திருக்கள்ளில் தெப்பத்திருவிழா!

 திருக்கள்ளில் தெப்பத்திருவிழா!

முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 


திருக்கள்ளில் என்ற ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் சென்னைக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்சமயம் திருக்கண்டலம் என்று வழங்கப்படும் இந்த தலம் சென்னை- பெரியபாளையம் செல்லும் வழியில் உள்ள கன்னிகைப்பேர் பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கள்ளில் பெயர்க்காரணம்
   கள் என்ற சொல் தேனென்ற பொருளிலும்  இனிமையைக் குறித்து நிற்க, ‘இல்’ என்ற சொல் இருப்பிடங்கொள் என்ற பொருளில் இசைந்து  இனிய இருப்பிடமாக ஆன்மாக்களின் முக்திக்கனி இருப்பிடமாக விளங்குகிறது என்பது தத்துவமாம். ஞானசம்பந்த பிள்ளையார் பதிகம் பெற்ற இத்தலத்தில் சங்க காலத்தில் கள்ளில் ஆத்திரையர் என்ற புலவரும் வாழ்ந்துள்ளார் என்பது இத்தலத்தின் பழமையை உணர்த்தும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம்.

     பழமையான ஆலயங்களின் சிறப்புக்களை கூறும்போது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சொல்லுவார்கள்.  இத்தலத்தின் மூர்த்தி சிவானந்தேஸ்வரர் அம்பிகை ஆனந்தவல்லி அம்மையப்பர் இடையே பாலசுப்ரமண்யர் எழுந்தருளி உள்ளார். இது சோமாஸ்கந்த வடிவம் ஆகும்.
தலத்தின் சிறப்பை பார்த்தோம் எனில் திருக்கள்ளில் என்று வெகு வெகு பழமை பெயரை தாங்கி வருகிறது. தீர்த்தம் என்ற சொல்லுக்கு புனிதப்படுத்துவது என்று பொருள். தீர்த்தமில்லாது தலமில்லை. அவ்வளவு சிறப்பு. அப்பர் பெருமான், ‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்று பரவசப்படுகின்றார். இந்த திருக்கள்ளில் தலத்தின் தீர்த்தம் நந்தி தீர்த்தம் ஆகும். ஆலயத்தின் எதிரே அழகுற அமைந்துள்ளது இந்த நந்தி தீர்த்த குளம்.

தலவிருட்சம்:
   ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு தல விருட்சம் உண்டு. இந்த தளத்தின் விருட்சம் “கள்ளி” செடியாகும். கப்பலலரி என்று தற்காலத்தில் வழங்கப்படுகிறது. இந்த மரத்தினடியில் ஈசன் எழுந்தருளியுள்ள படியால் திருக்கள்ளில் நாதர் என்றும் வழங்கப்படுகிறார். பிருகு முனிவர் இந்த ஈசனை கள்ளி மலரால் வழிபட்டு பேறு பெற்றதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

திருக்கள்ளில் பெயர் காரணம்:

    சம்பந்தர் பெருமான் பல தலங்களை தரிசித்து இந்த வழியாக திரும்பும் சமயம் இங்கு ஓடிக்கொண்டிருந்த குஸஸ்தலை நதியில் நீராடி எழுந்தார். பின்னர் சிவபூஜை செய்ய தன்னுடைய சிவ பூஜை பெட்டியைத் தேடினார். காணவில்லை! அவர் உள்ளம் பதறியது. தினமும் தவறாது பூஜை செய்யும் இறைவனை தொலைத்து விட்டேனே என்று வருந்தினார். தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அசரிரீ ஒன்று, ஞானசம்பந்தா! இங்கு நான் கள்ளில் புதருக்குள் இருக்கிறேன்! என்னை பாடாமல் செல்வாயோ? என்று கேட்டது.

    ஆற்றை சுற்றி பரவிக்கிடந்த கள்ளில் புதர்களில் தேட அங்கே ஈசன் லிங்க சொரூபமாய் காட்சி தந்தார். அவருடைய பூஜைப்பெட்டியும் கிடைத்தது. பின்னர் சம்பந்தர் திருக்கள்ளில் ஈசனைக் குறித்து 11 பாடல்கள் பாடியருளினார்.

இத்திருக்கோயிலில் சோழர், பாண்டியர், விசயநகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. அவற்றில் கோயிலுக்கு வழங்கப்பட்ட இறையிலி, நிவந்தம், வரிவிலக்கு, விளக்கேற்றுதல் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.


இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது, பிரதோஷம், நவராத்திரி, பவுர்ணமி, போன்ற தினங்களில் விசேஷ வழிபாடு நடக்கிறது. இத்திருக்கோயிலின் குருக்கள் வெங்கல், சி. ஆறுமுக குருக்கள் பரம்பரையாக பூஜை செய்து வரும் இவரின் வயது 104. இவரின் அரிய முயற்சியால் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2012ல் குடமுழுக்கு நடந்தேறியது.
 இந்த திருத்தலத்தில் 8வது ஆண்டாக மாசி மகத் தெப்பத்திருவிழா 13-02-2014 முதல் 15-02-2014 வரை மாலை 6.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

முதல் நாள் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் தெப்பத்தில் எழுந்தருள்வர்.
இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை சுக்ர வள்ளி என்னும் ஆனந்தவல்லி அம்பிகை தெப்பத்தில் எழுந்தருள்வார்.
மூன்றாம் நாள் சனிக்கிழமை அன்று மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சோமாஸ்கந்தர் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருள்வர்.
  இந்த நிகழ்ச்சியில் இந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களும் வெளியூர் அன்பர்களும் திரளாக வந்து கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

மேலும் விபரங்களுக்கு  வெ.சி. ஆறுமுக குருக்கள் (ஸ்தானிகர்)
    செல்  9444754046.

திருஞானசம்பந்தர் மட்டுமில்லாமல் அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார் போன்றோரும் இத்தலத்து இறைவனை வணங்கி பாடியுள்ளனர்.

விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 

    சிறப்பு மிக்க திருக்கள்ளில் செல்வோம்! இறைவனருள் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. இதுவரை சென்றதில்லை... கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
 2. கோவிலின் சிறப்புகளையும், வரலாற்றையும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

  ReplyDelete
 3. சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் மிக நன்று....

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!