Wednesday, May 20, 2015

வேத ஜனனிக்கு பிறந்தநாள்!

இன்று என் மகள் வேத ஜனனிக்கு பிறந்தநாள் ஆறு வயதை நிறைவு செய்கின்றாள். வாழ்த்துங்கள் வலையக நண்பர்களே உறவுகளே! நன்றி!

நன்றி! 

செவ்வாயன்று மீண்டும் சந்திக்கிறேன்!


Tuesday, May 19, 2015

மறதி!


வயது அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் நினைவுத்திறன் குறைந்து போகிறது எங்கோ படித்ததாக ஞாபகம். எதில் படித்தேன் யார் சொன்னார்கள் என்பது நினைவில் இல்லை. இதாவது பராவாயில்லை! பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர் கூட என் நினைவில் இருந்து மறந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் என்னுடைய பிரச்சனை.
           என்னங்க! சாப்பிடக் கூப்பிட்டு அரைமணி நேரம் ஆகுது! அங்க என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க! என்று மனைவி விளிக்கையில்தான் இன்னும் சாப்பிடவே இல்லை என்று உணர்ந்தேன். என்னுடைய பெரிய பிரச்சனையே இந்த ஞாபக மறதிதான். வீட்டில் மட்டும் அல்ல அலுவலகத்தில் கூட இந்த மறதியால் ஏகப்பட்டப் பிரச்சனைகள். அனுப்ப வேண்டிய மெயிலை அனுப்பாமல் வேண்டாம் என்று சொன்னதை அனுப்பி ஏகப்பட்ட அர்ச்சனைகள் மேனேஜரிடம்.

போனவாரம் அப்படித்தான்! காய்கறி வாங்க கடைக்குப் போனவன் காய்கறியெல்லாம் வாங்கிய பின்  பணத்தை கொடுத்துவிட்டு காய்கறிக்கூடையை எடுக்க மறந்து  கைவீசி வந்துவிட்டேன்.
  முந்தாநாள் மழை பேய்கிறதே என்று குடை எடுத்துப் போனேன் அலுவலகத்திற்கு மழைவிட்டு போனது. குடையையும் அலுவலகத்திலேயே விட்டுவிட்டேன்.
  இன்று எதையும் மறக்க கூடாது என்று முடிவெடுத்து  அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது காலையில் எடுத்து வந்த பொருட்களை செக் செய்து கவனமாக பேக்கில் அடுக்கினேன். அப்பாடா! இன்று எதையும் மறக்கவில்லை என்று பூரிப்புடன் வீட்டுக்கு வந்தேன். பேக்கை மனைவியிடம் கொடுத்துவிட்டு பெருமை பொங்க “பார்த்தியா! இன்னிக்கு எதையும் மறக்கவில்லை! என்று சொன்னதும் தாமதம்!
  “ உங்க பவுசை பாராட்டித்தான் ஆகனும்! மதியம் சாப்பிடக் கொடுத்த லஞ்ச் அப்படியே இருக்கு! சாப்பிடாமலேயே அப்படியே கொண்டுவந்திருக்கீங்க! என்று முறைத்தாள் மனைவி.
     “பேசாம ஒரு டாக்டரைப் போய் கன்சல்ட் பண்ணுங்க!” என்றார்கள் அலுவலகத்தில்.
    அடுத்த நாளே டாக்டரிடம் போய் நின்றேன்!  “டாக்டர் நீங்கதான் இந்த வியாதியிலிருந்து என்னை காப்பாத்தணும்!”
     நான் சொன்ன எல்லாவற்றையும் முழுவதும் கேட்ட டாக்டர்,  “என்ன சொன்னீங்க?” என்றார்.
   “மைகாட்! நான் சொன்ன எதையும் நீங்க காதிலே வாங்கிக்கவே இல்லையா?”
  மீண்டும் ஓர் அரை மணிநேரம் செலவழித்து அனைத்தையும் சொன்னேன்.
   “ ஐ காட் இட்! உங்களுக்கு மறதியே இல்லை!” என்றார் டாக்டர்.
     “ எப்படி டாக்டர் சொல்றீங்க?”
  முதல் அரைமணி நேரம் உங்க வியாதியை பத்தி சொன்னதை நான் திரும்ப கேட்டப்ப கரெக்டா ஒரு வரி விடாம திருப்பிச் சொன்னீங்களே! உங்களுக்கு மறதியே கிடையாது. ஒரு கேர்லஸ்தனம்தான் இருக்கு! இதையெல்லாம் நாம நினைவுல வைச்சிக்கணுமான்னு ஓர் அலட்சியம்! எல்லாத்தையும் சரியா செய்திடுவேன்னு ஓர் அசாத்திய நம்பிக்கை! அதனாலதான் கோட்டை விட்டுடறீங்க!”
      ”அப்ப எதிர் வீட்டுக்காரர், பால்காரர் இவங்களை கூட நான் மறந்திடறேனே டாக்டர்!”
      அத உளவியல் ரீதியா அனுகணும்! அவங்க மேல உங்களுக்கு ஓர் வெறுப்பு இருக்கலாம்!  இவங்களை தெரிஞ்சி வைச்சி என்ன ஆகப்போவுதுன்னு மைண்ட்ல அவங்க உருவை ஏத்தாம இருக்கலாம்!”

    “சரி டாக்டர்! அப்ப நான் என்ன செய்யணும்! மறக்காம இருக்கணும்னா!”
ஒவ்வொரு விஷயத்தையும் ஈடுபாட்டோட செய்யுங்க! கவனமா திட்டம் போட்டுக்கங்க! செய்ய வேண்டிய விஷயங்களை குறிப்பு எடுத்து வைச்சிக்கங்க! அப்புறம்  ஏதாவது ஓர் கைக்குட்டை மாதிரி பாக்கெட்ல வைச்சிக்கங்க! அதில் ஓர் முடிச்சை போட்டு வைச்சிக்கங்க! அந்த முடிச்சை பார்க்கும் போதெல்லாம் செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துரும்!”

  “ ஓக்கே டாக்டர்! உங்க ஆலோசனைக்கு நன்றி!”
  “சரி என்னோட கன்சல்டேசன் பீஸை கொடுங்க!”
“சாரி டாக்டர்! வீட்டில இருந்து கிளம்பும் போது பர்ஸை எடுத்துக்க மறந்துட்டேன்!”
    “அப்ப பஸ்ல எப்படி வந்தீங்க!”
   “டிக்கெட் எடுக்க மறந்துட்டேன் டாக்டர்!”
 “சரி பரவாயில்லை! அடுத்த முறை வரும்போது பீஸோட வாங்க! இப்ப நீங்க கிளம்புங்க!”
     சாரி டாக்டர்! நான் வீட்டுக்கு போற வழியை மறந்துட்டேன்!


  டிஸ்கி} நாளை கரூர் பயணம்! ஒரு நான்கு நாட்கள் பதிவுகளுக்கு இடைவேளை! வந்தபின் சந்திக்கின்றேன்!   

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, May 18, 2015

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


வெள்ளை அடித்தார்கள்!
மறைந்து போனது!
அழுக்கு!


குழந்தையின் சிரிப்பில்
கரைந்து போயின
துக்கங்கள்!

விளக்கேற்றி விரட்டினார்கள்!
விடாமல் தொடர்கிறது
இருட்டு!

ஈரம் கசிகையில்
அணைந்து போகிறது
நெருப்பு!

 பற்று அறுத்ததும்
 பக்குவப்பட்டது
 உதிரும் சருகு!


 தாய்க்கு பூச்சூட்டின
 மரங்கள்!
 உதிரும் பூக்கள்!

 குடிபுகுந்த புழுக்கம்!
 விரட்டி அடித்தது
 காற்று!

 உப்பை அள்ளிப் பருகினார்கள்!
 இனித்தது!
 கடல்!

 நகை சூடிய மரங்கள்!
 ஜொலித்தன!
 மின்மினி!

நீரில் மூழ்கியும்
நனையவில்லை மரங்கள்!
நீர்நிலையில் நிழல்!

திருட்டுப் பொருள்!
இனித்தது!
தேன்கூடு!


தேங்கி நிற்கையில்
ஓங்கி வளர்கின்றன!
 பாசிகள்!

மரங்களின் பின்னே
மறைந்தன
கிராமங்கள்!

பதுக்கல் பொருள்
பகிரங்கமாய் விற்பனை!
இளநீர்!

இணைந்தன இமைகள்!
பிறந்தது 
உறக்கம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!


Sunday, May 17, 2015

நினைவில் அழிந்து போனவர்கள்!

நினைவில் அழிந்து போனவர்கள்!

சென்ற வாரம் ஓர் உபநயன முகூர்த்தத்திற்கு செல்லவேண்டியதாய் போய்விட்டது. இந்த மாதிரி பங்க்‌ஷன்களுக்குச் செல்வதை எல்லாம் அம்மா- அப்பா பார்த்துக் கொள்வார்கள். அனைவரும் செல்லவேண்டியதற்கு மட்டும் நானும் மனைவி குழந்தைகளுடன் செல்வேன். சொல்லப் போனால் உறவு வட்டத்தில் என்னை பலபேருக்குத் தெரியாது. கூச்ச சுபாவம் கூட பிறந்தது என்பதால் தனியாக இதே மாதிரி விழாக்களுக்கு போவதை தவிர்த்து விடுவேன்.

 இருபது வயதிருக்கும் சமயம் ஒர் சமயம், அப்பா இனிமே நீதான் சொந்த பந்தங்களோட விஷேசங்களுக்குப் போய்வரனும்! அப்பத்தான் உன்னை எல்லோருக்கும் தெரியும். இப்படி வீட்டிலேயே இருந்தா எப்படி? என்று உசுப்பேற்ற ஒன்றிரண்டு விஷேசங்களுக்கு போனேன். வலிய சிலரிடம் அறிமுகம் செய்து கொண்டு பழகினேன். அப்புறம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை! மீண்டும் அம்மா- அப்பாவே விஷேசங்களுக்கு செல்ல ஆரம்பிக்க நான் போவதில்லை.

  திருமணம் ஆனபின்பும் கூட அவர்களே சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் போகும் விழாக்களுக்கு நானும் போக முயற்சிப்பது இல்லை! ஒரு பங்க்‌ஷனுக்கு எத்தனை பேர் போவது? நாம் கொடுக்கும் நூறு இருநூறுக்கு அவர்களுக்கு அதிகமாகவா செலவு வைப்பது என்ற  எண்ணமும் கூட காரணம்தான்.

 போனவாரம் அப்பா, நான் போகலை! நீ போய் தலையை காமிச்சுட்டு வந்துடு என்றார். சரி என்று மாலை உதகசாந்திக்கு போகிறேன்! என்றேன். ஆறுமணி வாக்கில் அங்கிருந்து போன் வந்தது. பலாச இலை, மற்றும் கொம்பு வேண்டும் என்று. அதையும் எடுத்துக் கொண்டு உபநயனத்திற்கு கிளம்பினேன். அப்போதுதான் உதக சாந்தி ஆரம்பித்துஇருந்தார்கள் மணி ஏழைக் கடந்துவிட்டது. டிபன் சாப்பிடு! என்றார்கள். நாசூக்காய் தவிர்த்துவிட்டேன். எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பாடு போட்டுவிடுவார்கள் அப்புறம் டிபன் வேறு எதற்கு? கோயிலில் உபநயணம் என்பதால் கோவில் மண்டபத்தில் வந்தமர்ந்து அத்தை மகனோடு பேசிக்கொண்டு இருந்தேன். இடையில் சுவாமி தரிசனமும் முடிந்தது. ஒன்றிரண்டு தெரிந்த நபர்கள் கையசைக்க பதிலுக்கு கையை அசைத்தேன். சிலரோடு பேசினேன். அப்போது ஒருவர் என்னை நோக்கி கை அசைக்க நான் தலை அசைத்தேன். அவர் யார் என்று தெரிய வில்லை! ஒரு வேளைஅவர் என்னை கூப்பிடவில்லையோ என்று பின்னால் திரும்பி பார்த்தேன்.

 யாரும் இல்லை! அட நம்மைத்தான் சைகை செய்துள்ளார். யார் என்று தெரியவில்லையே என்று யோசிப்பதற்குள், அவர் அவர் அருகில் இருந்தவரிடம் நான் யாருன்னே அவனுக்குத் தெரியலை! என்றார். எனக்கு வெட்கமாக போய்விட்டது.

 அவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை! நானும் போய் அவர் யார் என்று கேட்கவில்லை! அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கையில் அவர் கிளம்பியும் விட்டார்.  இதே போலத்தான் நேற்று பூஜை முடிந்து திரும்பும் சமயம் கடையில் குயிக் பிக்ஸ் வாங்கலாம் என்று சென்றேன். அங்கே நின்றிருந்த ஒருவர் கையை அசைத்தார். நானும் பதிலுக்கு விஷ் செய்தேன். அவரை பார்த்திருக்கிறேன் ஆனால்யார் என்று அடையாளம் தெரியவில்லை.

  “ என்னை யாரென்று தெரிகிறதா?” என்று கேட்டார் அவர்.
  இல்லை என்றேன். ‘ ஏம்பா! நான் உன்னை உங்க அப்பாவை எல்லாம் நினைவில் வைச்சிருக்கேன்! என்னை தெரியலைன்னு சொல்றியே!  நான் பெரும்பேடு! என்றார் அவர்.

   பெரும்பேடா! ரொம்ப நாள் ஆயிருச்சு அந்த பக்கம் வந்து! என்று சொல்ல, அவர் என்னை, அப்பாவை குசலம் விசாரித்தார். சிலநிமிடங்கள் உரையாடல் செய்தும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் பெரும்பேட்டில் நீங்க யார்? என்று கேட்டேன்.

   அப்போதாவது அவர் தனது பெயரை சொல்லி இருக்கலாம்! சொல்லவில்லை! எங்க அப்பா வி.ஏ.ஒ வா இருந்தார். ரங்கசாமி அய்யரோட மூத்த பையன். முத வீடே எங்களுதான். ஓடு போட்டவீடு! என்றெல்லாம் சொன்னவர் பேரை சொல்லவில்லை! அவர் யார் என்று இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

    இப்படித்தான் ஆறுமாதங்கள் முன் ஒருவர் கோவிலுக்கு வந்தார். பரபரப்பாக அர்ச்சனை செய்து கொண்டிருக்கையில் வந்து நின்றார். என்னைப்பார்த்து சிரித்தார். அவரைத் தெரிந்தது. அவர் பெயர் நினைவில் இல்லை. சிரித்துக் கொண்டே இருந்தார். விபூதி கொடுத்தேன். சார்! என்னை தெரிகிறதா?  என்றார். உடன் ஒரு நண்பரையும் அழைத்துவந்திருந்தார்.

நன்றாய் தெரியுமே? என்றேன்.

உங்க ஊரில் எங்க சொந்தக்கார பெண்ணுக்கு பிள்ளை எடுத்திருக்கோம்! இன்னிக்கு வீடு பார்க்க வந்தோம்! உங்க நினைப்பு வந்துச்சு! அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்! என்றவர் உங்களுக்கு அடையாளம் தெரியலை… என்றார்.

   சிரித்தபடி, அடையாளம் தெரியுது! கவரைப்பேட்டை ஸ்கூல்ல ஒன்னா வொர்க் பண்ணோம்! மேத்ஸ் எடுத்தீங்க! பேருதான் சட்டுன்னு நினைவுக்கு வரலை! என்றேன்.

   பாயிண்டுக்கு வந்திட்டீங்க! சைன்ஸ் எடுத்தேன்! மேத்ஸ் இல்லே! என்றவர். நீங்க அக்கவுண்ட்ஸ் எடுத்தீங்க! என்றவர் தன் நண்பரிடம் சார் இவர்தான்  நான் சொன்ன  ரமேஷ் சார்! என்றார்.

   அட அவர் நினைவிலும் நான் அழிந்துதான் போயிருக்கேன் போலிருக்கு!
சார்! நீங்களும் பேரை மறந்துட்டீங்க! நான் ரமேஷ் இல்லே! சுரேஷ் என்றேன்!

  ஹாஹாஹா! என்று வெடிச்சிரிப்பு சிரித்தார். ஆளு நியாபகம் இருக்கு! ஆனா பேருதான் நினைவுல வரமாட்டேங்குது இல்லே! என்றார்.

 இப்படித்தான் சிலர் நம் நினைவில் இருந்தாலும் அழிந்து போகிறார்கள்! என்ன செய்வது?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


தித்திக்கும் தமிழ்! பகுதி 9 பணியாரம் தோசை தெரியுமா?

தித்திக்கும் தமிழ்! பகுதி 9


தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர் இடத்திற்கு செய்தி போக ஆட்கள் மூலம்தான் செய்தி சொல்லமுடியும். பின்னர் புறாத் தூது வந்தது. பின்னர் அஞ்சல், தொலைபேசி என்று வளர்ந்து இன்று இமெயில், வாட்சப் என்று அதன் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தாலும் அதன் மற்றொரு பக்கம் மிகவும் மோசமானதாக அமைகிறது.
பெண்களை இழிவாக சித்தரிக்கும் ஆபாசபடங்கள் வாட்சப்பில் அதிகமாக பகிரப்படுவதாக தற்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இன்றைய குழந்தைகள் கூட வாட்சப் பயன்படுத்தும் நிலையில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படவேண்டும்.
 இன்று இதுபோன்ற காரணிகள் ஒழுக்கத்தை கெடுக்கின்றன என்றால் அன்று எது கெடுத்தது என்று தெரியவில்லை! அன்றும் தேவதாசி முறை போன்றவை இருந்துள்ளது. பெண்கள் மேல் மோகம் கொண்டு பலர் இருந்துள்ளனர். பல அடியார்களும் குறிப்பாக அருணகிரி நாதர் முதலியவர்கள் கூட முதலில் பெண் மோகம் கொண்டு பின்னர் கடவுள் பக்திக்கு திரும்பியுள்ளனர்.

நமக்கு பணியாரம், தோசை பற்றி என்ன தெரியும்? உண்ணக் கூடிய பொருள் என்றுதான் தெரியும். நன்றாக சுவையாக செய்து கொடுத்தால் ஒரு கட்டு கட்டுவோம்! பணியாரம் தோசையை வைத்து பாட்டு எழுத முடியுமா? வேண்டுமானால் சினிமாவுக்கு ஓர் கானா எழுத முடியும்.  பணியாரம் தோசையை  நான்காக பிட்டு நன்றாக சாப்பிடத்தான் நமக்குத் தெரியும். ஆனால் இந்த புலவர் பணியாரம் தோசையை நான்காக பிட்டு வைத்து நல்லதொரு பாடலையும் அறிவுரையும் தருகின்றார்.

பெண்களை சேர்பவர் அடையும் பலன்கள் என்று பணியாரம் தோசை என்ற ஒரே அடியைக் கொண்டு மிக அழகாக பாடியுள்ளார் அந்தகக் கவி வீரராகவர்.

அந்தப்பாடலில்   அவர் என்ன சொல்கிறார்? இன்று வாட்சப்பில் பரப்பும்    இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள், பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி போன்ற ஒலியை வெளிப்படுத்த இயலாத பிறவிகளாக பிறப்பார்கள் என்று சாபம் கொடுக்கிறார். இன்றும் இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள் உணர வேண்டிய விஷயம் இது. பாடலையும் அதன் சுவையையும் படித்து மகிழ்வோமே!

   பணியாரந் தோசையி லக்கொங்கை
     தோய்ந்திடப் பார்ப்பர் பல்லி
   பணியாரந் தோசையி லாச்செந்து
      வாய்ப்பிறப் பார்களென்னோ
   பணியாரந் தோசைமுன் னோனுக்கிட்
       டேத்திப் பழனிச் செவ்வேள்
   பணியாரந் தோசைவ ராகாரன்
      னோர்க்கென்ன பாவமிதே
                       அந்தகக் கவி வீரராகவர்.


பாடலின் பொருள்:  பணியாரம், தோசை முதலிய பண்டங்களை விநாயகருக்கு படைத்து வழிபட்டு பழனியில் உள்ள முருகப்பெருமானை வணங்க இயலாதவர்கள் சைவசமயத்தவர்கள் ஆக மாட்டார்கள். மாதர்களின் அணிகள் பொருந்திய அழகிய இரண்டு மலைபோன்ற மார்புகளை சேர்த்து அனுபவிக்க நினைப்பார்களேயானால் அவர்கள் பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி, போன்ற ஒலியை எழுப்ப இயலாத சிற்றுயிர்களாக பிறப்பார்கள். ஐயோ! அவர்களுக்கு இது என்ன பாவத்தின் பயன்?

பாடலைவிளக்கமாக அடிபிரித்து பார்ப்போமா?

பணியாரந் தோசையிலக் கொங்கை  தோய்ந்திட பார்ப்பர் = பணி+ஆர்+அம்+தோ+சையிலம்+ கொங்கை + தோய்ந்திட பார்ப்பர் =
அணிகள் அணிந்த அழகிய இரண்டு மலைககள் போன்ற தனங்கள் உடைய பெண்களை சேர்ந்திட நினைப்பவர்கள்:

பணியாரந் தோசையிலாச் செந்துவாய்ப் பிறப்பார்களென்னா = பணி+ஆர்+அந்து+ஓசை +இலா+ செந்துவாய்+ பிறப்பார்களென்னா
பல்லியும், ஓசை இல்லாத அந்து போன்ற வாயில்லா பூச்சிகளாக பிறப்பார்கள்

பணியாரந் தோசை முன்னோனுக்கிட்டு ஏத்தி பழனிசெவ்வேன் = பணியாரம்+ தோசை+ முன்னோனுக்கு+ இட்டு + ஏத்தி +பழனி+ செவ்வேன்
பணியாரம், தோசை முதலிய பண்டங்களை முருகனின் முன்னவனான விநாயகருக்குப் படைத்து வழிபட்டு பழனி செல்லாதவர்கள்

பணியாரந் தோசைவ ராகாரன் னோர்க்கென்ன பாவமிதே = பணியார்+ அந்தோ+ சைவர்+ ஆகார்+ அன்னோர்க்கு+ என்ன+ பாவமிதே

இவ்வாறு பணிந்து வணங்காதவர்கள் சைவ சமயத்தவர்கள் ஆகமாட்டார்கள், அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

பணியாரம் தோசையினை பதமாக ருசித்தீர்களா அன்பர்களே! மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் ஓர் தமிழ்சுவையினை பருகுவோம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, May 16, 2015

மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!

மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!


உதயகிரி என்னும் நாட்டில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த காட்டில்  மோகினி என்ற சூன்யக்காரி வசித்துவந்தது. அது அந்த காட்டின் வழியாக யார் சென்றாலும் பிடித்து வைத்து துன்புறுத்தும். அந்த காட்டிற்குள் யாரும் துணிச்சலாக செல்லமாட்டார்கள்.

ஒரு சமயம் அந்த காட்டில் வழி தவறிய வேடன் ஒருவன் தன் மனைவி கைக்குழந்தையுடன் நுழைந்துவிட்டான். இராப்பொழுதில் வழி தெரியாமல் தவித்த அந்த தம்பதியரை மோகினிப் பேய் வழி மறித்தது. அந்த குழந்தையின் அழகு மோகினியைக் கவர்ந்தது. தானே ஓர் அழகி! தன்னைவிட இந்த குழந்தை மிக அழகாக இருக்கிறதே என்று வியந்த மோகினி அந்த குழந்தையை அபகரிக்க திட்டம் போட்டாள்.

மோகினியின் பயங்கர உருவத்தைக் கண்டு வேடனும் அவன் மனைவியும் பயந்தபோது குழந்தையும் பயங்கரமாக அழுதது. அச்சமயத்தில் மோகினி பேசினாள். “ நீங்கள் இருவரும் இந்த காட்டில் இருந்து உயிரோடு வெளியேற வேண்டுமானால் உங்கள் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள்! இல்லை என்றால் கொன்றுவிடுவேன்!” என்று மிரட்டினாள்.

இந்த குழந்தையை ஒன்றும் செய்துவிடாதே! நாங்கள் இறந்தாலும் குழந்தையை கொல்லமாட்டோம்! என்று கதறினாள் தாய்.  “அடி! பைத்தியக்காரி! குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு! அதை நான் வளர்க்கப்போகிறேன்! நீ வேறு குழந்தையைப் பெற்றுக் கொள்! இல்லாவிடில் இப்போதே குழந்தையைக் கொன்றுவிடுவேன்!” என்றாள் மோகினி.

குழந்தையை தராவிட்டால் கொன்றுவிடுவாள்! தந்துவிட்டாளோ கொல்லமாட்டாள்! குழந்தை நம்மிடம் இல்லாவிட்டாலும் உயிரோடாவது இருக்கட்டும் என்று குழந்தையை மோகினியிடம் கொடுத்துவிட்டு வேடனும் அவன் மனைவியும் காட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டனர். அன்று முதல் மோகினி அந்த குழந்தையை தன் குழந்தையாக எண்ணி கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.

அந்த குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குமரிப் பருவத்தை அடைந்தாள். காட்டின் நடுவே யாரும் புக முடியாத படி ஓர் கோட்டை கட்டி அதனுள் அந்த பெண்ணை வளர்த்து வந்தாள் மோகினி. அப்பெண்ணுக்கு குழலி என்று பெயர் வைத்தாள். அந்த பெண்ணின் கூந்தல் நீளமானது. கற்பனைக்கு எட்டாதவகையில் அறுபதடி நீளத்திற்கும் அதிகமாக அந்த கூந்தல் வளர்ந்து இருந்தது.

குழலிக்கு அந்த கோட்டையில் தனித்து உலாவ பிடிக்கவில்லை! வெளியுலகம் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனாலும் மோகினி அதற்கு அனுமதிக்கவில்லை! கோட்டை மேல் தளத்தில் ஓர் அறையில் மட்டுமே அவள் உலாவ முடியும். அதற்கு ஒரே ஜன்னல். அதன் வழியாக வெளியே பார்க்கலாம். வாசல்கதவுகளை அடைத்து பூட்டிவிடுவாள். இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் கொன்றுவிடுவேன் என்று குழலியை மிரட்டி வைத்திருந்தாள்.

மோகினிக்கு குழலியைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தால்  கோட்டை வாசலுக்கு வந்து குரல் எழுப்புவாள். உடனே முடியரசியான குழலி தன்னுடைய கூந்தலை சாளரத்தின் வழியெ வெளியே விடுவாள். அதைப் பிடித்து ஏறிவந்து குழலியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் கீழே இறங்கிச் சென்று விடுவாள்.

 ஒரு சமயம் உதயகிரியின் இளவரசன் அந்த அடர்ந்த காட்டுக்குள் வழி தவறி நுழைந்துவிட்டான். அங்கு உயரமான கோட்டை இருப்பதும் அதற்கு ஒரே சாளரம் மட்டும் இருப்பதும் அவனைக் கவர்ந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கு மெல்லிய இசை ஒலிப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த இசையில் அவன் லயித்து நின்றபோது யாரோ வரும் ஓசை கேட்டு மரத்தின் பின் சென்று ஒளிந்து கொண்டான்.

 அப்போது மோகினி அங்கே வந்தாள்.  முடியரசியே! என் செல்ல மகளே! மோகினியை மெல்ல மேலே வரவிடு உன் கூந்தலை! என்று குரல் கொடுத்தாள்.  உடனே முடியரசி, தன்னுடைய கூந்தலை வெளியே விட்டாள். அதைப் பிடித்து ஏறி உள்ளே வந்தாள் மோகினி. இதை எல்லாம் ஒளிந்து இருந்து பார்த்த இளவரசன் மோகினி திரும்பி சென்றதும் தானும் அந்த கோட்டைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இதற்கு அது சமயம் அல்ல என்று மற்றொருநாள் வரலாம் என்று நாடு திரும்பினான்.

       நாடு திரும்பிய இளவரசனுக்கு அதே நினைவாகவே இருக்க விரைவிலேயே அவன் காட்டிற்கு மீண்டும் வந்தான். அந்த கோட்டை அருகே வந்து மோகினி குரல் எழுப்புவதை போல எழுப்பினான். முடியரசியும் தன் கூந்தலை வெளியே விட  அதைப் பிடித்து மேலே ஏறி உள்ளே சென்ற இளவரசன் அங்கே அழகே உருவாக முடியரசி இருப்பதைக் கண்டு பிரமித்தான்.

 முடியரசியும் மோகினி வராமல் இளைஞன் ஒருவன் வருவதைக் கண்டு பயந்து போனாள். இளவரசன் அவளிடம், “ பயப்படாதே அழகியே! நான் உதயகிரி இளவரசன்! முன்பொரு நாள் இங்கே வந்தபோது மோகினி உன் கூந்தலை பற்றி உள்ளே வருவதைப் பார்த்தேன். இத்தனை நீண்ட கூந்தல் உடைய பெண் யாராக இருக்கும் என்ற ஆவலில் இன்று உன்னைப் பார்க்க வந்தேன். நீ யார்? இங்கு எப்படி வந்தாய்?” என்று வினவினான்.
 முடியரசியும் அவன் இளவரசன் என்று அறிந்து மகிழ்ந்து தன் கதையைக் கூறினாள். அன்று முதல் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இளவரசன் வரும் சமயம் எல்லாம் நூல் கொண்டுவரும்படி முடியரசி கூறினாள். அந்த நூலினைக் கொண்டு ஒரு நூலேணி ஒன்றை தயார்செய்தாள் முடியரசி.

ஒருநாள் மோகினி அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கும் போது வாய் தவறி இளவரசன் வந்து போவதை சொல்லிவிட்டாள் முடியரசி. அவ்வளவுதான் வந்ததே கோபம் மோகினிக்கு. நீ எனக்கு மட்டுமே சொந்தம்! இளவரசன் இனி வரக்கூடாது! வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாள். இதற்கிடையில் முடியரசி நூல் ஏணி ஒன்றை பின்னி விட்டாள்.
மறுநாள் இளவரசன் வந்தான். இளவரசி கூந்தலைவிட அதில் ஏறி உள்ளே வந்தான். இந்த காட்சியை மோகினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கோபம் வந்தது. தன்னை மீறி முடியரசி நடக்கிறாள் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை! வேகம் வேகமாக கோட்டைக்கு வந்தாள்.

   முடியரசியே உன் கூந்தலை விடு! உன்னை என்ன செய்கிறேன் பார்! என்று உரக்க கத்தினாள்.

  முடியரசி நடுங்கிப் போனாள். இளவரசன் பயப்படாதே! உன் கூந்தலைவிடு!  என்றான்.

  முடியரசி கூந்தலைவிட்டதும் அதைப் பிடித்துக் கொண்டு பாதி ஏறி வருகையில் இளவரசன் ஓர் காரியம் செய்தான். தன்னுடைய வாளினால்  முடியரசியின் கூந்தலை வெட்டி விட்டான்

    அவ்வளவுதான்! மோகினி அவ்வளவு உயரத்தில் இருந்து பொத்தென கீழே விழுந்து மண்டை சிதறி இறந்து போனாள்.

    பிறகு நூலேணி வழியாக இருவரும் கீழே இறங்கினார்கள்! முடியரசியை உதயகிரி அழைத்துவந்த இளவரசன் அவளை மணந்துகொண்டு நாட்டின் இளவரசியாக்கினான். அப்புறம் அவர்கள் இன்பமாக பல்லாண்டுகாலம் வாழ்ந்தார்கள்!

(செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Friday, May 15, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 36

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!


1.   தலைவர் ஊழல் பண்றவங்களோட எப்பவும் கூட்டு வச்சிக்க மாட்டார்!
அவ்ளோ நல்லவரா?
நீ வேற எதையும் தானே தனியா பண்ணனும்னு நினைப்பார்!

2.   தலைவர் எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தற இடத்தை மூன்று சுற்று சுற்றி வர்றாரு!
மூன்று சுற்று பேச்சுவார்த்தைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாரு போல!

3.   புலவரே! பொய்யுரைத்த வாய்க்கு போஜனம் கிட்டாது என்பது உண்மையா?
  நிஜம்தான் மன்னா! தங்களை புகழும் எனக்கு ஒருவாய் சோறு கிட்டவே இல்லையே!

4.   இப்ப எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே?
  நீங்கதானே சொன்னீங்க! மாமியாரை தாயா பார்த்துக்கணும்னு! வரசொல்றேன் பார்த்துக்கங்க!


5.   பார்டர்ல பிரச்சனையானதுல ஆபிஸுக்கு லேட்டா வர்றியா? அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?
நான் சொன்னது என்பொண்டாட்டி பட்டுப்புடவை பார்டரை!

6.   லோன் வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா? ஏன்?
  லோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே!

7.   ஒரு டஜன் சீப்பு வாங்கச் சொல்லி மானேஜர் உத்தரவு போட்டிருக்காரா ஏன்?
யாரோ அவர்கிட்ட ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதுன்னு சொல்லிட்டாங்களாம்!

8.   பதுங்கு குழிகள் நிறைய வெட்டச்சொல்கிறாரே மன்னர் என்ன விஷயம்?
இல்லாவிட்டால் எதிரி மன்னன் பல்லாங்குழி ஆடிவிடபோகிறான் என்றுதான்!

9.   இனிமே பிறந்தநாள் கொண்டாடவே மாட்டேன்னு தலைவர் சொல்றாரே ஏன்?
போஸ்டர் அடிச்ச காசு கூட வசூலாகாத எரிச்சல்லதான் அப்படி பேசுறாரு!

10. இந்த குழந்தை வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க?
ஆள மாத்தி ஆள் தாவிக்கிட்டே இருக்குதே!
11. என் பொண்ணு பின்னாடி ஆறு மாசமா சுத்தறியே? அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?
இப்ப அவ மூணு மாசம் கர்பமா இருக்கான்னு தெரியும்!

12. கால் அமுக்கிவிடாம என் மனைவி தூங்கவே மாட்டா?
இந்த காலத்திலேயும் இப்படி இருக்காங்களா?
நீ வேற நான் அவ காலை அமுக்கி விட்டாத்தான் அவ தூங்குவான்னு சொல்ல வந்தேன்!

13. மக்களுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கேன்! கடன் பட்டிருக்கேன்! அப்படின்னு தலைவர் சொல்றாரே என்ன விஷயம்?
தொகுதி பக்கம் தலை காட்டாம இருக்கிறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொல்றாரு!

14. நகையை தொலைச்சிட்டு கவலைப்பட்டுகிட்டிருந்த பொண்டாட்டிகிட்ட கவலைப்படாத கிடைச்சுரும் நம்பிக்கைத்தானே வாழ்க்கைன்னு சொன்னது தப்பா போச்சு!
  ஏன்?
அப்ப வாங்க கல்யாண் ஜுவல்லர்ஸ் போகலாம்கிறா!

15. டி.வி காம்பியரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு!
  ஏன்?
பேசியே கொல்லுறா!

16. என்னம்மா சொல்றீங்க! உங்க பையன் ஆயிரம் ரூபாயை முழுங்கிட்டானா எப்படி?
பையன் ஒரு ரூபாயை முழுங்கிட்டான்! அதை எடுக்க டாக்டர் ஆயிரம் ரூபாயை பீஸா முழுங்கிட்டாரே!

17.  மன்னரின் குரல் நடுங்கி இருக்கிறதே குளிர் ஜுரமா?
போர் சுரம்! எதிரி மன்னன் படையெடுத்துவருகிறானாம்!


18. எதிரி மன்னனுக்கு கொஞ்சம் இரக்கம் அதிகம் என்று எப்படி சொல்கிறீர் மந்திரியாரே!
புரட்டி புரட்டி அடித்துவிட்டு காயம் தீர களிம்பு கொடுத்து அனுப்பி இருக்கிறாரே மன்னா!

19. எதுக்கு பத்து பயில்வானுங்களை கட்சியிலே திடீர்னு சேர்த்து இருக்கீங்க தலைவரே!
  கட்சியிலே பலம் இல்லேன்னு யாரும் பேசக்கூடாது இல்லே!

20.  தலைவர் புயல் வீசுற சமயத்துல எதுக்கு சுற்றுப்பயணம் போகணும்னு அடம்பிடிக்கிறாரு!
  சூறாவளி சுற்றுப்பயணம்னு அறிவிச்சிட்டாராம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!


பிரதோஷம் என்றால் என்ன? 

      ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடுகின்றார். எனவே நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுவே பிரதோஷகாலம் என்றும் சொல்லப்படுகிறது.

  பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

திவ்யப்பிரதோஷம் : 

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 
சுக்கிர பிரதோஷம்: வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சுக்கிரப்பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. சுக்கிரன் சுகமளிக்கும் கடவுள். போக காரகன். வெள்ளியன்று பிரதோஷ வழிபாடு செய்வதால் வாழ்வில் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகி சுகம் அடையலாம்.
பொதுவாகவே பிரதோஷம் தேவர்களை சிவபெருமான் ஆலகால விஷத்தில் இருந்து காத்தருளிய நாள் ஆகும். பாற்கடலில் பொங்கிய விஷத்தை உண்டு தேவர்களுக்கு நன்மை அருளிய சிவபெருமான் நம்முடைய வாழ்க்கை பெருங்கடலில் பொங்கும் பல்வேறு துன்பங்களை விலக்கி நன்மைகளை தருவார். எனவே பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகிறது. அது எதற்கு? ஆலகால விஷத்தை சிவன் உண்டதும் பதறிய பார்வதி சிவனின் கழுத்தை தடவினார். அது கழுத்தோடு நின்று சிவன் நீலகண்டன் ஆனார். அப்போது அங்கிருந்த நந்தி இந்த விஷம் கொல்லக் கூடிய அளவிற்கு கொடுமை உடையதா? என்று எள்ளி நகையாடினார். ஆணவத்தால் இவ்வாறு பேசிய நந்தியை திருத்த சிவன் முடிவு செய்து, நந்தியே என்னுடைய கையை முகர்ந்து பார் என்று விஷம் வைத்திருந்த கையை நீட்டினார். அதை முகர்ந்த நந்தி மூர்ச்சை அடைந்ததோடு பின்னர் தெளிந்த பின்னரும் பித்து பிடித்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டும் பிதற்றிக் கொண்டிருந்தார்.
 பார்வதி தேவி நந்தியை மன்னிக்க வேண்டினார். அப்போது சிவன் அரிசிப்பொடியை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால் நந்தி குணம் அடைவார் என்று கூறினார். அப்படியே செய்தாள் பார்வதி. இதை நினைவு கூறும் விதமாகத்தான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகின்றது.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷமும் வழிபாட்டுப் பலன்களும்!
lஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல மங்களங்களைத் தரும்.
lதிங்கட்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.
lசெவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம் - பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.
lபுதன் கிழமை பிரதோஷ தரிசனம் - புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.
lவியாழக்கிழமை பிரதோஷ தரிசனம் - குருவருளோடு திருவருளும் கைகூடும். வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்
lசனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹாபிரதோஷம் என்கிறார்கள்.

இன்று துவாதசியோடு கூடிய திரயோதசி நாள். திவ்யப் பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றது. அத்துடன் சுக்கிரவாரமும் கலந்து வருவது மிகச்சிறப்பாகும். துன்பங்களை போக்கி இன்பங்களை தரும் ஈசனை இந்த திவ்யப் பிரதோஷ நாளில் வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்ததில் தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, May 14, 2015

“ஜெய” லலிதா” கதம்ப சோறு பகுதி 60

கதம்ப சோறு பகுதி 60

 “ஜெய” லலிதா!

     சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா ஊகங்களையும் மீறி விடுதலை ஆகிவிட்டார் ஜெயலலிதா. அம்மா இந்தவழக்கில் விடுதலை ஆக யாகங்களும் பூஜைகளும் பரிகாரங்களும் செய்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இனியாவது பணிக்குத் திரும்புவார்களா என்று தெரியவில்லை! நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெ வருமானத்திற்கு அதிகமாக பத்து சதவிதத்திற்கும் குறைவாகவே சேர்த்திருக்கிறார். அதுவும் 8.13 சதவீதம் மட்டுமே எனவே குற்றவாளி இல்லை என்று ஒரு கணக்கை கொடுத்து இருக்கிறார். அந்த கணக்கே தவறு என்று திமுகவும், ஆச்சார்யாவும் இன்ன பிற எதிர்கட்சிகளும் முழக்கமிட்டு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளன. அப்பீல் செய்தாலும் கூட இப்போது ஜெ விடுதலை ஆகிவிட்டார். இதுவே மற்றைய கட்சிகளுக்கு கொஞ்சம் கிலிதான். இன்னும் ஒருவருடங்களே சட்டமன்ற தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ முதல்வரானால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும். அதற்கு 23ம் தேதிக்குள் ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டுமாம். ஜெ ஊழல் செய்தார் என்பதை மறந்து அவர் எப்போது பதவி ஏற்பார்? யாரை பதவியிழக்கவைப்பார்? என்று தமிழ்நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. ஆக பத்து சதவீதத்திற்கு குறைவாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்ற புதிய நீதியும் வழங்கப் பட்டு இருக்கிறது. யார் திருடினான் என்பதல்ல கேள்வி? குறைந்த அளவு திருடியவன் யார்? என்பதே கேள்வி? இந்த மனோபாவத்திற்கு மக்களும் பழகிவிட்டார்கள்! மன்னன் எவ்வழி? மக்கள் அவ்வழி!

ஐந்தாண்டு ஜெயிலும் சல்மானும்!

    பாலிவுட் ஹீரோ சல்மான் குடித்துவிட்டு சாலையில் படுத்திருந்த ஒருவரை கார் ஏற்றி சாகடித்துவிட்டு ஜாலியாக சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அந்த வழக்கு முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்து தீர்ப்பை நிறுத்தி வைத்ததோடு ஜாமீனையும் உடனே வழங்கிவிட்டது. இன்னும் பல ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் பல ஆண்டுகளாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் தண்டணைக் காலத்தைவிட அதிகம் கழித்துக் கொண்டிருக்க  இவருக்கு இந்த சலுகை கிடைத்திருக்கிறது. பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்ததற்கே தூக்குத் தண்டணை! ஆளைக் கொன்றவருக்கு ஐந்துவருடம்! அதுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது பேசினால் நீதித்துறையை விமரிசிக்கக் கூடாது என்று சாட்டையடி! அடப் போங்கப்பா!

போலீஸ் விரட்டியதில் இளைஞன் மரணம்!

       சென்னையில் குடிநீர் விற்கும் இளைஞனை போலீஸ் துரத்தியதில் செண்டர்மீடியன் கம்பி குத்தி இறந்து போயுள்ளார். மூன்று பேர்களாக பைக்கில் வந்த அவர்களை சிக்னலில் போலீஸ்காரர் துரத்தியுள்ளார்.லத்தியால் அடித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க வண்டியை ஓட்டியதில் செண்டர் மீடியன் கம்பி குத்தி அவர் இறந்துவிட்டார். உடன் வந்தவருக்கு காயம். பிணத்தை வாங்க மறுத்து போராட்டம் என நடந்து இறுதியில் சமாதானம் ஆகியுள்ளது. பிடிக்க வேண்டியவர்களை விட்டுவிடும் போலீஸ் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் அப்பாவிகளை துரத்துவது எதற்கு என்று புரியவில்லை!

பொதுப்பணித்துறையில் ஊழல்!

ஊழலுக்கு எதிராக திடீரென ஒப்பந்த தாரர்கள் கொடிபிடிக்க ஆரம்பித்து உள்ளனர்.சென்னையில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தப்பணிக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்களின் பெயரை வெளியிட்டு ஓப்பந்த தாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து திருச்சியிலும் பெயர்களை வெளியிடப்போவதாக போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்துள்ளனர். கமிஷனுக்கு பெயர் போன பொதுப்பணித்துறையில் இதனால் ஊழியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். லஞ்சமும் பொதுப்பணியும் பிரிக்க முடியாதது என்று சொல்லலாம். என்னதான் பட்டியல் வெளியிட்டாலும் ஊழியர்களை பகைத்துக் கொண்டு ஒப்பந்த தாரர்கள் பணி செய்யமுடியுமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் இவர்களிடையே நடக்கும் இந்த போராட்டம் சூடுபிடித்து உள்ளது.

கிச்சன் கார்னர்!

நட்ஸ் போளி

தேவையான பொருட்கள்: மைதாமாவு 1 கப், பாதாம் பருப்பு 15, முந்திரி 15 பிஸ்தா 15 அக்ரூட் பருப்பு- 15 பேரிச்சை பழம் விதை நீக்கியது சிறிது, உப்பு சிறிது, ஏலக்காய் தூள் 1 சிட்டிகை, நெய்- தேவையான அளவு, பால் பவுடர் 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் 1 கப், தேங்காய் துருவல், கால் கப்.
செய்முறை: மைதாவுடன் உப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதில் நெய் தடவி 1 மணி நேரம் ஊறவிடவும். அனைத்து பருப்புக்களையும் பேரிச்சையுடன் 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவிடவும். ஊறியதும் பாதாம் பருப்பை தோல் நீக்கி மற்ற பருப்பு மற்றும் பேரிச்சையோடு வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். போளிக்குள் வைக்கும் பூரணம் தயார் செய்ய இக்கலவையை அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் அடுப்பை குறைந்த தணலில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கி பால்பவுடர் சேர்க்கவும். நட்ஸ் ரிச் பூரணம் தயார்.
தோசைக் கல் சூடானதும் நெய் ஊற்றி போளியை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும். பூரணம் இளகினதாக தெரிந்தால் பால்பவுடர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு தந்தவர், சென்னை, சுதா செல்வகுமார்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

துணிகளில் அல்லது கையில் ஸ்கெட்ச் பேனா கறை படிந்துவிட்டதா? அசிட்டோன் எனப்படும் நகபாலிஷ் அழிக்கும் திரவம் கொண்டு கறையை சுத்தப்படுத்தலாம்.

மிதியடிக்கு அடியில் அதே சைஸில் பழைய நியுஸ் பேப்பர் போட்டு வைத்தால் மிதியடி அழுக்குகள் அந்த பேப்பரில் சேர்ந்துவிடும்.

வாழைப்பழம் கருக்காமல் இருக்க ஈரத்துணியால் சுற்றிவைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

சிறிது டால்கம் பவுடரை ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் போட்டுவைத்தால் ரப்பர் பேண்ட் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

வீட்டின் மரச்சாமான்களுக்கு அடிக்கும் பெயிண்டினை முறத்திற்கு அடித்து காயவைத்து உபயோகித்தால் முறம் நீண்ட நாள் உழைக்கும். பூச்சிகள் அரிக்காது.

கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து போகும்.

கார்பன் – டை – ஆக்ஸைடு அதிகரிப்பு:
 பூமியின் காற்று மண்டலத்தில் கார்பன் – டை – ஆக்ஸைடு விகிதம் வரலாறு காணாதவகையில் அதிகரித்து உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் புயல், கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கும் மவுனா லோவா என்ற கண்காணிகப்பகத்தில் எடுக்கப்பட்ட கார்பன் –டை –ஆக்ஸைடு அளவு 400 பி.பி, எம் ஆகும் இது மிகவும் அபாயகரமானது.இந்த ஆய்வகத்தில் எடுக்கப்படும்   அளவைக் கொண்டுதான் பூமியின் ஒட்டு மொத்த காற்று மண்டலத்தின் அளவுகள் கணக்கிடப்படும். இந்த வகையில் இந்தியா காற்று மாசு பாட்டில் 178 நாடுகளில் 174வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக பெங்களூரு நகரம் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவின் கார்பன் அளவு310 பி.பி.எம். சென்னை 179 பி.பி, எம். இந்த அளவு அதிகரிப்பு வெப்பத்தை அதிகப்படுத்தும் நிலப்பகுதியை மட்டுமில்லாமல் நீர்ப்பகுதிகளையும்பாதிக்கும். மோடி அரசு இந்த கார்பன் அளவை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாம்.

 தள அறிமுகம்:

நிசப்தம் வா. மணிகண்டன்.

பெங்களூருவில் வசிக்கும் எழுத்தாளர் வா. மணிகண்டனின் தளம் நிசப்தம். தினமும் எழுதும் இவரின் எழுத்துக்கள் நம்மை வசிகரிக்கின்றன. எதை எழுதினாலும் அதை எல்லோருக்கும் புரியும் படியும் எளிமையாகவும் எழுதுவது இவரின் பாணி. பெரும்பாலும் சொந்த அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொடுக்கிறார். நிசப்தம் அறக்கட்டளைத் துவங்கி சப்தமில்லாமல் பலருக்கும் உதவிக் கொண்டு இருக்கின்றார். வளரும் பதிவர்கள் இவரது தளத்திற்கு சென்று வாசிப்பது தங்களை வளர்த்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். இவரது தளத்திற்கான இணைப்பு இதோ  நிசப்தம்

படிச்சதில் பிடிச்சது!

ஒருவர் இறந்ததும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருந்தார்கள். இரவில் மகன்களின் அறையில் சத்தம் அதிகமாக இருந்தது. மகள் கூர்ந்து கேட்டாள்.
தம்பி சொன்னான், “அண்ணா நீதான் மூத்தவன் எனவே இரண்டுலட்சத்தை நீயும் மீதி ஒரு லட்சத்தை நானும் எடுத்துக் கொள்கிறேன்”
அதற்கு அண்ணன் சொன்னான். “ இல்லையடா தம்பி! ஆளுக்குப் பாதி என்று ஒன்றரை லட்சத்தை சமமாக எடுத்துக் கொள்வோம்.” என்றான்.
இதைக்கேட்டதும் தங்கைக்கு பொறுக்கவில்லை. அப்பாவின் பணத்தை இருவர் மட்டுமே எடுத்து கொள்கிறார்களே என்று பதட்டத்தில் உடனடியாக அறைக்குள் நுழைந்தாள். “நானும் உங்க கூட பிறந்தவள்தானே! ஆளுக்கு ஒரு லட்சம் என பிரிக்க வேண்டும்” என்றாள்.
 அதற்கு சகோதரர்கள், “நீ திருமணம் ஆகிப்போய்விட்டாய், உன் கணவன் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்… வேண்டாம்” என்றனர்.
“இல்லையில்லை சமமாகத்தான் பிரிக்கணும்!” அடம்பிடித்தாள் தங்கை.
உடனே அண்ணன் சொன்னான். “ சரி… அப்படியானால் ஆளுக்கு ஒரு லட்சம் என அப்பா வைத்துப் போன மூன்று லட்சம் கடனையும் சமமாக பிரித்துக் கொள்ளுவோம்!”
தங்கை மயக்கம் போட்டு விழுந்தாள்>
(தி இந்துவில் படித்தது)


Related Posts Plugin for WordPress, Blogger...