முன்னேறிச் செல்! பாப்பாமலர்


முன்னேறிச் செல்!  பாப்பாமலர்
{ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளில் இருந்து தழுவல்}


ஒரு ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் அதிகாலை காட்டுக்குச்சென்று விறகுகளை வெட்டி சேமித்துக் கொண்டு வந்து அதை விற்று அன்றைய பொழுதை கழிப்பான். சுருக்கமாக சொன்னால் அன்றாடம் காய்ச்சி. விறகு என்றாவது ஒருநாள் விற்காமல் போய் விட்டால் அவனுக்கு அன்று பட்டினிதான். அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். அவர்களும் பட்டினியால் தவிப்பர். இந்த நிலை மாறாதா? என்று ஏங்கி வந்தான் அவன்.
   இப்படி ஒருநாள் காட்டில் விறகுவெட்டிக்கொண்டிருந்தபோது அந்த வழியே சென்ற சன்னியாசி ஒருவர் இவனைப் பார்த்து, “இன்னமும் முன்னேறிச் செல்” என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டார். அன்றிரவு அவன் தூங்கும் போது சன்னியாசி சொன்னாரே! இன்னும் முன்னேறிச் செல்! என்று எதற்காக சொல்லியிருப்பார்? நாளை இன்னும் கொஞ்சம் தூரம் காட்டுக்குள் போய் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
   மறுநாள் காட்டுக்குள் அவன் விறகு வெட்டும் இடத்தை விட்டு இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளே சென்றான். அங்கே சந்தன மரங்கள் இருந்தன. அந்த மரங்களை வெட்டிச் சேகரித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். நல்ல விலைக்கு மரங்களை விற்று மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தான். இப்போது அவன் நிலை உயர்ந்திருந்தது. ஒருவருடம் ஓடியது. சன்னியாசி சொன்னது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது அவனுக்கு. முன்னேறிச் செல் என்று தானே சொன்னார். எதுவரையில் போகவேண்டும் என்று சொல்லவில்லையே? நாளை இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்போம் என்று ஒருநாள் முடிவு செய்தான்.
 அதன்படி அடுத்த நாள் வெகுதூரம் காட்டுக்குள் சென்றான். தாமிரச் சுரங்கம் ஒன்று இருப்பதை கண்டு அங்கிருந்து தாமிரங்களை வெட்டி எடுத்து வந்து விற்றான். சில நாளில் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனாலும் சன்னியாசியின் சொல்லை அவன் மறக்க வில்லை! இன்னும் சில மாதங்கள் கழிந்ததும் மீண்டும் அந்த விடத்தை விட்டு வெகுதூரம் உள்ளே முன்னேறிச் சென்றான். அவன் முயற்சி வீண் போகவில்லை!
  காட்டின் உட்பகுதியில் ஓர் ஆற்றின் அருகே வெள்ளிச் சுரங்கம் ஒன்று இருப்பதைக் கண்டான். அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை!முன்னேறிச் செல் என்ற வாக்கியம் தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை உணர்ந்து அந்த சன்னியாசிக்கு மனதால் நன்றி கூறினான். வெள்ளிகளை வெட்டி எடுத்து வந்து விற்றான். அந்த ஊரிலேயே பரம ஏழையாக இருந்த அவன் பெரிய பணக்காரனாக மாறிவிட்டான்.
  இதற்கெல்லாம் காரணம்  முன்னேறிச் செல் என்ற சன்னியாசியின் ஒற்றை வார்த்தை!
தொடர்ந்து முன்னேறவேண்டும் என்ற ஒரு தளராத ஊக்கம் இருப்பின் அனைவரும் முன்னேறுவர்.
இந்த கதையை கேட்டார் ஒருவர்! அவர் கடைகளுக்கு சில்லரை சேகரித்துக் கொடுப்பவர். நூறு ரூபாய் சில்லரைக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும். ஏதோ அவரது காலம் தள்ளிக் கொண்டிருந்தது.
   சரி! நாமும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது என்று முன்னேறிச் செல்வோம்! என்று  கிழிந்த நோட்டுக்களை மாற்றித்தர ஆரம்பித்தார். அதுவரை அவருக்கு நல்ல புத்தி இருந்தது. அப்போதுதான்  அவரது கோணல் புத்தி ஆரம்பித்தது. நோட்டு மாற்றலாம் என்று கள்ள நோட்டை மாற்றினார்.
  அப்போதும் தப்பித்துக் கொண்டார். பின்னர் நோட்டு அடிக்க ஆரம்பித்து வசமாக மாட்டிக் கொண்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.
 முன்னேறிச் செல் ஒரு வாசகம் ஒருவனை பணக்காரனாக்கியது! அதே வாசகம் மற்றவனை சிறையில் தள்ளியது!
  என்ன காரணம் தேர்ந்தெடுத்த வழிதான்!
கமிஷன் ஏஜெண்ட் சில்லறை மாற்றிக் கொண்டிருந்தவர் முன்னேற வேண்டுமானால் தொழிலை பெரிதாக்கி இருக்க வேண்டும். வீடு புரோக்கர் கல்யாண புரோக்கர் என்று அதை மாற்றியிருக்க வேண்டும் அதை விடுத்து நோட்டு அடித்து தவறாக திட்டமிட்டு இன்று சிறையில் இருக்கிறார்.
  ஆகவே நண்பர்களே! செயல் நல்ல செயலாக இருந்தால் தான் முன்னேற்றம் வரும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நம் மனம் அடிக்கடி நமக்கு அறிவுறுத்தும் வாசகம் இது.
    அருமையான படிப்பினை ஊட்டும் கதை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2