வேலூர் விஜயம்! 2


வேலூர் விஜயம்! 2
 நேற்றைய பதிவில் வேலூர் மாமா படித்த கதையை கூறியிருந்தேன் அல்லவா? மிகவும் கஷ்டப்பட்டு காலேஜில் அட்மிசன் வாங்கி படித்தும் கணக்கில் கோட்டை விட பெயில் ஆகிவிட்டாராம் மாமா. திரும்பவும் சொந்த ஊர் சென்று விவசாயம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார். நல்ல உழைப்பாளி. இவரது உழைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பங்காளிகள் நீ படிச்சி என்ன ஆகப்போவுது. பாப்பார பசங்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு! இப்படியே விவசாயம் பாத்துகிட்டு இரு என்று சொல்லியுள்ளார்கள்.
   இல்லை இல்லை! நான் படிப்பேன்! என்று மீண்டும்  அட்டெம்ப்ட் தேர்வு எழுதி பாஸ் ஆகியுள்ளார். அப்பொழுதெல்லாம் அரியர் வைத்துக் கொண்டு கல்லூரியில் தொடர்ந்து இருக்க முடியாதாம். அதனால் மீண்டும் கல்லூரியில் சேர வேண்டும். அப்போதுதான் அவரது அத்தை அவரை சித்தூர் அழைத்து சென்று அங்குள்ள வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டி கல்லூரியில் சேர்த்து விட்டாராம். அந்த கல்லூரியின் ப்ரின்ஸ்பாலும் மிக கண்டிப்பானவராம்.
    அவரது மாமா அழைத்துச் சென்று ப்ரின்ஸ்பால் முன் நிறுத்தும் போது மதிப்பெண்களை பார்த்துவிட்டு ஐயர் ஊட்டுப் பையன்! என்ன மார்க் எடுத்து இருக்கே? ரெண்டு தடவை பெயில் ஆகி வந்திருக்கே? உனக்கு எப்படி சீட் கொடுப்பது என்று கேட்டாராம்.
  இவரது மாமா அந்த கல்லூரியில் வேலை செய்பவராம்! ப்ரின்சியிடம், சார்! பையன் படிக்கணும்னு ஆசைப்படறான். வளர்ந்தது எல்லாம் கிராமம் சொல்லிக் கொடுக்க ஆள் கிடையாது! அவனா முட்டி மோதி இவ்வளவு தூரம் வந்துட்டான். என் வொய்ப்புக்கும் இவன் மேல பாசம் அதிகம்! அவதான் கூட்டி வந்து  நம்ம காலேஜ்ல சேத்துடலாம்னு சொன்னா! நீங்கதான் கொஞ்சம் மனசு வைச்சி சேர்த்துக்கணும் என்று கூறியுள்ளார்.
       சற்று நேரம் யோசித்த பிரின்ஸ்பல்! அதுசரி! பாத்து செஞ்சுடுவோம்! வொகேஷனல் க்ருப்ல போட்டுருவோம்! டேய் தம்பி! ஒழுங்கா படிக்கணும்! பெயில் ஆகாம படிக்கணும்! என்று கண்டிப்பாக கூறி சேர்த்துக் கொண்டுள்ளார்.
   அங்கு அத்தை வீட்டில் தங்கி படித்தவர் கல்லூரி முன்பெல்லாம் சீக்கிரம் விட்டு விடுவார்களாம்! அவர் தங்கியிருந்த வீட்டிற்கும் கல்லூரிக்கும் ஒரு குறுக்கு சந்து இருக்குமாம். அந்த வழியாக அவரும் அவரது நண்பர் ஒருவரும் திரும்பி வருவார்களாம். அங்கு ஒரு லேடீஸ் ஹாஸ்டல் ஏதோ இருக்குமாம். நிறைய பேர் நின்று கொண்டு போகவரும் பெண்களை கிண்டல் செய்து கொண்டு இருப்பார்களாம்.
   ஒருநாள் இவர் அந்த வழியாக தனியாக வரும்போது அந்த பக்கம் ஏதோ தகறாறு. அதே சமயம் இவரது மாமாவும் இவரை அந்த வழியில் பார்த்து விட வீட்டில் ஒரே அர்ச்சனைதானாம். அதற்கப்புறம் அவர் அந்த வழியாக செல்வதே இல்லையாம். எப்படியோ ஒரு வழியாக டிகிரி முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இனி வேலை தேடும் படலம் ஆரம்பம் ஆகியுள்ளது.
  ஒரு தேர்வு விடாமல் எழுதுவாராம். இவரது பங்காளிகளில் ஒருவர் டீச்சராக இருக்க, அவர் பேசாம நீ டீச்சர் டிரெய்னிங் முடி ஸ்கூல் வாத்யாரா ஆயிடலாம்! இந்த கிராமத்துலயே கூட போஸ்டிங் வாங்கிடலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இவருக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லையாம். கவர்மெண்ட் உத்தியோகம் வேண்டும் ஆபீஸ் போய் வரவேண்டும் என்ற லட்சியத்தில் போட்டித் தேர்வுகள் பல எழுதி உள்ளார்.
    அப்போது கலைஞர் ஆட்சிக்காலமாம். கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுக்க இப்போது மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தது போல அப்போது இளைஞர் படை ஒன்றை யூத் சர்வீஸ் என்ற பெயரில் ஏற்படுத்தினாராம்  கலைஞர். அதில் விண்ணப்பித்துள்ளார் மாமா.
    ஒருநாள் இவர் கழனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது  பெரியப்பா  ஒரு கவரை எடுத்துக் கொண்டு ஓடிவந்தாராம். அவர்தான் அந்த ஊர் போஸ்ட் மாஸ்டராம். டேய் கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சுடா!  என்று கவரை கொடுத்தாராம்.
  அது இவரை யூத் சர்வீஸில் சேர வந்த அழைப்பு கடிதம். கோபிச்செட்டிப்பாளையத்தில் பயிற்சி வகுப்புக்கள்.
   நூற்றைம்பது ரூபாய் உபகார சம்பளம்!
 வீட்டில் போகக் கூடாது என்று அடம்பிடித்து தடுத்தார்களாம்! இவர் போயே தீருவேன் என்று அடம்பிடித்தாராம்!.
   வேலையில் சேர்ந்தாரா என்பதை பிறகு பார்க்கலாம்!
இவர் சின்னவயதில் நடந்ததாக சொன்ன ஒரு சுவாரஸ்ய அனுபவம்.
 இவரது ஊரில் செட்டியார் ஒருவர் கடை வைத்து இருக்கிறார். அவரது பையன் இவரது கிளாஸ்மெட்டாம். அவன் கையில் எப்பொழுதும் பணம் புழங்குமாம். வியாபாரி வீட்டு பிள்ளையாயிற்றே என்றால் அதுதான் இல்லை!
   செட்டியார் தருவதில்லையாம்! அவனே எடுத்து கொண்டு விடுவானாம்!
அதுவும் எப்படி?
   வீட்டில் ஏதாவது வாங்கி வர  கடைக்கு அனுப்புவார்களாம்! இவரும் கூடையை எடுத்துக் கொண்டு கடைக்கு போவாராம். அங்கு கடையில் அந்த பையன் இருப்பானாம். சாமான் போடும் கூடையில் சில சில்லறைகளையும் சேர்த்து போட்டு விடுவானாம்.
  நண்பனாயிற்றே! இவரும் வீட்டுக்கு போகையில் அந்த சில்லறைகளை தனியே ஒளித்து வைத்து இருந்து அவனிடம் கொடுத்து விடுவாராம். இது பலநாட்களாக நடந்திருக்கிறது. ஒருநாள் இதை அந்த பையனின் தாத்தா கவனித்து விட்டிருக்கிறார்.
   அடுத்த முறை இவர் கடைக்கு வரும் சமயம், இவரை மட்டும் நிறுத்தி வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கெல்லாம் சாமான் கொடுத்திருக்கிறார் தாத்தா. நேரம் போய்க் கொண்டிருக்க இவர் வீட்டுக்கு போகனும் சீக்கிரம் கொடுங்க என்று கேட்க அவர் இன்னும் தாமதம் படுத்தி இருக்கிறார்.
   இறுதியில் மிகவும் லேட்டாக வீட்டுக்கு வர வீட்டில் திட்டு விழுந்திருக்கிறது. இப்படி இரண்டொருநாள் நடந்திருக்கிறது. ஒருநாள் இப்படி இவரை தாத்தா காக்க வைக்க இதற்குள் கடை உரிமையாளர் பையன் வந்துவிட ஏன் அய்யர் ஊட்டுப்பையனை இவ்வளவு நேரம் நிறுத்தி வச்சிருக்கே? சட்டுன்னு கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே? என்று தந்தை மகனுக்குமே சண்டை வந்திருக்கிறது. அப்போதும் பெரியவர் ஏதும் மூச்சு விடவில்லையாம்.
    இது நடந்து ஒரு இரண்டு நாள் கழித்து இவர் வயல் வெளியில் வந்து கொண்டிருக்கும் போது அந்த செட்டியார் எதிரே வந்தாராம்! என்ன ஐயரே! என் பையன் எப்படி படிக்கிறான்? சதா உன் கூடயே சுத்தறானாமே? நல்லா படிக்கிறானா? கடையில காசுல கை வைக்கிறானாமே? உனக்கு ஏதாவது தரானா? என்று நூல் விட்டு பார்த்துள்ளார்.
 இவருக்கு சப்த நாடியும் அடங்கி விட்டதாம்!  இல்ல எனக்கு தெரியாது! என்று ஓட்டம் பிடித்து இருக்கிறார். அத்தோடு அந்த பையனிடம் சொல்லிவிட்டாராம்! அப்பா இந்த வேலை வேண்டாம்! என்ன விட்டுவிடு என்று!
    சுவாரஸ்யமாக இருக்கிறதா!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!  மிக்க நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2