நம்பிக்கை!


நம்பிக்கை!
வாழ்க்கையே நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் அடுத்த நாளை, அடுத்த மாதத்தை, அடுத்த வருடத்தை தீர்மானித்துக் கொண்டு இருக்கிறோம். நம்பிக்கை உள்ளவன் கட்டாயம் முன்னேறுவான். என்னால் முடியும் என்பது நம்பிக்கை! என்னால்தான் முடியும் என்பது ஆணவம்.
தன்னம்பிக்கை உள்ளவன் சாதிப்பான். அகங்காரம் கொண்டவன் அழிந்துபோவான். எதையுமே பாஸிட்டிவ் ஆக சிந்தனை செய்வது நம்பிக்கை! இதில் விரக்தி அடையக் கூடாது. எல்லாம் நன்மைக்கே! என்பதே நம்பிக்கையின் வெளிப்பாடு. நம்பிக்கை குறித்து பல பேர் பல கதைகள் வாயிலாக அறிவுரை கூறியிருப்பர்.
  அத்தகைய கதைகளுள் ஒன்றை சமீபத்தில் படித்தேன் பகவான் ராமகிருஷ்ணரின் இந்த கதை எனக்கு படித்ததில் மிகவும் பிடித்தது இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
   உண்மையான நம்பிக்கை, தீவிரமான முயற்சி, தளராத மனம் இவை மூன்றும் ஒருவன் பெற்றிருந்தால் அவன் வாழ்க்கையில் இறைவன் அருளால் அவன் நினைத்த அனைத்துமே நன்றாக நடக்கும். ஏழை ஒருவனின் மகன் நீண்ட நாள்களாக படுத்த படுக்கையாக இருந்தான். அவனுடைய நோய் தீராது என்றும் அவன் இப்படியே கொஞ்ச நாள் இருந்து இறந்து போய் விடுவான், இவனை காப்பாற்ற முடியாது. இறைவன் ஒருவன் தான் இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று வைத்தியர்கள் பலரும் கூறிச்சென்று விட்டார்கள்.
     இந்தநிலையில் தன் மகனின் உடல்நிலை குறித்தும் அவன் சுகம் பெற வேண்டியும் சன்னியாசி ஒருவரைப் பார்த்து ஆலோசனை வேண்டினான் அந்த ஏழை!
   அந்த சன்னியாசி சொன்னார்: “இறைவன் அருளால் ஒரு வழி உள்ளது, கடினமான வழி, எல்லாம் கூடிவந்தால் நன்மையாக நடக்கும் முயற்சி செய். சுவாதி நட்சத்திர நாளில் மழை பெய்ய வேண்டும். அந்த மழைத்தண்ணீர் ஒரு மண்டையோட்டில் விழ வேண்டும். அப்படி மண்டையோட்டில் மழைத்தண்ணீர் விழும்போது மண்டை ஓட்டின் அருகில் ஒரு தவளை இருக்க வேண்டும். அந்த தவளையைப் பிடிப்பதற்காக பாம்பு ஒன்று துரத்த வேண்டும். பாம்பு தவளையைப்பிடிக்கப் போகும் நேரத்தில் தவளை மண்டையோட்டை தாவ வேண்டும். அப்படி தாண்டும் சமயத்தில் பாம்பின் விஷம் மண்டையோட்டில் உள்ள மழைத்தண்ணீரில் விழ வேண்டும். மழைத்தண்ணீரில் பாம்பின் விஷத்துடன் நல்ல முறையில் மருந்து தயாரித்து கொடுத்தால் உன்மகனைக் காப்பாற்றிவிடலாம் என்றார்.
   இதையெல்லாம் கேட்ட ஏழை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு என் மகனை காப்பாற்று என்று உளமாற வேண்டிவிட்டு சுவாதி நட்சத்திரம் வரும் நாளை எதிர்பார்த்திருந்தான்.
   சுவாதி நட்சத்திரம் அன்று ஒரு மண்டையோட்டை தேடியெடுத்து அதை ஒரு மரத்தின் அருகில் வைத்தான். சுவாதி நட்சத்திரம் உச்ச நிலைக்கு வந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த ஏழையோ இதை எல்லாம் பார்த்துக் கொண்டே , இறைவா! என் மகனை காப்பாற்று, அனைத்தும் நன்றாக நடக்கும்படி செய்! என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தான்.
    மழை பெய்த சிறிது நேரத்தில் தவளை ஒன்று மண்டை ஓட்டின் பக்கம் வந்தது. அதே நேரத்தில் பாம்பு  ஒன்று அந்த தவளையை பிடிக்க மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. பாம்பின் விஷம் எப்படியாவது விழ வேண்டும் என் மகன் பிழைக்க வேண்டும் என்று படபடபாக அந்த ஏழை காத்திருந்தான்.
   தவளை மண்டையோட்டை தாண்டும் நேரத்தில் பிடித்து விடலாம் என்று பாம்பும் பாய தவளை தப்பித்து பாம்பின் விஷம்  மண்டையோட்டில் விழுந்தது. பாம்பின் விஷம் கலந்த அந்த தண்ணீரில் இருந்து மருந்து தயாரித்து கொடுத்து தன் மகனைக் காப்பாற்றினான் அந்த ஏழை. இறைவா! கனவிலும் நினைத்து பார்க்க கூட  முடியாத செயல்கள் உன் அருளால் நடக்கின்றன. நம்ப முடியாத அதிசயங்கள் உன் அருளால் நடக்கின்றன என்று மனம் உருகி வேண்டினான்.
   அந்த ஏழையைப் போல இறைவனை உண்மையில் நம்புகிறவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை காணலாம்.
  இது கதை! இப்படி ஒரு வைத்தியம் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள்! ஆனால் அந்த ஏழை நம்பினான் நடந்தது. நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்  தன்னம்பிக்கையுடன் செயல் பட்டு வெற்றிக்கனிகளை பறிப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும் //உண்மைதான்

    ReplyDelete
  2. என்னமோ சொல்றீங்க.... கடைசியா நம்பிக்கைன்னு சொன்னீங்கல்ல அதை நம்பறேன்...

    ReplyDelete
  3. அந்த ஏழையைப் போல இறைவனை உண்மையில் நம்புகிறவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை காணலாம்.//

    உண்மை முயற்சியும் இறைபக்தியும் இருந்தால் சாதிக்கலாம், வெற்றி பெறலாம்.
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2