அப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கீரே! பாப்பாமலர்!


அப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கீரே! பாப்பாமலர்!

ஒரே ஒரு பூனை. அதற்கு வயசாகிவிட்டது. நினைத்தபடி  ஓடி ஆடி குதிக்க முடியவில்லை. ஆள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்து சமையலறைக்குப் போய் உறியை தாவ முடியவில்லை. எலிகளை ஓடிபிடிக்கமுடியவில்லை. அதன் நகங்கள் எல்லாம் மழுங்கிவிட்டன. கண்கூட சரியாகத்தெரியவில்லை.
   நினைத்தபடி ஓடியாடி திரிய முடியாவிட்டாலும் தனக்கு வேண்டிய உணவை தேடிக் கொள்ள வேண்டுமே நாலு வீடுகளில் புகுந்து யார் ஏமாந்து இருக்கிறார்கள் என்று கவனித்தால் தானே அதற்கு ஆகாரம்? அயர்ந்து மறந்து எங்காவது எலி தலையைக் காட்டினால் தான் புலியைப் போல் பாய்ந்து பற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்கு கூட சக்தியில்லாமல் இருந்தது அந்த கிழட்டு பூனை!
  ஊகும்! அந்த கிழட்டு பூனையால் இருந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை! கையையும் காலையும் நீட்டி சோம்பல்தான் முறிக்க முடிந்தது. இப்படியே இருந்தால் அதற்கு சாப்பாடு வேண்டாமோ? அந்த பூனையின் மனைவிப்பூனை எப்போது இறந்து போய்விட்டது. அது இருந்தாலாவது புருஷன் பூனைக்கு இரண்டு எலிகளை பிடித்துவந்து கொடுக்கும். இப்போது அதுவும் இல்லை.வீதியிலே வீசப்படும் எச்சில் இலைகளை தடவி அங்கு சிதறிக் கிடக்கும் ஒன்றிரண்டு பருக்கைகளை தின்று உயிர் வாழ்ந்து வந்தது அந்த பூனை. அதற்கு பொல்லாத நாய்களிடம் இருந்து தப்பித்தாக வேண்டும். நடுவீதியில் பூனை இலையை நக்கிக் கொண்டிருக்கும் சமயம் நாய்கள் பார்த்து விட்டால் வேறு வினையே வேண்டாம். அதனிடமிருந்து தப்பிப்பது பெரிய பாடாகிவிடும்.
   எந்தவிதமாகவும் தனக்கு வேண்டிய ஆகாரம் கிடைக்காமையால் பூனை கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் இருந்தது. கடைசியில் ஒரு தந்திரம் செய்ய முடிவு செய்தது. மிகவும் நல்ல பிராணி போல சாமியார் வேஷம் போட்டால் எலிகள் தன்னிடம் பயம் இல்லாமல் நெருங்கும். எளிதாக பிடித்து உண்டு விடலாம் என்று முடிவு செய்தது. அது முதல் அது கழுத்தில் ஒரு ருத்திராட்சத்தை மாட்டிக் கொண்டு அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டது. அதைப் பார்த்தால் வயதான சன்னியாசி தியானத்தில் இருப்பது போன்று இருந்தது.
உட்கார்ந்தபடியே தூங்குவது போல அது பாசாங்கு செய்த அது அடிக்கடி வாயைத்திறந்து கொட்டாவி விட்டுக் கொண்டது, நடுநடுவே தூக்கத்தால் சாய்வது போலவும் பாசாங்கு செய்தது. இப்படி சில நாட்கள் ஓடியது. “ இதென்ன ஆச்சர்யம்! இந்த பூனை தியானத்தில் இருக்கிறதே!” என்ற படி சில குட்டி எலிகள் பூனையிடம் நெருங்கி வந்தன. பெரிய எலிகளோ அங்கே போகாதீர்கள் பூனையின் வேசம் இது! ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்தன.
   பூனைக்கு எலிகளை பிடித்து உண்ண ஆசை அதிகமிருந்தாலும் அலட்டிக் கொள்ள வில்லை! அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ள கூடாது என்று அது இடத்தை விட்டு அசையவில்லை! தன் வேஷத்தை  கலைத்து விடக்கூடாது கொஞ்சம் பொறுமை காப்போம்! இன்னும் சில நாள் காத்திருப்போம் என்று அப்படியே ஒன்றும் செய்யாமல் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது.
   எலிக் குஞ்சுகளுக்கு ஒரே கொண்டாட்டம்! வளைக்கு வெளியே வந்து கும்மாளம் அடித்தன. பெரிய எலிகளின் பேச்சை காதில் வாங்காமல் பூனையின் அருகில் வந்து விளையாடின. இந்த பூனை அசடு! இதற்கு கண் தெரியவில்லை! நான் ஓடிப் போய் அதன் கால்களை கடித்து வரட்டுமா என்றது ஒரு எலி! இன்னொன்றோ நான் அதன் மீசையை பிடித்து இழுத்து பார்க்கலாம் என்றிருக்கிறேன் என்றது. இந்த பேச்செல்லாம் கேட்டு பூனைக்கு கோபம் வந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தது. அவசரப்பட்டு காரியத்தை கெடுக்கலாமோ? இன்னும் போகட்டும் என்று செவிடு போல அமைதியாக அமர்ந்திருந்தது.
  இரண்டு நாட்கள் ஓடின. எலிக்குஞ்சுகளும் இன்னும் தைரியம் அதிகமாகி பூனையின் அருகேயே சென்று அதன் மீது குதித்து விளையாடின. இப்போதும் பூனை சும்மா இருந்தது. பத்து எலிகள் இருபது எலிகள் என்று கூட்டம் கூட்டமாக பூனையின் அருகில் வந்து விளையாட ஆரம்பித்தன. இப்போது பூனை உஷார் ஆனது. அதற்கு ஆசையை அடக்க முடியவில்லை! மெதுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு எலியை லபக்கென பிடித்து விழுங்கி விட்டது. கூட்டத்தில் கணக்கு தெரிய வில்லை! அதனால் விஷயம் வெளியே போக வில்லை! இப்படியே பத்து நாள் பத்து எலிகளை விழுங்கி விட்டது பூனை.
  அப்போதுதான் எலிகளுக்கு தம்முடைய கூட்டம் குறைவது உறைத்தது. அந்த எலிகளின் அம்மா அப்பாக்கள் நம் குழந்தைகளை காண வில்லையே என்று அழுதன. அப்போது ஒரு கிழட்டு எலி சொன்னது ருத்திராட்ச பூனையை நம்பி  இந்த எலிக்குஞ்சுகள் மோசம் போயின. என் பேச்சை யாரும் கேட்டால் தானே என்று அழுது புலம்பியது.
  தங்கள் குழந்தைகளை தின்ற அந்த பூனையை பார்க்க எலிகள் வெளியே வந்தன. இந்த பூனையா பால் குடித்தது என்பது போல அமர்ந்திருந்த அந்த சன்னியாசி பூனைய பார்த்து எலிகள் ஆச்சர்யம் அடைந்தன. இத்தனை சாதுவான பூனை உலகத்தில் இருக்குமோ? என்ற படியாக அந்த பூனை அமர்ந்திருந்தது.ஏதோ ஜபம் செய்வது போல பூனை வாயை முணுமுணுத்து கொட்டாவி விட்டது. அதை பார்த்த எலிகள்,
  “ பூனையாரே! பூனையாரே!
கொட்டாவி விடுகிறீர்: குறு குறு என்கிறீர்:
கொட்டை நூற்று உண்டால் ஆகாதோ?” என்று கேட்டன.
  என்றும் இல்லாதபடி எலிகள் இந்த கேள்வியை கேட்டதும்  பூனை கண் தெரியாதது போல பாசாங்கு செய்தபடி “ என் கண்மணிகளே! என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் காதில் விழவில்லையே! பக்கத்தில் வந்து சொல்லுங்கள் என்று கேட்டது.
 பூனையின் வேஷம் எலிகளுக்கு புரிந்து போனது.
  ஒஹோ! பக்கத்திலேயா வரச் சொல்கீறீர்? பக்கத்தில் வந்தால் என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியுமே!
    அப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கீரே!
பச்சைக் கண்ணீரே! கிட்டே வந்தக்கால்
கப்பிக் கொள்வீரே!
   என்று உரக்கப் பாடிக் கொண்டு எல்லா எலிகளும் வளைக்குள் ஓடி புகுந்து கொண்டன.
தன் வேஷம் கலைந்து போனது கண்டு ஏமாந்து போனது பூனை!

நீதி: எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது! பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
(நாடோடிக் கதைகளில்  இருந்து தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் .உண்மையை உணர்த்தும் நீதிக்கதை

    ReplyDelete
  2. எந்த கதை என்றாலும் படிப்பதற்கு இப்போதும்
    ஆனந்தமே !

    ReplyDelete
  3. கதை நல்லா இருக்கிறது.
    ருத்திராட்சபூனை இது தான் போலும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2