆசனம்
மனை  -  வீட்டுமனை

12. மண்-   நிலம்
மன்   பெருமை

என்ன வாசகர்களே தமிழ் சொற்கள் சிலவற்றை அறிந்து கொண்டோம். அடுத்த பகுதியில் இன்னும் சில சொற்களை அறிந்து கொள்வோம். உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டத்தில் அறிவியுங்கள் அது இந்த தொடரை மேலும் மெருகூட்ட உதவும். நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Comments

  1. அவ்வையின் பாடல் அழகு அதை பகிர்ந்தமைக்கு நன்றி.
    தமிழ்ப்பணி தொடர்க

    ReplyDelete
  2. அருமை, அருமை, அருமை.. உங்க தமிழ் பற்று வாழ்க!

    ReplyDelete
  3. arumai!

    sako..!

    irandu paththikalum...!

    ReplyDelete
  4. இதுதான் என் முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். உங்கள் தமிழ் தொண்டு வாழ்க. எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்கள், ப்ளீஸ்!


    மணம் - வாசணை - வாசனை என்று இருக்க வேண்டும் இல்லையா?
    உண்டேன், உண்டேன் உண்டேண்.. - உண்டேண்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி அம்மா! பிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறேன்! வாசனை என திருத்தி விடுகிறேன்! வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. உங்கள் தமிழ்த்தொண்டு மிகவும் பாராட்டத் தக்கது.
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2