கொல்ல நினைத்த வள்ளல்! தித்திக்கும் தமிழ் பகுதி 8

தித்திக்கும் தமிழ்! பகுதி 8


யாருக்கு எது தேவையோ அதை பரிசாக அளிப்பதே சிறப்பு! பசித்து வருபவனுக்கு சோறும், ஆடையின்றி கிடப்பவனுக்கு ஆடையும், பொருள் வேண்டி வருபவனுக்கு பொருளும்  இப்படி வேண்டுவது கொடுப்பதே சிறந்த கொடையாகும்.
கோடை வெயில் கொளுத்தும் இந்த காலத்தில் தண்ணீர் பந்தல் என்று கட்டி வைக்கிறார்கள். அங்கு பந்தல் இருக்கும் பானை இருக்கும் ஆனால் நீர்தான் இருக்காது. தாகம் மேலிட அங்கே சென்றவனுக்குக் கோபம்தான் மிஞ்சும் இப்படி இருக்கிறது இந்த காலத்து தர்மம்.
 இன்னும் சிலரது தர்மம் பிரதிபலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறது. அந்த காலத்தில் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் முல்லைக்கு தேரிந்த பாரியும் இன்று பரிகசிக்கப் படும் நிலையும் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனே கொடுத்துவிட வேண்டும். ஒரு முறை கர்ணனிடம் ஒருவர் யாசகம் கேட்க சென்றிருந்தார். அச்சமயம் ஓர் கிண்ணத்தில் எண்ணெய் வைத்து எண்ணெய் குளியல் செய்து கொண்டிருந்தார் கர்ணன். யாசிப்பவர் கேட்டதும் உடனே இடக்கையால் எண்ணெய் கிண்ணத்தை தந்துவிட்டார்.
   இடக்கையால் தருகின்றீரே! இது தகுமா? என்றார் யாசிப்பவர்.
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். நீங்கள் கேட்டதும் இந்த தங்க கிண்ணத்தை தந்துவிட வேண்டும் என்று தோன்றியது. இது நான் குளித்துவிட்டு வந்த பின்னர் மாறிவிட கூடும். தங்க கிண்ணம் எதற்குத் தரவேண்டும் வேறு எதாவது தரலாம் என்று எண்ணம் தோன்றும். அதை தவிர்க்கவே இடக்கையால் தானம் செய்தேன் என்றாராம் கர்ணன்.
   இப்படி வரிசை அறிந்தும் அறியாமலும் எத்தனையோ புரவலர்கள் புலவர்களை பரிசளித்து காப்பாற்றி உள்ளனர். இந்த மன்னன் செய்த தானம் புலவரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள்.  ஒருவாய்க்கே உணவில்லாமல் தவிக்கும் அவருக்கு நான்கு வாய்களை தானமாக கொடுத்து கொல்ல நினைத்தானாம் அந்த வள்ளல். தானன் என்னும் அந்த வள்ளல் பற்றிய புலவரின் புலம்பல் இதோ!

‘இல்’ எனும்சொல் அறியாத சீகையில்வாழ்
  தானனைப்போய் யாழ்ப்பா ணன்யான்,
பல்லைவிரித்து இரந்தக்கால், வெண்சோறும்
  பழம்தூசும் பாலி யாமல்,
கொல்லநினைந்  தேதனது நால்வாயைப்
   பரிசென்று கொடுத்தான்; பார்க்குள்
தொல்லைஎனது ஒருவாய்க்கும் நால்வாய்க்கும்
  இரையெங்கே துரப்பு வேனே?

பொன் விளைந்த களத்தூர் அந்தகக் கவிராயரின் பாடல் இது. கண்பார்வை அற்ற இந்த புலவரின் பாடல்கள் தமிழ்சுவையை நன்கு ஊட்டுவதோடு சிறு நையாண்டியையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.  ஒரு வாய்க்கே உணவில்லாத புலவருக்கு நால்வாயை தானமாக கொடுத்தான் தானன். வாயை தானமாக யாராலும் கொடுக்க முடியுமா? அதுவும் நான்கு வாய்களை? இதோ இவன் கொடுத்துள்ளான். எப்படி? இப்படித்தான்.

யாழ் வாசித்து பாடும் பாணன் ஆகிய புலவரானவர் இல்லை என்று சொல்லாத தானன் என்னும் வள்ளலிடம் சென்று பல்லைக் காட்டி இரந்தாராம். அவருக்கு மிகுந்த பசி. அந்த பசியைப் போக்க வெண்மையான சோறும், பழைய ஆடையும் தராத அவன் என்னைக் கொல்ல நினைத்து தன்னுடைய நால்வாயை பரிசாக அளித்தான். நால்வாய் என்பது யானை.  இந்த உலகத்தே பசியால் வாடும் என்னுடைய ஒருவாய்க்கு உணவைத் தர முடியாத நான். நான்கு வாய்களுக்கு உணவை எங்கேத் தேடுவேன்? என்கிறார் புலவர்.
   பரிசில் என்றதும் வள்ளல் பெருமையாக யானையை தந்துவிட்டார். என்னுடைய பசிக்கு உணவே  இல்லாமல் தவிக்கும் நான் யானையின் பசிக்கு உணவை எங்கே தேடுவேன். இது என்னை கொல்ல நினைப்பது போல உள்ளது என்று வருந்துகின்றார் புலவர்.
நால்வாய்- நான்கு வாய்கள் என்றும் யானை என்றும் பொருள்படும். தொங்குகின்ற வாய் என்ற பொருளும் உண்டு.


மிக அருமையான பாடல் அல்லவா? படித்து ரசியுங்கள்! பழந்தமிழ் புலவர்களின் தமிழறிவு புலப்படும். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு பாடலுடன் சந்திப்போம்! நன்றி!

Comments

 1. சமயமறிந்து செய்யும் உதவியே சிறந்தது.

  ReplyDelete
 2. நம் தமிழ்ப்புலவர்கள் எதை விட்டு கவி எழுதினார்கள். அருமையான பாடல். சரியான விளக்கம். தாங்கள் பகிர்ந்தது அருமை. நன்றி.

  ReplyDelete
 3. தமிழ்ப்புலவர்கள் பாடல்களில் நல்ல நடை, நீதி என்ற நிலைகளில் அமைகின்றன. அவை எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவும் உள்ளன. இதுவே அதன் சிறப்பாகும். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. புலவர் வருந்துவதிலும் நியாயம் உள்ளது...

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 6. பா பொருள் விளக்கம் அருமை
  இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

  ReplyDelete
 7. ஐயா வணக்கம்.
  கதையோடு ஒட்டியதென்பதால் ஒரு செய்தி,

  ஈகை என்பது இல்லார்க்கு இல்லை எனாமல் கொடுப்பது.

  கொடை என்பது தக்கார்க்குக் தகுதியறிந்து கொடுப்பது..

  பொதுவாகத் தமிழ்ப்புலவர்கள் யாசகம் கேட்பது போல் சித்தரிக்கப்படுகிறது.

  அது தம் தகுதிக்கான பெறுமதியே அன்றி இரத்தல அல்ல.

  ஒரே பொருளில நாம் கையாளும் வேறுபாடுகளுடைய நிறைய சொற்கள் தமிழில் உண்டு.

  உங்கள் பதிவினூடே நினைவு கூர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு.....ரசித்தோம்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2