Friday, February 28, 2014

"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே?
போலீஸ்காரங்களாவது கூட்டமா இருக்கட்டுமேன்னுதான்!
            சீர்காழி வி. வெங்கட்

2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க?
பாஸாகணும்னு!
              கொளக்குடி சரவணன்.

3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
நிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்!
             பர்வீன் யூனுஸ்

4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான்.
எதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்!
                 அ.ரியாஸ்.

5.எனக்கு உலகமே என் மனைவிதான்!
மெதுவாப் பேசுங்க தலைவரே! இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு!
                   சிக்ஸ் முகம்.

6.வேட்பாளரோட செலவுக்கணக்கை ஒப்படைச்சுதுக்காக நம்ம தலைவரை இனிமேல் தேர்தல்லயே நிக்க தேர்தல் கமிஷன் தடைவிதிச்சுட்டாங்களா? ஏன்?
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததையும் செலவுக்கணக்குகல காட்டியிருந்தாராம்!
             சீர்காழி. வி. வெங்கட்.


7.நம்ம தலைவர் 7 மணி பொதுக்கூட்டத்திற்கு இவ்ளோ அவசரமா 6 மணிக்கே போறார்?
லேட்டாப் போனா மேடையில சீட் கிடைக்கிறதில்லையாம்!
                  அ.ரியாஸ்.

8.தலைவர் மப்புல இருக்கார்னு எப்படி சொல்ற?
ரொம்ப நேரமா ஏர்- கூலருக்கு வணக்கம் வெச்சபடியே இருக்காரே!
                     அ. ரியாஸ்

9.ஆட்டோவிலே கஞ்சா கடத்தினது தப்புன்னு உனக்குத் தெரியாதா?
அவசரத்துக்கு ஆட்டோதான் கிடைச்சுது எசமான்!
                      கு. அருணாசலம்.

10.வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைச்சு தண்ணியடிச்சுட்டேன்!
  அப்புறம்?
என் மனைவி ‘பத்திர’ காளியாயிட்டா!
                  வி.சகிதாமுருகன்.

11.ஆங்கிலம் கற்றுக்கொண்ட நமது மன்னரின் அலப்பரை தாங்கமுடியவில்லையா! எப்படி?
புறமுதுகிட்டு வருவதைக் கூட…  ‘வார் இன் ரிட்டர்ன்’னு சொல்றாரே!
                     நா.கி.பிரசாத்.


12.நம்ம தலைவர் எதுக்கு நாட்டுல குற்றவாளிங்க எத்தனை சதவீதம்னு கேக்கிறாரு…?
அந்த ஓட்டெல்லாம் தலைவருக்குத்தானே விழும், அதான் கேட்கிறாரு!
                  வி.சாரதிடேச்சு.

13.போதையில பக்கத்து பார்வதி வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க?
தண்ணிப் போட்டா எம் மூஞ்சியிலே முழிக்காதேன்னு நீதாண்டி கஸ்மாலம் சொன்னே?
                அ.கிருஷ்ணசாமி.

14.பிரம்மாண்டமான கூட்டத்தை பார்த்ததும் தலைவர் அசந்துட்டார்!
  எந்த மீட்டிங் போனப்ப…?
மீட்டிங் இல்லே… ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனப்ப…
                     பர்வீன் யூனுஸ்
15.கட்சியில தலைவர் பெயர் மங்கிட்டே வருது!
எதை வச்சு சொல்லுற?
கட்சியின் ஒளி விளக்கேன்னு ப்ளக்ஸ் வச்சவங்க இப்போ கட்சியின் சிம்னி விளக்கேன்னு வச்சிருக்காங்களே!
                  வி.சகிதா முருகன்.

16.தலைவர் ஜிம்முக்கு போன மூன்று நாட்களில் 50 கிலோ வெயிட் போன இடம் தெரியலை!
அட, அவர் உடம்புல இருந்தா?
இல்ல… ஜிம்முல இருந்து!
                சி. ஆர்.ஹரிஹரன்.

17.டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்குன்னு சொல்றியே, என்னது அது?
என்னை அடிக்கிறதுக்கு முன்னாடி ‘லைட்டா ஸ்ட்ராங்கா’ன்னு கேட்டுருவா?
                   யுவகிருஷ்ணா.


18.உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு! அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது!
 அப்ப நீங்க ஃபீஸை சொல்லாதீங்க டாக்டர்!
                 வி.சாரதிடேச்சு.

19.நானும் அவரும் டாஸ்மாக் கடைல நண்பரா ஆனோம்!
அப்போ  ‘கிளாஸ் மேட்’னு சொல்லுங்க!
                 வி.சாரதிடேச்சு.

20.வீட்ல திருட வந்தவனுக்கு போய் மனைவி கையால காபி போட்டு குடுக்க சொல்றீங்களே…
அவனை தண்டிக்க வேறு வழி தெரியலியே…
                  பர்வீன் யூனுஸ்

(விகடன் குமுதம் இதழ்களில் இருந்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  Thursday, February 27, 2014

சிவாய நம என்று ஓதுவோம்!

சிவாய நம என்று ஓதுவோம்!


பிறப்புக்களிலே சிறந்த படைப்பாக கூறப்படுகிறது இந்த மானுடப்பிறவி. மற்ற எல்லாப் பிறப்புக்களில் உயர்ந்ததாக கூறப்பட்டாலும் இந்தப் பிறப்பில் மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை விட துன்பங்கள் ஏராளம். பொய், பொறாமை, சூது, வஞ்சகம் என்று எத்தனையோ தீவினைகள். இந்த தீவினைகள் அகலவும் நன்மைகள் நம்மை வந்து அடையவும் முன்னோர்கள் வகுத்ததே விரதங்கள் வழிபாடுகள். அத்தகைய வழிபாடுகளில் மனம் லயித்து ஈடுபடும் போது நம்முடைய துன்பங்கள் கரைந்து போகின்றது.
    மாசி மாதம் இறைவழிபாட்டிற்கு உகந்ததாக குறிப்பிடப்பட்டாலும் வீட்டில் சுபகாரியங்களுக்கு அவ்வளவு உகந்ததாக கூறப்படுவது இல்லை. அதிலும் புதுமனை புகுதல் போன்றவற்றிற்கு உகந்தவை அல்ல என்று கூறப்படுகிறது. இந்த மாசி மாதத்தில்தான் சிவன் விஷம் உட்கொண்டார். திருநீலகண்டன் ஆனார். ஆதலால் இந்த மாதம் புதுமனை புகுவிழா செய்வது உசிதமல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    அதே சமயம் இந்த மாதம் சிவன் விஷம் உண்ட நாளான சிவராத்திரியன்று விரதம் இருந்து ஈசனை துதித்து வழிபாடு செய்தால் நன்மைகள் ஏராளம் என்று புராணங்கள் கூறுகின்றன.
   சிவன் எப்போது விஷம் உண்டார்? முன்பொரு சமயம் அமிர்தம் பெறுவதற்கு வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து மகாலஷ்மி, ஐராவதம், பாரிஜாதமரம், போன்றவை முதலில் வந்தன.  வாசுகிப்பாம்பானது வலி தாங்க முடியாமல் கடுமையான விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் கொடுமை தாள முடியாமல் தேவர்களும் அசுரர்களும் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தேவர்கள் பரமேஸ்வரரிடம் வந்து வேண்டினர். அவரும் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை கொண்டு வருமாறு கட்டளை இட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அந்த விஷத்தை ஒரு நாவற்கனி வடிவில் திரட்டி எடுத்து வந்து பரமேஸ்வரரிடம் கொடுத்தார். அதை சிவன் உட்கொண்டார். அருகில் இருந்த பார்வதி திகைத்துப் போய் விஷம் உடலில் பரவா வண்ணம் நெஞ்சுக்குழியினை பிடித்து நிறுத்தினார். விஷம் நெஞ்சோடு நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்கள், ஆலால கண்டா! அற்புத சுந்தரா! என்று போற்றி வழிபட்டனர். அன்று இரவு முழுவதும் சிவன் தூங்காமல் களிநடனம் புரிந்தார். தேவர்களும் விழித்திருந்து ஆடியும் பாடியும் கசிந்துருகி இறைவனை ஈசனை துதித்தனர். அன்றைய தினமே மஹா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.


மூன்று மணி நேரம் ஒரு ஜாமம் எனப்படுகிறது. முதல் ஜாமம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின்றது. மகா சிவராத்திரி அன்று முதலாம் ஜாமம் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் செய்து செம்பட்டாடை அணிவித்து பாலன்னம் நிவேதித்து சந்தனத் தூபமிட்டு விசேட பூஜையாக ஸ்நபனாபிஷேகம் செய்து சிவார்ச்சனையும் வழிபாடும் செய்ய வேண்டும். 

இரவு ஒன்பது மணிக்கு வரும் இரண்டாம் ஜாமப் பூஜையின் போது பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் செய்து மஞ்சள் பட்டாடை அணிவித்து பாயாசான்னம் படைத்து, அகிற் சந்தனக் கந்தத்துடன் நட்சத்திரத் தீபாராதனை செய்து வழிபட வேண்டும். 

மூன்றாம் ஜாமப் பூஜையின் போது பலோதக அபிடேகம் செய்து வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து எள்ளோதன நைவேத்தியத்துடனும் கஸ்தூரி சேர்த்து சந்தனக் கந்தத்துடனும் கருங்குங்கிலியத் தூபமிட்டு ஐந்து முகத் தீபõராதனை செய்ய வேண்டும். நான்காம் ஜாமம் கந்தோதக அபிடேகத்தின் பின் நீலப் பட்டுடுத்தி சுத்தான்னம் படைத்து புனுகு சேர்ந்த சந்தனக் கந்தத்துடன் லவங்கத் தூபமிட்டு வில்வ தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாட்டின் போது உடல் அங்கங்களால் ஆற்ற வேண்டியவற்றை முறை தவறாது செய்து முடித்தாலும் ஆத்மாவின் அங்கமாகிய மனம், காதலாகிக் கசிந்து இனிமையான இறைவனின் நினைவிலே ஊறித் திளைத்திருப்பதே அதி முக்கியமானது, ஏனெனில், அதுவே நமது விரதத்தின் அல்லது பூஜையின் பிரதானமான பலனைப் பெற்றுத் தருவதாகும்
.

பஞ்ச ராத்திரிகள்சிவனுக்குரிய ராத்திரிகள், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். இதற்காகவேஷராத்ரீசூக்தம்என்ற பாராயணம் தனியாக உள்ளது

சிவாலய தரிசனம்: சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து, அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர், சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், தயிர், சந்தனம், பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும். கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.  குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.  


சிவராத்திரியின் போது நவ கைலாயங்களுக்கு சென்று வணங்குவது சிறந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கோடாநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்போரை, ரஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்கள் நவ கைலாயங்களாக விளங்குகின்றன.
நவ கைலாயங்கள் தோன்றியதற்கும் புராண கால வரலாறு உள்ளது. அகஸ்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ஒருமுறை முக்தி பெற வேண்டி பொதிகை மலையில் சிவபெருமானை வணங்கினார்.
இதையறிந்த அகஸ்திய முனிவர் தாமிரபரணி சங்கமிங்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு பின்னர் 9 கோள்கள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக 9 கோள்களின் நிலை அறிய 9 மலர்களை ஆற்றில் விட்டு இந்த மலர்கள் எங்கு ஒதுங்குகிறதோ அங்கு லிங்கம் வைத்து வழிபாடுமாறு உரோமச முனிவருக்கு அருளினார்.
இதையடுத்து உரோமச முனிவர் 9 மலர்களை தாமிரபரணியில் திரண்டு வரும் தண்ணீரில் விட்டார். அதில், முதல் மலர் பாபநாசத்திலும், 2–வது சேரன்மகாதேவியிலும், 3–வது மலர் கோடக நல்லூரிலும், 4–வது மலர் குன்னத்தூரிலும், 5–வது மலர் முறப்பநாட்டிலும், 6–வது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும், 7–வது மலர் தென்திருப்போரையிலும், 8–வது மலர் ராஜபதியிலும், 9–வது மலர் சேர்ந்த பூமங்கலத்திலும் ஒதுங்கின.
இந்த 9 தலங்களிலும் 9 கோள்கள் முறையே பாபநாசத்தில் சூரியன், சேரன்மகாதேவியில் சந்திரன், கோடகநல்லூரில் செவ்வாய், குன்னத்தூரில் ராகு, முறப்ப நாட்டில் குரு, ஸ்ரீவைகுண்டத்தில் சனி, தென்திருப்போரையில் புதன், ராஜபதியில் கேது, சேர்ந்தபூமங்கலத்தில் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தாக்கம் இருப்பதை உரோமச முனிவர் அறிந்தார். இந்த பகுதியில் லிங்கம் வைத்து வழிபாடும்போது ஜீவன் முக்திபேறு கிடைக்கும் என்றும் சிவபெருமான் நற்கருதி அருள்வார் என்றும் அவர் உணர்ந்தார்.
அதன்படி, அமைந்த கோவில்கள்தான் நவ கைலாய கோவில்கள்.
பாபநாசம் (சூரிய தலம்):–
நவ கைலாசத்தின் முதல் தலம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. இது நெல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதரும், அம்பாள் உலக அம்பிகையும் அருள் புரிகின்றனர்.
சேரன்மகாதேவி (சந்திர தலம்):–
இந்த சிவாலாயம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. மூலவர் கைலாசநாதரும் அம்பாள் ஆவடை நாயகியும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
கோடகநல்லூர் (செவ்வாய் தலம்):–
சேரன்மகா தேவியிலிருந்து நெல்லை வரும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்லூருக்கு அருகே உள்ளது. இங்குள்ள மூலவர் கைலாச நாதர் அம்பாள் சிவகாமி.
குன்னத்தூர் (ராகு தலம்):–
நெல்லை டவுணில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு மூலவர் கைலாச நாதரும், அம்பாள் சிவகாமியும், கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
முறப்பநாடு (குரு தலம்):–
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது இந்த தலம். இங்கும் மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி அருள் புரிகின்றனர்.
தென்திருப்பேரை (புதன் தலம்):–
நெல்லை, திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8–வது கி.மீட்டரில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு மூலவர் கைலாச நாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை வீற்றிருக்கின்றனர்.
ராஜபதி (கேது தலம்):–
இந்த தலம் தென் திருப்போரையில் இருந்து 6–வது கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை அருள் புரிகின்னர்.
சேர்ந்தபூமங்கலம் (சுக்கிர தலம்):–
இந்ததலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னைக்காயல் அருகே அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்யா நாயகி. சிவராத்திரி அன்று இந்த நவ கைலாயங்களுக்கு சென்று வணங்கினால் சிவபெருமானின் அருளையும், நவகிரகங்களின் அருளையும் பெறலாம். இதனால் வாழ்வில் செல்வம் பெருகும். நோய் பிணிகள் நீங்கி சுபிட்ச வாழ்வு கிடைக்கும்.


சிவராத்திரி தினத்தில் சிவாய நம என்று ஓதுவோம்! சிவனை மனதினில் நிறுத்துவோம்!

(ஆன்மிக தகவல்களில் இருந்து தொகுப்பு)

  

Wednesday, February 26, 2014

அம்மா தியேட்டர்கள் அவசியமா? கதம்ப சோறு பகுதி 24

கதம்ப சோறு பகுதி 24

அம்மா தியேட்டர்கள்! அவசியமா?


சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தியாவில் வேறேங்கும் இல்லாத திட்டமாக மலிவுக் கட்டண திரையரங்குகளை நிறுவி மாநகராட்சி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்மா வாட்டர், அம்மா உணவகம் போன்றவற்றை அரசு நடத்தி வருகையில் கேளிக்கைகளுக்காக ஒரு தொழிலை அரசு நடத்த வேண்டியது அவசியமில்லை!. மக்களின் அன்றாடத்தேவைகளை கவனிப்பதில் அரசு கவனத்தில் கொள்ளுமானால் பாராட்டலாம். அவனைக் கெடுப்பதில் அக்கறை காட்டுவதாக இந்த அரசுகள் அமைவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. டாஸ்மாக்கில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலாக அரசு ஏற்று நடத்த ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகங்களை பாராட்டலாம். பல ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று அம்மா உணவகங்கள். ஆனால் திரையரங்குகள் அப்படியா? பொழுது போக்கு கேளிக்கை சார்ந்த இந்த திரையரங்குகள் நடத்துவது என்பது அரசுக்கு தேவையில்லாத ஒன்று. இதையெல்லாம் சொன்னாலும் கேட்பதற்கு அம்மா பக்தர்கள் தயாராக இருக்கப்போவதில்லை! இந்த திட்டங்கள் அடுத்த அரசால் கலைக்கப்படும். அல்லது மாற்றப்படும். இதை வேடிக்கைப்பார்த்து அரசியல் பேசி பொழுதை கழித்துக்கொண்டிருப்போம் நாம்.

ஈரோட்டில் உதயமாகும் ஜவுளி வர்த்தக சந்தை!


    ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்கும் பணி நடந்துவருகிறது. 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாரச்சந்தையில் வர்த்தகர்களுக்கு இடம் ஒதுக்கும் பணி துவங்கி உள்ளது. உள்நாட்டு ஜவுளி, கைத்தறி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டத்தில் தமிழகம், மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒருங்கிணைந்த விசைத்தறி பெருங்குழும திட்டத்தை அமல்படுத்த 2009ல் திட்டம் வகுத்தது. இதில் தமிழகத்தில் விசைத்தறி தொழில் மையமாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிச்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்க ஈரோட்டை சேர்ந்த யு.ஆர்.சி புரொமோட்டார்ஸ்,லோட்டஸ் ஏஜென்சி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2011ல் கட்டுமானம் துவங்கியது. டெக்ஸ்வேலி என்ற பெயரில் இந்த சந்தை வடிவமைக்கபட்டுள்ளது.450 கோடி ரூபாய் திட்டமான இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. மொத்தம் 6000 கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 4500 கடைகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை செயல்படத்தொடங்கினால் ஆண்டுக்கு கூடுதலாக 2500கோடி ரூபாய் வர்த்தகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை!

    இந்த மருத்துவமனைக்கும் அம்மா பெயர் வைத்துவிடுவார்கள் என்றுதான் பார்த்தேன். நல்லவேளை வைக்கவில்லை! ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை இடித்துவிட்டு 143 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட  கட்டிடத்தில் 400 படுக்கை வசதிகளுடன் 14 அறுவைசிகிச்சை அரங்குகளுடன் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. மிகவும் நவீன மயமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மனையில் இதயசிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, நரம்பியல், ரத்தநாள அறுவை சிகிச்சை உட்பட ஒன்பது உயர் சிறப்பு பிரிவுகளோடு இன்னும் பல துறைகள் உள்ளன. முதல் கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும் 232 மருத்துவம் சாரா பணியிடங்களும் 20 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் மற்றும் இதர மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்.
எப்படியோ இதுவாவது உருப்படியா செயல்பட்டா சரி!

சில்லரை வழங்கும் இயந்திரம்!

   இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இணைந்து சென்னையில் 30 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவி உள்ளன. சில்லரை தட்டுப்பாட்டை போக்க இந்த இருவங்கிகள் இணைந்து இதை செயல்படுத்தி உள்ளன. இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். 1ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயமாக சில்லரையை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரங்களை பஸ் நிலையம், கோவில், ரயில்நிலையங்களிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்தார்.

குறட்டைக்கு குட்பை சொல்லும் தலையனை!

  தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது பலருக்கு எரிச்சலை மட்டுமல்ல தூக்கத்தை கெடுக்கும் செயலாகவும் அமைந்து விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டை பழக்கத்தால் விவாகரத்து வரை கூட கணவன் மனைவிகள் சென்றுவிடுகின்றனர். சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். குறட்டை விசயத்துக்கு தீர்வு காணும் வகையில்  அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நவீன தலையணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்ட இந்த தலையனை, சென்சார் கருவிகள் மூலம் குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தலையனை பயன்படுத்துவதின் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே தலையணையில் உள்ள வைப்ரேட்டர் உறங்குபவரை எழுப்பி விடுகிறது. இதனால் உறங்குவோர் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக்கொள்வதின் மூலம் குறட்டை ஒலி தவிர்க்கபடும். இதை தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் நாளடைவில் தலையணை இல்லாமலேயே குறட்டை பழக்கம் நின்றுவிடுமாம். இந்த தலையணை விலைதான் வியக்க வைக்கிறது அதிகமில்லை பத்தாயிரம் ரூபாய்தானாம்!.

கசந்து போன காதல்! கொலையில் முடிந்தது!

   டெல்லியில் சிலமாதங்களுக்கு முன் ஆட்டோ டிரைவர்- வெளிநாட்டுப்பெண்மணி காதல் பரபரப்பாக பேசப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த எரின் வில்லிங்கர் ஆட்டோ ஓட்டுனர் பண்ட்டி என்பவரை காதலித்தார். கடந்த அக்டோபரி இருவரும் நீதிமன்றத்தில் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் சில நாட்களிலேயே காதல் கசந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். எரின் குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். இதற்கிடையில் பண்ட்டியின் ஆட்டோவில் எரின் சென்றுள்ளார். அப்போது எரினை கத்தியால் குத்தி கொன்ற பண்ட்டி தானும் வீட்டிற்கு சென்று சமையல் காஸை திறந்து வைத்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். எரின் வைத்திருந்த டாலர்களுக்காகத்தான் பண்ட்டி காதலித்ததாக கூறப்படுகிறது. எரினுக்கு பண்டியை சந்திக்கும் முன் ஆஸ்திரிய இளைஞன் ஒருவனுடன் இருந்த பழக்கமும் பண்ட்டிக்கு தெரிய வந்துள்ளது. இதுவே சண்டைக்கு காரணமாகி கொலையில் முடிந்துள்ளது. நவீன காதல்கள்!

வாட்ஸ் அப்பை வாங்கிய பேஸ்புக்;

    பிரபல வாட்ஸ் அப் மென்பொருள் நிறுவனத்தை பேஸ்புக் சமூக வலைத்தளம் 11லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் வாட்ஸ் அப்  உரிமையாளர் ஜான் கூமை தன்னுடைய இயக்குனர் குழுவில் ஒருவராகவும் நியமித்துள்ளது. இதனிடையே இந்த மென்பொருள் நிறுவன சர்வர் கோளாறினால் கடந்த மூன்று நாட்களாக சேவை முடங்கியது. உலகம் முழுவதும் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் பிரபலமாக உள்ளது. தங்கள் கையில் உள்ள மொபைல் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் குறுஞ்செய்திகள், படங்களை பறிமாறிக்கொள்ள வாட்ஸ் அப் உதவுகிறது. இந்த தொழில் நுட்பத்தால் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான ஜான் கூம் கடந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். சோவியத் யூனியன் உடைந்த பின் உக்ரைனில் இருந்து அமெரிக்காவந்த கூம் ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்பட்டார். பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளை உணவுக்காக செய்த அவர் சிலிகான் வேலியில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பணியில் சேர்ந்து பின் யாஹுவில் பணியாற்றி 2007ல் வெளியேறினார். பின்னர் வாட்ஸ் அப் மென்பொருளை உருவாக்கினார். அது அவரை கோடீஸ்வரராக்கியது. சாதனை மனிதருக்கு வாழ்த்துக்கள்!.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த் துண்டு ஒன்றை நெருக்கிப் போடுங்கள். பருப்பு விரைவில் வெந்து குழைவாக இருக்கும்.

அரிசி நிறம் பழுப்பு நிறமாக இருந்தால் வேகும்போது சிறிது மோரை விட்டால் சாதம் தும்பைப்பூ போல வெண்மையாக இருக்கும்.

கேஸ் லைட்டர் மக்கர் செய்கிறதா? சமைத்து இறக்கிய சூடான குக்கர் மீது லைட்டரை சிறிது நேரம் வைத்து உபயோகித்து பாருங்கள். வேலை செய்யும்.

காண்டாக்ட் லென்ஸ் கீழே விழுந்துவிட்டால் முதலில் அந்த அறையை இருட்டாக்கிவிட்டு பிறகு டார்ச் லைட் அடித்துப் பார்த்தால் லென்ஸ் மினுமினுக்கும். உடனே கண்டுபிடித்துவிடலாம்.

பருத்திப்புடவையில் கஞ்சி மொடமொடப்பு போவதற்கு புடவையை துவைத்தவுடன் காய வைத்து சிறிது ஈரம் உள்ளபோதே இஸ்திரி செய்தால் மொடமொடப்பு இருக்காது.

ஏன்?
  உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி அவர் கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
  கடவுளே… என் மனைவியை ஏன் இத்தனை அழகாய் படைத்தாய்?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது, “அப்போதுதானே நீ  அவளை காதலிப்பாய் மகனே?”
திரும்பவும் இவர் கேட்டார் “ அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய்?”
 “ நீ அவளை காதலிக்கத்தான்”
 “பொறுப்போடு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய்?”
 “அதுவும் நீ அவளை காதலிக்கத்தான் மகனே”
எல்லாம் சரி அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
 லேசான சிரிப்போடு பதில் வந்தது. “அடேய்! அப்பதாண்டா அவ உன்னை காதலிப்பா…!”

(படித்ததில் பிடித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Tuesday, February 25, 2014

உபகாரி!

உபகாரி!

“ஐயோ! என் குழந்தைக்கு ஒடம்பு நெருப்பா சுடுதே!” கையில ஒத்த பைசா இல்லையே! நான் என்ன செய்வேன்! என்ற குரல் சத்தமாக ஒலித்தது. மகாவின் காதிலும் இந்த அழுகுரல் விழுந்தது.
    மகா, அந்தக்குரலைக் கேட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். அவள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்க் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்யும் குடும்பம் ஒன்று அங்கு டெண்ட் அடித்து தங்கியிருந்தது அங்கிருந்துதான் அந்த குரல் கேட்டது.
    மகா பெரிய பரோபகாரி! யார் வீட்டில் எது நடந்தால் என்ன என்றெல்லாம் சும்மா இருக்க மாட்டாள். வலிய சென்று இழுத்துப்போட்டு உதவுவாள். சில சமயம் நல்ல பேர் எடுத்தாலும் பல சமயம் கெட்ட பெயர்தான் பரிசாக கிடைக்கும். இன்றைக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் இளிச்ச வாயர்களாகத்தானே கருதுகிறார்கள். இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மனது மகாவிற்கு. மீண்டும் அந்த டெண்டில் இருந்து அழுகுரல் பலமாக கேட்க அங்கே சென்று பார்க்க முடிவு செய்தாள்.
    அவள் கணவன் குமார் வேறு ஆபிஸில் இருந்து வரும் நேரம். இந்த நேரத்தில் வீட்டை பூட்டிச் சென்றால் கத்துவான். இவள் போல அவனுக்கு இரக்க குணமே கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன? நம் வேலையைப் பார் என்பான். பிச்சைக்காரனுக்கு எட்டணா காசு போடவே யோசிப்பவன். காசு என்ன செடியிலா காய்க்கிறது பறித்து எடுத்துக்கொள்ள? ஒவ்வொரு பைசாவும் உழைத்தால்தான் கிடைக்கிறது அதை எதற்கு வெட்டியாக அடுத்தவனுக்கு கொடுப்பது? என்று கேட்பான்.
   அப்படி மகாவிற்கு நேர் எதிர் கொண்ட குமார் வருவதற்குள் அந்த வீட்டில் என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள முடிவு செய்தாள் மகா. நடையை விரைவாக போட்டு அந்த டெண்டை அடைந்தாள். டெண்ட் என்று சொல்ல முடியாது. ஒரு கிழிந்த தார்பாயை விரித்து கட்டியிருந்தார்கள். ஒரு மண்ணெண்ணை ஸ்டவ் நாலைந்து பாத்திரங்கள் துணி மூட்டைகள் எல்லாம் அந்த நாலு அடி டெண்டில் அடங்கி கிடந்தது.
     ஒரு ஐந்து வயது குழந்தை முணகியபடியே கண் திறக்காமல்படுத்துக்கிடந்தது. அதற்குத்தான் காய்ச்சல் போலும். புதிதாக யாரோ வந்து நின்றவுடன் அழுது கொண்டிருந்த அந்த பெண் நிமிர்ந்தாள். “ நான் மகா! எதிர்த்த வீட்டுல குடியிருக்கேன்! என்ன ஆச்சு?” என்றாள்
   “ அம்மா! பையனுக்கு காய்ச்சல்மா! கண்ணை திறக்கமாட்டேங்கிறான்! நெருப்பா கொதிக்குது! கையில காசு பைசா இல்லை! மேஸ்திரியும் தர மாட்டேங்கிறார். இவரும் ஊருல இல்லை! கொழந்தைக்கு அனலா கொதிக்குது ஜுரம்! பக்கத்துல டாக்டர்கிட்ட காட்டனும்! யாரும் உதவமாட்டேங்கிறாங்க! என்று அழுகையினூடே அவள் சொல்ல இரக்க குணம் கொண்ட மகா அந்த பையனின் நெஞ்சில் கை வைத்து பார்த்தாள். ஜுரம் கடுமையாகத்தான் இருந்தது.
     “ அழாத! அழாதேம்மா! நான் உதவுறேன்!” என்று சொன்னவள் வெடுக்கென தன் கையில் போட்டிருந்த அரைபவுன் மோதிரத்தை கழட்டி அந்த பெண்ணிடம் தந்தாள்.
   “ அம்மா! வேண்டாம்மா! நகையெல்லாம் வேணாம்மா! ஒரு ஐம்பது நூறோ கொடுங்க! பக்கத்து தெரு டாக்டர்கிட்டே காட்டினா சரியா போயிரும்!”
    பயப்படாதே! நகை முக்கியம் இல்லை! புள்ளையோட உசுருதான் முக்கியம்! இப்ப என் கையிலும் பைசா இல்லை! இத வச்சி ஒரு ஆயிரமோ ஐநூறோ வாங்கி பையனை ஆஸ்பத்திரியிலே காட்டு! உன் வீட்டுக்காரர் வந்ததும் மீட்டுக் கொடுத்துடு!
     இல்லே! இல்லேம்மா! என் ஊட்டுக்காரு…
   எனக்கு டைம் ஆகுது! என் வீட்டுக்காரர் வர்ற நேரம்! அப்புறம் பாக்கலாம்! கிளம்பிவிட்டாள் மகா.
   வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து கொடுத்திருக்கலாம்தான்! ஆனால் அவன் கணவன் வந்த பின் திரும்பவும் செல்ல முடியாது. எதற்கு ஏன்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்பான். ஏற்கனவே அவனது வருமானத்தை வீணாக செலவழிக்கிறாள் என்று சொல்லிவருகிறான். இது மாதிரி தெரிந்தால் கொடுக்க விடமாட்டான். அதனால் நகையை கழட்டிக் கொடுத்துவிட்டாள். இவள் வீட்டிற்கு வரவும் குமார் வருவதற்கும் சரியாக இருந்தது.
   “ என்னடி! எங்க போய் சுத்திட்டு வர்ற?”
  ”ஒண்ணுமில்லேங்க! அங்க ஏதோ சத்தம் கேட்டது! அதான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்தேன்!”
   “ ஆமா!  உனக்கு இதே வேலையாப் போச்சு! சரிசரி போய் காபி கொண்டா!”
   காபி எடுத்துவரும் போது கவனித்துவிட்டான். “ ஏய் மகா! கையில மோதிரம் எங்கே?”
   “ விரலிலே ஒரே அரிப்பா இருந்துச்சுங்க! கழட்டி பீரோவில வைச்சிருக்கேன்!”
    ‘எங்க தொலைச்சுட்டியோன்னு பார்த்தேன்!”

அப்பாடா! ஒரு வழியாக இன்று சமாளித்தாகிவிட்டது. அது அவன் முதல் கல்யாண நாளில் ஆசையாக வாங்கி தந்த கிப்ட்! தொலைந்து போனால் ஓவென்று கடித்து குதறிவிடுவான். எப்படியும் இரண்டு நாளில் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் அவளது அம்மா வீட்டில் திடீரென்று அழைக்கவே கிளம்பிச் சென்றவள் மோதிரத்தை மறந்தே போனாள்.
   இரண்டுநாள் கழித்து வந்தவள் எதிரே டெண்ட் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ந்தாள். நெஞ்சு ‘பக்’ கென்று இருந்தது. போச்சு! எல்லாம் போச்சு! அவருக்கு என்ன பதில் சொல்வது? சரி போய் விசாரிப்போம் என்று குமார் அலுவலகம் சென்றதும் அந்த கட்டிடம் கட்டும் பணியாளர்களை விசாரித்தாள்.
  “ ஏம்மா! இங்க டெண்ட் போட்டு ஒரு பொண்ணு இருந்துச்சே! ஒரு அஞ்சு வயசு பையன் கூட உடம்பு சரியில்லாம…”
     “ஆமா! அதுங்க காலி பண்ணி போயிருச்சுங்களே! மேஸ்திரி கொடுக்கிற சம்பளம் பத்தலைன்னு வேற எங்கயோ வேலை பார்த்துட்டாங்களாம்!”
   “ எங்க போயிருக்காங்க தெரியுமா?”
    “எதுக்கும்மா கேக்குற?”
  மகா தயங்கி தயங்கி விவரம் சொன்னாள். அதைக்கேட்ட அங்கிருந்த அந்த மூத்த பெண்மணி, “ விவரம் தெரிஞ்ச காலத்துல இப்படி கூட இருப்பியா? அரைபவுன் மோதிரத்தை கழட்டி கொடுத்திருக்கியே! இப்ப எங்கன்னு போய் தேடுவ?” என்றாள்.
     “ உங்களுக்கு தெரியாதா?”
  “அவ புதுசும்மா! இப்பத்தான் ஒரு வாரம் முன்னாடி விழுப்புரம் பக்கத்தில இருந்து வந்தா!”
      “அவ பேரு!”
 “சர்தான்! பேரு கோடத்தெரியாமத்தான் மோதிரத்தை கழட்டிக்கொடுத்தியா நல்ல பொம்பளம்மா நீ!”
    “இல்லே! பையன் ரொம்ப முடியாம படுத்துக் கிடந்தான்! அவ கதறி அழவும்…”
    “மனசு இரங்கிட்டியாக்கும்!”
மகாவால் ஒன்றும் பேச முடியவில்லை! சரிம்மா! நாங்க விசாரிக்கிறோம்! நாளைக்கு வந்துபாரு என்று முடித்துக் கொண்டார் அந்த மேஸ்திரி.
    குமாருக்கும் விசயம் தெரிந்து விட்டது. அப்பன் குதிருக்குள் இல்லை என்று எத்தனைநாள் மறைக்க முடியும்.
  “ எவ்வளவு தைரியம் இருந்தா நான் கிப்டா கொடுத்த மோதிரத்தை கழட்டிக் கொடுத்திருப்ப!”
    “இல்லைங்க! சட்டுன்னு தோணுத்து! அந்த பையன பாக்க பரிதாபமா இருந்தது. வீட்டுக்கு வந்து பணம் எடுத்துட்டு போக அவகாசம் இல்லை! நீங்க வந்துருவீங்கன்னு…”
      “ஓகோ! உன் உபகாரத்தை நான் கெடுத்துடுவேன்னு! மோதிரத்தை கழட்டிக் கொடுத்திட்டே!”
   மகாவால் பதில் பேச முடியவில்லை!
 “எனக்கு நல்ல மதிப்பு இருக்கு இந்த வீட்டுல! என்ன கர்மம்டா சாமி! ஒரு ஐம்பதோ நூறோ தானம் பண்ணுவாங்க! இவ என்னடான்னா அரைபவுன் மோதிரத்தை தாரை வாக்கிறா! பெரிய கர்ண பரம்பரைன்னு நினைப்பு! இன்னிக்கு என்ன விலை தெரியுமா?”
    “ நாளைக்கு விசாரிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காங்க!”
   “ஆமாம்! இதை நம்பு! அவங்க விசாரிச்சு சொல்லி நீ அட்ரசை கண்டுபிடிச்சு வாங்கிட போறே? அதுங்க நாடோடி கும்பல்! கிடைச்சவரைக்கும் லாபன்னு கிளம்பிட்டுருக்கும்!”
    அவன் சொன்னது உண்மைதான்! அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை! என்று சொல்லிவிட்டார்கள் அந்த கட்டிடத்தில் வேலை செய்பவர்கள்.
 பத்து நாளாக குமார் அவளிடம் முகம் கொடுத்து பேசாதது வேதனையாக இருந்தது. எந்த வேலையும் ஓடவில்லை! அன்று மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வரலாம்! என்று கிளம்பினாள். மார்க்கெட்டினுள் நுழையும் போது எதிரே அவள்! அந்த மோதிரத்தை வாங்கியவள். உடன் அவள் கணவன் போல! கையில் அந்த குழந்தையுடன்.
   மகா சிநேகமாக புன்னகைக்க, அவள் தெரியாதது போல விலகினாள். என்னம்மா! என்னம்மா! கொஞ்சம் நில்லு! இவள் குரல் கொடுக்க அவள் காதில் வாங்காதது போல கூட்டத்தில் மறைந்து விட்டாள்.
    யாரோ செவிட்டில் அறைந்தார்ப்போல இருந்தது மகாவிற்கு. அட என்னமாய் ஏமாற்றிவிட்டாள். என் முகத்தில் ஏமாளி என்று எழுதி ஒட்டியிருக்கிறதோ? அழுகை முட்டிக்கொண்டு வந்தது. காய்கறி கூட வாங்காது வீட்டிற்கு சென்று படுக்கையில் விழுந்து அழுதாள்.
    யாரோ தொடுவது போல இருக்க எழுந்தாள். குமார்தான் நின்றிருந்தான். என்னங்க வந்திட்டீங்களா? என்று அவன் மார்பில் புதைந்து அழுதபடி நடந்ததை கூறினாள்.
   “ சரி! விடும்மா! இதுக்கு போய் ஏன் அழறே!”
   மகா கணவனை ஆச்சர்யமாக பார்த்தாள். “ அவ என்னை ஏமாத்திட்டாங்க!” என்றாள் விம்மியபடி!
   “ ஏன்! நீ ஏமாந்துட்டதா எடுத்துக்கேயேன்!” சரி! ஒரு நல்ல காரியத்துக்கு நீ பணம் கொடுத்ததா நினைச்சுக்க! போனது திரும்பவராது! விட்டுத்தள்ளு!”
   “ உங்களுக்கு எம் மேல கோவம் இல்லையா!”
  “ இப்படி ஏமாளியா இருக்கிறியேன்னுதான் கோவம்!” எல்லாருக்கு உதவி செஞ்சி கெட்ட பேரு வாங்கிட்டு வர்றியேன்னுதான் கஷ்டம்!”
    “ யாராவது கஷ்டபட்டா சகிச்சுக்க முடியலைங்க!”
     “சரி அது உன் குணம்!”   “ஆனா இனிமே கவனமா நடந்துக்க!”
    கணவன் சற்று ஆறுதலாய் நடந்துகொண்டது அவளுக்கு நிம்மதியைத் தந்தது. ஒரு வாரம் ஓடிப்போனது. அன்று கணவனை ஆபிசிற்கு அனுப்பிவிட்டு  டீவி சீரியலில் மும்முரமாய் இருந்த போது காலிங் பெல் அடித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
   எதிரே அவள், மோதிரத்தை ஏமாற்றியவள்! குழந்தையுடன் நின்றிருந்தாள்.
   மகாவிற்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது! “ வாடியம்மா! வா! இப்ப என்ன வேணும் என்றாள் எரிச்சலாக.
    அக்கா!
    ‘ என்னடி அக்கா! நொக்கான்னு உறவு கொண்டாடிக்கிட்டு! அன்னிக்கு கடைத்தெருவுல கூப்பிட கூப்பிட திரும்பிக்கூட பார்க்காம.போனே!”
    அவள் சட்டென்று மகாவின் காலில் விழுந்தாள். அக்கா! என்னை மன்னிருச்சுக்கா! நான் செஞ்சது தப்புத்தான்!  அன்னிக்கு மறுநாள் மோதிரத்தோட உங்க வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. சரின்னு எடுத்திட்டு போயிட்டேன். எங்க வீட்டுக்காரன் ஒரு குடிகாரப்பய! அதுங் கண்ணில பட்டா வித்து குடிச்சுரும்.அதனால திரும்பவும் அடகு கடையிலேயே வைச்சிட்டேன். இத்தனை நாளா இதை மீட்க முடியலை! எல்லா பணத்தையுமே குடிச்சு அழிச்சுருச்சு! அதுக்குத்தெரியாம பணம் சேத்து நான் ஒளிச்சு வைக்க பட்டப்பாடு இருக்கே! அதுவும் இல்லாம யாருகிட்டேயும் எதுவும் வாங்கினா தொலைச்சு போடும்! உங்க கிட்ட மோதிரம் வாங்கியிருக்கேன்னு தெரிஞ்சுதுன்னா கேள்வி கேட்டே கொன்னுபோடும்அன்னிக்கு எங்க ஊட்டுக்காரர் கூட இருந்ததாலே ஒங்களை பார்க்காதமாதிரி போயிட்டேன். என் புருசன் கண்ணுல மண்ணைத்தூவி இந்த மோதிரத்தை  மூட்டுஎடுத்துவர லேட்டாயிருச்சுக்கா! சமயத்துக்கு உதவின தெய்வம் நீ! உன்னைப்போய் பார்க்காத மாதிரி போனது தப்புதான்! என்னை மன்னிச்சிருக்கா! என்றாள் அந்த பெண் மோதிரத்தை நீட்டியபடி!
   என் கண்ணால் நம்ப முடியவில்லை! நல்ல காரியத்திற்கு உதவினால் நல்லதே நடக்கும் என்று அவளுக்கு உரைத்தது.
“ எழுந்திரும்மா! பையன் நல்லா ஆயிட்டானா!” நான் தான் அவசரப்பட்டு தப்பா நினைச்சிட்டேன்! என் தப்புத்தான்! நீ ஏன் காலிலே விழுறே!”  என்று அவளை தூக்கியவள். உள்ளே சென்று சில பழங்களை எடுத்துவந்து உன் பையனுக்கு கொடு என்று கொடுத்து அனுப்பினாள்.
   அன்று இரவு, கணவனிடம் மோதிரம் திரும்ப வந்த கதையை சொன்னபோது, ஊருல உன்னைத்தவிர இன்னொரு ஏமாளியும் இருக்கா போல! என்றான் நக்கலாக.
    “என்னைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்னு ஏன் எடுத்துக்க கூடாது?” என்றாள் மகா!
   “எப்படியோ நான் உழைச்சு உனக்கு போட்ட மோதிரம் கிடைச்சிருச்சு! அதுல எனக்கு மகிழ்ச்சிதான்!” என்றான் குமார் அவளை அணைத்தபடி!
     

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...