பேய்ப்பயம்!

பேய்ப்பயம்!


நள்ளிரவு 12. மணி. ஒத்தை ஆளாய் என்னை உதிர்த்துவிட்டு அந்த பேருந்து வேகம் பிடித்தது. கும்மிருட்டு. அமாவாசை கடந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தது. வேலிக்காத்தான் மரங்கள் படர்ந்திருந்த அந்த செம்மண் பாதை இருட்டிலும் சிவப்பாய் தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு பேயொன்று நாக்கை நீட்டி படுத்திருப்பது போலவே அது எனக்குத் தோன்றியது.

   பேய், பிசாசு, காத்து கறுப்பு இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிராமத்திலேயே பிறந்துவளர்ந்து இன்று தொழில்நிமித்தம் நகரத்தில் வசிக்கும் எனக்கு இதிலெல்லாம் அசாத்திய நம்பிக்கை. கிராமத்தில் இருக்கும் போது கதை கதையாக கூறுவதை மட்டும் அல்ல! நேரிலும் பார்த்து இருக்கிறேன். உச்சி வெயில் பொழுதிலும் நள்ளிரவிலும் யாரும் தனியாக நடமாடப் மாட்டார்கள். அப்படித்தான் ஒரு சமயம் உச்சிப்பொழுதில் தனியாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த மேட்டுத் தெரு குப்பனை முனி ஒன்று அடித்துவிட்டதாக சொன்னார்கள்.  போய் பார்த்தபோது பயங்கரமாக இருந்தது வாய் பிளந்து ரத்தம் கக்கி இறந்து போயிருந்தான்.

       ஹார்ட் பேஷண்டான அவன் வெயில் தாங்காமல் மார்புவலி வந்து இதயம் அடைபட்டு இறந்தான் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை! ஏரிக்கரை முனிதான் அவனை அடித்துக் கொன்றுவிட்டது என்றே எல்லோரும் சொன்னார்கள். இப்படி பேய்க்கதைகள் உலாவும் எங்கள் கிராமத்திற்கு இந்த நள்ளிரவில் வந்து இறங்கியிருக்கிறேன் என்றால் அது என் விதி  என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல?

      மூன்று மணி நேர பயணத்தில் அடக்கி வைத்திருந்த சிறுநீரை புதரோரம் கழித்துவிட்டு அந்த பாதையில் நடக்கத் துவங்கினேன். யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்கும். விடிந்து கூட  வந்திருக்கலாம். நாளை காலையில் புறப்பட்டு இருந்தால் கூட மதியத்திற்குள் வந்துவிட்டிருக்கலாம்தான். ஆனால் நான் தான் விடாப்பிடியாக இப்படி கிளம்பி வந்திருக்கின்றேன்.

    அண்ணன் மகனுக்கு காது குத்து! சொந்தங்கள் பந்தங்கள் என்று கூடியிருக்கும். அவர்களோடு முழுதாய் ஒருநாள் கழிக்க எண்ணி இந்த பேய் பிசாசு எல்லாவற்றையும் மறந்து இரவே கிளம்பிவிட்டேன். ஒரே கிலோமீட்டர் கடந்தால் கிராமம் வந்துவிடும். ஆனால் அதற்குள்தான் எத்தனை இடர். வழியில் ஓர் சுடுகாடு. அதை கடந்தால் அய்யனார் கோயில். அந்த அய்யனார் நடு இரவில்தான் கையில் கத்தியோடு உலா வருமாம். எதிரில் யாராவது எதிர்பட்டால் ஒரே போடுதானாம். எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பி இருக்கிறார்கள்.

ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர அடியெடுத்து வைக்கவே பயமாக இருந்தது. துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை என்ற வசனம் நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் நடையைக் கூட்டினேன். சுடுகாடு வந்தது. பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. தீ சுவாலையில் அந்த உடல் வெந்து கொண்டிருக்க அந்த அனல் என்னையும் தகித்தது. பிணம் எரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து “யாருன்னே செத்துப் போயிட்டாங்க!” என்று குரல் கொடுத்தேன். என் குரலை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் போல! அப்படியே பயந்து போய் ஓட ஆரம்பித்தான்.

      சுடுகாட்டில் பிணம் எரிப்பவனுக்குக் கூட பேய்ப் பயம்! அதுதான் எங்கள் ஊர்! அண்ணே! நில்லுங்க! நில்லுங்கண்ணே! நான் தான்! பேய் இல்லே! என்று துரத்தினேன். அவன் திரும்பி பார்த்தான் இல்லை! விடுவிடுவென்று நடந்தேன். அதோ அய்யனார் கோவில்! கோவிலின் உள்ளே விளக்கு எரியும் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அந்த இரவிலும் நாவறட்சியாக இருந்தது. பையில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து திறந்து குடிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் கவனித்தேன்! அந்த கோவிலில் சிலை இல்லை! அய்யனார் எங்கே போயிருப்பார்?

    ஒரு வேளை! எல்லோரும் சொல்வது போல அவர் இரவு காவலுக்குக் கிளம்பிவிட்டாரோ? அப்படியானால் அவர் கண் முன் படக்கூடாதே! ஒருவேளை எதிரில் வந்துவிட்டாரானால்.. நினைக்கவே பயங்கரமாக இருந்தது. குளிர்காற்று வீசியது. அய்யனார் கோவில் மணி காற்றில் ஒலித்தது. அதே சமயம் ஜல் ஜல் என சலங்கை ஒலி கேட்க சுருட்டுவாசம் காற்றில் மிதந்து வந்தது.
   ஆஹா! கிளம்பிட்டாருய்யா! இனி அவர் கண்ணில் படக்கூடாதே! நினைக்கும் போதே! கையில் அரிவாளுடன் ஆஜானுபாகுவான அந்த ஆசாமி! வாயில் சுருட்டு! உருட்டும் விழிகள் என்னை  சுட்டெரிக்க.. “ம்ம்ம்…!” என்று தலையை அசைத்தது!
   “அய்யனாரப்பா! என்னை விட்டுரு! இனி வரமாட்டேன்!” என்று கத்தியபடியே ஓட்டம் பிடித்தேன்! அய்யனார் என்னை விரட்டிக் கொண்டு வந்தார்.  அதோ அதோ! ஊர் வந்துவிட்டது. ஊருக்குள் நுழைந்தேன்.
    குளிருக்கு வாலைச் சுருட்டி படுத்துக் கிடக்கும் நாய் ஒன்று யாரோ புதியவன் என்று என்னைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது. நாய் என்றாலே எனக்கு நடுக்கம் தான்! ஒரு முறை கெண்டைக் கால் சதையை வேறு அதற்கு உணவாகக் கொடுத்திருக்கிறேன்! “ஏய்! ஓடிப்போ!” என்று கல்லை எடுத்து வீசினேன். சரியாகச் சென்று அதன் காலைத் தாக்கியது. ஒருமாதிரி முணங்கியபடி அது ஓடியது. ஆனாலும் அதன் குரைப்புச்சத்தம் அடங்கவில்லை! பார்த்தால் இன்னும் எங்கிருந்தோ நான்கு நாய்கள் நாலாபுறமும் என்னை சூழ்ந்தன.
       கையில் ஓர் கல்லை எடுத்து பயங்காட்டியபடியே விடுவிடுவென ஓடினேன். அவைகளும் விடாமல் துரத்தின. அந்த சமயத்தில் ஆந்தை ஒன்று அலறியது கோட்டான்களின் சத்தங்கள் மேலும் பயமுறுத்த அந்த நள்ளிரவில் எங்கள் தெருவினை அடைந்தேன். உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது. கர்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்டேன்.

   வீட்டின் முன்னே பந்தல் போடப்பட்டு இருந்தது! நாளை விஷேசத்திற்கு போட்டிருக்கிறார்கள் போல!  அந்த நேரத்திலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கும்பல் கூடியிருந்தது. நாளைதானே விசேஷம்! இன்றே இப்படி முழித்துக் கிடந்தால் நாளை வேலை எப்படி நடக்கும்? இதென்ன வெளியே ஏதோ கண்ணாடிப் பெட்டி? ஏன் இப்படி எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்?  

 வேகமாக உள்ளே நுழைந்தேன்! என்னை யாரும் கவனிக்கவே இல்லை! அப்பா… ! அப்பா…! கூப்பிட்டபடி அவரை தட்டினேன்! தலை கவிழ்ந்த அவர் அழுது கொண்டிருக்க  “ஏம்ப்பா! அழுவறீங்க! நான் வந்துட்டேன்!” என்று குரல் கொடுக்க அவர் நிமிரவே இல்லை! அம்மா! அம்மா! என்று உள்ளே ஓடினேன். பந்தலின் நடுவே இருந்த அந்த பெட்டியில் முகம் புதைத்த அம்மாவைத் தொட்டேன்! அவரிடத்தில் சலனமே இல்லை! அழுகை! அழுகை!  
     என்ன நடந்துவிட்டது! ஏன் இப்படி அழுகிறார்கள்? பெட்டியில் பார்த்தேன்! கண்ணாடி பெட்டியில் என்னை கிடத்தி இருந்தார்கள்.

     பாவி மவனே! விஷேசத்திற்கு வரச்சொன்னா நீயே விஷேசமாயிட்டியேடா! என்று ஒருத்தி அழ நானும் சேர்ந்து அழ ஆரம்பித்தேன்! அது யாருக்கும் கேட்கவில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

Comments

 1. ஒவ்வொரு வரியும் சுவராஸ் யமாக உள்ளது

  ReplyDelete
 2. ஹா..ஹா...ஹா... ஆவி லேட் போல!

  ReplyDelete
 3. ஹஹ்ஹஹஹ்ஹ் முடிவு சூப்பர்....ஆவிக்கே ஆவியைக் கண்டு பயமோ ...ஆவியின் ஃப்ளாஷ் பேக் அருமை....

  ReplyDelete
 4. பயத்தை ரசித்தபடியே சென்று முடிவைப் படித்ததும் சிரித்தும் விட்டேன்... நாங்கெல்லாம் பேய்க்கு பயப்படறவங்க இல்லையே...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2