ஆனந்த தீபாவளி! பாப்பா மலர்!
“‘டேய்
ராஜா! தீபாவளி நெருங்கிடுச்சு! டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா? என்னென்ன பட்டாசு
ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்காங்க?” குமார் கேட்டபொழுது ராஜா ஒரு நொடி ஆடிப்போனான்.
அவனுக்கு ஏது தீபாவளி? ஏதுபட்டாசு? அவன்
அப்பா ஒரு சாதாரண கூலித்தொழிலாளி. அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவதே
பெரும்பாடு. அவனது தாயும் நாலு வீடுகளில் வீட்டு வேலை செய்து வரும் வருமானத்தில்
ஏதோ குடும்பம் நடந்து கொண்டிருந்தது. இதில் பண்டிகை புது துணி. இனிப்பு
என்றெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தீபாவளி அன்று யார் வீட்டிலாவது ஏதாவது
பலகாரம் கொடுத்தால் அதைக் கொண்டு வந்து தருவாள் அவன் அம்மா! இருப்பதிலேயே கொஞ்சம்
சுமாராண துணியை அணிந்து கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை ஏக்கத்துடன்
பார்த்துக் கொண்டிருப்பான் அவன். இதைப் போய் குமாரிடம் சொல்ல முடியுமா? அவனது
தன்மானம் தடுத்தது.
தன்னுடைய உண்மை
நிலையை இதுவரை யாரிடமும் அவன் கூறியது இல்லை! தன்னை படிக்க வைப்பதே பெரும்பாடு தன்
பெற்றோருக்கு இதில் அவர்களை தொந்தரவு செய்ய கூடாது என நினைப்பவன் அவன். அதே சமயம்
தன்னுடைய தாழ்வு நிலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் அவனுக்கு கூச்சமாக
இருந்தது. சட்டென்று புளுகை அவிழ்த்து விட ஆரம்பித்தான் ராஜா.
“அதுக்கென்னடா குறைச்சல்? ஐயா எப்பவோ
ஒரு பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அடுக்கியாச்சு! புஸ்வானம், மத்தாப்பு, ராக்கெட்,
லஷ்மி வெடின்னு அது கிடக்குது நிறைய இந்த தீபாவளி ராத்திரி முழுக்க ஒரே வெடி மயம்
தான்” என்றான் ராஜா.
குமாரும் விடவில்லை. “ அது சரிடா!
தீபாவளிக்கு என்ன டிரெஸ்டா எடுத்திருக்கே?” என்று ஆவலாய் கேட்டான்.
“டிரஸ்! .. ம் ஐயாவுக்கு க்ரே கலர்ல பேண்டும் அதுக்கு மேட்ச்சா
புல்ஷர்ட்டும் எடுத்து தைக்க
கொடுத்திருக்கு!”
“உங்க வீட்டுல ஸ்வீட் என்னடா பண்ணுவாங்க?
எங்கம்மா
நிறைய பலகாரம் பண்ணுவாங்கடா! அதிரசம் முறுக்கு வடை, அப்புறம் மைசூர்பா
ஓமப்பொடின்னு!”
“கேட்கவே சந்தோஷமா இருக்குடா!
தீபாவளின்னா ஒரே ஜாலின்னு சொல்லு!”
“ஆமாம்டா
குமார்! என்னை இத்தனை கேக்கறீயே உங்க வீட்டுல நீ என்னென்ன வாங்கியிருக்கே சொல்லவே
இல்லையே?” என்றான் ராஜா.
“அது சஸ்பென்ஸ்டா!” என்று விடைபெற்றான்
குமார்.
எப்படியோ குமார் நம்பும் படி நன்றாக
அளந்தாயிற்று! அவன் எதிரில் நம் மானம் கப்பல் ஏறவில்லை! என்று பெருமூச்சு விட்டான்
ராஜா. நாட்கள் வேகமாக ஓடின. இதோ தீபாவளி வந்தே விட்டது.
ராஜா வழக்கம் போல எண்ணெய் குளியல்
முடித்து விட்டு இருப்பதிலேயே கொஞ்சம் புதிதான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு வாசலில்
நின்று மற்றவர்கள் வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயம்
அங்கே குமார் வர அதிர்ந்தான்.
அடடே! வசமா மாட்டிகிட்டோமே! இவன் எப்படி
இங்கு வந்தான். இவனை மாதிரி பசங்க இந்த ஏரியாவுக்கு வர மாட்டார்களே! என்று
யோசிக்கும் போதே, “என்ன ராஜா! வா!ன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?” என்று
கேட்டபடி உள்ளே நுழைந்தான் குமார்.
“இ.. இல்லே! நீ எப்படி இந்த பக்கம்!
அதான் அதிசயமா நின்னுட்டேன்! வா! குமார் வா! உள்ளே வா!” என்று அழைத்தான் ராஜா!
“இன்னிக்கு உங்கூடத்தான் தீபாவளி
கொண்டாடனும்னு வந்திருக்கேன்! என்ன நீ பழைய டிரஸ் போட்டிருக்கே புது டிரஸ் எங்கே?”
ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின்னர்
சமாளித்துக் கொண்ட ராஜா, “அ. அது வந்து இன்னும் தைச்சி வரலை குமார்” என்றான்.
“சரிதான்! தீபாவளி டைம்ல டைலருங்க
இப்படித்தான் பண்ணுவாங்க! சரி உங்கம்மா பண்ண பலகாரம் எதாவது கொடேன்! சாப்பிடலாம்”
என்றான் குமார்.
ராஜா தயங்க, “ என்ன நீ இப்படி தயங்கி
தயங்கி நிக்கறே! நான் வந்தது உனக்கு பிடிக்கலையா?”
“சேச்சே
அதெல்லாம் இல்லைடா!”
“அப்ப
ஏன் முழிச்சிகிட்டு நிக்கறே? போ! உள்ள போய் ஏதாவது ஸ்வீட் எடுத்துகிட்டு அப்படியே
பட்டாசும் எடுத்துவா வெடிக்கலாம்!”
“ பட்டாசெல்லாம் நேத்தே வெடிச்சிட்டேன்
குமார்.”
“அவ்வளவுமா?”
“ஆமாம் குமார்! நேத்தே வெடிச்சி
தீர்த்துட்டேன்!”
“சரி போனா போவுது! உங்கம்மா கையாலே செஞ்ச
பலகாரத்தையாவது கொடேன்!”
இதென்ன
இவன் விடாக் கண்டனாக இருக்கிறானே! என்று மனதில் நினைத்த ராஜா, “குமார் ! அது வந்து!..” என்று இழுத்தான்.
“என்ன அதுவும் தீர்ந்து போச்சா?”
சட்டென்று,
“ ஆமாம்டா! கொஞ்சமாத்தான் பண்ணாங்க! அதான் காலி ஆயிடிச்சு!”
“ஏண்டா! இப்படி பொய் மேல பொய்யா
சொல்லிகிட்டு இருக்கே! உன் பிரெண்ட் என்கிட்ட கூட நீ கவுரவம் பார்க்கலாமா?” குமார்
கேட்கவும் ஆடிப்போனான் ராஜா.
ராஜாவின் கண்களில் கண்ணீர் பெருகியது! “இல்ல..”
என்று தேம்பினான்
“குமார்
உன்னை ஏமாத்தனும்னு நினைக்கலைடா! என் வறுமையை வெளியே தெரிய கூடாதுன்னுதான் அப்படி
புளுகினேன்! இப்படி திடு திப்புன்னு வருவேன்னு நினைக்கலடா! என்னை மன்னிச்சிருடா!”
என்றான் கண்களில் கண்ணீருடன் ராஜா.
“டேய் ராஜா! எனக்கு எல்லாம் தெரியும்டா!
உங்க அப்பா எங்க தெருவிலதான் ஒரு வீட்டுல வேலை பார்க்கிறாரு. அவருதான் ஒரு சமயம்
என்னை பார்த்து தம்பி உன் ஸ்கூல்ல தான் என் பையன் படிக்கிறான். நல்லா படிக்கிறானா
என்று கேட்டார். விசாரிச்சப்பதான் அது நீன்னு தெரிஞ்சது. ஒதுங்கி ஒதுங்கி போன உன்
கூட அதுக்கப்புறம் நான் ஒட்டி வந்தேன். ஏழ்மை ஒண்ணும் இளக்காரம் இல்லை! இன்னிக்கு
நல்ல நிலையில் இருக்கறவங்க பல பேர் சின்ன வயசுல கஷ்டப்பட்டவங்கதான்! அதை நீ
உணரனும்.”
“நீ மத்தவங்க கிட்டே உன் நிலையை
மறைச்சிருந்தாலும் என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம். இது ஒண்ணும் வெட்கப்பட
வேண்டிய விசயம் இல்லே! உன் நண்பன் உன் குறையை பெரிது படுத்த மாட்டான்னு நீ உணரலையே
ராஜா!”
“சாரிடா குமார்! நான் உன்னை சரியா
புரிஞ்சிக்கலை! என்னை மன்னிச்சிருடா! என் கூட ப்ரெண்டா இருப்பே இல்லே?” ராஜா
அழுகையுடன் கேட்க.
“கண்டிப்பா நீ எப்பவும் என் நண்பன்
தான்! மன்னிப்பெல்லாம் நமக்குள்ளே தேவையே இல்லை! இதோ இந்த பையில் உனக்கு டிரெஸ் பட்டாசு ஸ்வீட் எல்லாம்
இருக்கு! இதெல்லாம் என்னோட கிப்டா வைச்சிக்க! வா ரெண்டு பேரும் சேர்ந்து தீபாவளியை
கொண்டாடுவோம்” என்றான் குமார்.
அந்த தீபாவளி ஆனந்த தீபாவளியாய்
அவர்களுக்கு இனித்தது!
(மீள்பதிவு)
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமை அருமை! மிகவும் அருமையான கதை! பாராட்டுக்கள் சுரேஷ்!
ReplyDeleteமிருதுவாக ஓர் நல்ல விஷயத்தை சொல்லும் கதை...
ReplyDeleteஅருமை
ReplyDeleteபெரியவர்களுக்கும் பொருந்தும் கதை)
ReplyDeleteநல்ல கதை...
ReplyDeleteநல்ல கதையோட்டம் ...
ReplyDeleteஇன்றைய சமூக சூழலில் மாணவர்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையைத் தூண்டியது.
சைக்கிள் ஓட்டலாம் வாங்க ...
சிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமையான பதிவு. நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்!
ReplyDeleteநல்ல நட்பும் கதையும் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteசரியான நேரத்தில் அருமையான ஒரு சிந்திக்க வைக்க கூடிய கதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்