Thursday, October 30, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20


 1. புதுப்படம் ரிலீஸுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு?
    ஏன்?
  வேலூர்ல இருந்தா புழல்ல இருந்தான்னு கேக்கறாரு!

 1. பையன் ரொம்ப ஊதாரித் தனமா செலவு பண்றான்னு சொல்றீங்களே சிகரெட், தண்ணின்னு …
சேச்சே! அந்த பழக்கமெல்லாம் கிடையாது! நிறைய டீ காபி குடிப்பான்னு சொல்ல வந்தேன்!

 1.  ஆம்னி பஸ்ல என்ன கலாட்டா ?
பால் விலையேத்தனாங்கன்னு கோவா போற பஸ்ஸுக்கு கூட டிக்கெட் விலையை ஏத்திட்டாங்களாம்!

 1. தலைவரை நினைச்சா சிரிப்பா இருக்கு!
    ஏன்? கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்தது போல கட்சியில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் வெளிக்கொண்டுவர நீதிமன்றம் உதவ வேண்டும்னு அறிக்கை வெளியிடறாரே!

 1. மன்னர் வாளை உறையில் வைப்பதே இல்லையாமே!
உறையில் வைக்கையில் இசகு பிசகாகி ரத்தக்கறை படிந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்!

 1. இந்த ஏரியாவிலேயே அவருக்குத்தான் இன்னிக்கு மதிப்பு அதிகம்!
    ஏன்?
   பால்வியாபாரம் பண்றாரே!

 1. எங்க தலைவர் கிட்டே சரக்கே இல்லைன்னு நீ சொன்னது தப்பாயிருச்சு!
    எப்படி சொல்றே?
  இப்பத்தான் டாஸ்மாக்கிலேருந்து ஒரு கேஸ் சரக்கு வாங்கிண்டு போறாரே!

 1. மன்னருக்கு எதிரி நாட்டின் சந்து பொந்து எல்லாம் கூட அத்துபடியாமே?
பின்னே எதிரி  ஓட ஓட விரட்ட சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து வந்தவர் ஆயிற்றே!


 1. இன்னிக்கு நம்ம கல்யாண நாள்னு தெரிஞ்சும் ஆபிஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே?
இந்த அதிர்ச்சியில இருந்து மீளறதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிருச்சு டியர்!

 1. தீபாவளி அன்னிக்கு உங்க வீட்டுல வெடிச்சத்தம் கேட்டுது ஆனா வெளியே பட்டாசு எதுவும் காணோமே!
ஹிஹி! அது என் மனைவி முதுகில அடிச்ச பட்டாசு சத்தம்!


 1. எல்லாமே நார்மலா இருக்குன்னு சொல்லிட்டு ஏன் டாக்டர் பெட்ல அட்மிட் ஆகச் சொல்றீங்க!
என்னோட கிளினிக்கோட கண்டிஷன் அப்நார்மலா இருக்கே!

 1. பஸ்ல இவ்ளோ இடமிருக்கே ஏன் புட்போர்டுல தொங்குற?
நானும் அதையேத்தான் கேக்கறேன்! பஸ்ல இவ்ளோ இடமிருக்கே டிரைவர் ஏன் அந்த சீட்லயே உக்காந்திருக்கார்?

 1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பாக்கணும் பல்லை காட்டுங்கன்னு சொல்றாரே!

 1. சென்சார் போர்டு அதிகாரியோட பொண்ணை கட்டிக்கிட்டது தப்பா போச்சு!
    ஏன்?
   திருமண வீடியோவை கூட சென்சார் பண்ணித்தான் தருவேன்னு அடம்பிடிக்கிறார்!

 1. செல்போன் கம்பெனிக்கும் மனைவிக்கும் என்ன ஒத்துமை?
போன்ல பேலன்ஸ் இருந்தா செல்போன் கம்பெனிக்கு பொறுக்காது! பேங்க்ல பேலன்ஸ் இருந்தா மனைவிக்கு பொறுக்காது!

 1.  அந்த பேச்சாளர் பேசினா பேச்சு அருவி மாதிரிக் கொட்டும்!
     அப்புறம் ஏன் கூட்டத்தையே காணோம்!
    அருவியிலே அடிச்சுட்டு போயிடபோறோம்ற பயம்தான்!

 1. எவ்ளோ தைரியம்?பட்டப் பகல்லேயே பூட்டை உடைச்சு மாட்டிகிட்டேயே ஏன்?
    இராத்திரியிலே கண்ணு நல்லாத் தெரிய மாட்டேங்குது எசமான்!

 1. மேனேஜர் எல்லாரையும் தட்டிக்கொடுத்து வேலைவாங்குன்னு சொன்னதாலே மாட்டிக்கிட்டியா எப்படி?
    ஸ்டேனோவோட முதுகுல தட்டிக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்!


 1. எதிரியின் எதிர்பாராத தாக்குதலில் மன்னர் ஆடிப்போய்விட்டார்!
    அப்புறம்?
 அப்புறம் என்ன? ஓடிப்போய் சரணடைந்துவிட்டார்!

20 வேட்டைக்கு மன்னர்  வருகிறார் என்றதும் சந்தோஷம் தாங்கவில்லை!
   யாருக்கு?
 வேட்டை மிருகங்களுக்குத்தான்! துரத்தி துரத்தி மகிழ்ந்தன!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த  கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Tuesday, October 28, 2014

“கண்ணாமூச்சி”

“கண்ணாமூச்சி”  மூலம் ருஸ்கின் பாண்ட்
   தமிழில் “தளிர் சுரேஷ்”

நான் அந்த ரயிலின் ‘ரொகானா’ கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருந்தபோது அந்த பெண் என்னுடைய பெட்டியில் ஏறினாள். அவளுடன் வந்த இருவர் அவளது பெற்றோராய் இருக்க வேண்டும் அவர்கள் மிகவும் கவலையாக இருந்தனர். அவளது அம்மா அவளது பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்றும் புதியவர்களிடம் பேச்சை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள்.
  நான் பார்வையில்லாதவன் என்னால் அந்த பெண் எப்படி இருப்பாள் என்று சொல்ல முடியாது ஆனால்,அவள் பாதங்களிலிருந்து காலணிகளின் ஓசையைக் கொண்டு அவள் என்னருகேதான் அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்தேன். நான் அவள் குரலைக் கேட்க விரும்பினேன்.
  ‘நீங்கள் டேராடூனுக்கு செல்கிறீர்களா?” நான் அந்த ரயில் கிளம்பியதும் கேட்டேன். நான் அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருந்ததால் என்கேள்வி அவளுக்கு அதிர்ச்சியை தந்திருக்க வேண்டும். எனவே வியப்புடன் ‘நான் உங்களை கவனிக்கவே இல்லை யாரும் இல்லை என்று நினைத்தேன்’ என்றாள்.
  நான் அதில் வியப்பேதும் அடையவில்லை. ஏனேனில் பார்வையுள்ள மனிதனே தன் முன்னால் என்ன இருக்கிறது என்பதை கவனிப்பது இல்லை. ஆனால் அவர்கள் நிறைய கவனிக்கவேண்டும் கம்பார்ட் மெண்ட் ரிஜிஸ்தரில் பார்த்தால் கூட நான் இங்கிருப்பது தெரிந்திருக்கும்.
  ‘நான் கூட உங்களை கவனிக்க வில்லை ஆனால் நீங்கள் வரும்சத்தம் கேட்டேன்.’ நான் அவளேதிரே குருடன் என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனவே என் இருக்கையை விட்டு எழ வில்லை. அது எனக்கு ஒன்றும் கஷ்டமாயிருக்க வில்லை.
‘நான் சஹாரன்பூர் செல்கிறேன். அங்கு என் சித்தி உள்ளாள். நீங்கள்?’
‘டேராடூன் அங்கிருந்து மசூரி’ என்றேன்.
  ‘நீங்கள் அதிர்ஷ்ட காரர் நான் கூட மசூரி போயுள்ளேன். நான் மலைகளை ரசிப்பேன். குறிப்பாக அக்டோபர் மாதங்களில் மலைகள் பார்க்க அழகாக இருக்கும்’
 ‘ஆம் அதுதான் சிறந்த நேரம்’ நான் பதிலுரைத்தேன். அப்புறம் எனது மூளையைத் தட்டி எழுப்பி , ‘அந்த மலைகள் சவுக்கு மரங்களால் சூழப்பட்டிருக்கும் அங்கு அழகினை ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இரவு வேளைகளில் நெருப்பை மூட்டி அதன் முன் அமர்ந்து மதுவை சிறிது குடித்தால்... நான் ரசித்து சொல்ல துவங்கினேன். நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள். அந்த சாலை எப்பொழுதும் அமைதியாக இருக்கும்.
  அவள் அமைதியாக இருந்தாள். நான் ஆச்சர்யபட்டேன். எனது பேச்சு அவளை கட்டிப் போட்டுவிட்டதா? அல்லது அவள் விசித்திரமான பிறவியா? அப்பொழுது நான் ஒரு தவறு செய்தேன். ‘வெளியே என்ன தெறிகிறது? அப்படி பார்க்கிறீர்கள்?’ என்றேன்
   ஆனால் அவள் என் கேள்வியால் பாதிக்க படவில்லை. அவள் முதலிலேயே அறிவாளோ நான் குருடன் என்று? ஆனால் அவளது அடுத்த கேள்வி என் சந்தேகத்தை போக்கியது. ‘நீங்கள் ஜன்னல் வழியே பார்த்து தெரிந்து கொள்ள முடியாதா?அவள் சாதாரணமாய் கேட்டாள்.
நான் அங்கிருந்து நகர்ந்து ஜன்னலோரமாய் வந்து ஜன்னலை திறந்தேன். உடனே ஜன்னல் வழியே மண்ணின் வாசனை என் நாசியை தீண்டியது.என்னுடைய மூளை உணர்த்த தந்தி கம்பங்கள் வெளியே தெரிவதாகக் கூறினேன். மரங்கள் ஓடி வருகின்றன. ஆனால் உண்மையில் அங்கேயேதான் இருக்கின்றன இல்லை?
   “இது வழக்கமான காட்சிதான்!” அவள் சொன்னாள். ஜன்னலிலிருந்து திரும்பி அவளையே நோக்கினேன். அவள் மௌனமாக இருந்தாள். ‘உங்களுடையது சுவாரஸ்யமான முகம்!’ என்றேன். சொல்லிவிட்டு மவுனித்தேன். ஏனேனில் சில பெண்கள் பொய்யான புகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்வது இல்லை. அவள் மனதை மயக்கும் படி சிரித்தாள். அது மணியோசைபோல இருந்தது.  “நீங்கள் நன்றாக சொன்னீர்கள்!” என்றாள். “என்னுடைய முகம் அழகானது என்று பலர் கூறிக் கூறி நான் அலுத்துப் போய்விட்டேன்!” என்றாள் திரும்பவும்.
  ஓ.. அவள் அழகான முகத்தை உடையவளாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். ‘நல்லது சுவாரஸ்யமான முகம் அழகாகவும் இருக்கும்’ என்றேன்.
   ‘நன்றாக பேசுகிறீர்கள்! ஆனால் ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள்?’
  ‘அடுத்து உங்கள் ஸ்டேஷன் வருகிறது!’ நான் பேச்சை மாற்றினேன்.
‘அடக்கடவுளே! அதற்குள்ளாகவா! ஆனால் என்னால் இரண்டு மூன்று மணி நேரமெல்லாம் ரயிலில் அமர்ந்திருக்க முடியாது’ என்றாள்.
 இருக்கும் சிறிது நேரத்தை அவளுடன் கழிக்க விரும்பினேன். அவளுடன் பேசிக்கொண்டே வந்தேன். அவள் பேசுவது அருவி மலையிலிருந்து கொட்டுவது போலிருந்தது.அவள் இன்னும் சிறிது நேரத்தில் ரயிலை விட்டு இறங்கி விடுவாள். என்னை மறந்துகூட போகலாம். ஆனால் அவள் என் பயணம் முடியும் வரை கூட வருவாள் என்நினைவில்.இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும்.
  விசில் சத்தம் கேட்டது. வண்டி மெதுவாக செல்ல ஆரம்பித்தது. அவள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டாள். நான் கற்பனை பண்ணிக் கொண்டேன். அவளது தலைக்கேசம் அடர்த்தியாக நீண்டு தோள்கள் வழியாக விழுமா? அல்லது சிறிதாக வெட்டியிருப்பாளோ?
  ரயில் நிதானமடைந்து ஸ்டேஷனில் நின்றது. வெளியே போர்ட்டர்கல் மற்றும் வியாபாரிகளின் குரல் உரக்க கேட்டது. ஒரு பெண்மணியின் குரல் உரக்க ஒலித்தது. அது அவள் சித்தியாக இருக்க வேண்டும். ‘போய் வருகிறேன்!’ விடைபெற்றாள்.அவள் என்னருகே நின்றிருந்தாள். அவள் தலைக்கேசத்திலிருந்து வந்த வாசம் என்னைத் தழுவியது. நான் அவளது கேசத்தை தடவ முயன்றேன்.ஆனால் அவள் நகர்ந்து விட அந்த வாசம் மட்டுமே நிலைத்தது.
  வெளியே குழப்பமான பேச்சுக்கள் கேட்டன. ஒரு மனிதன் பெட்டியினுள் நுழைந்தான். திக்கிதிக்கி மன்னிப்பு கேட்டபடி வந்தவன் கதவை மூடினான். அத்துடன் உலகமே இருண்டது போல ஆனது. நான் என்னுடைய இருக்கைக்கு சென்றேன். கார்டு விசில் ஊத ரயில் நகர ஆரம்பித்தது.
 ரயில் வேகமெடுத்து அதன் சக்கரங்கள் தண்டவாளத்துடன் இணைந்து தாளமிசைக்க ஆரம்பிக்க நான் ஜன்னலோரமாய் அமர்ந்தேன். மாலைச்சூரியன் மங்க துவங்க இருள் என்னைச் சூழ்ந்தது. மீண்டும் நான் அந்த புதிய பயணியிடம் விளையாட நினைத்தேன்.
‘நான் வருந்துகிறேன்.நான் சிறந்த வழிப்பயணியாக இருக்க முடியாது சற்றுமுன் சென்றவளை விட’  நான் தொடங்கும் முன்அவனே முந்திக் கொண்டான்.
   “அவள் ஒரு சுவாரஸ்யமான் பெண்.உங்களால் சொல்ல முடியுமா? அவளுடைய கூந்தல் நீளமானதா? குட்டையானாதா?” என்று வினவினேன் அவனிடம்.
 “நான் அதைக் கவனிக்க வில்லை!அவள் தலைமுடியை நான் பார்க்கவில்லை! ஆனால் கண்களை பார்த்தேன். அவளது அழகான கண்கள்...!” 
 நான் சுவாரஸ்யமானேன்  “சொல்லுங்கள்..” என்றேன். 
  “அவளது கண்கள்...! ஆம் அழகான அந்த கண்கள் எதற்கும் பயன் படாது!”   “ஏனேனில்.. ஏனெனில்..  அந்த கண்களில் ஒளியில்லை! நீங்கள் கவனித்தீர்களா?” அவன் கேட்க நான் அதிர்ந்து போனேன். 

(மீள்பதிவு)

 டிஸ்கி} கையெழுத்து பத்திரிக்கை நடத்தியபோது அவ்வப்போது பொங்கல் மலர், தீபாவளி மலர்கள் வெளியிடும்போது இப்படி ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்ப்பது வழக்கம். அப்படி மொழி பெயர்த்த கதை இது. இந்த கதை சுவாரஸ்யமாக இருந்தால் அது ருஸ்கின் பாண்டை சேரும். சுவாரஸ்யம் இல்லை எனில் அது என் மொழிபெயர்ப்பை சேரும். இதை  இரண்டு வருடங்கள் முன்பு வெளியிட்ட போது  நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பில்லை! இப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Monday, October 27, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


வானம் அழுதது
பூமி மகிழ்ந்தது
மழை!

பற்றியதும்
வழுக்கியது
பாசி!

முடியும் வரை பயணம்!
அலுக்கவில்லை!
சருகுகள்!

அடைத்து விற்கிறார்கள்!
நிறையவே இல்லை!
சிப்ஸ்!

அனுமதியின்றி ஆக்ரமிப்பு
வீட்டினுள் புகுந்தது
ஒட்டடை!

தேயத் தேய
பிறந்தது வழி!
பாதை!


மேகப்படையெடுப்பு
சமாதானத் தூது!
வானில் கொக்குகள்!

தேடிக்கொண்டே இருக்கின்றன!
தொலைந்து போகின்றன
எறும்புகள்!

சிறைபட்ட கைதி!
சிக்கியும் தப்பினான்!
ஜன்னல் காட்சி!

துடைத்து எடுத்தாலும்
சேர்ந்து கொண்டே இருக்கிறது!
அழுக்கு!

கருவூன்ற
வெட்டப்பட்டன கன்றுகள்!
வாழை!


ரசிக்கவில்லை
ருசித்தது!
மாக்கோலத்தில் அணில்!

குளிர்ந்ததும்
குளிர்ந்தார்கள் மக்கள்!
மாலைச் சூரியன்

 தவழ்கையில்
 ஈரமானது தரை!
 குழந்தை!


 மலர் மேடை!
  ஜதிபோட்டன!
வண்ணத்துப்பூச்சிகள்!

 ஒளிந்து கொண்ட மரங்கள்!
வெளிச்சம் போட்டன
 மின்மினி!


 கொள்ளை அடித்தாலும்
 திருடனாவதில்லை!
  குழந்தைகள்!

  வீடெல்லாம் அலங்கோலம்
  அழகாய் இருந்தது
   குழந்தை!

 ஒளித்து வைப்பதில்லை!
 வெளிப்படுகிறது பாசம்!
 குழந்தைகள்!


  தெருவோர வெள்ளம்!
  மீண்டது குழந்தை உள்ளம்!
  காகிதக் கப்பல்கள்!

வணக்கம் அன்பர்களே!  பதிவர் கீதா சாம்பசிவம் மற்றும் நண்பர் பரமு சிவசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஹைக்கூ, சென்ரியு, லிமரிக் பற்றிய விவரங்களுக்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன். நான் இங்குதான் இவரிடம்தான் ஹைக்கூ பயின்றேன். அதனால் அவர் எழுதிய இணைப்பை தந்துள்ளேன். நன்றி!  ஹைக்கூ, சென்ரியு, லிமரிக், வடிவம்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, October 26, 2014

தித்திக்கும் தமிழ்! பகுதி 2 கோட்டானை பெற்ற பார்வதி!

தித்திக்கும் தமிழ்!

ஏதோ பொழுது போக்காக சென்ற வாரம் இந்த பகுதியினை தொடங்கிவிட்டேன்! இணையத்தில் பல செய்யுள்களை தேடியும் படித்தும் பார்த்தேன். சில பொருள் விளங்கியது. சிலது நம் அறிவினுக்கு எட்டவில்லை. இந்த வாரமும் நாம் கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். இரட்டைப்புலவர்கள், சவ்வாதுப்புலவர் போன்றவர்களின் பாடல்களையும் தேடி வருகின்றேன். அவ்வப்போது பகிர உத்தேசம். இந்த தொடர் குறித்து உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்.


  நம் வீட்டு பிள்ளைகள் செய்யும் குறும்புகள் அதிகம். இந்த குறும்புகள் நம்மோடு போனால் பரவாயில்லை! அடுத்தவரை பாதித்தால் அவர்கள் ஏசுவார்கள். பிள்ளைகள் என்றால் குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் குழந்தைகளும் குறும்பு செய்யத்தான் செய்யும். ஆனால் காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு! அவர்கள் பிள்ளைகள் எப்போதும் நல்லவர்களாகவே எல்லா பெற்றோர்களுக்கும் இருப்பார்கள். ஆனால் அடுத்தவன் பிள்ளை தவறு செய்துவிட்டாலோ அவ்வளவுதான் பிரித்து மேய்ந்து விடுவார்கள். பிள்ளையா பெத்து வைச்சிருக்கா? சரியான கோட்டானை பெத்து வெச்சிருக்கா?  என்று ஏசுவார்கள். நம்மவர்கள்தான்  இப்படி என்றால் காளமேகமும் ஏசுகின்றார். எப்படி பார்வதி தேவி பெற்ற பிள்ளையை கோட்டான் என்கிறார் அதோடுவிட்டாரா?

  சிவபெருமான் மனைவி பார்வதி தேவியை இடைச்சி என்று சொல்லுகின்றார் புலவர். அதுவும் இல்லாமல் அவள் ஒரு கோட்டானையும் பெற்றாள் என்று சொல்லுகின்றார்.  உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?
   இன்றைய இந்துத்வா அமைப்பினர் இதைக்கேட்டால் முகநூலில் பொங்கி எழுந்து விடுவார்கள். அன்றைக்கு இதை ரசித்து மகிழ்ந்தார்கள். காளமேகம் என்னவெல்லாம் சொல்லுகிறார் பாருங்கள். சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவகாமி அம்மை ஓர்  சிற்றிடைச்சி என்கிறார். அவளை ஒரு மாட்டுக்கார கோணாருடைய தங்கையாகவும் சொல்கிறார். அதுவும் இல்லாமல் ஒரு ஆட்டுக்கோனானுக்கு மனைவியானாள் என்கிறார். அதோடு விட்டாரா அந்த ஆட்டுக்கோனானின் குட்டிகளை மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள் என்கிறார்.
   சிவ சிவ!! என்ன இது! அவர் பாட்டுக்கு எதை எதையோ சொல்லிக் கொண்டே போகிறார் கேட்பார் இல்லையா என்கிறிர்களா? கேட்டு படித்து பதித்து வைத்தமையால்தான் இந்த பாடல்களை நாமும் அறிந்து கொள்ள முடிகிறது.
   பாடல் இதுதான்!
   மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
   ஆட்டுக்கோ   னுக்குப்பெண் டாயினாள் – கேட்டிலையோ
   குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள்
   கட்டி மணி சிற்றிடைச்சி காண்.

இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தால், பெண்ணே நீ இதனை கேட்டிலையோ? மாடு மேய்த்த கோபாலனின் தங்கை பார்வதி தேவி தான் பிறந்த மதுராபுரியை விட்டு தில்லைக்கு வந்து ஆட்டுக்கோனாரை மனைவியானாள் அத்துடன் ஆட்டுக்குட்டிகளை மடக்கி மேய்க்க ஒரு கோட்டானையும் பெற்றெடுத்தாள் அந்த சிற்றிடைச்சி என்று தோன்றும்.
   ஆழ்ந்து நோக்க,

        பெருமாளின் தங்கை பார்வதி தேவி என்று புராணம். பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் மாடுமேய்த்தார். அந்த கோபாலனின் தங்கை பிறந்த ஊர் மதுராபுரி. அந்த ஊரினை விட்டு தில்லைநகர் வந்து ஆட்டுக்கோனை மணந்தாள். ஆட்டுக்கோன் யார்? தில்லை அம்பலத்தே அனைவரையும் ஆட்டுவிக்கும் நடராசப்பெருமான். அவரை மணந்தாள். இடையிலே பெண்கள் அணிய கூடிய ஆபரணம் மேகலை எனப்படும். சிறிய இடை உடையவர்களை அழகுபடுத்திக்காட்டும் ஆபரணம் அது. அவ்வாறான மணிகளை கட்டியுள்ள மேகலையை அணிந்த சிற்றிடை உடையவள் சிவகாமி அம்மை. அவள் கோட்டானை பெற்றாள். கோட்டு ஆணையைப் பெற்றாள் என்று பொருள். ஒற்றைக் கொம்பு உடைய யானையை பெற்றாள் என்பதாகும். எதற்கு பெற்றாள். பக்தர்கள் நம் தலையிலே குட்டிக் கொண்டு வணங்குவதற்கு பிள்ளையாரை பிள்ளையாகப் பெற்றாள். இதைத்தான் குட்டிமறித்து என்று சொல்லுகின்றார்.

ஆட்டுக்கோன்  - ஆட்டிடையன், தில்லை நடராசன்
சிற்றிடைச்சி-  இடையர் குலப்பெண், சிறிய இடை கொண்டவள்.
குட்டி மறித்தல்- ஆட்டுக்குட்டிகளை மேய்த்தல், தலையில் குட்டிக்கொள்ளுதல்

என்னே அருமையாக பாடியுள்ளார் பாருங்கள்! கவி காளமேகத்தின் வார்த்தை ஜாலம் வியக்க வைக்கிறது இல்லையா? வியந்து ரசியுங்கள் தோழர்களே!

  மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!

Wednesday, October 22, 2014

ஃபிளாஷ்பேக் தீபாவளி!

ஃபிளாஷ்பேக் தீபாவளி!


 கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தீபாவளிக்கு தங்களுடைய பழைய தீபாவளி அனுபவங்களை எழுதி முடித்துவிட்டார்கள். நானும் வேறு எதையாவது எழுதலாம் என்று யோசித்தால் மூளை மக்கர் செய்கிறது. புதிதாக கதை, கவிதை ஏதும் தோன்றவில்லை. இரண்டுமாதமாகவே பதிவுகளும் சரியாக எழுதி வெளியிடவில்லை. இதற்குள் பரமு சிவசாமி போன்றவர்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள் கமெண்ட் போட்டால் பதில் சொல்ல மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
   அதெல்லாம் போகட்டும். தீபாவளி சமாச்சாரத்துக்கு வருவோம். என்னுடைய பால்ய வயது தீபாவளிகள் என் அம்மாவின் அப்பா (தாத்தா) வீட்டில்தான் கழிந்தது. அது ஒரு குக்கிராமம். பழவேற்காடு கடற்கரைக்கு அருகில் அமைந்த ஊர். ஆசானபூதூர் என்ற அந்த ஊரிலே மொத்தமே முப்பது வீடுகள்தாம். பயந்த சுபாவம் உள்ள எனக்கு பட்டாசு அப்போது முதலே அலர்ஜிதான். விடிகாலையில் எழுப்பி பாட்டி, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். பின்னர் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்துவோம். எனதுமாமா இரண்டுமூன்றுநாட்கள் முன்னரேசில பட்டாசுகளை வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி வைத்திருப்பார். அவரின் வழிகாட்டுதலோடு வெடிப்போம். மிளகாய்வெடி லஷ்மிவெடிதான் பெரிதாக வெடித்தது. நான் அதெல்லாம் தொடவே மாட்டேன் பயம். சங்கு சக்கரம் ஒன்றை கொளுத்தி வீட்டில் இருந்த மர ஊஞ்சலில் ஒருமுறை பயந்துபோய் போட்டுவிட்டேன். அவ்வளவு பயம்.
   பெரிதாக பட்சணங்கள் ஏதும் இருக்காது. முறுக்கு செய்வார்கள்.வடை பாயசத்துடன் கடந்து போகும் தீபாவளி. சிலசமயம் தீபாவளி அன்று கேதார நோன்பு வந்தால் கோயிலுக்கு நோன்பு நூற்க வருவார்கள். தாத்தா கலசம் எல்லாம் வைத்து பூஜை செய்து கதை படித்து நோன்பு கயிறு கொடுப்பார். அன்று கோயிலே களைகட்டும். இப்படித்தான் என் இளவயது தீபாவளிகள் கழிந்தது. பின்னர் எட்டாம் வகுப்பு படிக்கும் சமயம் நத்தம் வந்துவிட்டேன். இங்கும் பெரிய அளவில் கொண்டாடியது இல்லை. ஆனால் தீபாவளிக்கு முன்பாக அப்போது ரெட் ஹில்ஸில் இருந்த குமரன் ஸ்டோர்ஸில் துணி எடுக்க செல்வோம். நானும் மூன்று தங்கைகளும் அப்பா- அம்மா என்று துணி எடுக்கச் செல்வதே அலாதி. கடையே அல்லோகலப்படும். அந்தக் கடையில் நிரந்தர வாடிக்கையாளர் நாங்கள். சிறப்பு தள்ளுபடியும் கொடுப்பார்கள். துணி எடுத்து முடித்ததும் பெண்கள் வளையல், மணி என்று வாங்கிக் கொண்டு வீடு வருவோம். இப்போது குமரன் சில்க்ஸே இல்லை. சென்னை தி. நகர் குமரன் சில்க்ஸுக்கு போட்டியாக செயல்பட்டது இந்த கடை. தி.நகர் குமரன் சில்க்ஸ் காரர்கள் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று விளம்பரம் செய்யும் அளவிற்கு இந்த கடையில் வியாபாரம் நடக்கும். இந்த கடையின் விளம்பரம் விவிதபாரதியில் கூட ஒளிபரப்பாகும்.
    வீட்டில் அம்மா, முறுக்கு, மைசூர்பாகு, பர்பி என்று பட்சணங்கள் செய்ய தீபாவளி அன்று மூன்று மணிக்கே எழுப்பி கங்கா ஸ்நானம் என்று சொல்லி எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். அப்போது ஞானபூமி இதழில் கங்கை நீர் இலவசமாக கொடுப்பார்கள் அதை குளிக்கும் போது கலந்து குளிப்போம். பின்னர் இட்லி தோசை பலகாரங்கள். அப்புறம் சென்னைத் தொலைக்காட்சியின் தீபாவளி நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் இன்றைய நிகழ்ச்சிகள் போல் சினிமாவையே கொண்டிராமல் வித்தியாசமாக இருக்கும். இரவில் சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகும் ஒன்றுவிடாமல் ரசிப்போம். இடையில் பட்டாசு வெடிப்போம்.

   அன்று கையில் பணம் குறைவு. வாங்கும் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவோம். வீணடிக்க மாட்டோம். கொஞ்சமாக இருந்தாலும் மனசு நிறைவாக இருக்கும். இன்றோ எல்லாம் இயந்திரமயம். பணத்திற்கும் குறைவில்லை! ஆனால் தீபாவளியில் மனம் நிறையவில்லை! இது எனக்கு மட்டுமல்ல! பதிவர்கள் பலருக்குமே என்று பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது.


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Tuesday, October 21, 2014

பொய் முகம்! சிறுகதை

பொய் முகம்! சிறுகதை

 விடிந்தால் தீபாவளி தெருவெங்கும் பட்டாசு சத்தங்கள் ஒரே ஆர்பாட்டங்கள் வளைகுடா போர் சத்தங்கள் போல பட்டாசுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. நானும் என் வீரத்தை காட்ட பட்டாசு கட்டுக்களோடு வெளியே வந்ததும் எதிர் வீட்டு வாசலில் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த அபிநயா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
  அபிநயா! இன்றைய சினிமா நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அழகில் இருந்தாள் நல்ல வேளை இன்னும் எந்த டைரக்டரும் அவளைப் பார்க்க வில்லை பார்த்திருந்தால் தமிழக ரசிகர்கள் அவளுக்கு இந்நேரம் கோயில் கட்டியிருப்பார்கள்.
புத்தம் புது ஆஷிகா சாரியில் தனது உடலின் அழகான பிரதேசங்களை மறைத்திருந்தாள் அபிநயா இருந்தும் அவை கண்ணாமூச்சி காட்டின. அந்த அரையிருட்டிலும் அவள் முகம் முழுநிலவாய் பிரகாசித்தது.அவளைக் கண்டதும் என் உற்சாகம் கரை புரண்டது. அவள் என் வருங்கால மணைவியாகப் போகிறவள். என் வர்ணணையில் மயங்கி அவளுக்கு அப்ளிகேஷன் போட நினைத்தவர்கள் என்னை திட்டாதீர்கள்.
   அவள் எங்கள் எதிர் வீட்டில் இருப்பதால் எங்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வீட்டிற்கும் தெரிந்து விட்டது. அடுத்த மாதம் கல்யாணம் இந்த மாதமே அவளோடு தலை தீபாவளி கொண்டாட வேண்டியது ஆனால் நாள் சரியில்லை என்று தட்டிக் கழித்துவிட்டனர் பெரிசுகள். அதனால் தான் நான் இங்கும் அவள் அங்குமாய் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறோம்.
  அவள் கன்முன்னே என் ஹீரோத் தனத்தினை காட்ட சிறிய குருவி வெடி ஒன்றை கையால் கொளுத்திப் போட அவள் காதைப் பொத்திக்கொண்டு ரசிக்க என் உற்சாகம் அதிகமானதுபெரிய வெடி ஒன்றை கையால் கொளுத்த அவள் வேண்டாம் வேண்டாம் என சைகை காட்ட நான் மேலும் உற்சாகமாகி கொளுத்திப் போட்டேன்.
  உள்ளே ஓடியவள் ஒரு பெரிய புஸ்வானத்தோடு வந்தாள் அதை கொளுத்த முனைய நான் வெடிகளை வெடிக்க ஆரம்பித்தேன், அப்பொழுது ‘ஆ’ என்ற அலறல். கத்தியது அபிநயாதான். முகத்தை மூடிக்கொண்டு துடித்து கொண்டிருந்தாள் நான் ஓடினேன். ‘எ.. என்னாச்சு அபி? கையை விலக்கினேன். முகம் பூராவும் தீக்காயங்கள்!
  அவள் பெற்றோர் ஓடி வந்தனர். பாவி மகளே அடுத்த மாசம் கல்யாணம் இப்படி பண்ணி புட்டியே?
  முதல்ல ஆச்பிடலுக்கு கொண்டு போகலாம் நான் கூற ஆட்டோ ஒன்றில் ஏற்றினோம் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தோம்.இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அபிநயாவின் முகத்தினைப் பார்த்து. முகம் முழுதும் பேண்டேஜ் கட்டுக்களோடு காட்சி அளித்தாள் அவள். ‘அபி’ குரல் கொடுத்தேன். அவளது கண்கள் கூட கட்டுக்களால் மறைக்கப்பட்டிருக்க ‘சதிஷ்..நான்’ அவளது குரல் அழுகையால் அடைபட்டது. ‘அழாதே அபி உனக்கு ஒண்ணும் ஆகலை. சின்ன காயம் தான் கவலைப்படாதே !’ மேலுக்குக் கூறினேன்.
   ‘இல்ல சதிஷ் என் முகம் பூரா புண்கள்,கண்கள் பயங்கரமா எரியுது.வலி உயிர் போகுது. புண் ஆறினாலும் நான் பழைய அபிநயாவா மாறுவனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு’
  அப்பொழுது டாக்டர் உள்ளே நுழைந்தார். ‘ஐயம் சதிஷ் அபிநயாவோட வருங்காலக் கணவன்’ என்றேன்.
‘கிளாட் டூ மீட் யூ மிஸ்டர் சதிஷ்’ அபிநயா இப்ப நீங்க தைரியமா இருக்கணும் கலங்க கூடாது. மிஸ்டர் சதிஷ் போகும் போது என்னை வந்து பாத்துட்டு போறீங்களா?”
  “வித்பிளஷர்”
டாக்டரை சந்தித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தார். ‘மிஸ்டர் சதீஷ் சொல்றதுக்கு எனக்கு சங்கடமாத்தான் இருக்கு பட் நான் டாக்டர் உண்மையை சொல்லிதான் ஆகனும்’
  ‘என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்’
‘நீங்க இதை எப்படி ஃபேஸ் பண்ணப்போறீங்கண்ணு தெரியலை. எனிவே நான் சொல்லிடறேன். அபிநயாவோட முகம் பழையபடி திரும்பாது. முகத்தில் ஆங்காங்கே சில தழும்புகள் தீப்புண்ணால ஏற்பட்டிருக்கு இதை மொத்தமா கியுர் பண்ண முடியாது. மொத்தத்துல அபிநயா இனி பழைய முகத்த அடைய வழி இல்லை. அந்த அளவுக்கு அவமுகம் பாதிப்பு அடைஞ்சிருக்கு!’
  ‘சார் அதிர்ச்சியானேன்!’
  “பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது பண்ணி அவ முகத்த பழைய படி சீராக்க முடியாதா டாக்டர்?”
  “ பண்ணலாம் மிஸ்டர் சதிஷ் ஆனா அப்பவும் பழைய முகம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதெல்லாம் சினிமாவுல வேணா சாத்தியமாகும் நிஜத்தில இல்ல அதுக்கு நிறைய பணமும் காலமும் செலவாகும் ஒவ்வொரு பகுதியாத்தான் சீரமைக்க முடியும்”
  “நீங்க விரும்பினா அதை செய்யலாம் ஆனா அதுக்கு நீங்க ஏகப்பட்ட பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் நல்ல வேளை அவளோட கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல அதை நினைச்சு நாம சந்தோஷப்படனும்.”
   வேரற்ற மரமாய் வெளியே வந்தேன். நிலவு முகம் என்று வர்ணித்த என்னால் அவளின் தீத்தழும்பு கொண்ட முகத்தை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
  வீட்டிற்குள் நுழைந்தேன். அம்மா ஓடி வந்தாள். ‘எப்படிடா இருக்கா?’
சொன்னேன். டாக்டர் சொன்னது முழுவதையும். ‘நல்ல வேளைடா நீ தப்பிச்ச தாலி கட்டறதுக்கு முந்தி நடந்துடுச்சி இல்லேனா வாழ்நாள் முழுக்க அகோரியை கட்டிட்டு இல்ல அல்லாடனும்’ என்றாள்.
அப்பாவோ பாவம்டா அந்த பொண்ணு நல்ல அழகான முகம் நம்ம மருமகளா வருவான்னு நினைச்சேன் நமக்கு கொடுப்பினை இல்ல ம்... என்று இழுத்தார்.
  நான் யோசித்தேன். முகம் கறுத்துவிட்டதே என்று அவளை வெறுத்து ஒதுக்குவதா? இல்லை பெற்றோரை எதிர்த்து அவளை திருமணம் செய்து கொள்வதா? அப்படி திருமணம் செய்து கொண்டால் முக அழகு இல்லாத அவளுடன் எப்படி வெளியில் சென்று வர முடியும்? எத்தனை பேர் கேலி செய்வார்கள் ஆம் பெற்றோர் சொல்வதுதான் சரி அவளை மணக்க கூடாது நாசூக்காய் மறுத்து விட வேண்டும்.
  இரண்டு நாட்கள் மருத்துவமணை பக்கம் போகவில்லை. அன்று போனபோது அபிநயா முகத்தில் பேண்டேஜ் அவிழ்க்க பட்டு முகத்தில் ஆங்காங்கே தழும்புகளோடு வரவேற்றாள். ‘என்ன சதிஷ் ரெண்டு நாளாய் ஆளையே காணோம் என்ன விஷயம் ?’ என்றாள்.
   அ.. அது முகத்தை தாழ்த்திக் கொண்டேன்.
‘என்ன சதிஷ் என் தீப்பட்ட முகத்த பாக்க முடியலையா? தலைய குனிஞ்சுக்கிறீங்க?’
  ‘இ.. இல்ல..’
 ‘உண்மையை சொல்லுங்க சதிஷ் உங்க அப்பாவும் அம்மாவும் என்னை வருங்கால மருமகள் பதவியிலிருந்து தூக்கி எறிஞ்சிட்டாங்க தானே!’ திடுக்கிட்டேன்.
‘என்ன சதிஷ் பேச்சையே காணோம்?’
‘ எ.. என்னை ..!’
  ‘மன்னிச்சிடுன்னு சொல்ல போறிங்களா? இந்த டயலாக்க நான் நிறையதடவை சினிமாவுல கேட்டு அலுத்துட்டேன் வேற புதுசா ஏதாவது சொல்லுங்களேன்.’
‘அ.. அபிநயா! உனக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சிக் கூட பார்க்கல என்னால எதுவும் பண்ண முடியலை!.. எங்க அப்பா அம்மா பேச்சை மீறி என்னால நடக்க முடியாது!. அப்படியே மீறினாலும் உன் இந்த கோரமான முகம்! இந்த முகத்தோட நான் குடித்தனம் நடத்த விரும்பலை! ஐயம் சாரி அபிநயா!”

“அப்ப என்னோட முகத்த பாத்துதான் என்னை காதலிச்சிருக்கீங்க! மனசைபாக்கலை! இதுவே கல்யாணத்துக்கு அப்புறமா நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? விலக்கித் தானே வைப்பீங்க? இந்த விபத்து உங்களுக்கு நடந்திருந்தா கொஞ்சம் யோசிச்சு பாருங்க!” நான் விலக்கியிருந்தா என்னல்லாம் சொல்லியிருப்பீங்க எல்லாம் நல்லதுக்குத்தான். உங்கள் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு கடவுளுக்கு நன்றி!
  “பை த பை மிஸ்டர் சதிஷ்! நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா? எனக்கு முகத்தில ஒரு புண்ணும் இல்ல தீக்காயமும் படலை! எல்லாம் ஒரு நடிப்பு தான் தீடிர்னு நீங்க பெண்கேட்டு வரவும் என் அழகையே புகழவும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்க எப்படி பட்டவர்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். அதுக்கு டாக்டரும் என்னோட அப்பா அம்மாவும் உதவி செஞ்சாங்க!”
‘நான் போட்டிட்டிருக்கறது சைலாஸ்டிக் ஜெல்லால் ஆன ஒரு பொய் முகம்! உங்களி போன்றவர்களோட உண்மையான முகத்தை பார்க்கிறதுக்கு எனக்கு இந்த பொய் முகம் தேவைப்பட்டது. என்றுஅவள் அந்த பொய் முகத்தை உருவ அவளது அழகிய முகத்தின் முன் இருளாகி நின்றேன் நான்.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டு செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Monday, October 20, 2014

தளிர் லிமரிக் கவிதைகள்!

தளிர் லிமரிக் கவிதைகள்!அம்மா போனாங்க ஜெயிலு!
ஆண்டவனுக்கு தொண்டனுங்க அடிச்சாங்க மெயிலு!
அட்ராசக்கை கிடைச்சது பெயிலு!

சாலையில் ஓடுது ஆறு!
ஏரிகுளங்களில் இல்லையே நீரு!
சட்டத்தை மீறியதால் இந்த ஊறு!


ஹூத் ஹூத் புயலு!
உடைச்சு போட்டுது ஆந்திரா!
இயற்கைக்கு என்னா தில்லு!

கடையில தொங்குது குட்கா!
கவர்ந்து உன்னை இழுக்குது சோக்கா!
காலி பண்ணுமே மக்கா!

சீராய் சிந்தும் நீர்த்துளிகள்!
தாகம் தீராத பூமி!
அணிவகுத்த கான்கிரிட் சாலைகள்!

மழையில் ஒலித்தது பாட்டு!
தவளையாரு இசைக்கிறாரு கீதம்!
மயங்கலை யாரும் கேட்டு!

மாற்றி மாற்றி சுரண்டினார்கள்!
மாறவே இல்லை தலையெழுத்து!
மாற்றத்தை இன்னும் விரும்பினார்கள்!

இறங்கிவந்தது மேகம்!
இடி இடித்து பெய்தது மழை!
தீருமோ தமிழ்நாட்டின் தாகம்!


பாறை சுமந்த கோவில்கள்!
பாவம் நிறைய சுமக்கின்றன!
பகல்கொள்ளையாக தரிசன கட்டணங்கள்!

கடை வீதி நெறஞ்சாச்சு!
உடை மணிகள் வாங்கித் தள்ள
உடையாளின் மனம் நிறைஞ்சாச்சு!

கடைக்கோடி நாடுகளும் அள்ளுது பதக்கம்!
கோடிகோடி மக்களிருந்தும்
குறைந்திடவில்லை நம் ஏக்கம்!

பேருதான் விராட் கோலி!
கிரிக்கெட்டில் அவர் கில்லி!
ஊரு என்னமோ  புதுதில்லி!

தேங்கி தேங்கி நிற்குது நீரு
தெருவெல்லாம் உருவாகுது மாசு!
தினமும் படையெடுக்குது கொசு!

 தெருவில மொய்க்குது கூட்டம்!
 திருடங்க போடுவாங்க ஆட்டம்!
 தீபாவளிக்கு இந்த கொண்டாட்டம்!

 தமிழ் மூதாட்டி அவ்வை!
 தமிழுக்கு தந்தாங்க ஆத்திச்சூடி!
 தமிழா நீ நினைவில் வை!

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Sunday, October 19, 2014

யானையை இழுத்த எலி! தித்திக்கும் தமிழ்! பகுதி 1உருவத்தில் பெரியதும் கரியதும், வலிமை மிகுந்ததுமான யானையை எங்காவது எலி இழுத்து போகுமா? எலி இழுத்துக்கொண்டு போகிறது என்கிறார் புலவர். எலி எதையெல்லாம் இழுத்துச் செல்லும். வீட்டில் ஏதாவது பழங்கள் தேங்காய், இல்லை மசால்வடை, பூரி  போன்ற ஏதாவது தின்பண்டங்கள் இருந்தால் எடுத்துச் செல்லும். அதுவும் இல்லாவிடில் ஏதாவது ரப்பர் சாதனங்கள் இருந்தால் அதன் வாசனை எலிக்கு மிகவும் பிடிக்கும். மோப்பம் பிடித்து இழுத்துச்செல்லும். அது உங்கள் குழந்தை விளையாடும் பார்பி பொம்மையாக கூட இருக்கலாம். அல்லது உங்கள் செருப்பாகவும் இருக்கலாம்.
    இதையெல்லாம் இழுத்துச் சென்றால் எலிக்கு உபயோகம் இருக்கிறது. தின்பண்டமோ, பழமோ என்றால் அதற்கு உணவாகின்றது. ரப்பர் பொருளோ செருப்போ அல்லது ஏதாவது புத்தகமோ எனில் அதை வைத்து எலி ஒன்றும் சாதிக்க போவது இல்லை. உங்களின் கம்பராமாயண புத்தகத்தையோ, கல்கியின் பொன்னியின் செல்வனையோ அது படித்து ஒன்றும் பெரிதாக சாதிக்க போவதில்லை. அதேபோல ரப்பர் செருப்பை அதனால் போட்டுக்கொண்டு உலாவரவோ அல்லது பொம்மையை வைத்து விளையாடவோ எலிக்கு ஒன்றும் தெரியாது.
    ஆனால் வீட்டில் உள்ள புத்தகம், மரச்சாமான் ஏதாவது இருந்தால் அதை கடித்து வைக்கும். ஏன். அதனுடைய பற்களின் விசேஷம் அப்படி. அதன் முன் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்குமாம். அதை தேய்க்கவே இந்த கடி! அப்படி கொஞ்சநாள் எதையும் கடிக்காமல் விட்டுவிட்டால் அந்த பற்களே எலிக்கு எமனாக அமைந்து விடுமாம். எப்போதோ எதிலோ இதைப் படித்தேன். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த எலியானது எதையாவது தின்றுவிட்டு இப்படி புத்தகத்தையும் அலமாரியும் கடித்து வைப்பதோடு இன்னொன்றையும் செய்கிறது.
   விவேக் ஒரு படத்தில் சொல்வார்.  இருந்து சாப்பிட்டு போங்கோ! என்று. வயிறு சரியில்லை என்று அவர் மறுக்க அப்போ சாப்பிட்டு இருந்துட்டு போங்கோ! என்பார். இதை அப்படியே செய்கிறது எலி. பரணிலோ புத்தக அலமாரியிலோ எலி சேர்ந்து  விட்டால் அவ்வளவுதான். சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டு அந்த இடமே ஓர் எலி வாசம் அடிக்கும். இதனால் நோயும் நம்மை தாக்கும்.
   எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன்! இதையெல்லாம் இழுத்துச் செல்கின்ற எலி ஓர் யானையை இழுத்து செல்லுமோ? இழுத்து செல்கிறதாம்? ஏன்?
   இதோ புலவர் பாடுகிறார் பாருங்கள்!

     மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?- மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்?

     மாப்பார் வலி மிகுந்த மும்மதத்து வாரணத்தை எலி இழுத்துப் போகின்றது ஏன்? என்று வினவும் புலவர் இதையும் சொல்லி ஏளனம் செய்கின்றார்.  மூப்பானிடமிருந்து (சிவபெருமான்)பெற்ற மழுவும், முராரியாகிய திருமாலிடம் இருந்து பெற்ற சக்கரமும் பார்ப்பானாகிய பரசுராமனிடம் இருந்து பெற்ற கதை என்ற ஆயுதமும் பறிபோய்விட்டதோ? இப்படி யானையை எலி இழுத்துப் போகின்றதே என்கிறார்.

   இன்னும் கொஞ்சம் புரியவேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காஞ்சி மாநகரில் நடக்கிறது. மூஷிகமாகிய பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இதைத்தான் நமது புலவர் இகழ்வது போல புகழ்கின்றார். என்ன ஒரு அருமையான பாடல்! கவி காளமேகம் உண்மையிலேயே பெருங்கவிஞர்தான்!


    தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, October 18, 2014

ஆனந்த தீபாவளி! பாப்பா மலர்!
“‘டேய் ராஜா! தீபாவளி நெருங்கிடுச்சு! டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா? என்னென்ன பட்டாசு ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்காங்க?” குமார் கேட்டபொழுது ராஜா ஒரு நொடி ஆடிப்போனான்.

          அவனுக்கு ஏது தீபாவளி? ஏதுபட்டாசு? அவன் அப்பா ஒரு சாதாரண கூலித்தொழிலாளி. அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவதே பெரும்பாடு. அவனது தாயும் நாலு வீடுகளில் வீட்டு வேலை செய்து வரும் வருமானத்தில் ஏதோ குடும்பம் நடந்து கொண்டிருந்தது. இதில் பண்டிகை புது துணி. இனிப்பு என்றெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தீபாவளி அன்று யார் வீட்டிலாவது ஏதாவது பலகாரம் கொடுத்தால் அதைக் கொண்டு வந்து தருவாள் அவன் அம்மா! இருப்பதிலேயே கொஞ்சம் சுமாராண துணியை அணிந்து கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான் அவன். இதைப் போய் குமாரிடம் சொல்ல முடியுமா? அவனது தன்மானம் தடுத்தது.
       தன்னுடைய உண்மை நிலையை இதுவரை யாரிடமும் அவன் கூறியது இல்லை! தன்னை படிக்க வைப்பதே பெரும்பாடு தன் பெற்றோருக்கு இதில் அவர்களை தொந்தரவு செய்ய கூடாது என நினைப்பவன் அவன். அதே சமயம் தன்னுடைய தாழ்வு நிலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் அவனுக்கு கூச்சமாக இருந்தது. சட்டென்று புளுகை அவிழ்த்து விட ஆரம்பித்தான் ராஜா.

     “அதுக்கென்னடா குறைச்சல்? ஐயா எப்பவோ ஒரு பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அடுக்கியாச்சு! புஸ்வானம், மத்தாப்பு, ராக்கெட், லஷ்மி வெடின்னு அது கிடக்குது நிறைய இந்த தீபாவளி ராத்திரி முழுக்க ஒரே வெடி மயம் தான்” என்றான் ராஜா.
    குமாரும் விடவில்லை. “ அது சரிடா! தீபாவளிக்கு என்ன டிரெஸ்டா எடுத்திருக்கே?” என்று ஆவலாய் கேட்டான்.
   “டிரஸ்! .. ம் ஐயாவுக்கு க்ரே கலர்ல   பேண்டும் அதுக்கு மேட்ச்சா புல்ஷர்ட்டும்  எடுத்து தைக்க கொடுத்திருக்கு!”
    “உங்க வீட்டுல ஸ்வீட் என்னடா பண்ணுவாங்க?
எங்கம்மா நிறைய பலகாரம் பண்ணுவாங்கடா! அதிரசம் முறுக்கு வடை, அப்புறம் மைசூர்பா ஓமப்பொடின்னு!”
  “கேட்கவே சந்தோஷமா இருக்குடா! தீபாவளின்னா ஒரே ஜாலின்னு சொல்லு!”
“ஆமாம்டா குமார்! என்னை இத்தனை கேக்கறீயே உங்க வீட்டுல நீ என்னென்ன வாங்கியிருக்கே சொல்லவே இல்லையே?” என்றான் ராஜா.
   “அது சஸ்பென்ஸ்டா!” என்று விடைபெற்றான் குமார்.
    எப்படியோ குமார் நம்பும் படி நன்றாக அளந்தாயிற்று! அவன் எதிரில் நம் மானம் கப்பல் ஏறவில்லை! என்று பெருமூச்சு விட்டான் ராஜா. நாட்கள் வேகமாக ஓடின. இதோ தீபாவளி வந்தே விட்டது.
   ராஜா வழக்கம் போல எண்ணெய் குளியல் முடித்து விட்டு இருப்பதிலேயே கொஞ்சம் புதிதான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு வாசலில் நின்று மற்றவர்கள் வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயம் அங்கே குமார் வர அதிர்ந்தான்.
   அடடே! வசமா மாட்டிகிட்டோமே! இவன் எப்படி இங்கு வந்தான். இவனை மாதிரி பசங்க இந்த ஏரியாவுக்கு வர மாட்டார்களே! என்று யோசிக்கும் போதே, “என்ன ராஜா! வா!ன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் குமார்.

   “இ.. இல்லே! நீ எப்படி இந்த பக்கம்! அதான் அதிசயமா நின்னுட்டேன்! வா! குமார் வா! உள்ளே வா!” என்று அழைத்தான் ராஜா!
       “இன்னிக்கு உங்கூடத்தான் தீபாவளி கொண்டாடனும்னு வந்திருக்கேன்! என்ன நீ பழைய டிரஸ் போட்டிருக்கே புது டிரஸ் எங்கே?”
         ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின்னர் சமாளித்துக் கொண்ட ராஜா, “அ. அது வந்து இன்னும் தைச்சி வரலை குமார்” என்றான்.
   “சரிதான்! தீபாவளி டைம்ல டைலருங்க இப்படித்தான் பண்ணுவாங்க! சரி உங்கம்மா பண்ண பலகாரம் எதாவது கொடேன்! சாப்பிடலாம்” என்றான் குமார்.
    ராஜா தயங்க, “ என்ன நீ இப்படி தயங்கி தயங்கி நிக்கறே! நான் வந்தது உனக்கு பிடிக்கலையா?”
“சேச்சே அதெல்லாம் இல்லைடா!”
 “அப்ப ஏன் முழிச்சிகிட்டு நிக்கறே? போ! உள்ள போய் ஏதாவது ஸ்வீட் எடுத்துகிட்டு அப்படியே பட்டாசும் எடுத்துவா வெடிக்கலாம்!”
  “ பட்டாசெல்லாம் நேத்தே வெடிச்சிட்டேன் குமார்.”
  “அவ்வளவுமா?”
   “ஆமாம் குமார்! நேத்தே வெடிச்சி தீர்த்துட்டேன்!”
   “சரி போனா போவுது! உங்கம்மா கையாலே செஞ்ச பலகாரத்தையாவது கொடேன்!”
இதென்ன இவன் விடாக் கண்டனாக இருக்கிறானே! என்று மனதில் நினைத்த  ராஜா,  “குமார் ! அது வந்து!..” என்று இழுத்தான்.
   “என்ன அதுவும் தீர்ந்து போச்சா?”
சட்டென்று, “ ஆமாம்டா! கொஞ்சமாத்தான் பண்ணாங்க! அதான் காலி ஆயிடிச்சு!”
   “ஏண்டா! இப்படி பொய் மேல பொய்யா சொல்லிகிட்டு இருக்கே! உன் பிரெண்ட் என்கிட்ட கூட நீ கவுரவம் பார்க்கலாமா?” குமார் கேட்கவும் ஆடிப்போனான் ராஜா.
  ராஜாவின் கண்களில் கண்ணீர் பெருகியது! “இல்ல..” என்று தேம்பினான்

“குமார் உன்னை ஏமாத்தனும்னு நினைக்கலைடா! என் வறுமையை வெளியே தெரிய கூடாதுன்னுதான் அப்படி புளுகினேன்! இப்படி திடு திப்புன்னு வருவேன்னு நினைக்கலடா! என்னை மன்னிச்சிருடா!” என்றான் கண்களில் கண்ணீருடன் ராஜா.
   “டேய் ராஜா! எனக்கு எல்லாம் தெரியும்டா! உங்க அப்பா எங்க தெருவிலதான் ஒரு வீட்டுல வேலை பார்க்கிறாரு. அவருதான் ஒரு சமயம் என்னை பார்த்து தம்பி உன் ஸ்கூல்ல தான் என் பையன் படிக்கிறான். நல்லா படிக்கிறானா என்று கேட்டார். விசாரிச்சப்பதான் அது நீன்னு தெரிஞ்சது. ஒதுங்கி ஒதுங்கி போன உன் கூட அதுக்கப்புறம் நான் ஒட்டி வந்தேன். ஏழ்மை ஒண்ணும் இளக்காரம் இல்லை! இன்னிக்கு நல்ல நிலையில் இருக்கறவங்க பல பேர் சின்ன வயசுல கஷ்டப்பட்டவங்கதான்! அதை நீ உணரனும்.”
    “நீ மத்தவங்க கிட்டே உன் நிலையை மறைச்சிருந்தாலும் என்கிட்ட உண்மையை சொல்லி  இருக்கலாம். இது ஒண்ணும் வெட்கப்பட வேண்டிய விசயம் இல்லே! உன் நண்பன் உன் குறையை பெரிது படுத்த மாட்டான்னு நீ உணரலையே ராஜா!”
   “சாரிடா குமார்! நான் உன்னை சரியா புரிஞ்சிக்கலை! என்னை மன்னிச்சிருடா! என் கூட ப்ரெண்டா இருப்பே இல்லே?” ராஜா அழுகையுடன் கேட்க.

  “கண்டிப்பா நீ எப்பவும் என் நண்பன் தான்! மன்னிப்பெல்லாம் நமக்குள்ளே தேவையே இல்லை! இதோ இந்த பையில்  உனக்கு டிரெஸ் பட்டாசு ஸ்வீட் எல்லாம் இருக்கு! இதெல்லாம் என்னோட கிப்டா வைச்சிக்க! வா ரெண்டு பேரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவோம்” என்றான் குமார்.
  அந்த தீபாவளி ஆனந்த தீபாவளியாய் அவர்களுக்கு இனித்தது!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...