விஷமாகும் பிஸ்கெட்டுக்களும்! சிக்கலில் சென்னையும்! கதம்ப சோறு பகுதி 22
கதம்ப சோறு பகுதி 22
கேப்டனை கெஞ்சும் கட்சிகள்!
நாடாளுமன்ற தேர்தல் என்று இன்னும் தேர்தல்
ஆணையம் அறிவிக்கவில்லை! ஆனால் அதற்குள் மோடிதான் பிரதமர் என்று பா.ஜ முதலில்
அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்டது. காங்கிரஸ் ராகுலை முன்னிறுத்தி
பிரசாரத்தில் ஈடுபட, அம்மாவோ நான் தான் அடுத்த பிரதமர் நாற்பதும் நமதே என்று
முழங்கி வருகிறார். தமிழக சட்டசபையின் எதிர்கட்சியாக இருந்தாலும் எதையும் சாதிக்க
முடியாது தன் உறுப்பினர்களையே இழந்து நிற்கும் தேமுதிக கட்சிக்கு இன்னும் மவுசு
போகவில்லை! ஆளாளுக்கு எங்க கூட வாங்க! என்று பேரம் பேசுகிறார்கள். இப்படி ஒரு
ஆஃபர் வரும் என்று கேப்டன் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கலைஞர் இறங்கி
வந்து கூட்டணிக்கு வேண்டுகோள் விட பா.ஜ தமிழருவி மணியன் ஒருபுறம் அழைக்க காங்கிரஸ்
மறுபுரம் அழைக்க வேல்யூ அதிகமாயிருச்சு என்று அதிக சீட் ஆசையில் இருக்கிறார்
கேப்டன். தனித்து நின்றால் ஓட்டுக்களை பிரிக்கலாமே தவிர வெல்ல முடியாத ஓர்
கட்சிக்கு இத்தனை ஆஃபர் வருவது பின்னர் ஆப்பு வைக்கத்தானோ! ஆனால் கேப்டன்
யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்க கொள்கை பிடிப்பு இல்லாதவர் என்று
வசைபாடியுள்ளார் தமிழருவி! இத்தனை நாள் இது இவருக்கு தெரியவில்லையா? சீச்சி! இந்த
பழம் புளிக்கும் என்பதாய் இருக்கிறது இவரது பேச்சு! இறுதியில் கேப்டன் காங்கிரஸ்
பக்கம் கரை ஒதுங்கப்போவதாய் தகவல்கள் கசிகின்றன! இது அவருக்கு ஒத்துக்காது என்றே
தோன்றுகிறது.
ஸ்டாலின் பேட்டி!
தினமலருக்கும் கலைஞருக்கும் ஆகவே ஆகாது.
அங்கே ஏதாவது சின்ன நெருப்பு என்றால் கூட தினமலர் ஊதி பெரிதாக்கிவிடும். இப்போது
அதற்கு திடீரென்று ஸ்டாலின் மேல் கரிசனம் வந்துவிட்டிருக்கிறது. ஸ்டாலின் மேயராக
இருந்த போது கூட அவரிடம் பேட்டி எடுத்தார்களா? என்று தெரியவில்லை! இன்று மோடியை
வாழவைக்க ஓடி ஓடி ஸ்டாலினிடம் பேட்டி எடுத்திருக்கிறது இந்த பத்திரிக்கை! தினமலரின்
25 வருட வாசகனான என்னால் இப்போது தினமலர்
நடுநிலை நாளேடு என்பதை ஏற்க முடியவில்லை! ஆனால் ஒன்று இந்த பேட்டியில் இருந்து
ஸ்டாலின் ஒரு பொறுப்பான தலைவராக உருவெடுத்துள்ளதை அறிய முடிகிறது.
புள்ளிவிபரங்களுடன் மிகத் தெளிவாக அவர் பதில் கொடுத்திருக்கிறார். ஜெ பிரதமர்
ஆனால் இந்தியாவே இருண்டு விடும் என்று சொல்லியிருக்கிறார். சேது சமுத்திர
திட்டத்தின் அவசியத்தையும் மீனவர்கள் தாக்க படுவதையும் ராஜா விவகாரத்தினையும் பற்றி கேள்விகள் வரும் போது சிறப்பாக பதில்
தந்துள்ளார். கண்டிப்பாக அடுத்த முதல்வர் ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக்
கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் ஸ்டாலின்!
சூதாட்டத்தில் குருநாத்!
சிக்கலில் சென்னை கிங்க்ஸ்!
ஐபிஎல் எப்போது ஆரம்பித்ததோ அப்போதே
சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டது. கூடவே சூதாட்டமும் புதியவடிவில் கிளம்பி விட்டது.
சென்ற ஆண்டில் போட்டிகளில் சூதாட்டத்தில் சென்னை அணி ஈடுபட்டது. அதன் உரிமையாளர்
குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பு உள்ளது. என்று நீதிபதிஉ முத்கல் கமிட்டி அறிக்கை
உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
செய்துவிட்டது. இதனால் சென்னை அணியின் உரிமம் ரத்தாகும் நிலையில் உள்ளது. வேலைக்கு
சென்று சம்பாதிப்பதை விட்டுவிட்டு டீவி முன் தவம் கிடக்கின்றனர் கோடிக்கணக்கான
ரசிகர்கள். ஆனால் இதையெல்லாம் மறந்து கோடிகளில் புரள வீரர்களும் உரிமையாளர்களும்
நினைக்கிறார்கள். பணம் விளையாடும் இந்த விளையாட்டை பார்ப்பதை தவிர்த்தால் ஏனைய
விளையாட்டுக்களுக்கு ஊக்கம் கொடுத்தால் இந்திய விளையாட்டுத்துறை எழுச்சி பெறும்.
பொறுப்பில்லாத வெளிநாட்டு
குளிர்பான நிறுவனங்கள்!
உள்நாட்டு குளிர்பானங்களின் உற்பத்தி பெப்சி,
கோக் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்நாட்டு சிறு
குளிர்பானங்கள் காணாமலே போய்விட்டன. பொதுவாகவே செயற்கை பானங்கள் உடலுக்கு கெடுதி
விளைவிக்க கூடியன. இந்த நிலையில் காலாவதியான பானங்கள் விற்கப்படுகின்றன. இதனால்
நுகர்வோர்கள் பாதிப்பு அடைகின்றனர். சேலம் நகரில் இது போல காலாவதியான பழைய
குளிர்பானங்கள் விற்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடலூரில் தந்தை வாங்கி வந்த பெப்சி
குளிர்பானத்தை குடித்த 8வயது சிறுமி அபிராமி மயங்கி விழுந்தது. பின்னர் சிகிச்சை
பலனின்றி இறந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசார் குடோனுக்கு சீல் வைத்து அதே
பேட்ஜில் தயாரான குளிர்பானங்களை பறிமுதல் செய்துள்ளனர். கடை உரிமையாளரையும் கைது
செய்துள்ளனர். முதலாளி எவனோ வெளிநாட்டுக்காரன். அதை இங்கு விற்பவன் எவனோ ஒரு
அப்பாவி! குடும்பம் பிழைக்க பெட்டிக்கடை நடத்துபவன். எய்தவன் இருக்க அம்பை
பிடித்து வைத்துள்ளது போலீஸ்! இந்த குளிர்பான கம்பெனிகள் ஏன் இப்படி அசட்டையாக
உள்ளன. மனித உயிர் அவர்களுக்கு விளையாட்டு பொருளா? புறக்கணியுங்கள் வெளிநாட்டு
குளிர்பானங்களை! அப்போதாவது அவர்களுக்கு புத்தி வரட்டும். சுகாதாரத்துறை
அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்! கையூட்டு வாங்கி அனுமதி கொடுத்தார்களா?
என்று தெரியவில்லை!
பிஸ்கெட்டுகள் விஷமா?
பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும்
பிஸ்கெட்டுக்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனக் கலவைகள் அதிகம்
சேர்க்கப்பட்டிருப்பதும் பேக்கரிகளில் ரசாயனக் கலவைகள் குறைவாக இருப்பதும்
தெரியவந்துள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ளபடி பிஸ்கெட்டுக்கள்
தரமாக உள்ளதா? என்று கான்சர்ட் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. தமிழ்நாடு,
ஆந்திரம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏழுமாதங்களாக 20க்கும்
மேற்பட்ட நிறுவனங்களின் பிஸ்கெட்டுக்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் கான்சர்ட் நிறுவன
இயக்குனர் ஜி, சந்தனராஜன் கூறியது, கோதுமை
மாவு, மைதாமாவு, சர்க்கரை,வனஸ்பதி, உணவு எண்ணெய், போன்ற முக்கிய பொருள்களைக் கொண்டு பிஸ்கெட்டுக்கள்
தயாரிக்கப்படுகின்றன. நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கெட்டுக்கள் பலமாதங்கள்
கெட்டுப்போகாமல் இருக்கும். இவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனக் கலவைகள்
அதிகம் சேர்க்கப்படுகின்றன. ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுக்கள்
15 முதல் 20 நாட்களில் கெட்டுப்போகக் கூடியவை. இதில் ரசாயனக் கலவை குறைவாக உள்ளது.
விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை ஏமாற்றுகின்றன பிஸ்கெட் நிறுவனங்கள். புகையிலையால்
புற்று நோய் வருவதாக சொல்கின்றனர். நாம் உண்ணும் உணவுப் பொருட்களால் 30%
புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று சந்தனராஜன் கூறினார்.
எப்படியோ சாகடிக்காம விடமாட்டாங்க போல!
ரூ 1க்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் விற்கும் கிராமம்!
தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி மாவட்டம்
புள்ளம்பாடியில் ஒரு ரூபாய்க்கு ஐந்து லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்க காரணமாக இருந்தவர் காங்கிரஸ் பிரமுகர்
ஜெயப்பிரகாஷ். 2012ல் கர்நாடகா சென்ற இவர் அங்கு சில கிராமங்களில் பெரிய
நிறுவனங்கள் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதைக் கண்டு
வியந்தார். நமது ஊரிலும் செயல் படுத்தலாமே என்ற யோசனை வந்தது. 2012 ல்
புள்ளம்பாடியில் மர்மக் காய்ச்சல் பரவியது. இதற்கு குடிநீர்தான் காரணம் என
மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதுதான் இந்த திட்டத்தை துவக்க வேண்டும்
என்ற எண்ணம் உருவானது. உடனே கர்நாடக மாநில உள்ளாட்சித்துறை அமைச்சரை அணுகி அங்கு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எப்படி வழங்கப்படுகிறது என்று அறிந்து கொண்டேன்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிதி உதவியாக பத்துலட்சம் வழங்கியது. இந்த
நிறுவனத்துடன் இணைந்து புள்ளம்பாடி பேரூராட்சி பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்
கொண்டது. கண்காணிப்பு பணியை கார்டு தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டது. திருச்சி
மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு
இரண்டுலட்சம் லிட்டர் தண்ணீர்
சுத்திகரிக்கப்படுகிறது. தற்போது ஒரு ரூபாய்க்கு 5லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்கப்படுகிறது. ஒருரூபாய்க் காசை இயந்திரத்தில் போட்டால் குழாய் மூலம்
நீர் வரும். இது புள்ளம்பாடி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இரண்டு லட்டுதான் இனி! ஆனா
குழந்தைகளுக்கு பால் இலவசம்!
திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசித்து
திரும்பும் பக்தர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் லட்டுக்கள் எண்ணிக்கையை
நான்கிலிருந்து இரண்டாக குறைத்துவிட்டது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, நெய்
கொள்முதலில் பற்றாக்குறை, லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை, இடம்போதாமை,
இலவச லட்டு ஆகியவற்றின் காரணமாக கூடுதல் லட்டு எண்ணிக்கையை தேவஸ்தானம்
குறைத்துவிட்டது. தினமும் 3லட்சம் லட்டுக்கள் திருப்பதியில் தயார்
செய்யப்படுகிறது. இதில் பக்தர்களுக்கு இரண்டு லட்டு வீதம் எழுபதாயிரம் பேருக்கு
1.40 லட்சம் லட்டுக்களும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 ஆயிரம் லட்டும்
வழங்கப்படுகிறது. மீதம் இருக்கும் லட்டுக்கள் பக்தர்கள் எண்ணிக்கையை விட குறைவாக
இருப்பதால் இந்த குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னதான் குறைத்தாலும்
பக்தர்கள் கூட்டம் குறைவது இல்லை! லட்டுக்களும் முன்பு போல தரமாக இல்லை! ரெண்டொரு
நாளில் கெட்டுவிடுகிறது. முந்திரி தென்படுவதே இல்லை!
அதே சமயம் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த
வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தைகளுக்கு
24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல் படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த
ஸ்ரீநிவாஸ் என்பவர் வேண்டுகோள் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்று இந்த சேவையை
அமல்படுத்தியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஸ்ரீநிவாஸ் மூலமாக சீனிவாசன்
அருள் குழந்தைகளுக்கு கிடைத்திருக்கிறது போலும்!
சென்னையில்தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூல் என்று
அழைக்கப்படும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் மூலம் இயங்கும் தன்னாட்சி நிறுவனம். பள்ளிசென்று படிக்க முடியாதவர்கள்,
படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், இங்கு சேர்ந்து பத்தாம்வகுப்பு, 12ம்வகுப்பு
தேர்வு எழுதலாம். தமிழக அரசு தேர்வுத்துறையில் இதுபோல தனியாக சேர்ந்து தேர்வு
எழுதலாம் என்ற போதிலும் இந்த திறந்தவெளி கல்வி மையத்தில் மாணவர்கள் தங்களுக்கு
விருப்பமான பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஏப்ரல்-மே, அக்டோபர்-நவம்பரில்
ஆண்டுக்கு இருமுறை இதன் தேர்வுகள் நடக்கும். நாடு முழுவதும் 19 மையங்கள் இந்த
அமைப்பில் உள்ளன. தமிழகத்தில் இந்த மையம் இதுவரை இல்லாததால் கொச்சி மண்டலத்தில்
சேர்ந்து படித்து வந்தனர். இந்த நிலையில் இந்த மையம் சென்னையில் மெரினா கடற்கரை
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்வழிக்கான பாடதிட்டம்
தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் மாதம் இது நிறைவு பெறும். அதன் பின்னர்
மாணவர்கள் தமிழ்வழியிலும் தேர்வெழுதலாம் என்றார் சென்னைமண்டல இயக்குனர் ரவி.
கமிஷனரிடம் புகாருக்கு நோ!
பிரபலங்கள் பலர் தாங்கள் பாதிக்கப்பட்டால்
நேரடியாக கமிஷனரை பார்த்து முறையிட்டு அங்கு குவியும் பத்திரிக்கையாளர்களிடம்
பேட்டி கொடுத்து அட்ராசிட்டி செய்வார்கள். இவர்களை கண்டித்த நீதிமன்றம் இனி
அந்ததந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரே அவர்கள் விசாரிக்க மறுத்தால்
மட்டுமே கமிஷனரை அணுக வேண்டும் என்று சொல்லியுள்ளது. புகாரை கொடுத்து விட்டு
நிருபர்களை சந்தித்து பேட்டிக் கொடுப்பதையும் விளம்பரம் தேடிக்கொள்வதையும்
நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. இதனால் விளம்பரம் கிடைக்குமே அன்றி நீதி
கிடைக்காது என்று சொல்லிய உயர்நீதிமன்றம் முதலில் புகாரை சம்பந்தப்பட்ட காவல்
நிலைய அதிகாரியிடம் காலதாமதமின்றி தரவேண்டும். முறையான நடவடிக்கை இல்லை என்றால்
உயர் போலீஸ் அதிகாரியை அணுகலாம் என்றும் சொல்லியுள்ளது. இதே போல ஆபாசம் குறித்து
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் பாராட்டக்கூடிய ஒன்று. இன்னொரு தீர்ப்பு
வயது வந்த ஒருவர் பாலியல் உறவுக்கு ஒப்புக்கொண்டு பின்னர் கருத்து வேறுபாடினால்
கற்பழிப்பு வழக்கு தொடுப்பதையும் சாடியுள்ளது. சபாஷ் போட வேண்டிய தீர்ப்புக்கள்
இது!
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க
வைத்து துளசி இலை 4 புதினா இலை 4 வேப்பிலை 4 போட்டு மூடிவைத்துவிடவும். மிதமான
சூட்டில் வாய் கொப்புளித்தால் வாய் துர்நாற்றம் அடங்கும். வாய் சுத்தமாகும். இதை
குடித்தால் வயிறும் சுத்தமாகும். பெரும்பான்மையான வாய்துர்நாற்றம் வயிறு
கெட்டிருப்பதால் வருகிறது.
வெந்தயத்தை நிழலில் உலர்த்தி பொடி
செய்து இஞ்சிச்சாறுடன் மோரில் கலந்து குடிக்க உடல் புத்துணர்ச்சி பெறும்.
குழந்தைகளுக்கு ஷூ லேஸ்
கட்டிவிட்டால் சீக்கிரம் அவிழ்ந்து தளர்ந்து போகிறதா? லேஸைக் கட்டியதும்
முடிச்சின் மீது சிறு துளி தண்ணீர் தெளித்து டைட் செய்து விடுங்கள். எளிதில்
அவிழாது.
பள்ளிக்குச் செல்லும் சிறு
குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் தோசை சப்பாத்தியை துண்டுகளாக பிய்த்துப் போட்டு
கொடுத்தால் எளிதாக சாப்பிட உதவியாக இருக்கும்.
பால் காய்ச்சிய பிறகு பால்
ஏடு நிறைய கிடைக்க வேண்டுமா? பால் பாத்திரத்தை சல்லடைத் தட்டுக் கொண்டு மூடினால்
பாலில் ஏடு நன்றாகப் படியும்
நான் இருக்க மாட்டேனே!
ஓரிடத்தில் ஒரு இந்தியர், ரஷ்யர், ஒர்
அமெரிக்கர் மூவரும் கூடி இறைவனை பிரார்த்தித்தனர். கடவுள் அவர்கள் முன்
தோன்றினார். ரஷ்யர் “ ரஷ்யா எப்போது முன்னேறும்?” என்று கேட்டார். இன்னும் 50
ஆண்டு ஆகும் என்றார் கடவுள். ‘அதைப்பார்க்க நான் இருக்க மாட்டேனே என்று கூறி
அழுதார் ரஷ்யர்.
அடுத்து அமெரிக்கரும் அவ்வாறே கேட்டார்.
அதற்கும் கடவுள் 50 ஆண்டு ஆகும் என்று சொல்லிவிட்டார். அமெரிக்கரும் அழுதுகொண்டே
அவ்வளவுகாலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே! என்றார்.
கடைசியாக இந்தியர், எங்கள் இந்தியா எப்போது
முன்னேறும்? என்று கேட்டதுதான் தாமதம், கடவுள் அழ ஆரம்பித்துவிட்டார்.
என்ன? என்ன என்று எல்லோரும்
பதறிப்போய் விசாரிக்க கடவுள் அழுதுகொண்டே சொன்னார் “ அதைப்பார்க்க நான் இருக்க
மாட்டேனே!...
(படித்ததில் பிடித்தது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
டிப்ஸ் அனைத்தும் அருமை.
ReplyDeleteபடித்ததில் பிடித்தது, கடவுளுக்கே இந்த நிலமையா? கஷ்டம்டா சாமி!!!
நன்றி சொக்கன்! தொடர் வருகைக்கும்! ஊக்கப்படுத்தும் கமெண்டுக்கும்!
Deleteகுடிநீர் விற்கும் கிராமம் பற்றிய தகவல் + டிப்ஸ்களுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅனைத்து தகவல்களும் அருமைங்க!
ReplyDeleteமுதல்ல யாரோ ஒருத்தர் வந்த்துட்டு போகட்டும்...ஏன்னு கேக்கரீங்களா...யாரு வந்தாலும்....கடைசில கடவுளே அழுதுடாரே இந்தியா முன்ன்றும் நாள் வரை தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று....அந்த ஜொக் அருமை!!!1...உண்மை....அதனால் சிரிப்பு வந்தாலும் கசக்கவும் செய்கிறது...அதங்க நம்ம நாடு உருபடுமா என்று...
அந்த விஷ பிஸ்கெட்டுகள், காலாவதியான குளிர்பானங்கள்......சீக்கிரமே இந்தியாவ ஆளில்லா நாடாக ஆக்கிடுவாங்க போல.....அப்படின்னா கடவுள் கூட அழ வேண்டாமே....நாடு நல்லாருக்குனு சந்தோஷப் படலாமே! அதான் அரசியல் வாதிங்களும் இருக்க மாட்டாங்களே!
கைமருந்து டிப்ஸ் நல்லாருக்குங்க!
வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
முதல் வருகைக்கு நன்றி நண்பரே! அடிக்கடி வாருங்கள்! ஊக்கமூட்டும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
Deleteஎழுத்தாளர் சார்,
ReplyDeleteசார் என்னா ஸ்பீடு சார். ஹைகூ கமெண்டுக்கு என்னா பதில்னு பார்க சொல்ல இங்க வந்தாஅதுக்குள்ளாற புதுசு பதிவா....
உங்களுக்காகவே எழுதினாப்லே இருக்குது இந்த எதிர்நீச்சல் பாடல்
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போங்க நீங்க
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாங்க நீங்க
அன்புடன்
கதிர்முருகன்
ஸ்பீடு எல்லாம் ஒன்றும் இல்லை கதிர்! தினம் ஒரு பதிவு என்பது என் சங்கல்பம்! கடவுள் அருளால் நிறைவேறுகிறது! அவ்வளவுதான்! நன்றி!
Deleteகுடிநீர் விற்கும் கிராமம் பற்றிய தகவல் + டிப்ஸ்கள் அருமை
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஒரு ருபாய் குடிநீர் கிராமம் பாராட்டவேண்டிய விஷயம்
ReplyDeleteso இனி கண்ணா ரெண்டு லட்டு தானா ?
டிப்ஸ் சூப்பர் சார் !!
ஜோக்கு நல்லாயிருக்கு ஆனால் இந்தியாவை நினைச்ச :((
கதம்ப சோறு - படித்தேன். ரசித்தேன்.
ReplyDeleteவிஷமாகும் பிஸ்கெட், மற்றும் குளிர்பானம் - :((((