சிவாய நம என்று ஓதுவோம்!

சிவாய நம என்று ஓதுவோம்!


பிறப்புக்களிலே சிறந்த படைப்பாக கூறப்படுகிறது இந்த மானுடப்பிறவி. மற்ற எல்லாப் பிறப்புக்களில் உயர்ந்ததாக கூறப்பட்டாலும் இந்தப் பிறப்பில் மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை விட துன்பங்கள் ஏராளம். பொய், பொறாமை, சூது, வஞ்சகம் என்று எத்தனையோ தீவினைகள். இந்த தீவினைகள் அகலவும் நன்மைகள் நம்மை வந்து அடையவும் முன்னோர்கள் வகுத்ததே விரதங்கள் வழிபாடுகள். அத்தகைய வழிபாடுகளில் மனம் லயித்து ஈடுபடும் போது நம்முடைய துன்பங்கள் கரைந்து போகின்றது.
    மாசி மாதம் இறைவழிபாட்டிற்கு உகந்ததாக குறிப்பிடப்பட்டாலும் வீட்டில் சுபகாரியங்களுக்கு அவ்வளவு உகந்ததாக கூறப்படுவது இல்லை. அதிலும் புதுமனை புகுதல் போன்றவற்றிற்கு உகந்தவை அல்ல என்று கூறப்படுகிறது. இந்த மாசி மாதத்தில்தான் சிவன் விஷம் உட்கொண்டார். திருநீலகண்டன் ஆனார். ஆதலால் இந்த மாதம் புதுமனை புகுவிழா செய்வது உசிதமல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    அதே சமயம் இந்த மாதம் சிவன் விஷம் உண்ட நாளான சிவராத்திரியன்று விரதம் இருந்து ஈசனை துதித்து வழிபாடு செய்தால் நன்மைகள் ஏராளம் என்று புராணங்கள் கூறுகின்றன.
   சிவன் எப்போது விஷம் உண்டார்? முன்பொரு சமயம் அமிர்தம் பெறுவதற்கு வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து மகாலஷ்மி, ஐராவதம், பாரிஜாதமரம், போன்றவை முதலில் வந்தன.  வாசுகிப்பாம்பானது வலி தாங்க முடியாமல் கடுமையான விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் கொடுமை தாள முடியாமல் தேவர்களும் அசுரர்களும் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தேவர்கள் பரமேஸ்வரரிடம் வந்து வேண்டினர். அவரும் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை கொண்டு வருமாறு கட்டளை இட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அந்த விஷத்தை ஒரு நாவற்கனி வடிவில் திரட்டி எடுத்து வந்து பரமேஸ்வரரிடம் கொடுத்தார். அதை சிவன் உட்கொண்டார். அருகில் இருந்த பார்வதி திகைத்துப் போய் விஷம் உடலில் பரவா வண்ணம் நெஞ்சுக்குழியினை பிடித்து நிறுத்தினார். விஷம் நெஞ்சோடு நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்கள், ஆலால கண்டா! அற்புத சுந்தரா! என்று போற்றி வழிபட்டனர். அன்று இரவு முழுவதும் சிவன் தூங்காமல் களிநடனம் புரிந்தார். தேவர்களும் விழித்திருந்து ஆடியும் பாடியும் கசிந்துருகி இறைவனை ஈசனை துதித்தனர். அன்றைய தினமே மஹா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.


மூன்று மணி நேரம் ஒரு ஜாமம் எனப்படுகிறது. முதல் ஜாமம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின்றது. மகா சிவராத்திரி அன்று முதலாம் ஜாமம் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் செய்து செம்பட்டாடை அணிவித்து பாலன்னம் நிவேதித்து சந்தனத் தூபமிட்டு விசேட பூஜையாக ஸ்நபனாபிஷேகம் செய்து சிவார்ச்சனையும் வழிபாடும் செய்ய வேண்டும். 

இரவு ஒன்பது மணிக்கு வரும் இரண்டாம் ஜாமப் பூஜையின் போது பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் செய்து மஞ்சள் பட்டாடை அணிவித்து பாயாசான்னம் படைத்து, அகிற் சந்தனக் கந்தத்துடன் நட்சத்திரத் தீபாராதனை செய்து வழிபட வேண்டும். 

மூன்றாம் ஜாமப் பூஜையின் போது பலோதக அபிடேகம் செய்து வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து எள்ளோதன நைவேத்தியத்துடனும் கஸ்தூரி சேர்த்து சந்தனக் கந்தத்துடனும் கருங்குங்கிலியத் தூபமிட்டு ஐந்து முகத் தீபõராதனை செய்ய வேண்டும். நான்காம் ஜாமம் கந்தோதக அபிடேகத்தின் பின் நீலப் பட்டுடுத்தி சுத்தான்னம் படைத்து புனுகு சேர்ந்த சந்தனக் கந்தத்துடன் லவங்கத் தூபமிட்டு வில்வ தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாட்டின் போது உடல் அங்கங்களால் ஆற்ற வேண்டியவற்றை முறை தவறாது செய்து முடித்தாலும் ஆத்மாவின் அங்கமாகிய மனம், காதலாகிக் கசிந்து இனிமையான இறைவனின் நினைவிலே ஊறித் திளைத்திருப்பதே அதி முக்கியமானது, ஏனெனில், அதுவே நமது விரதத்தின் அல்லது பூஜையின் பிரதானமான பலனைப் பெற்றுத் தருவதாகும்
.

பஞ்ச ராத்திரிகள்சிவனுக்குரிய ராத்திரிகள், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். இதற்காகவேஷராத்ரீசூக்தம்என்ற பாராயணம் தனியாக உள்ளது

சிவாலய தரிசனம்: சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து, அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர், சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், தயிர், சந்தனம், பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும். கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.  குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.  


சிவராத்திரியின் போது நவ கைலாயங்களுக்கு சென்று வணங்குவது சிறந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கோடாநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்போரை, ரஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்கள் நவ கைலாயங்களாக விளங்குகின்றன.
நவ கைலாயங்கள் தோன்றியதற்கும் புராண கால வரலாறு உள்ளது. அகஸ்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ஒருமுறை முக்தி பெற வேண்டி பொதிகை மலையில் சிவபெருமானை வணங்கினார்.
இதையறிந்த அகஸ்திய முனிவர் தாமிரபரணி சங்கமிங்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு பின்னர் 9 கோள்கள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக 9 கோள்களின் நிலை அறிய 9 மலர்களை ஆற்றில் விட்டு இந்த மலர்கள் எங்கு ஒதுங்குகிறதோ அங்கு லிங்கம் வைத்து வழிபாடுமாறு உரோமச முனிவருக்கு அருளினார்.
இதையடுத்து உரோமச முனிவர் 9 மலர்களை தாமிரபரணியில் திரண்டு வரும் தண்ணீரில் விட்டார். அதில், முதல் மலர் பாபநாசத்திலும், 2–வது சேரன்மகாதேவியிலும், 3–வது மலர் கோடக நல்லூரிலும், 4–வது மலர் குன்னத்தூரிலும், 5–வது மலர் முறப்பநாட்டிலும், 6–வது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும், 7–வது மலர் தென்திருப்போரையிலும், 8–வது மலர் ராஜபதியிலும், 9–வது மலர் சேர்ந்த பூமங்கலத்திலும் ஒதுங்கின.
இந்த 9 தலங்களிலும் 9 கோள்கள் முறையே பாபநாசத்தில் சூரியன், சேரன்மகாதேவியில் சந்திரன், கோடகநல்லூரில் செவ்வாய், குன்னத்தூரில் ராகு, முறப்ப நாட்டில் குரு, ஸ்ரீவைகுண்டத்தில் சனி, தென்திருப்போரையில் புதன், ராஜபதியில் கேது, சேர்ந்தபூமங்கலத்தில் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தாக்கம் இருப்பதை உரோமச முனிவர் அறிந்தார். இந்த பகுதியில் லிங்கம் வைத்து வழிபாடும்போது ஜீவன் முக்திபேறு கிடைக்கும் என்றும் சிவபெருமான் நற்கருதி அருள்வார் என்றும் அவர் உணர்ந்தார்.
அதன்படி, அமைந்த கோவில்கள்தான் நவ கைலாய கோவில்கள்.
பாபநாசம் (சூரிய தலம்):–
நவ கைலாசத்தின் முதல் தலம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. இது நெல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதரும், அம்பாள் உலக அம்பிகையும் அருள் புரிகின்றனர்.
சேரன்மகாதேவி (சந்திர தலம்):–
இந்த சிவாலாயம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. மூலவர் கைலாசநாதரும் அம்பாள் ஆவடை நாயகியும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
கோடகநல்லூர் (செவ்வாய் தலம்):–
சேரன்மகா தேவியிலிருந்து நெல்லை வரும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்லூருக்கு அருகே உள்ளது. இங்குள்ள மூலவர் கைலாச நாதர் அம்பாள் சிவகாமி.
குன்னத்தூர் (ராகு தலம்):–
நெல்லை டவுணில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு மூலவர் கைலாச நாதரும், அம்பாள் சிவகாமியும், கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
முறப்பநாடு (குரு தலம்):–
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது இந்த தலம். இங்கும் மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி அருள் புரிகின்றனர்.
தென்திருப்பேரை (புதன் தலம்):–
நெல்லை, திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8–வது கி.மீட்டரில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு மூலவர் கைலாச நாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை வீற்றிருக்கின்றனர்.
ராஜபதி (கேது தலம்):–
இந்த தலம் தென் திருப்போரையில் இருந்து 6–வது கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை அருள் புரிகின்னர்.
சேர்ந்தபூமங்கலம் (சுக்கிர தலம்):–
இந்ததலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னைக்காயல் அருகே அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்யா நாயகி. சிவராத்திரி அன்று இந்த நவ கைலாயங்களுக்கு சென்று வணங்கினால் சிவபெருமானின் அருளையும், நவகிரகங்களின் அருளையும் பெறலாம். இதனால் வாழ்வில் செல்வம் பெருகும். நோய் பிணிகள் நீங்கி சுபிட்ச வாழ்வு கிடைக்கும்.


சிவராத்திரி தினத்தில் சிவாய நம என்று ஓதுவோம்! சிவனை மனதினில் நிறுத்துவோம்!

(ஆன்மிக தகவல்களில் இருந்து தொகுப்பு)

  

Comments

  1. நவ கைலாய கோவில்கள் தகவல் தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. தக்க தருணத்தில் இன்று சிவராத்திரி என்பதை நினவு படுத்தி விழித்துக்
    கொள்ள வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரா .
    சிறப்பான இப் பகிர்வைத் தொடர்ந்து படிக்க மீண்டும் வருவேன் .வாழ்த்துக்கள் சகோதரா சிவன் அவன் அருள் பெற்று மென்மேலும் சிறப்புறுக .

    ReplyDelete
  3. பஞ்ச ராத்திரிகள், லிங்கோற்பவ காலம்,நவ கைலாயங்கள் போன்ற தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தக்து. பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  4. சிவராத்திரிக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு. இப்போ தான் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு பால் தந்து விட்டு தரிசனம் செய்து வந்தேன்.

    ReplyDelete
  5. தகவல் தொகுப்பிற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு! தொகுப்பு! மிக்க நன்றி! நண்பரே!

    ReplyDelete
  7. அருமையான தொகுப்பு.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. Nala sithy thanks

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2