வேலூர் விஜயம்! 4


வேலூர் விஜயம்! 4


வேலூர் சென்று வந்த கதை என்ற பெயரில் என் மாமாவின் பழைய நினைவுகளை மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன்! வாசகர்கள் பொறுத்தருள்க.
      யூத் சர்வீஸீசில்  திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்த மாமாவிற்கு ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யூத் சர்வீஸில் இருப்பவர்கள் அனைவரும் திமுக காரர்கள் என்று வேலையை விட்டு நீக்கி விட்டிருக்கிறார்கள். அடுத்த பி.டி.ஒ என்ற கனவில் இருந்தவர்கள் ஒரே நாளில் வேலையை இழந்து தவித்து இருக்கிறார்கள். அன்றும் பலர் இதனால் தற்கொலை வரை சென்று இருக்கின்றனர்.
   ஆனாலும் மாமா மனம் தளரவில்லை! மீண்டும் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு வந்துவிட்டார். இதனிடையே வேலைஇழந்தவர்கள் வழக்குத் தொடுக்க ஒரு தேர்வு வைத்து தகுதியானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதினார் மாமா. தேர்வுமுடிவுகள் வந்தன. மாமா தேர்ச்சி பெற்று விட்டார். என்ன இன்னும் ஒரு மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று இருந்தால் நேரடியாக செகரட்டரியேட் பணியிடம் கிடைத்திருக்கும். சரி கஷ்டப்பட்டதற்கு ஏதோ கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டது என  மகிழ்ந்தபோது அவருக்கு பணியிடம் தொலை தூரத்தில் வழங்கப்பட்டது.
   அவரது அண்ணா வேலூரில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் வேலூரிலேயே பணியிடம் கிடைக்கும். ஆனால் அவர் சிபாரிசு செய்ய மறுத்துவிட்டாராம். கவர்மெண்ட் வேலை எங்கிருந்தால் என்ன? நான் ஜாய்ன் பண்ணிக் கொள்கிறேன் என்று இவரும் பிடிவாதம் பிடித்தாராம்.
   இறுதியில் வேலூரிலேயே வேறொருவர் சிபாரிசின் படி இவருக்கு போஸ்டிங் வழங்கப்பட்டது. தாசில்தார் அலுவலகத்தில் வேலை. வருவாய்த்துறை அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டது. வேலூர் சத்தியவிஜயநகரத்தில் ஆர் ஐ ஆக பணியாற்றியுள்ளார்.
    மிகவும் நேர்மையாகவும் கண்டிப்பானவராகவும் இருந்துள்ளார். இவரிடம் பெரிய அதிகாரிகளுக்கே ஒரு மரியாதை உண்டாம். அப்போது பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமாம். விவசாயிகள் பலர் ஆழ்துளை கிணறு அமைக்க தாசில்தார் அலுவலகம் வருவார்களாம். இவர்களிடம் பணம் கறக்க எளிதில் அனுமதி கொடுக்க மாட்டார்களாம் அதிகாரிகள்.
   ஓர் ஏழை விவசாயி பலமுறை அலுவலகத்திற்கு படையெடுத்து இறுதியில் இவரிடம் வந்தாராம். சார்! இத்தனை வருசமா எனக்கு அனுமதி கொடுக்காம இருக்காங்க! நீங்கதான் பாத்து செய்யணும். ஏதாவது பணம் வேணுமின்னாலும் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இவருக்கு கோபம் வந்து விட்டதாம். எல்லா ரெகார்டும் ஒழுங்கா சப்மிட் பண்ணிட்டீங்கன்னா நான் இன்ஸ்பெக்ஷன் பண்ணி  தாசில்தாருக்கு அனுப்பி விடறேன் எனக்கு எந்த பணமும் வேணாம் என்று கறாராக கூறியவர். அவரது கோரிக்கையை பரிசீலித்து தாசில்தாருக்கு  அனுப்பி விட்டாராம்.
   அங்கு வெகு சுலபத்தில் பர்மிசன் கிடைத்து அவர் போர் போட்டுவிட்டாராம். உங்களால்தான் நான் போர் போட முடிந்தது என்று நூறு ரூபாயை எடுத்து கொடுக்க வந்தாராம். இவர் மறுத்து என் வேலையைத்தான் நான் செஞ்சேன். இந்த மாதிரி பணம் கொடுக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே என்று மறுத்து அனுப்பினாராம். அந்த விவசாயி அப்போது சென்று விட்டாலும் பின்னர் வயலில் விளையும் காய்கறிகள் போன்றவற்றை இவரது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்து இதையாவது மறுக்காம வாங்கிக்கணும் என்று  கட்டாயப்படுத்தி கொடுத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்து வேலூருக்கு இவர் மாற்றலான போது பெரும்பாலான விவசாயிகள்  இவரை கண்ணீர் மல்க வழியனுப்பினார்களாம்.
     இப்படி கஷ்டப்பட்டு வருவாய்த்துறையில் சேரும்போதே வயது முதிர்ந்து விட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. மாமனார் வருவாய்த்துறை கையை நீட்டிட போறே! புள்ளக்குட்டிங்க எதிர்காலம் பாழாயிரும்! என்று அடிக்கடி எச்சரிப்பாராம்!  
    இவர் இப்படி இறுதியில் ஓய்வு பெறும் வரையில் அதிகாரிகள் பாராட்டும் படி பணி செய்து வந்தாலும் இப்போது அவருக்கு ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இவருக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் இவரை முந்தி தாசில்தார் அளவுக்கு  புரமோசன் பெற்றுவிட்டு சென்றுவிட இவர் டெபுடி தாசில்தாராக ஓய்வு பெற்று இருக்கிறார்.
  காரணம் இட ஒதுக்கீடு! திறமையானவர்களை பின்னுக்கு தள்ளும் இந்த இடஒதுக்கீடு குறித்து இவர் வருத்தப்பட்டு பேசினார். இவருக்கு ஜீனியர் ஆன ஒரு அதிகாரி எதுவென்றாலும் இவரை கேட்டு செய்பவர் கூட இவரை முந்தி தாசில்தார் ஆகிவிட்டாராம். என்ன சார்! நீங்க? உங்களுக்கு புரமோசன் கிடைக்கலியே? என்று அவர் வருத்தப்பட்டாராம்.
   இது உண்மைதானே! பிற்படுத்தப்பட்டோர்களுக்கு உதவி  முன்னேற்றுவது அவசியம் தான்! அதே சமயம் இட ஒதுக்கீடு என்று பிரித்து திறமையானவர்களை பின்னுக்கு தள்ளுவது என்ன நியாயம்? ஒரு துணைக் கலெக்டராக மாறி இருக்க வேண்டியவர் இட ஒதுக்கீட்டினால் துணை தாசில்தாராக ஓய்வு பெறவேண்டிய கட்டாயம்.
   இருந்தாலும் அவரது விடாமுயற்சியால் இன்று அவரது மகன்கள் நல்ல வேலையில் உள்ளனர். இந்த இட ஒதுக்கீடு காரணமாகவே அவரது மூத்த மகன் கவர்மெண்ட் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இன்று பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அவர். இன்னொரு மகன் துபாயில் கப்பல் கம்பெனியில் வேலை செய்கிறார்.
  எப்படியோ கஷ்டப்பட்டு மகன்களை நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட்டேன்! இனி கல்யாணம் முடித்துவிட்டால் சந்தோஷப்படுவேன் என்று தன் கதையை முடித்தார் மாமா.

சீக்கிரம் நல்லது நடக்கட்டும்!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இடஒதுக்கீடு இருப்பதால் எல்லோரும் பதவி உயர்வுக்கு வரமுடியாது ,அவர்களும் போட்டிபோட்டுத்தான் உயர்வுடன் வருகிறார்கள்.எத்தனையோ பேர் இன்னும் இடஒதுகீட்டின்மூலம்பதவி உயர்வு கிடைக்காதவர்களும் உள்ளனர்.
    திறமை உள்ள அனைவருக்கும் மீதிஇடம் உள்ளதே அதில் வர முயற்சி செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! இடஒதுக்கீட்டினால் எல்லோரும் பதவி உயர்வு பெற முடியாது. அதே சமயம் திறமை உள்ளவர்களுக்கு மீதி இடம் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஏற்க முடியாது. ஒரு அரசு பணியில் குறிப்பிட்ட சதவீதத்தில் ஒதுக்கீடு முடிந்த பின்னரே ஓசி பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த பதவி ஒன்றோ இரண்டோ இருக்கும். அதனால் ஒதுக்கீட்டில் பிறருக்கு போய்விடும். மீண்டும் அடுத்த சுற்று வரும் வரை காத்திருக்க நேர்கிறது. அதே போல்தான் மதிப்பெண் அடிப்படையிலும். இது தவறான அணுகுமுறை என்பது என்னுடைய கருத்து.

      Delete
  2. எனக்குத் தெரிந்து பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இதுவரை இல்லை. பணி நியமனத்தில் மட்டுமே உண்டு.ஆனால் கூடிய விரைவில் வந்துவிடும்.பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2