Monday, February 29, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62

      கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62


1.   ஒளிரும் நிகழ்காலம்…! மிளிரும் எதிர்காலம்…!
வார்டு கவுன்சிலரா இருந்தப்ப பல்பு திருடினதை எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக்க வேணாம் தலைவரே…!

2.   உன்னோட ப்ரெண்ட் ஒரு மார்வாடி பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தானே எப்படி இருக்கான்?
ஏர்வாடியிலே இருக்கான்!

3.    எதிரி இதுவரை என் முகத்தை பார்த்து ஒரு வார்த்தை பேசியது இல்லை தெரியுமா தளபதியாரே!
அவர் படையெடுத்து வரும்போதெல்லாம் நீங்கள் முதுகுகாட்டி ஓடினால் பாவம் அவர் என்ன செய்வார் மன்னா!


4.   என்ன சொல்றே? நம்ம தலைவரை நிறைய பேரு லைக் பண்றாங்களா?
ஆமா அவரை கலாய்ச்சு போடற மீம்ஸ் எல்லாம் லைக் அள்ளுதே…!

5.   அந்த டாக்டர் ஒரு குடிகாரர்னு எப்படி சொல்றே?
சிரப் எழுதி கொடுத்து காலையிலே ஒரு லார்ஜ் ஏத்திக்கங்கன்னு சொல்றாரே!

6.   குலதெய்வத்தை பார்க்காம வரமாட்டேன்னு உன் வொய்ஃப் சொல்றதுல என்ன தப்பு இருக்குன்னு கோச்சுக்கிறே?
அவ பார்க்கறேன்னு சொல்றது குலதெய்வம் சீரியலை!


7.   தலைவரோட நமக்கு நாமே திட்டம் பெரிய வெற்றி அடைஞ்சிடுத்தாமே…?
  நீ வேற பொதுக்கூட்டத்துக்கு அவரே கூட்டத்தை ஏற்பாடு பண்றதைத்தான் அவர் இப்படி நாசூக்கா சொல்லிக்கிறார்!

8.   பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்குங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டார்…
அப்புறம்?
நல்லா பற்ற வைக்கிற தீக்குச்சியை யூஸ் பண்ண மாட்டாங்களான்னு கேக்கிறார்!

9.   தலைவரோட வீடியோ ஒண்ணு வாட்சப்பில் ரிலீஸ் ஆயிருச்சு…!
  அப்புறம்?

அவரை பதவியிலிருந்து “ரிலீஸ்” பண்ணி விட்டாங்க!

10. ப்ளட் பேங்க்ல நடந்த கொள்ளைக்கும் நம்ம தலைவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எதுக்கு விசாரிக்கிறாங்க?
   நம்ம தலைவர் மீட்டீங்ல கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச போறேன்னு பேசி இருக்காராமே!


11. பதுங்கு குழியில் இருந்த மன்னரை எதிரிகள் எப்படி பிடித்து விட்டனராம்?
  வாட்சப் பார்த்துக்கொண்டிருந்த மன்னர் சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வந்து சிக்கிக் கொண்டாராம்!

12.  தலைவரோட நேர்காணல் டீவியிலே சரியா பத்து மணிக்கு வருதுன்னு தெரிஞ்சதும் எல்லோரும்  கிளம்பிட்டாங்க..!
  பார்க்கிறதுக்கா…?
 இல்லே தூங்கறதுக்கு!

13.  நகர்வலத்துக்கு மன்னருடன் இப்போது ராணியாரும் வருகின்றாரே என்ன விஷயம்?
  மன்னர் “ டாவு”  அடிப்பதை எவனோ வேவு பார்த்து ராணியாரிடம் போட்டுக் கொடுத்துவிட்டானாம்!

14.  மன்னர் படுக்கை தலையணையுடன் எங்கே கிளம்புகின்றார்?
   சமாதான உடன் படிக்கைக்கு எதிரி அழைத்ததை தவறாக புரிந்துகொண்டு விட்டார் போலும்!

15. புலவரே உங்கள் பாட்டில் சந்த நயம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே….!
மன்னா! தாங்கள் பரிசாக கொடுக்கும் தங்கத்திலும் மாற்று கொஞ்சம் குறைவாகத்தானே உள்ளது…!

16. ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட்டோட உறவினர்கள் கிட்ட டாக்டர் சிரிச்சு சிரிச்சு பேசி சிரிக்க வைக்கிறாரே….
  ஆபரேஷனுக்கு அப்புறம் அவங்களாலே சிரிக்கவே முடியாதே அதனாலதான்


17.  ஆபரேஷனுக்கு அப்புறம் நான் எழுந்து நடப்பேனா டாக்டர்?
  அந்த கவலையே உங்களுக்கு வேணாம்! உங்களை தூக்கிட்டு போக நாலு பேர் ரெடியா இருப்பாங்க!

18.  எதிரி உள்ளே நுழைய நம் பாதுகாப்பில் ஓட்டை ஏதும் இல்லைதானே தளபதியாரே…?
  ஒட்டை ஏதும் இல்லை மன்னா… ஆனால்…
என்ன ஆனால்…?
வாசலே திறந்துதான் இருக்கிறது!

19. மக்கள் நலக்கூட்டணியிலே தலைவர் ஏன் சேரமாட்டேன்னு சொல்லிட்டாரு…?

  அவருக்குத்தான் பிள்ளைங்களே இல்லையே?

20. பேஸ் புக் பார்த்துக் கொண்டிருந்த மன்னர் ஏன் இப்படி தலைதெறிக்க அவைக்கு ஓடி வருகின்றார்...?
   எதிரி மன்னன் மீம்ஸ் போட்டு “ தெறி”க்க விட்டிருப்பான்!

டிஸ்கி} நாளை திருமீயச்சூர் செல்கிறேன்! மாலையில் பயணம். புதனன்று லலிதாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் அன்னப்பாவாடை வைபவம்.  வியாழனன்று மீண்டும் சந்திக்கிறேன்! உங்களின் பதிவுகளையும் படிக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


கடத்தல் தொழில்!
கட்டிப் போட முடியவில்லை!
காற்று!

பறிக்காமல் விட்ட பூக்கள்!
தற்கொலை செய்து கொண்டன
மாலைநேர மரத்தடி!

விரிசல் விட்ட சுவர்கள்!
விரைவாய் முளைத்தன
குற்றுச்செடிகள்!

இருண்ட இரவின் தனிமை
பயப்படுத்தி பார்த்தன
சில்வண்டுகள்!

இருண்ட பாதை!
எங்கோ ஒளிரும் விளக்கு
வெளிப்படுத்துகிறது கிராமத்தை!

பலநாள் சேமிப்பு!
ஒரேநாளில் அழிப்பு!
இளநீர்!

வெம்மை
அழைத்து வருகின்றது
அம்மை!

ஓசையிட்டு உயரே பறக்கிறது
உயிரில்லா பறவை!
விமானம்!

எனக்குமட்டும் திரையிடப்படுகிறது
தினம் தோறும்புதுப்படம்!
கனவு!


மிதித்தாலும்  
அழாமல் ஓடுகின்றது
மிதிவண்டி!

உயிர் இல்லாவிடினும்
உடன் வருகின்றது
நிழல்!

ஈரம் வற்றிப் போனதும்
அறுந்து போகின்றது
பற்று!

உலர்ந்த புற்கள்
ஒளியிழந்தது
நிலம்!

பெரிதாய் தெரிந்தது
வெள்ளைத் துணியில்
பொட்டாய் கறை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, February 28, 2016

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.

     அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம்.
இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம்! ஒரு நாள் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சி போயிடாது என்று அலட்சியப்படுத்துகிறோம்.

    பள்ளிப் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையை அலட்சியப்படுத்தியதால்தான் பாவம் ஒரு அப்பாவி சிறுமி பலியானாள். நம்முடைய அலட்சியம் வாக்களிப்பதில் கூட இருக்கிறது. ஒரு நாள் லீவு ஜாலியா இருக்காம எவன் போய் ஓட்டு போட்டுகிட்டு கியுவில காத்து கால் கடுக்க நின்னு நாம போடுற ஒரு ஓட்டுல உலகமே மாறிப்போயிட போவுதா என்று எண்ணி போகாமல் இருந்து விடுகிறோம்! இது எவ்வளவு பெரிய அலட்சியம்! ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை! இதை கூட அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

   இதைப்போலத்தான் பல அலட்சியங்கள் கண்கூடாக பார்க்கிறோம்! மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் பகலில் கூட விளக்குகள் ஒளிர்கின்றது. குழாயில் தண்ணீர் வீணாகிறது. சாலையில் வாழைப்பழத்தோலை அலட்சியமாக வீசுவது. பூசணிக்காய்களை உடைத்து சாலையில் போடுவது. இதெல்லாம் இருக்கட்டும் தலைக்கவசம் அணியாமல் அலட்சிமாக இருப்பதால்தானே எண்ணற்ற விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

    கட்டணங்கள் கட்ட வேண்டிய தேதிவரை கட்டாமல் கடைசிநாள் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது. வண்டியில் சிறிது காற்று குறைவாக இருக்கும் போதே கவனிக்காமல் விட்டு சுத்தமாக பஞ்சர் ஆகி நிற்கும் போது எரிச்சல் அடைவது. என்று நாம் அலட்சியப்படுத்தும் விசயங்கள் ஏராளம்.

 சின்ன வயதில் படித்த ஒரு பாட்டு! அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன்! பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன்  அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில்  ஒரு ஆணி கழன்று விடும்.  ஒரு ஆணி தானே! பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி பயணிப்பான் அவன். ஒரு ஆணி போனதால் லூஸான லாடம் கழன்று கொள்ளும். லாடம் கழன்றதால் குதிரையால் வேகமாக பயணிக்க முடியாமல் போகும். மேலும் கால் புண்ணாகி பயணம் தடைபடும். இதற்குள் அண்டை நாட்டுகாரன் படையெடுத்து வந்து அந்த நாடே அடிமைப் பட்டு போகும். ஒரு ஆணியை அலட்சியப்படுத்தியதால் வந்த வினை  இது!

 நாமும் அப்படித்தான்! வியாபாரத்திற்குத்தானே வந்தார்கள் என்று அலட்சியப் படுத்தியதால் முன்னுறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம் அன்னியரிடம்.

  பெரிய பெரிய கோயில்கள் பாழடைந்து கிடக்கும்! அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தையே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள்! இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ! சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா? ஆனால் கவனிக்காமல் விட்டோ! சிறு செடிதானே என்று எண்ணியதால் என்ன ஆயிற்று கட்டிடமே குலைந்து போகின்றது அல்லவா?
             மழை எல்லாம் வராது என்று மழை நாளில் குடை எடுக்காமல் போய் நனைந்தவர்கள் ஏராளம். பெருமழை எல்லாம் இனிமே வராதுப்பா என்று ஆற்றங்கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமத்து வீடு கட்டியதன் பலனை சென்னை பெருவெள்ளத்தில் அனுபவித்தோம். 

     ஒவ்வொரு சம்பவமும் ஒரு படிப்பினையை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பினையை மறந்து அலட்சியப்படுத்தி விட்டோமானால் முன்னேற்றம் என்பது கானல் நீரே!

    சிக்னல் விழுந்தும் வாகனம் வரும் முன் கடந்துவிடலாம் என்ற அலட்சியம் நம் உயிரையே இழக்க வைக்கிறது அல்லவா? கடைசி நாள் வரை படிக்காமல் தேர்வெழுதும் அலட்சியம் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடுகிறது அல்லவா? பணம் இருக்கிறது ஓட்டு வங்கி இருக்கிறது அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கும் அரசியல் வாதிகளையும் கூட மக்கள் அலட்சியப்படுத்தி விடலாம் ஆனால் யார் ஆண்டால் என்ன என்று ஓட்டுப்போடாமல் அலட்சியப்படுத்தலாமா? 

  வெற்றி பெற விரும்புபவர்கள் எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை  அலட்சியப்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!

(மீள்பதிவு)   

டிஸ்கி} எங்க ஆளையே காணோம்? என்று ஸ்ரீராம் சார் கேட்டிருந்தார். அவருக்கும் என்னை தொடரும் அனைவருக்கும் இந்த பதில். அம்மை நோய் இம்மாத முதல் தேதி முதல் தாக்கி பதினைந்து நாட்கள் சிரமப்பட்டேன். பின்னர் தொடர்ந்து புதிய கோயில்களில் பூஜைகள் ஒத்துக் கொண்டதால் பதிவிடவும் சிந்திக்கவும் முடியவில்லை. கணிணியும் கொஞ்சம் பழுதாகி உள்ளது. விரைவில் தொடர்ந்து பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். அவ்வப்பொழுது உங்கள் பதிவுகளை மொபைலில் வாசிக்கிறேன்! மொபைலில் கருத்திட கொஞ்சம் சிரமமாக உள்ளதால் கருத்துக்கள் பதிய முடிவதில்லை!  

மூன்று ஆண்டுகள் முன்னர் எழுதிய கட்டுரை புதிய வாசகர்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் சிறு மாற்றங்களுடன் மீள்பதிவிடுகிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, February 19, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5

பூகம்பம்!
  ஒரே பக்கமாய் படுத்துக் கிடந்ததில் முதுகு வலித்தது. சற்றே திரும்பிப் படித்தேன்! ஒரே களேபரம்! டீ.வி. செய்தித்தாள்கள் அலறின. என்னவென்று கேட்டேன். ஏதோ பூகம்பமாம்!

இன்ஷுரன்ஸ்!
    இன்ஷூரண்ஸ் இருக்கா? லைசென்ஸ் இருக்கா? ஆர்.சி எல்லாம் கரெக்டா இருக்கா? இப்படி ஓரம் கட்டு! எல்லாத்தையும் எடு…! எப்போதும் சாலையில் போகும் வாகனங்களை மறித்து கொஞ்சமாய் வழிபறித்து கொண்டிருந்த காவலர் ஒரு நாள் இறந்து போனார் விபத்தில்… பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்கள் இன்ஷூரன்ஸ் இல்லையாம்!

ஓட்டு!

   ஓட்டுக் கேட்க வந்தார் ஆளுங்கட்சி எம். எல். ஏ. தொகுதிப் பக்கம் இதுவரை தலைவைத்து படுக்காத அவரை பார்த்ததும் மக்கள் கூடி கேரோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. பொறுத்து பொறுத்த பார்த்த எம். எல்.ஏ பொங்கி எழுந்தார். இப்ப என்னய்யா? ஓட்டுக்கு மூவாயிரம் போதாதா?  போன தேர்தல்ல ஆயிரம் தானே கொடுத்தேன்!  சரி சரி! வாங்கிக்கங்க! மறக்காம ஓட்டு போட்டுருங்க! என்றதும் கூட்டம்  அப்படி வழிக்கு வாங்க! என்று சொல்லி கலைந்து போனது.

போட்டி!
    போட்டியே இல்லாம நீ பாட்டுக்கு ஸ்வீட்ஸ் கடை வைச்சிருந்தே! இப்ப எதிர்லெயே ஒருத்தன் வந்துட்டான் ஆனாலும் வியாபாரம் அதிகமா இருக்குதே எப்படிய்யா? கேட்டவரிடம் புன்னகைதான் பதிலாய் சொன்னார் அண்ணாச்சி. போட்டிக்கடையும் நம்மதே அங்க விலை  கூடுதல் வச்சி தரத்தை குறைச்சி இந்த கடையோட மவுசை கூட்டின வியாபார தந்திரத்தை எப்படி சொல்லுவார் அவர்?

ஆக்ரமிப்பு!
   மந்திரி வருகிறார் என்று நடைபாதையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததாய் கடைகளை அகற்றிக் கொண்டிருந்தனர் போலீஸார். மந்திரி வந்து திறந்து வைத்தார் ஆற்றுக் கால்வாயை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த அந்த  வணிக அங்காடியை.

சிலை!
     தன்னுடைய தலைவரின் சிலையை  சாலை நடுவே அமைத்தே தீருவது என்று வரிந்து கட்டி போராட்டத்தில் இறங்கி வெற்றியும் பெற்றுவிட்டார் அந்த தொண்டர். சிலை திறந்த பின் மனதுக்குள் கறுவிக் கொண்டார். மவனே! எத்தனை முறை என்னை காறித்துப்பி அவமானப்படுத்தி இருப்பே! இப்ப காக்கா குருவி எல்லாம் உன் மேலே கழிஞ்சி வைக்கப்போவுது! அப்பதான்லே எனக்கு மனசு ஆறும்!

முரண்:
    ஊர் முழுக்க “பீய்ங்க் பீய்ங்க்” என்று ஹாரன் அடித்து பெட்டி முழுதும் நிறைந்திருந்த ஐஸ்கிரீம்களை குழந்தைகளுக்கு விற்று முடித்து வீடு திரும்பியவனிடம் அவனது குழந்தை கேட்டது. அப்பா! ஒரே ஒரு ஐஸ் கிரீம் தர்றீயா?  “ அதெல்லாம் வேண்டாம்! சளி பிடிச்சுக்கும்! போய் பிஸ்கெட் ஏதாவது சாப்பிடு! என்று சொன்னான் அந்த வியாபாரி.


இயற்கை விளைச்சல்!
தோட்டத்திலே விளைஞ்ச காய்கறிம்மா! இப்பவே பறிச்சு இப்பவே கொண்டாந்தது. எந்த பூச்சி மருந்தும் அடிக்கலை! இயற்கை உரத்துல விளைஞ்சது. பச்சை பசேல்னு இருக்குது பாருங்க! மெழுகு ஏதும் பூசி ஏமாத்தலை! ஆரோக்கியத்துக்கு நல்லது. குறைஞ்ச விலை! வாங்கம்மா! வாங்க! என்று கூவி  விற்று முடித்தவன் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு பீட்ஸா கடைக்குக்குள் நுழைந்தான் அவன் மகனுக்கு பீட்ஸா வாங்க!

 பொறுப்பு:
     அந்த டீக்கடை முன்பு வேகமாக வந்த பைக் ஒன்று சாலையில் உடைத்திருந்த பூசணிக்காயால் வழுக்கி சரிந்தது. நல்ல வேளை ஓட்டி வந்தவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான சிராய்ப்புடன் தப்பினர். டீக்கடையில் நின்று கொண்டிருந்த பிரகாசம் டீக்கடை காரரை பார்த்து சொன்னார். கொஞ்சமாவது பொறுப்பு இருக்காய்யா உனக்கு! நடுரோட்டுல பூசணிக்காய் உடைச்சு வைச்சிருக்க! நல்ல வேளை சின்ன காயத்தோட போச்சு! ஒரு ஒழுங்கு வேணும்யா! உன் திருஷ்டி கழியறதுக்கு ஊரான் எவனோ அடிபடனுமா?  டீக்கடைக்காரர் தலை சொறிந்தபடி நிற்க கையில் வைத்திருந்த வாழைப்பழத்தை உண்டுமுடித்த பிரகாசம் அப்படியே சாலையில் விட்டெறிந்தார்.

புகை!
   புகை பிடிக்காதீர்கள்! என்ற வாசகத்துடன் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. நகரைத் தாண்டியதும் பஸ்ஸினுள் நிகோடின் நெடி குடலைப் புரட்டியது. யார் ஊதுகின்றனர். எரிச்சலாய் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் புகைபிடிக்க வில்லை! அப்புறம் எப்படி நாற்றம்? யோசனையாய் முன்னே கவனிக்க ஸ்டியரிங்கை பிடித்த ஓட்டுனரின் கரங்களில் புகைந்து கொண்டிருந்தது சிகரெட்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!     

சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!


சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம் சனிக்கிழமை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் சனிப்பிரதோஷம் சிறப்பு அடைகின்றது.
பொதுவாக பிரதோஷம் நித்ய பிரதோஷம் மாதப்பிரதோஷம், மஹா பிரதோஷம் என மூன்று வகைப்படும்.
நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.


  பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் வந்து சேர்ந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே பிரதோஷ காலத்தில் மற்ற சன்னதிகளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வழிபாடு செய்வதில் பலனில்லை. ஏனெனில் அங்கிருக்கும் தெய்வங்கள் சிவாலயத்திற்கு வந்து விடுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தோமானால் எல்லா தெய்வங்களின் அருளும் ஒருசேர கிடைக்கும்.
  சனிப்பிரதோஷ வேளையில் சிவனாருக்கு திலான்னம் என்னும் எள்ளுச்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதால் சனிக்கிரக பாதிப்புக்கள் விலகும். சிவன் எல்லா கோள்களுக்கும் அதிபதி. எனவே சனிப்பிரதோஷ வழிபாடு செய்கையில் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி அடையும்.

  பொதுவாக பிரதோஷ பூஜையில் சிவனுக்கு நிவேதனம் முக்கான்னம் என்னும் மிளகுப் பொங்கல்( வெண்பொங்கல்) உகந்தது ஆகும். ஆலகாலத்தை உண்டவர் சிவபெருமான். மிளகு விஷத்தை போக்கும் குணம் உடையது. எனவே வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு ஆகும்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
  
  பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்... சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். 

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும். விளாமிச்சை எனப்படும் வெட்டிவேர், தீர்த்தப்பொடிகள் இடவேண்டும்.

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டும் அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். பிரதோஷ தினத்தில் இவற்றை சிவபெருமானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்தல் சிறப்பாம்.

அபிஷேக பலன்கள்: 

அபிஷேகத்தூள் - கடன் தொல்லை தீரும்
பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள் கிடைக்கும்
பால் - பொறுமை, சாந்த குணம் உண்டாகும்
தயிர் - உடல் ஆரோக்யம் சிறக்கும்
எலுமிச்சை - திருஷ்டி விலகும்
தேன் - கல்வி, கலைகளில் சிறக்கலாம்
இளநீர் - புத்திர பாக்கியம் கிடைக்கும்
விபூதி - அறிவு பெருகும்
மஞ்சள் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
பச்சரிசி மாவு - கடன் வசூலாகும்
நெய் - எதிரிகள் நண்பர்கள் ஆவர்
சந்தனம் - பக்தி பெருகும்
பன்னீர் - நினைத்த காரியம் கைகூடும்
நல்லெண்ணெய் - சுக வாழ்க்கை அமையும்

பஞ்ச வில்வங்கள்
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியன. இவை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை பிரதோஷ பூஜையில் இவற்றினால் அர்ச்சனை செய்தால் சிவபெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நமக்கு நன்மைகள் உண்டாகும்

மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடிமடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறைஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணானஅபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்தமந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும்ஜபிப்போம்.

நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண: 
உமாசங்கர ஹேவார்த்தம் அனுஞ்ஞாம் தாதுமர்ஹஸி'' 

என்ற நந்தி ஸ்துதியாலும் வணங்கித் துதிக்க வேண்டும். 

`சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்பது இதன் பொருளாகும். 

பிரதோஷ வழிபாட்டினால், கடன், வறுமை போன்றவை விலகி மிருத்யு பயம் நீங்கி பிரம்மஹத்தி தோஷமும் விலகுகின்றது. பிரதோஷவழிபாடு செய்கையில் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கின்றது.

நாளை சனிப்பிரதோஷம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்பர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தங்களால் இயன்ற அபிஷேகப் பொருள்கள் புஷ்பங்களை சமர்பித்து நெய்தீபம் ஏற்றி நந்தியெம்பெருமானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த  அவனருள் வேண்டுவோமாக!

(ஆன்மீக நூல்களில் இருந்து தொகுப்பு) படங்கள் உதவி: கூகூள் இமேஜஸ்.

டிஸ்கி}  அம்மை நோய் தாக்கியதால் பதினைந்து நாள் ஓய்வு. ஓய்வு கொடுத்த இறைவனே இப்போது கூடுதல் பணிகள் கொடுத்துள்ளார். கணிணியும் கொஞ்சம் பழுதாகி உள்ளது. மீண்டுவர சில நாட்கள் பிடிக்கும். இனி ஓய்வு கிடைக்கும் போது தளிர்  தளிர் நடை போடும். தன் சக பதிவர்கள் நண்பர்களின் பதிவுகளையும் வாசிக்கும். உடல் நலமும் ஓய்வும் கிடைத்தவுடன் வழக்கம் போல மிளிரும். விசாரித்த அனைவருக்கும் நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...