வேலூர் விஜயம்!
சமீபத்தில் சென்ற சனிக்கிழமையன்று
வேலூர் குடியாத்தம் சென்று வந்ததாக கூறியிருந்தேன். வேலூர் அடுத்த குடியாத்தம் நெல்லூர்
பேட்டை மாசுபடா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற
ப்ரத்யங்கிரா யாகத்திற்கு சென்று விட்டு அப்படியே என் அத்தை வீட்டிற்கும் சென்று வந்தேன்.
இடையில் ஒரு ஆயுர்வேத டாக்டரிடம் உடல் பரிசோதனையும் செய்து கொண்டேன்.
நெல்லூர் பேட்டை மாசுபடா மாரியம்மன் ஆலயம் மிகவும்
பழமையானது. அம்மன் கழுத்துவரைதான் இருக்கும். அம்மை நோய் தாக்கியவர்கள் இங்கு வந்து
தங்கி வழிபட்டால் விரைவில் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. மிகச்சிறிய ஆலயமாக இருந்த
இதை என் சித்தப்பா சென்று சீர்படுத்தி இப்போது சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய ஆலயங்களுள்
ஒன்றாக மாற்றியமைத்துள்ளார்.
ப்ரத்யங்கிரா யாகம் என்பது மிளகாய் யாகம் என்றும்
அழைக்கப்படுகிறது. இதை பிரபலப்படுத்தியது நமது
முதலமைச்சர் ஜெயலலிதா .ஆட்சி இழந்த போது அடிக்கடி சென்று மிளகாய் ஹோமம் செய்து
மீண்டும் ஆட்சியை பிடித்தார்.
மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்கையில் அவரது
உக்கிரம் அதிகரித்தது. அதனால் பூலோகம் தத்தளிக்க
சிவன் மனித உருவமும் சிங்கம்( யாளி) முகமும் பெரிய இறக்கைகள் கொண்ட ஒரு அவதாரம்
எடுத்து நரசிம்மத்தின் ஆவேசம் தணித்தார். அப்போது அவரது இரண்டு இறக்கைகளாக துணைவியாராக
வந்தவர்கள்தான் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி.
இந்த யாகம், தீவினை, செய்வினை, திருஷ்டி தோஷம் விலக
செய்யப்படுகிறது. யாகத்தில் ப்ரத்யங்கிரா தேவியை ஆவாஹணம் செய்து பல விசேஷ திரவியங்களில்
யாகம் செய்து இறுதியாக மூட்டைக் கணக்கில் மிளகாய் யாகத்தில் போடப்படும். துளி நெடி
கூட எழாது. நமது வீட்டில் தாளிக்கும் போதே நெடி பட்டையை கிளப்பும். இந்த மிளகாய் எரிந்து
சாம்பலாவது போல நமது தோஷங்களும் சாம்பாலாகும் என்பது நம்பிக்கை.
இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு இரவு 12 மணிவரை விழித்திருந்து கலசாபிஷேகம் பார்த்து அம்மன் தரிசனம் செய்து சென்றார்கள். இந்த யாகத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி
அளித்தது.
பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்பி வேலூர்
வந்தேன். என் தங்கை கணவர் வண்டியில் வேலூர் வந்தேன். அது ஸ்போர்ட்ஸ் பைக். அதில் அவர்
80 கி.மீ வேகத்தில் வண்டியை செலுத்த எனக்கு
அல்லு இல்லை. உயிர் எனது இல்லை என்பது போல இருந்தது பயணம். கண்களில் தாரையாக நீர் கொட்டியது.
முக்கால் மணி நேரத்தில் வேலூர் வந்து விட்டோம்.
வேலூரில் எனது அத்தை வீட்டில் ஞாயிறு அன்று தங்கும்
படி ஆயிற்று. அன்று டாக்டர் விடுமுறை ஆதலால் திங்களன்று பார்த்துக் கொண்டு செல் என்று
கூறிவிட்டார் அத்தை. எங்கள் மாமா ஒரு ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர். மிகுந்த கஷ்டப்பட்ட
குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு வந்தவர். அவர் படித்த காலத்தையும்
வேலைக்கு தேடிய அனுபவங்களையும் அன்று முழுக்க கதை கதையாக கூறினார்.
அதில் அவர் கூறிய கதை ஒன்றை இப்போது பகிர்கிறேன்.
அவர் பத்தாம் வகுப்பு தேறியது அப்போதெல்லாம் பியுசி காலேஜில் சேர வேண்டுமாம். திருவள்ளூர்
அருகே புதுமாவிலங்கை அவரது கிராமம். அங்கிருந்து அவர் படிக்க வசதி இல்லாமையால் ஆண்டார்குப்பம்
பெரியப்பா வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
அங்கு அவரது பெரியப்பா ஆண்டார்குப்பம் முருகன்
கோயில் குருக்கள். அதனால் அவர் மூலம் பொன்னேரி காலேஜில் சேர முயற்சித்துள்ளார். கோயிலுக்கு
வரும் கல்லூரி உதவியாளர் ஒருவரை அவரது பெரியப்பாவிற்கு தெரியும். கல்லூரிக்கு சென்று
இருக்கிறார்கள். இவர் முன்னூற்று சொச்சம் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். கல்லூரிக்கு
விண்ணப்பமும் போட்டிருக்கிறார். ஆனால் அட்மிசன் கிடைக்கவில்லை.
கல்லூரி பிரின்ஸ்பாலை சந்தித்து விவரம் கூறியிருக்கிறார்கள்.
அப்படியா பார்ம் போட்டும் உனக்கு சீட் கிடைக்கலியா? இதைவிட கம்மி மார்க் எடுத்தவங்களுக்கு
கூட நேத்து அட்மிசன் போட்டோமே? நீ புதுசா ஒரு பார்ம் போட்டு சேர்ந்துக்கிறியா? என்று
கேட்டிருக்கிறார். இதற்குள் அந்த உதவியாளர் ஐயா நான் இவர் பார்மை தேடிப்பார்க்கிறேன்
என்று அலுவலகத்திற்கு சென்று தேடியுள்ளார் பத்து நிமிட தேடலில் நிராகரித்தலிஸ்டில்
இவரது விண்ணப்பம் கிடந்துள்ளது. அதை எடுத்துவந்து கொடுத்துள்ளார்.
அப்போதே அட்மிசன் செய்து விட்டாராம் பிரின்ஸிபால்.
உடனே நூற்றைம்பது ரூபாய் அளவிற்கு பீஸ் செலுத்த வேண்டியிருந்திருக்கிறது. இவரிடமோ
100 ரூபாய்தான் இருந்திருக்கிறது. அவரது பெரியப்பா உதவியாளரிடமே ஒரு ஐம்பது ரூபாய்
கடன் வாங்கி உள்ளார். இதோ பாரு! நாளைக்கு பையன்
கிட்ட நூறு ரூபாவா கொடுத்தனுப்புவேன் வாங்கிக்கனும் என்று சொல்லி வாங்கியுள்ளார். அப்புறம்
இவர்களிடம் உள்ள பணத்தினை எண்ணியதில் இருபத்தைந்து ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. அதனால்
இருபத்தைந்து ரூபாயை மட்டும் கடன் வாங்கி நாளைக்கு ஐம்பது ரூபாயா திருப்பி கொடுத்து
அனுப்புவேன் வாங்கிக்கணும் என்று கறாராக கூறியுள்ளார். துட்டை எண்ணத்தெரியலை! நீ எல்லாம்
என்னத்தை படிச்சி கிழிக்கப் போறே என்று மாமாவுக்கு வேறு திட்டாம்.
எப்படியோ அட்மிசன் வாங்கியாகிவிட்டது! மறுநாள்
கல்லூரிக்கு சென்று அந்த ரூபாயை கொடுத்தால் அந்த உதவியாளர் வாங்கிக் கொள்ள மறுத்தாராம்!
யாருக்கு கொடுத்தேன் நம்ம சாமிக்குத்தானே!
வேண்டாம் என்றாராம்.
இவரோ ஐயா! நீங்க வாங்கிக் கொள்ளா விட்டால் நான்
வீட்டுக்கே போக முடியாது! இதை கொடுக்காமல் வீட்டுப்படி மிதிக்க கூடாது என்று என் பெரியப்பா
சொல்லி விட்டார் என்று கூறியுள்ளார்.
அப்படியும் அந்த உதவியாளார் அப்ப நீ செலவு பண்ணிக்கோ!
என்று வாங்க மறுத்துள்ளார். இவருக்கு அப்படி செய்ய பயம்! அதனால் உதவியாளர் ஏமாறும்
சமயம் அவரது சட்டைப்பையில் பணத்தை போட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று வேகமாக ஓடி
வந்து விட்டாராம்.
அடுத்த சமயம் அந்த உதவியாளர் கோயிலுக்கு வரும் போது
பையன் ஒழுங்கா பணத்தை கொடுத்தானா என்று அவரது பெரியப்பா விசாரிக்கவும் உதவியாளார் கொடுத்தான்
என்று சொன்னதும்தான் இவருக்கு நிம்மதி ஆயிற்றாம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் அந்த வருடம் கணக்கில்
கோட்டை விட்டுவிட்டாராம் மாமா!
அப்புறம் எப்படி படித்தார்?
மற்றுமொரு சந்தர்ப்பத்தில்
அதை கூறுகிறேன்! அந்தக்கால நிகழ்வுகள் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து
கொள்ளுங்கள்! நன்றி!
நல்ல பகிர்வு சுரேஷ், நன்றி.
ReplyDeleteசுவாரஸ்யமாகத் தான் உள்ளது... அடுத்த பகிர்வு எப்போது...?
ReplyDeleteசுடச்சுட கருத்தளித்த தனபாலன், கும்மாச்சி இருவருக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து பகிர்ந்து விடஆசைதான்! மின்சாரம் தான் போயிருச்சு!
ReplyDeleteபழைய நினைவுகள் சொல்லல்..கேட்டல்..இனிமையான தருணம் !
ReplyDeleteஓ.. எங்க ஊர் பக்கம் வந்து போயிருக்கிங்க.. வணக்கம்! நன்றி!
ReplyDelete