மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!
மோகினி வளர்த்த
முடியரசி! பாப்பாமலர்!
உதயகிரி என்னும்
நாட்டில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த காட்டில் மோகினி என்ற சூன்யக்காரி வசித்துவந்தது.
அது அந்த காட்டின் வழியாக யார் சென்றாலும் பிடித்து வைத்து துன்புறுத்தும். அந்த காட்டிற்குள்
யாரும் துணிச்சலாக செல்லமாட்டார்கள்.
ஒரு சமயம் அந்த
காட்டில் வழி தவறிய வேடன் ஒருவன் தன் மனைவி கைக்குழந்தையுடன் நுழைந்துவிட்டான். இராப்பொழுதில்
வழி தெரியாமல் தவித்த அந்த தம்பதியரை மோகினிப் பேய் வழி மறித்தது. அந்த குழந்தையின்
அழகு மோகினியைக் கவர்ந்தது. தானே ஓர் அழகி! தன்னைவிட இந்த குழந்தை மிக அழகாக இருக்கிறதே
என்று வியந்த மோகினி அந்த குழந்தையை அபகரிக்க திட்டம் போட்டாள்.
மோகினியின் பயங்கர
உருவத்தைக் கண்டு வேடனும் அவன் மனைவியும் பயந்தபோது குழந்தையும் பயங்கரமாக அழுதது.
அச்சமயத்தில் மோகினி பேசினாள். “ நீங்கள் இருவரும் இந்த காட்டில் இருந்து உயிரோடு வெளியேற
வேண்டுமானால் உங்கள் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள்! இல்லை என்றால் கொன்றுவிடுவேன்!”
என்று மிரட்டினாள்.
இந்த குழந்தையை
ஒன்றும் செய்துவிடாதே! நாங்கள் இறந்தாலும் குழந்தையை கொல்லமாட்டோம்! என்று கதறினாள்
தாய். “அடி! பைத்தியக்காரி! குழந்தையை என்னிடம்
கொடுத்துவிடு! அதை நான் வளர்க்கப்போகிறேன்! நீ வேறு குழந்தையைப் பெற்றுக் கொள்! இல்லாவிடில்
இப்போதே குழந்தையைக் கொன்றுவிடுவேன்!” என்றாள் மோகினி.
குழந்தையை தராவிட்டால்
கொன்றுவிடுவாள்! தந்துவிட்டாளோ கொல்லமாட்டாள்! குழந்தை நம்மிடம் இல்லாவிட்டாலும் உயிரோடாவது
இருக்கட்டும் என்று குழந்தையை மோகினியிடம் கொடுத்துவிட்டு வேடனும் அவன் மனைவியும் காட்டைவிட்டு
வெளியில் வந்துவிட்டனர். அன்று முதல் மோகினி அந்த குழந்தையை தன் குழந்தையாக எண்ணி கண்ணும்
கருத்துமாக வளர்த்தாள்.
அந்த குழந்தையும்
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குமரிப் பருவத்தை அடைந்தாள். காட்டின்
நடுவே யாரும் புக முடியாத படி ஓர் கோட்டை கட்டி அதனுள் அந்த பெண்ணை வளர்த்து வந்தாள்
மோகினி. அப்பெண்ணுக்கு குழலி என்று பெயர் வைத்தாள். அந்த பெண்ணின் கூந்தல் நீளமானது.
கற்பனைக்கு எட்டாதவகையில் அறுபதடி நீளத்திற்கும் அதிகமாக அந்த கூந்தல் வளர்ந்து இருந்தது.
குழலிக்கு அந்த
கோட்டையில் தனித்து உலாவ பிடிக்கவில்லை! வெளியுலகம் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனாலும்
மோகினி அதற்கு அனுமதிக்கவில்லை! கோட்டை மேல் தளத்தில் ஓர் அறையில் மட்டுமே அவள் உலாவ
முடியும். அதற்கு ஒரே ஜன்னல். அதன் வழியாக வெளியே பார்க்கலாம். வாசல்கதவுகளை அடைத்து
பூட்டிவிடுவாள். இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் கொன்றுவிடுவேன் என்று குழலியை மிரட்டி
வைத்திருந்தாள்.
மோகினிக்கு குழலியைப்
பார்க்கவேண்டும் என்று நினைத்தால் கோட்டை வாசலுக்கு
வந்து குரல் எழுப்புவாள். உடனே முடியரசியான குழலி தன்னுடைய கூந்தலை சாளரத்தின் வழியெ
வெளியே விடுவாள். அதைப் பிடித்து ஏறிவந்து குழலியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர்
கீழே இறங்கிச் சென்று விடுவாள்.
ஒரு சமயம் உதயகிரியின் இளவரசன் அந்த அடர்ந்த காட்டுக்குள்
வழி தவறி நுழைந்துவிட்டான். அங்கு உயரமான கோட்டை இருப்பதும் அதற்கு ஒரே சாளரம் மட்டும்
இருப்பதும் அவனைக் கவர்ந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கு மெல்லிய இசை ஒலிப்பது அவனுக்கு
ஆச்சர்யமாக இருந்தது. அந்த இசையில் அவன் லயித்து நின்றபோது யாரோ வரும் ஓசை கேட்டு மரத்தின்
பின் சென்று ஒளிந்து கொண்டான்.
அப்போது மோகினி அங்கே வந்தாள். முடியரசியே! என் செல்ல மகளே! மோகினியை மெல்ல மேலே
வரவிடு உன் கூந்தலை! என்று குரல் கொடுத்தாள்.
உடனே முடியரசி, தன்னுடைய கூந்தலை வெளியே விட்டாள். அதைப் பிடித்து ஏறி உள்ளே
வந்தாள் மோகினி. இதை எல்லாம் ஒளிந்து இருந்து பார்த்த இளவரசன் மோகினி திரும்பி சென்றதும்
தானும் அந்த கோட்டைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இதற்கு அது
சமயம் அல்ல என்று மற்றொருநாள் வரலாம் என்று நாடு திரும்பினான்.
நாடு திரும்பிய இளவரசனுக்கு அதே நினைவாகவே
இருக்க விரைவிலேயே அவன் காட்டிற்கு மீண்டும் வந்தான். அந்த கோட்டை அருகே வந்து மோகினி
குரல் எழுப்புவதை போல எழுப்பினான். முடியரசியும் தன் கூந்தலை வெளியே விட அதைப் பிடித்து மேலே ஏறி உள்ளே சென்ற இளவரசன் அங்கே
அழகே உருவாக முடியரசி இருப்பதைக் கண்டு பிரமித்தான்.
முடியரசியும் மோகினி வராமல் இளைஞன் ஒருவன் வருவதைக்
கண்டு பயந்து போனாள். இளவரசன் அவளிடம், “ பயப்படாதே அழகியே! நான் உதயகிரி இளவரசன்!
முன்பொரு நாள் இங்கே வந்தபோது மோகினி உன் கூந்தலை பற்றி உள்ளே வருவதைப் பார்த்தேன்.
இத்தனை நீண்ட கூந்தல் உடைய பெண் யாராக இருக்கும் என்ற ஆவலில் இன்று உன்னைப் பார்க்க
வந்தேன். நீ யார்? இங்கு எப்படி வந்தாய்?” என்று வினவினான்.
முடியரசியும் அவன் இளவரசன் என்று அறிந்து மகிழ்ந்து
தன் கதையைக் கூறினாள். அன்று முதல் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இளவரசன்
வரும் சமயம் எல்லாம் நூல் கொண்டுவரும்படி முடியரசி கூறினாள். அந்த நூலினைக் கொண்டு
ஒரு நூலேணி ஒன்றை தயார்செய்தாள் முடியரசி.
ஒருநாள் மோகினி
அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கும் போது வாய் தவறி இளவரசன் வந்து போவதை சொல்லிவிட்டாள்
முடியரசி. அவ்வளவுதான் வந்ததே கோபம் மோகினிக்கு. நீ எனக்கு மட்டுமே சொந்தம்! இளவரசன்
இனி வரக்கூடாது! வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாள். இதற்கிடையில் முடியரசி
நூல் ஏணி ஒன்றை பின்னி விட்டாள்.
மறுநாள் இளவரசன்
வந்தான். இளவரசி கூந்தலைவிட அதில் ஏறி உள்ளே வந்தான். இந்த காட்சியை மோகினி பார்த்துக்
கொண்டிருந்தாள். அவளுக்கு கோபம் வந்தது. தன்னை மீறி முடியரசி நடக்கிறாள் என்பதை தாங்கிக்
கொள்ள முடியவில்லை! வேகம் வேகமாக கோட்டைக்கு வந்தாள்.
முடியரசியே உன் கூந்தலை விடு! உன்னை என்ன செய்கிறேன்
பார்! என்று உரக்க கத்தினாள்.
முடியரசி நடுங்கிப் போனாள். இளவரசன் பயப்படாதே!
உன் கூந்தலைவிடு! என்றான்.
முடியரசி கூந்தலைவிட்டதும் அதைப் பிடித்துக் கொண்டு
பாதி ஏறி வருகையில் இளவரசன் ஓர் காரியம் செய்தான். தன்னுடைய வாளினால் முடியரசியின் கூந்தலை வெட்டி விட்டான்
அவ்வளவுதான்! மோகினி அவ்வளவு உயரத்தில் இருந்து
பொத்தென கீழே விழுந்து மண்டை சிதறி இறந்து போனாள்.
பிறகு நூலேணி வழியாக இருவரும் கீழே இறங்கினார்கள்!
முடியரசியை உதயகிரி அழைத்துவந்த இளவரசன் அவளை மணந்துகொண்டு நாட்டின் இளவரசியாக்கினான்.
அப்புறம் அவர்கள் இன்பமாக பல்லாண்டுகாலம் வாழ்ந்தார்கள்!
(செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஆஹா நீடுழி வாழட்டும் அந்த தம்பதியினர்
ReplyDeleteவாழ்க வளமுடன்.
இது போல் ஒரு ஆங்கில கதைப் படித்த ஞாபகம். சூப்பர் கதை. ஆனா பாருங்க ஒரு சந்தேகம். சூனியக்காரி எப்படி சாக முடியும். அவள் தான் மாயம் தெரிந்தவளாயிற்றே.
ReplyDeleteஉங்கள் கதையைப் படிக்கும் போதெல்லாம் நானும் குழந்தையாகி விடுகிறேன்.
ReplyDeleteநன்றி
இது சிறுவயதில் நான் கேட்ட கதை தான் நன்றாகவே உள்ளது மீண்டும் கேட்க. நன்றி நன்றி! நினைவு படுத்தியமைக்கு.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
கதையை படித்த போது நாங்களும் இந்த நிலைக்கு வந்தது போல நினைவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேற்று உலகிற்கு அழைத்துச்சென்றதுடன் படித்த எங்களையும் குழந்தைகளைப் போல ஆக்கிவிட்டீர்கள். படிக்கும்போது குழந்தையாகவே மாறிவிட்டோம். மிக அருமை.
ReplyDelete