தித்திக்கும் தமிழ்! பகுதி 2 கோட்டானை பெற்ற பார்வதி!
தித்திக்கும் தமிழ்!
ஏதோ பொழுது போக்காக சென்ற வாரம் இந்த பகுதியினை
தொடங்கிவிட்டேன்! இணையத்தில் பல செய்யுள்களை தேடியும் படித்தும் பார்த்தேன். சில
பொருள் விளங்கியது. சிலது நம் அறிவினுக்கு எட்டவில்லை. இந்த வாரமும் நாம் கவி
காளமேகப் புலவரின் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். இரட்டைப்புலவர்கள்,
சவ்வாதுப்புலவர் போன்றவர்களின் பாடல்களையும் தேடி வருகின்றேன். அவ்வப்போது பகிர உத்தேசம்.
இந்த தொடர் குறித்து உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவித்து
ஊக்கப்படுத்துங்கள்.
நம் வீட்டு பிள்ளைகள்
செய்யும் குறும்புகள் அதிகம். இந்த குறும்புகள் நம்மோடு போனால் பரவாயில்லை!
அடுத்தவரை பாதித்தால் அவர்கள் ஏசுவார்கள். பிள்ளைகள் என்றால் குறும்புத்தனம்
இருக்கத்தான் செய்யும். அவர்கள் குழந்தைகளும் குறும்பு செய்யத்தான் செய்யும்.
ஆனால் காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு! அவர்கள் பிள்ளைகள் எப்போதும்
நல்லவர்களாகவே எல்லா பெற்றோர்களுக்கும் இருப்பார்கள். ஆனால் அடுத்தவன் பிள்ளை தவறு
செய்துவிட்டாலோ அவ்வளவுதான் பிரித்து மேய்ந்து விடுவார்கள். பிள்ளையா பெத்து
வைச்சிருக்கா? சரியான கோட்டானை பெத்து வெச்சிருக்கா? என்று ஏசுவார்கள். நம்மவர்கள்தான் இப்படி என்றால் காளமேகமும் ஏசுகின்றார். எப்படி
பார்வதி தேவி பெற்ற பிள்ளையை கோட்டான் என்கிறார் அதோடுவிட்டாரா?
சிவபெருமான் மனைவி
பார்வதி தேவியை இடைச்சி என்று சொல்லுகின்றார் புலவர். அதுவும் இல்லாமல் அவள் ஒரு
கோட்டானையும் பெற்றாள் என்று சொல்லுகின்றார்.
உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?
இன்றைய இந்துத்வா
அமைப்பினர் இதைக்கேட்டால் முகநூலில் பொங்கி எழுந்து விடுவார்கள். அன்றைக்கு இதை
ரசித்து மகிழ்ந்தார்கள். காளமேகம் என்னவெல்லாம் சொல்லுகிறார் பாருங்கள்.
சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவகாமி அம்மை ஓர்
சிற்றிடைச்சி என்கிறார். அவளை ஒரு மாட்டுக்கார கோணாருடைய தங்கையாகவும்
சொல்கிறார். அதுவும் இல்லாமல் ஒரு ஆட்டுக்கோனானுக்கு மனைவியானாள் என்கிறார். அதோடு
விட்டாரா அந்த ஆட்டுக்கோனானின் குட்டிகளை மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்
என்கிறார்.
சிவ சிவ!! என்ன இது!
அவர் பாட்டுக்கு எதை எதையோ சொல்லிக் கொண்டே போகிறார் கேட்பார் இல்லையா
என்கிறிர்களா? கேட்டு படித்து பதித்து வைத்தமையால்தான் இந்த பாடல்களை நாமும்
அறிந்து கொள்ள முடிகிறது.
பாடல் இதுதான்!
மாட்டுக்கோன் தங்கை
மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் – கேட்டிலையோ
குட்டி மறிக்கவொரு
கோட்டானையும் பெற்றாள்
கட்டி மணி
சிற்றிடைச்சி காண்.
இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தால், பெண்ணே நீ இதனை கேட்டிலையோ?
மாடு மேய்த்த கோபாலனின் தங்கை பார்வதி தேவி தான் பிறந்த மதுராபுரியை விட்டு
தில்லைக்கு வந்து ஆட்டுக்கோனாரை மனைவியானாள் அத்துடன் ஆட்டுக்குட்டிகளை மடக்கி
மேய்க்க ஒரு கோட்டானையும் பெற்றெடுத்தாள் அந்த சிற்றிடைச்சி என்று தோன்றும்.
ஆழ்ந்து நோக்க,
பெருமாளின்
தங்கை பார்வதி தேவி என்று புராணம். பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் மாடுமேய்த்தார்.
அந்த கோபாலனின் தங்கை பிறந்த ஊர் மதுராபுரி. அந்த ஊரினை விட்டு தில்லைநகர் வந்து
ஆட்டுக்கோனை மணந்தாள். ஆட்டுக்கோன் யார்? தில்லை அம்பலத்தே அனைவரையும்
ஆட்டுவிக்கும் நடராசப்பெருமான். அவரை மணந்தாள். இடையிலே பெண்கள் அணிய கூடிய ஆபரணம்
மேகலை எனப்படும். சிறிய இடை உடையவர்களை அழகுபடுத்திக்காட்டும் ஆபரணம் அது.
அவ்வாறான மணிகளை கட்டியுள்ள மேகலையை அணிந்த சிற்றிடை உடையவள் சிவகாமி அம்மை. அவள்
கோட்டானை பெற்றாள். கோட்டு ஆணையைப் பெற்றாள் என்று பொருள். ஒற்றைக் கொம்பு உடைய
யானையை பெற்றாள் என்பதாகும். எதற்கு பெற்றாள். பக்தர்கள் நம் தலையிலே குட்டிக்
கொண்டு வணங்குவதற்கு பிள்ளையாரை பிள்ளையாகப் பெற்றாள். இதைத்தான் குட்டிமறித்து
என்று சொல்லுகின்றார்.
ஆட்டுக்கோன் -
ஆட்டிடையன், தில்லை நடராசன்
சிற்றிடைச்சி- இடையர்
குலப்பெண், சிறிய இடை கொண்டவள்.
குட்டி மறித்தல்- ஆட்டுக்குட்டிகளை மேய்த்தல், தலையில்
குட்டிக்கொள்ளுதல்
என்னே அருமையாக பாடியுள்ளார் பாருங்கள்! கவி காளமேகத்தின்
வார்த்தை ஜாலம் வியக்க வைக்கிறது இல்லையா? வியந்து ரசியுங்கள் தோழர்களே!
மீண்டும் அடுத்த
பகுதியில் சந்திப்போம்!
பாடலும் விளக்கமும் அறிந்து ரசித்தோம் சகோ.வாழ்த்துக்கள். தொடருங்கள். நிறைய பாடல்களை அறிய ஆவலாக இருக்கிரது, நன்றி
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteதொடரட்டும் இது போன்ற பதிவுகள்.
சிறந்த இலக்கிய விளக்கம்
ReplyDeleteதொடருங்கள்
ரசித்தேன் . பாராட்டுக்கள். தொடருங்கள்.....
ReplyDeleteநறுந்தமிழ்ப்பகிர்வு,
ReplyDeleteஇதாவது பரவாயில்லை,
அக்காளை ஏறுவான் அம்மானைக் கைபிடிப்பான்
சொக்காளைப் பக்கம் சொருகுவான் - நக்கனவன்
ஆட்டை எடுப்பான் ஆலம்பால் உண்டிடுவான்
காட்டில் குடியிருப்பான் காண்“
என்பான் பாருங்கள் .
முதல் முறை படிக்கும் எவரானாலும் சற்றுக் கலங்கித்தான் போக வேண்டும்.
இதை இரட்டுறமொழிதல் என்றாலும் வஞ்சப்புகழ்ச்சி என்றாலும் தகும்!
என்ன இருந்தாலும் காளமேகம் பாடிக்கொடுத்த ஆபாசப்பாடல்கள் இன்னும் தமிழில் இருக்கவே செய்கின்றன.
சான்றாக தென்னை மரத்திற்கும் வேசைக்கும் அவர் பாடிய சிலேடை,
பாரத் தலைவிரிக்கும்! பன்னாடை மெல்சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னைமரம்
கூறுங் கணிகையென்றே கொள்“
ஏறக்குறைய ஆகக் குறைந்த ஆபாசப்பாடல் தான் இது! பெண்குறிக்கும் கமண்டலத்திற்குமெல்லாம் ஒப்பு வைத்து அவன் பாடிய பாடல்களை இங்குப் பதிவு செய்ய முடியாது.
கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது என்னும் நூல் ஆங்கிலேயர் காலத்தில ஆபாசம் நிறைந்ததென்று தடைசெய்யப்பட்டது.பின் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காளமேகத்தின் பாடல்களில் இது போன்ற பாடல்கள் தணிக்கை செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனாலும் கூடக்
காளமேகத்தின் ஏனைய பாடல்களுக்காக இப்படிப் பட்ட சில பாடல்களை நாம் பொறுத்துப்போகத்தானே வேண்டும்.
அருமையான பகிர்வு அய்யா!
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி!
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி அன்பரே! நீங்கள் சொன்ன பாடலையும் படித்தேன். இணையத்தில் அதை வெளியிடலாமா வேண்டாமா என்று குழம்பி இறுதியில் நிறுத்திவிட்டேன். காளமேகத்தின் பல்வேறு பாடல்கள் காமச்சுவை நிறைந்ததாகவே காணப்படுகிறது. அதில் நமக்கு ஏற்றதை பகிர்வதே என் எண்ணம்! நன்றி!
Deleteஆசானே! இங்கும் தங்களது பாடல் பகிர்வு கண்டு மகிழ்ந்தோம்...
Deleteஅருமையான பாடல் சுரேஷ்! மிகவும் ரசித்துப் படித்தோம்! தொடருங்கள் இது போன்று!
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் காளமேகபுலவரா ,காமமேகப் புலவரா என்றே சந்தேகம் வருகிறதே :)
ReplyDelete