அம்மான்னா சும்மா இல்லேடா! கதம்ப சோறு!



அம்மான்னா சும்மா இல்லேடா!

நேற்று காவிரி தந்த கலைச்செல்வியின் 65வது பிறந்த நாள். இன்று நட்சத்திரப்படி பிறந்த நாள். நேற்றுதான் அம்மாவின் விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் பிறந்த நாள் தினம் தோறும் இருக்கக் கூடாதா என்ற அளவிற்கு பேராசையும் எழுந்தது. அதில் தவறொன்றும் இருப்பதாகவும் நான் கருதவில்லை! ஆமாங்க! தீபாவளி, பொங்கல், வருசபிறப்பு அன்னிக்கு கூட ஒருமணி நேரமாவது கரண்ட் கட் பண்ணாங்க! ஆனா நேத்து காலையில ஆறுமணியில இருந்து ராத்திரி பத்து மணி வரை கரண்ட் கட்டே ஆகலைங்க! அம்மாவின் பிறந்தநாளுக்கு இந்த மாதிரி ஒரு பரிசை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க! ஆனா என்ன பிரயோசனம்? நேத்து டீவிக்களிலே மொக்கை படங்களா போட்டு அறுத்து எடுத்துட்டாங்க! அதுவும் ஜெயா மூவிலே கூட அம்மா படம் போடாம டாக்டரு விஜய் படம் மதுர போட்டு கொலை பண்ணிட்டாங்க! அந்த படம் கொஞ்ச நேரம் பார்த்த பாதிப்புல பாதி இரவு தூங்காம ஒரே அஜீரண கோளாறா போயிருச்சுங்க!   இப்படியே தினம் பிறந்த நாள் கொண்டாடி கரண்ட விடுவாங்கன்னு எதிர்பார்த்தா இன்னிக்கு காலங்கார்த்தாலேயே மீண்டும் கட் ஆயிருச்சு மின்சாரம்!

தொடரும் ஆசிட் வீச்சுக்கள்!

   வினோதினி இறந்து சில தினங்களே ஆன நிலையில் மீண்டும் ஒரு மரணம். ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு வித்யா இறந்த செய்தி நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. வினோதினி தாக்கப்படும் போதே பதிவு செய்ய நினைத்தும் சோம்பேறித்தனத்தால் ஏதும் பதிவிடாமல் விட்டுவிட்டேன். இந்த இண்டர்நெட் யுகத்தில் காதலின் பரிமாணம் மிகவும் மாறிவருகிறது. காதல் மென்மையானது. அதில் முரட்டுத்தனம் கூட மென்மையாகத்தான் இருக்கும். பழைய பாலச்சந்தர், பாரதி ராஜா படக் காதல் போல அல்லாமல் இப்போதைய ரவுடியை காதலிக்கும் காதல் படங்கள்  காதலில் வன்முறையைக் கலந்துவிட்டன. ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் தற்கொலை செய்து கொண்ட காலம் போய் அவளை கொலை செய்வது ஆசிட் வீசுவது என்று வன்முறை அளவுக்கு மீறிவிட்டது. இது காதலே அல்ல! வெறிபிடித்த செயல்! இதை காதல் என்று கொச்சைப்படுத்தாமல் இது போன்ற கொலை வெறியர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்கள் மீது தொடரும் இந்த தாக்குதல்கள் பற்றி அவர் முதல்வர் ஏதும் இது வரை பதில் சொல்லவில்லை! அவரின் பார்வைக்காவது இந்த செய்தி போனதா தெரியவில்லை! விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்ப்போம்!

நூறு நாள் திட்டமும் சோம்பேறிகளும்!
   தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் முழுச்சோம்பேறிகளை உருவாக்கி வருகிறது மத்திய அரசு! இப்போது இந்த திட்டம் 150 நாள்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் யாதொரு பயனும் ஏற்படவில்லை! வயல் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரநடவு என்ற முன்னேற்றத்தை மட்டுமே இந்த திட்டம் கொண்டு வந்துள்ளது. இதில் பயனாளிகள் அனைவருமே பெரும்பாலும் பெண்கள். காலை ஒன்பது மணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு மண்வெட்டி  சட்டியுடன் வந்து  ஏரி குளம் தூர் வாருகிறேன் பேர்வழி என்று வந்து பேருக்கு ஒரு மணி நேரம் மண் வெட்டி எடுத்து வேலை செய்கிறார்கள். பின்னர் மர நிழலில் அமர்ந்து ஊர்க் கதை பேசி மூன்று மணிக்கு வீட்டுக்கு செல்கிறார்கள். இதற்கு கூலி இப்போது வங்கிகள் மூலம் வழங்கப் படுவதால் வழக்கமான வங்கி பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எழுத்தறிவில்லாத இந்த கூலித்தொழிலாளர்களை வங்கி அதிகாரிகள் அலைகழிப்பது அதைவிட கொடுமை. இதை முறைப்படுத்தி  ஒழுங்க படுத்தினால் திட்டம் பயனுள்ளதாய் மாறும். ஆனால் ஓட்டு என்னும் இயந்திரம் அதை அறுவடை செய்ய விடாது போல தோன்றுகிறது.

நம்பிக்கை நட்சத்திரம்: 
  காரைக்கால் பள்ளி மாணவன் ஒருவன் சூரிய ஒளி மருந்து தெளிப்பான் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளான். மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியும் ஆர்வமும் அதிகரிப்பது நல்ல செயல். மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.
வாழ்த்துக்கள் முகேஷ்.

சபாஷ் தோனி!

  கடந்த இரண்டு மூன்று தொடர்களாக சறுக்கிவந்த இந்திய கேப்டன் தோனி  சென்னை டெஸ்டில் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். இன்றைய நாளிதழ்கள் ஆகா! ஓகோ என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதே நாளிதழ்கள்தான் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபோது கடுமையாக விமரிசித்தன.  விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது நம் நாட்டில்தான். உதாரணமாக பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டால் நாலைந்து பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். கிரிக்கெட் மட்டும் விளையாட்டு அல்ல! எத்தனையோ நல்ல விளையாட்டுக்கள் கிரிக்கெட் மோகத்தால் மறைந்து வருகின்றன. ஒலிம்பிக்கில் நமக்கு சில பதக்கங்களை பெற்றுத்தந்த மல்யுத்தம் கூட அடுத்த ஒலிம்பிக்கிற்கு பிறகு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் கிளம்பியதாக தெரியவில்லை! ஆனால் கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால் மட்டும் தேசத்தையே இழந்துவிட்டது போல அப்படி கொந்தளித்து போகின்றனர் மக்கள்.  பார்மை மீட்ட தோனி இந்த இன்னிங்சில் இரட்டைசதம் அடித்து சச்சின் சாதனையும் முறியடித்து தன் மீதான விமர்சனங்களை முறியடித்து விட்டார். அஸ்வினும் சிறப்பாக பந்துவீசி சாதித்துள்ளார்.  வெல்டன் தோனி!
                                                                        டாக்டர் பில்!
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாராயணசாமி ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் குணமடைந்ததும், மருத்துவர் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்தார்.
பில் தொகை மிக அதிகமாக இருப்பதாக நாராயணசாமி சொன்னார்.

மருத்துவர் சொன்னார்,

"
நான் சிகிச்சைக்காக 15 முறை உன் வீட்டிற்கு வந்துள்ளேன்.ஊசி போட்டிருக்கிறேன்.மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன்அதை எல்லாம் கணக்கு பார்த்தான்நான் குறைவாகவே கேட்கிறேன்"
அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
நான் உடல் நலமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க வந்த பத்துப் பேருக்கு என் நோயைப் பரப்பி அவர்கள் தற்போது உங்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார்களேஅதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டர்."
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பல்சுவை விருந்தும் தகவல்களும் அருமை...!

    ReplyDelete
  2. தொடரும் ஆசிட் வீச்சுக்கள் மனதை கலங்கச் செய்கின்றன.

    ReplyDelete
  3. நூறு நாள் வேலை திட்டம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.யாராவது இந்த பூனைக்கு மணி கட்டுவார்களா என்று காத்திருந்தேன் அதை மிக சிறப்பாக நீங்கள் செய்து விட்டீர்கள்.இந்த வேலைக்கு சம்பளம் வாங்கும் எவருக்கும் காசு செரிக்காது.அவ்வளவு மெத்தனம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2