நினைவில் அழிந்து போனவர்கள்!
நினைவில் அழிந்து
போனவர்கள்!
சென்ற வாரம் ஓர்
உபநயன முகூர்த்தத்திற்கு செல்லவேண்டியதாய் போய்விட்டது. இந்த மாதிரி பங்க்ஷன்களுக்குச்
செல்வதை எல்லாம் அம்மா- அப்பா பார்த்துக் கொள்வார்கள். அனைவரும் செல்லவேண்டியதற்கு
மட்டும் நானும் மனைவி குழந்தைகளுடன் செல்வேன். சொல்லப் போனால் உறவு வட்டத்தில் என்னை
பலபேருக்குத் தெரியாது. கூச்ச சுபாவம் கூட பிறந்தது என்பதால் தனியாக இதே மாதிரி விழாக்களுக்கு
போவதை தவிர்த்து விடுவேன்.
இருபது வயதிருக்கும் சமயம் ஒர் சமயம், அப்பா இனிமே
நீதான் சொந்த பந்தங்களோட விஷேசங்களுக்குப் போய்வரனும்! அப்பத்தான் உன்னை எல்லோருக்கும்
தெரியும். இப்படி வீட்டிலேயே இருந்தா எப்படி? என்று உசுப்பேற்ற ஒன்றிரண்டு விஷேசங்களுக்கு
போனேன். வலிய சிலரிடம் அறிமுகம் செய்து கொண்டு பழகினேன். அப்புறம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை!
மீண்டும் அம்மா- அப்பாவே விஷேசங்களுக்கு செல்ல ஆரம்பிக்க நான் போவதில்லை.
திருமணம் ஆனபின்பும் கூட அவர்களே சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் போகும் விழாக்களுக்கு நானும் போக முயற்சிப்பது இல்லை! ஒரு பங்க்ஷனுக்கு எத்தனை
பேர் போவது? நாம் கொடுக்கும் நூறு இருநூறுக்கு அவர்களுக்கு அதிகமாகவா செலவு வைப்பது
என்ற எண்ணமும் கூட காரணம்தான்.
போனவாரம் அப்பா, நான் போகலை! நீ போய் தலையை காமிச்சுட்டு
வந்துடு என்றார். சரி என்று மாலை உதகசாந்திக்கு போகிறேன்! என்றேன். ஆறுமணி வாக்கில்
அங்கிருந்து போன் வந்தது. பலாச இலை, மற்றும் கொம்பு வேண்டும் என்று. அதையும் எடுத்துக்
கொண்டு உபநயனத்திற்கு கிளம்பினேன். அப்போதுதான் உதக சாந்தி ஆரம்பித்துஇருந்தார்கள்
மணி ஏழைக் கடந்துவிட்டது. டிபன் சாப்பிடு! என்றார்கள். நாசூக்காய் தவிர்த்துவிட்டேன்.
எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பாடு போட்டுவிடுவார்கள் அப்புறம் டிபன் வேறு
எதற்கு? கோயிலில் உபநயணம் என்பதால் கோவில் மண்டபத்தில் வந்தமர்ந்து அத்தை மகனோடு பேசிக்கொண்டு
இருந்தேன். இடையில் சுவாமி தரிசனமும் முடிந்தது. ஒன்றிரண்டு தெரிந்த நபர்கள் கையசைக்க
பதிலுக்கு கையை அசைத்தேன். சிலரோடு பேசினேன். அப்போது ஒருவர் என்னை நோக்கி கை அசைக்க
நான் தலை அசைத்தேன். அவர் யார் என்று தெரிய வில்லை! ஒரு வேளைஅவர் என்னை கூப்பிடவில்லையோ
என்று பின்னால் திரும்பி பார்த்தேன்.
யாரும் இல்லை! அட நம்மைத்தான் சைகை செய்துள்ளார்.
யார் என்று தெரியவில்லையே என்று யோசிப்பதற்குள், அவர் அவர் அருகில் இருந்தவரிடம் நான்
யாருன்னே அவனுக்குத் தெரியலை! என்றார். எனக்கு வெட்கமாக போய்விட்டது.
அவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை! நானும்
போய் அவர் யார் என்று கேட்கவில்லை! அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கையில் அவர்
கிளம்பியும் விட்டார். இதே போலத்தான் நேற்று
பூஜை முடிந்து திரும்பும் சமயம் கடையில் குயிக் பிக்ஸ் வாங்கலாம் என்று சென்றேன். அங்கே
நின்றிருந்த ஒருவர் கையை அசைத்தார். நானும் பதிலுக்கு விஷ் செய்தேன். அவரை பார்த்திருக்கிறேன்
ஆனால்யார் என்று அடையாளம் தெரியவில்லை.
“ என்னை யாரென்று தெரிகிறதா?” என்று கேட்டார் அவர்.
இல்லை என்றேன். ‘ ஏம்பா! நான் உன்னை உங்க அப்பாவை
எல்லாம் நினைவில் வைச்சிருக்கேன்! என்னை தெரியலைன்னு சொல்றியே! நான் பெரும்பேடு! என்றார் அவர்.
பெரும்பேடா! ரொம்ப நாள் ஆயிருச்சு அந்த பக்கம்
வந்து! என்று சொல்ல, அவர் என்னை, அப்பாவை குசலம் விசாரித்தார். சிலநிமிடங்கள் உரையாடல்
செய்தும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் பெரும்பேட்டில் நீங்க யார்? என்று கேட்டேன்.
அப்போதாவது அவர் தனது பெயரை சொல்லி இருக்கலாம்!
சொல்லவில்லை! எங்க அப்பா வி.ஏ.ஒ வா இருந்தார். ரங்கசாமி அய்யரோட மூத்த பையன். முத வீடே
எங்களுதான். ஓடு போட்டவீடு! என்றெல்லாம் சொன்னவர் பேரை சொல்லவில்லை! அவர் யார் என்று
இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
இப்படித்தான் ஆறுமாதங்கள் முன் ஒருவர் கோவிலுக்கு
வந்தார். பரபரப்பாக அர்ச்சனை செய்து கொண்டிருக்கையில் வந்து நின்றார். என்னைப்பார்த்து
சிரித்தார். அவரைத் தெரிந்தது. அவர் பெயர் நினைவில் இல்லை. சிரித்துக் கொண்டே இருந்தார்.
விபூதி கொடுத்தேன். சார்! என்னை தெரிகிறதா?
என்றார். உடன் ஒரு நண்பரையும் அழைத்துவந்திருந்தார்.
நன்றாய் தெரியுமே?
என்றேன்.
உங்க ஊரில் எங்க
சொந்தக்கார பெண்ணுக்கு பிள்ளை எடுத்திருக்கோம்! இன்னிக்கு வீடு பார்க்க வந்தோம்! உங்க
நினைப்பு வந்துச்சு! அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்! என்றவர் உங்களுக்கு அடையாளம்
தெரியலை… என்றார்.
சிரித்தபடி, அடையாளம் தெரியுது! கவரைப்பேட்டை ஸ்கூல்ல
ஒன்னா வொர்க் பண்ணோம்! மேத்ஸ் எடுத்தீங்க! பேருதான் சட்டுன்னு நினைவுக்கு வரலை! என்றேன்.
பாயிண்டுக்கு வந்திட்டீங்க! சைன்ஸ் எடுத்தேன்!
மேத்ஸ் இல்லே! என்றவர். நீங்க அக்கவுண்ட்ஸ் எடுத்தீங்க! என்றவர் தன் நண்பரிடம் சார்
இவர்தான் நான் சொன்ன ரமேஷ் சார்! என்றார்.
அட அவர் நினைவிலும் நான் அழிந்துதான் போயிருக்கேன்
போலிருக்கு!
சார்! நீங்களும்
பேரை மறந்துட்டீங்க! நான் ரமேஷ் இல்லே! சுரேஷ் என்றேன்!
ஹாஹாஹா! என்று வெடிச்சிரிப்பு சிரித்தார். ஆளு நியாபகம்
இருக்கு! ஆனா பேருதான் நினைவுல வரமாட்டேங்குது இல்லே! என்றார்.
இப்படித்தான் சிலர் நம் நினைவில் இருந்தாலும் அழிந்து
போகிறார்கள்! என்ன செய்வது?
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வாழ்க்கையில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்னை. தாங்கள் எதிர்கொண்டு பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது.
ReplyDeleteம்ம்ம் மிகவும் சரிதான் எங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டு பல்பு வாங்கியது உண்டு!
ReplyDeleteஹா..ஹா..
ReplyDeleteசரிதான்...
சுவையான நிகழ்வுகள்....
ReplyDeleteசில நேரங்களில் மறதியும் அவஸ்தை தான்...!
ReplyDeleteஇந்த அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் மகிழ்ந்து ரசித்தேன் தோழர்
ReplyDeleteஉண்மைதான் ஆளைத்தெரியும் பெயத் தெரியாது. ஊர் தெரியும் பெயர் தெரியாது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் பாருங்கள். அது தான் உண்மை. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteசில நேரங்களில் இந்த தடுமாற்றம்.ஒரு கொடியதுதான்,அருமையான சிந்தனைப்பகிர்வு,
ReplyDelete"இப்படித்தான் சிலர் நம் நினைவில் இருந்தாலும் அழிந்து போகிறார்கள்! என்ன செய்வது?" என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
ReplyDeleteஆனால், நான் நம்பமாட்டேன்.
உள்ளத்தில் (நினைவில்) எழுதப்பட்டவை அழியாது. ஆயினும், சரியான தகவலை நினைவுபடுத்தினால் மீட்கமுடியும்.
சிறந்த பதிவு
தொடருங்கள்