உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 43
உங்களின்
தமிழ் அறிவு எப்படி? பகுதி 43
அன்பார்ந்த
வாசக நண்பர்களுக்கு வணக்கம்! கடந்தவாரம் இந்தப்பகுதியில் பகுபதம், பகாப்பதம்
குறித்து பார்த்தோம்! நினைவு இருக்கிறதா?
பகுதி
விகுதி என பிரிக்கக்கூடிய சொற்கள் பகுபதம் எனவும். அப்படி பிரிக்க முடியாத சொற்கள்
பகாப்பதம் எனவும் பார்த்தோம். நினைவுக்கு வந்துவிட்டதா?
பகாப்பதத்தின்
சில வகைகளையும் பார்த்தோம். பகுபத உறுப்புக்களை இந்தப்பகுதியில் பார்க்கலாம்.
பகுதி,
விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புக்கள்
எனப்படும்.
பகுதி:
பகுபதத்தில் முதலில் நின்று பொருள் தரும் முதனிலையைப் பகுதி என்கிறோம். பகுதி
பெரும்பாலும் ஏவல் வினையாக வரும். பகுதி பெயர்ச்சொல்லாயின் அறுவகைப்பெயர்சொற்களில்
ஒன்றாகவும் வினைச்சொல்லாயின் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வரும்.
எடுத்துக்காட்டு:
படி, ஓடி, வா,போ, செல், உண்.
விகுதி:
பகுபதத்தின் இறுதியில் நிற்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றை
காட்டும்.
எடுத்துக்காட்டு:
ஆன், அன், அர், து, அ
நடந்தான்
= நட+த்+(ந்)+த்+ ஆன்.
இதில் ஆன் என்பது விகுதி இது உயர்திணையையும்,
ஆண்பாலையும், ஒருமையையும், படர்க்கை இடத்தையும் குறிக்கிறது.
இடைநிலை:
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருகின்ற உறுப்பு ஆதலால் இடைநிலை எனப்படுகிறது.
இடைநிலை காலம் காட்டும் இது மூன்று வகையாக நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை,
இறந்தகால இடைநிலை என வழங்கப்படுகிறது.
கிறு, கின்று, ஆநின்று இந்த மூன்றும் நிகழ்கால
இடைநிலைகள்.
த்,
ட், ற், இன் இவை நான்கும் இறந்தகால இடைநிலைகள்
ப்,
வ், இவ்விரண்டும் எதிர்கால இடைநிலைகள்.
உண்கிறான், உண்கின்றான்,
உண்ணா நின்றான். இந்த சொற்களை பிரிக்கும்போது
உண்+ கிறு+ஆன் உண்+கின்று+ ஆன் உண்+ஆநின்று+ ஆன் என்று பிரியும். இவை நிகழ்கால இடைநிலைகளாம்.
பார்த்தான், உண்டான்,
சென்றான், உறங்கினான் இவைகளை பிரிக்கும்போது.
பார்+த்+த்+ ஆன், உண்+ட்+ஆன், செல்+ற்+ ஆன்,
உறங்கு+ இன்+ஆன். எனப்பிரியும். இவற்றில்
இடையில் வரும் சொற்களை கவனித்தில் கொண்டால் இறந்தகால இடைநிலை என்று புரியும்.
உண்பான், வருவான் என்ற
சொற்களை பிரிக்கும் போது உண்+ப்+ ஆன், வா+ (வரு)+ வ்+ ஆன் எனப்பிரியும் இவை எதிர்கால இடைநிலைகளாம்.
இவை தவிர்த்து இன்னொரு
இடைநிலை உண்டு. அது எதிர்மறை இடைநிலையாகும். உண்டிலன், காணலன், பாரான் இந்த
சொற்களை பிரியுங்கள்.
உண்+ ட்+இல்+ அன், காண்+ அல்+
அன், பார்+ ஆ+ ஆன்
என்று பிரியும். இதில்
வரக்கூடிய, இல், அல், ஆ என்ற எழுத்துக்கள் எதிர்மறை இடைநிலைகள். ஆகும்.
ஒரு வாக்கியத்தை படிக்கும்
போதே அது நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்த காலமா, எதிர்மறையா என்று அறிந்து
கொள்ளலாம்.
உதாரணமாக நடந்தான் என்பது
இறந்தகாலம், நடக்கின்றான் என்றால் நிகழ்காலம் நடப்பான் என்றால் எதிர்காலம்
நடந்திலன் என்றால் எதிர்மறை. இதைக் கொண்டு இடைநிலையை அறிந்து கொள்ளலாம்.
மூன்று உறுப்புக்களை அறிந்து
கொண்டோம். அடுத்த மூன்று உறுப்புக்களை அடுத்தவாரம் அறிவோம்.
விகுதியை படிக்கும்போது திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டும்
என்று சொல்லியிருந்தேன். அதென்ன இடம் என்று கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கும். அதில்
படர்க்கை இடத்தை காட்டுகிறது என்றும் சொல்லியிருந்தேன். அதென்ன படர்க்கை என்றும்
கேள்வி எழுந்திருக்கும் மனதினுள்.
இடம் என்பதை(place)என்பார்கள்
ஆங்கிலத்தில். First person, second person, third person என்று ஆங்கிலத்தில்
கூறுகிறோம் அல்லவா அதுவே தமிழில் இடம் எனப்படுகிறது.
தன்மை என்பது First person
ஆகும், முன்னிலை என்பது second person, ஆகும், படர்க்கை என்பது third person
ஆகும்.
நான், யான் என்பது தன்மையில்
ஒருமை, First person singular
நாம், யாம், என்பது தன்மையில்
பன்மை, First person plural
நீ என்பது முன்னிலையில் ஒருமை. Second person singular
நீங்கள், நீவீர், நீர்,
நீயீர் போன்றவை முன்னிலையில் பன்மை, Second person plural
தான், அது, அவன், அவள், அவர்
போன்றவை படர்க்கையில் ஒருமை, Third person
singular
தாம், அவர்கள், அவைகள், போன்றவை படர்க்கையில் பன்மை.
Third person plural.
புரிந்ததா? மீண்டும் அடுத்த
வாரத்தில் பார்ப்போம்.
இனி இலக்கிய சுவை!
காளமேகப் புலவரின் பாடல்கள்
சுவை மிகுந்தவை! இந்த பகுதியில் இதற்குமுன் சில பாடல்களை பார்த்தோம். நீண்ட
இடைவெளிக்கு பின் இப்போது ஒரு செய்யுளை படித்து ரசிப்போம்.
கவி காளமேகத்திடம் ஒருவர் முக்கால் முதல் கீழரை
வரை வரிசை முறை அலங்காரமாக ஒரு வெண்பா பாடுக என்றாராம்.
அவ்வாறே பாடி அசத்திய
காளமேகத்தின் பாடல் இதோ!
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டஞ்சாமுன் – விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது.
விளக்கம்:
முக்காலுக் கேகா முன் – முதுமைப்பருவம்
வந்தடையும் அதனால் தடியும் கைக்கொள்ளவேண்டிய மூன்று கால்களாக தோன்றும் நிலைமைக்கு
செல்லும் முன்
முன்னரையில் வீழாமுன் - அதற்கு முற்பட்ட பருவமான நரைவிழுதலான
தளர்ச்சிப் பருவத்தில் வீழ்வதற்கு முன்னதாக
அக்காலரைக் கால் கண்டஞ்சா
முன் - அக்காலத்தில் உயிரை கவர்ந்து போக
வருகின்ற காலர்களாகிய எமதூதர்களை கண்டு அஞ்சி கால்கள் நடுங்கும்முன்
விக்கி இருமாமுன் – விக்கல்
எடுத்து இருமத் துவங்குவதற்கு முன்பாக
மாகாணிக் கேகாமுன் - பெருநிலம் என்று சொல்லப்படும் சுடுகாட்டிற்கு
புறப்பட்டு செல்வதற்கு முன்பாகவே
கச்சி ஒருமாவின் கீழரையின்
றோது – காஞ்சி புரத்தில் ஒப்பற்ற மாமரத்தின் கீழாக வீற்றிருக்கும் ஏகாம்பர நாதரை
இன்றே போற்றி வழிபடத் தொடங்குவாயாக.
முதுமைப்பருவம் வந்து தடி
ஊன்றி மூன்று கால்களாக நடக்கத்தொடங்கும் முன்னரே அதற்கும் முன் நரை திரும்பும்
வயோதிக காலத்திற்கு முன்னரே எமதூதர்களாகிய காலர்கள் உயிரை பறித்துச்
சென்றுவிடுவார்களோ என்று அஞ்சி நடுங்கும் முன்னரே விக்கல் எடுத்து இருமி உயிரை
விடும் முன்னரே சுடுகாட்டிற்கு செல்லும் முன்னரே காஞ்சி புரத்தில் ஒப்பற்ற
மாமரத்தின் அடியில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரை தினமும் வழிபடு என்கிறார்
புலவர்.
இதில்வரும் அளவைகள் முக்கால், அரை, கால்,
அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்பன.
இவை தமிழரின் தொன்மையான அளவைகள், மேலிருந்து
கீழாக இதை அருமையாக செய்யுளில் இணைத்து வேறுபட்ட பொருள் தரும் வண்ணம் பாடிய
காளமேகம் போன்றவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கெல்லாம்
பெருமைதானே!
மீண்டும் அடுத்த வாரம்
சந்திப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
இந்த வார இலக்கணம் சற்று சிரமமாக இருக்கிறது. மீண்டும் இரண்டு மூன்று தடவை படித்தால் தான் நன்றாக புரியும் என்று நினைக்கிறேன் (குறிப்பாக இடைநிலை பற்றியது). செய்யுலும் அதற்கான விளக்கமும் அருமை.
ReplyDeleteசுரேஷ் - இன்னும் ஒரு திருத்தத்தை செய்தால் இந்தப்பகுதி மேலும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அதாவது, ஒவ்வொரு புதிய பகுதியின் ஆரம்பத்தில், சென்ற வார பகுதியின் லிங்க்கை அளித்தீர்கள் என்றால், பழைய பகுதிக்கு செல்வதற்கு எளிதாக இருக்கும்.
"வீணாக பயப்படுவதற்கு முன் அவன் பாதம் பற்று" என்பதை எவ்வளவு அழகாக சொல்லி உள்ளார் காளமேகப் புலவர்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த இலக்கணம், காளமேகப் புலவர் எல்லாம் பள்ளியில் படித்தது! திரும்ப இப்போது இங்கு தாங்கள் கொடுத்துள்ளது திரும்பவும் படிக்கவும்,நினைவு கூரவும் உதவுகின்றது! மிக்க அருமையான, பயனுள்ள ஒரு பதிவு! நன்றி! தொடரவும்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
ReplyDeleteதொடருங்கள்
நன்றி
தொடருங்கள் ...தொடர்கிறேன்...
ReplyDeleteநல்ல பதிவு முதுமை வருமுன்னரே ஆண்டவனை வழிபடுதல் தான் சிறந்தது எனும் வெண்பா சிறப்பே. கண் கெட்ட பிறகேன் சூரிய நமஸ்காரம் என்பது போல், முதுமை வந்தபிறகு வழிபடுதல் முறையல்ல தான்.
ReplyDeleteநன்றி சகோதரரே ! வாழ்த்துக்கள்....!
நல்ல பகிர்வு.... வாழ்த்துகள்.
ReplyDelete