உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 41

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 41


அன்பர்களே!
இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர். வலைச்சரத்தில் நன்பர் மணிமாறனும் இந்த பகுதியை பகிர்ந்துகொண்டுள்ளார். கூகுள் பிளஸ் மற்றும் முகநூலிலும் சில பகிர்வுகளை இந்தப்பகுதி பெற்றது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். வாசக நண்பர்களுக்கு மிக்க நன்றி!


    சென்ற வாரம் தொழிற்பெயர் வகைகளை பார்த்தோம். அவை எப்படி வரும் என்று அறிந்தோம். இந்த வாரம் அந்தவகையில் வினையாலணையும் பெயரை பார்க்க உள்ளோம். அது என்ன வினையாலணையும் பெயர்.
   ஒரு வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினை செய்தவரை குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இந்த வினையாலணையும் பெயர் வினைக்குரிய காலத்தை காட்டும் பெயர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்றுவரும். அது என்ன வேற்றுமை உருபுகள் என்று கேட்கிறீர்களா?
   வேற்றுமை உருபுகள் என்பது, ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை  ஆகும். இதைப்பற்றி பிறகு விரிவாக பார்ப்போம்.
    கமலஹாசன் பத்மவிபூசன் பட்டம் பெற்றார்.
    பட்டம் பெற்றவரை பாராட்டினர்.
இந்த இரு தொடர்களிலும்  பெற்றார்என்ற வினைச்சொல் வந்துள்ளது. முதல் தொடரில்  பெற்றார் என்பது  கமலஹாசன்என்ற எழுவாய்க்கு பயனிலையாக வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள  பெற்றவரை என்னும் சொல்  கமலஹாசனை குறிக்கும் பெயராக வந்துள்ளது.

இதில்  பெற்றார் என்பது வினை முற்று. இது வினையான பட்டம் என்பதை குறிக்காமல் வினை செய்தவரை( கமலஹாசன்) குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும்.

இந்த வினையாலணையும் பெயர் வினைக்குரிய காலத்தை காட்டும்.
    பெற்றானை -  இறந்தகாலம்
    பெறுகின்றானை-  நிகழ்காலம்
   பெறுவானை  - எதிர்காலம்.
  பெற்றான்+ ஐ  =  பெற்றானை
இதில் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளதை காணலாம்.

இவ்வாறு வினையாலணையும் பெயர் தொழில் செய்பவருக்கு பெயராக வரும்.
தன்மை, முன்னிலை படர்க்கை என மூன்று இடங்களிலும் வரும்.
நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என மூன்றையும் காட்டும்.
 தேன்மொழி நன்கு பாடினாள், பாடியவளை பாராட்டினர்.
இதில் பாடுதல் என்பது தொழிற்பெயர், பாடினாள் என்பது வினை முற்று, பாடியவள் என்பது வினையாலணையும் பெயர் ஆகும்

நேற்று வந்தவன் இன்றும் வந்தான். இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர்.
வருதல் ஆகிய வினையைச் செய்தவன் எனக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர்.
வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.

பொதுவாக ஒரு வாக்கியம், அவர், அவன், அனன் என முடிந்தால் அது வினையாலணையும் பெயர் என முடிவு செய்யலாம்.
       எ,கா)  வந்தவர், வந்தவன், வந்தனன்
                      படித்தவர், படித்தவன், படித்தனன்,
                       பாடியவர், பாடியவன், பாடினன்.

இலக்கணம் ஓரளவு புரிந்ததா? போட்டித்தேர்வுகளுக்கான தமிழ் தேர்வுகளுக்கு இந்த இலக்கணம் ஓரளவு உதவும்.முயற்சியும் பயிற்சியும் செய்து பழகுக!

இலக்கியசுவை!

அகநானூறு அகத்திணைக்குரிய நானூறுபாடல்களை கொண்டது. தமிழரின் காதல் வாழ்வை இதில் படிக்கலாம். அதில் கபிலர் பாடிய ஒரு செய்யுளை இப்போது படிக்க உள்ளோம். குறிஞ்சிக்கொரு கபிலர் என்று புகழ்வர். குறிஞ்சி நிலச்சிறப்பை எவ்வளவு அழகாக கவி வடித்துள்ளா கபிலர் படித்து மகிழுங்கள்.

  யாயே, கண்ணினும் கடுங் காதலளே
  எந்தையும் நிலன் உறப் பொறாஅன்; ‘சீறடி சிவப்ப
  எவன், இல! குறுமகள்! இயங்குதி?’ என்னும்
  யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
  இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே

  ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
  கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை
  விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்
  குறவர் ஊன்றிய குரம்பை புதைய
  வேங்கை தா அய தேம் பாய் தோற்றம்.

  புலி செத்து, வெரிஇய புகர்முக வேழம்
  மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
  நல் வரை நாட! நீ வரின்
  மெல்லியல் ஓரும் தான் வாழலளே!


காதலியை மணந்து கொள்கிறேன் என்று சொல்லி தினமும் பகலில் வந்து சந்தித்து கொண்டிருக்கிறான் காதலன். ஆனால் மணந்துகொள்ளவில்லை! அவளது தோழி பகலில் இனி வராதே! தோழியின் பெயர் கெடுகிறது என்று சொல்ல அப்படியானால் இரவில் யாரும் அறியாது வருகிறேன் என்கிறான். அதையும் மறுத்து இனி நீ வருவதானால்  தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்று தோழி சொல்கிறாள்.
எம்முடைய தாய் இவளை தன் கண்ணைவிட பெரிதாக பாதுகாப்பவள். எம்முடைய தந்தையும் இவளின் பாதங்கள் நிலத்தில் பதிவதை பொறுக்காமல் ஏனிப்படி பாதங்கள் சிவக்கும் படி நடந்து திரிகிறாய்? என்று கோபித்துக்கொள்வார். நாங்களோ இரு தலையும் ஒர் உயிரும் கொண்ட ஒரு பறவையைப் போன்றவர்கள். ஈரூடல் ஓருயிராய் உள்ளோம்.
   தினைப்புனம் காக்கும் அழகிய மகளிர் குரல் கிளியினுடைய குரலாய் அமைந்ததால் தன் இனத்தவர் என்று கிளிகள் அங்கே இரை உண்ண அழைக்கும்.அணில்கள் ஆடி விளையாடும் பெரிய பலாக்காய்களை உடைய பலா மரங்களை உடைய இப்பூமியில் பலாப்பழங்களை காக்க குறவர்கள் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். அப்படி அவர்கள் அமைத்த குடிசையின் மீது வேங்கை மரத்தினுடைய மலர்கள் நிறைந்து குடிசையை மறைத்துள்ளது. அந்த தோற்றம் புலி ஒன்று படுத்திருப்பது போன்றது. இதைக் கண்டு யானைகள் அஞ்சி பிளிறிபடி ஓடியது. யானை அஞ்சி ஓடியபோது மேகங்களை முட்டிக்கொண்டு நிற்கும் உயர்ந்த மூங்கில்கள் முறிந்து விழுகின்றது. இத்தகைய வளம் வாய்ந்த மலை நாட்டை உடையவனே!
   விரைவில் நீ அவளை மணந்து கொள்! பகலில் வாராது இரவில் வருவதால் உனக்கு துன்பம் ஏற்படும் என்று அவளும் துன்புறுவாள். உங்களிருவருக்கும் உயிர் ஒன்றே யாதலால் அவள் உனக்கு துன்பம் நேர்ந்தால் உயிர்வாழமாட்டாள். உடனே அவளை மணந்துகொள். என்கிறாள் தோழி.
  இதில் உள்ளுறை உவமம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

அஞ்சத்தகாத குடிசையை புலி என்று எண்ணி யானை அஞ்சி ஓடி தனக்கு உணவான மூங்கில்கள் முறிய ஓடியது போல அஞ்சத்தகாத தலைவியின் உறவினர்களை அஞ்சி, தலைவியை மணந்துகொள்ளாது இப்படி திரிவது  நாங்களும் இறந்து விடும்படி ஆகும் என்பது உள்ளுறை.

கபிலர் கூறும் மலைவளத்தை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் இன்னுமொரு பாடலுடம் சந்திக்கிறேன்! நன்றி!

தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்து உற்சாகமூட்டுங்கள்! இது இந்த பகுதி மேலும் சிறக்க உதவும்! நன்றி!


Comments

 1. இலக்கியச் சுவை மிக அருமை.
  ஒரு சின்ன வேண்டுகோள்.
  மொத்தப்பாடலின் பொழிப்புரையையும் கடைசியாக சொல்லாமல், வரிக்கு வரி சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு பாட்டியின் பொருளை சொன்னாலும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. செய்யுளின் விளக்கம் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நாளை முதல் - வலைச்சர ஆசிரியர் பணி ஏற்க வரும்
  தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 4. இலக்கணமும் இலக்கியமும் இணைந்து சுவை தந்தன.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரியர் பணி ஏற்க வரும்
  தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 6. வலைச்சரத்தில் வாரம் முழுதும் சிறப்பான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

  சுவையான பகிர்வு!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2