ஒரு நெல் கூலி! பாப்பா மலர்!

ஒரு நெல் கூலி!


வேளகாபுரம் என்ற ஊரில் பண்ணையார் ஒருவர் ஏராளமான நிலபுலன்களுடன் வசதியாக வாழ்ந்தார். அவ்வளவு வசதி இருந்தும் மகாக் கருமி அவர். தன்னுடைய நிலத்தில் உழைக்கும் வேலைக்காரர்களுக்கு கூலி சரியாகத்தரமாட்டார். வேலை மட்டும் சக்கையாக பிழிந்து எடுப்பார். இதனால் அவரிடம் வேலைக்கு வரவே அனைவரும் பயப்பட்டனர். அப்படி சேர்ந்தவர்களும் சீக்கிரம் வேலையை விட்டு ஓடிவிடுவர்.
     வேளகாபுரத்தில் வடிவேலன் என்ற இளைஞன் வசித்துவந்தான். நல்ல புத்திசாலி! அவன், ‘நான் மட்டும் பண்ணையாருடைய வேலைக்காரனாக இருந்தால் அவரை கதற அடிப்பேன். அவரை ஓடஓட விரட்டுவேன். இப்படி ஓடிவரமாட்டேன்!’ என்று தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.
    இந்தவிசயம் அரசல் புரசலாக பண்ணையார் காதுக்கு சென்றது. நம்மை யாரடா அவன் விரட்டுபவன்? அவனை வரவழையுங்கள்! எண்ணி பத்தே நாளில் அவன் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று வேலையைவிட்டு ஓட்டிவிடுகிறேனா இல்லையா பாருங்கள்! என்று சொல்லி வடிவேலனை அழைத்துவருமாறு கூறினார்.
     வடிவேலனும் பண்ணையாரிடம் வந்தான். நீதான் என்னை விரட்டுவேன் என்று கூறியவனா? உன்னால் என்னிடம் பத்துநாட்கள் வேலை செய்யமுடியுமா? என்று ஏளனமாகக் கேட்டார் பண்ணையார்.
   “ நீங்கள் எவ்வளவு கூலி தருவீர்கள்? அதைச்சொன்னால் எனக்குப் பிடித்திருந்தால் வாழ்நாள் முழுமையும் இங்கேயே வேலை செய்கிறேன்” என்றான் வடிவேலன்.
   நீ வேலை செய்வதை பார்க்காமல் எப்படிக் கூலி பேச முடியும்? நல்ல வேலைக்காரனுக்கு பத்துமூட்டை நெல், இரண்டுவேளை சாப்பாடு, தேவையான உடை தருகிறேன் என்றார் பண்ணையார்.
  “ நான் நல்ல வேலைக்காரன் தான்,எனக்கு நீங்கள் நாள்தோறும் ஒரு இலை நிறைய சாப்பாடு மூன்று முறை போட வேண்டும். கண்டிப்பாக இரண்டாம் முறை சாப்பாடு கேட்க மாட்டேன். ஆண்டுக்கு ஒரே ஒரு நெல் கூலியாகத் தாருங்கள். அதையும் அதிலிருந்து விளையும் நெல்லையும் விதைக்க உங்கள் நிலத்தை எனக்குத் தரவேண்டும். உங்கள் விருப்பம் போல எனக்கு உடை தாருங்கள். இவை எனக்கு போதும். நீங்கள் தரும் எல்லா வேலைகளையும் நான் ஒழுங்காக செய்வேன். வேலைக்குப் பயந்து நான் பாதியில் ஓடிவிட்டால் என் வலக்கை கட்டைவிரலை நீங்கள் வெட்டிவிடலாம். சொன்னபடி எனக்கு கூலி தரவில்லையானால் நான் உங்கள் கட்டைவிரலை வெட்டிவிடுவேன்.”
     இதுகுறித்து நீங்கள் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வந்தபின் சொல்லுங்கள். ஊரார் முன்னிலையில் ஒப்பந்தம் எழுதி கையெழுத்துப் போடுவோம். மறுநாளே நான் உங்கள்வேலைக்காரனாகி விடுவேன் என்றான் வடிவேலன்.
    ஒரே இலை நிறைய மூன்று வேளைச் சாப்பாடு! ஆண்டுக்கு ஒருநெல் கூலி! இதைக் கேட்ட பண்ணையாருக்கு ஒரே மகிழ்ச்சி! உடனே சம்மதித்து ஒப்பந்தம் எழுதி ஊரார் முன்னிலையில் இருவரும் கையெழுத்திட்டனர். வடிவேலன் அன்றுமுதல் பண்ணையாரின் வேலைக்காரன் ஆகிவிட்டான்.
    முதல் நாள் வடிவேலன் வேலை செய்து முடித்துவிட்டு ஒரு பெரிய முழு வாழை இலையை எடுத்துக் கொண்டு பண்ணையாரிடம் வந்து சாப்பாடு கேட்டான்.
   என்ன இவ்வளவு பெரிய வாழைஇலையை கொண்டுவருகிறாய்? என்றார் பண்ணையார்.
   நான் கொண்டுவரும் இலை நிறைய சாப்பாடு போட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம் என்றான் வடிவேலன். வேறுவழியில்லாமல் தலையசைத்தார் பண்ணையார். நாள்தோறும் முழு வாழை இலை நிறைய மூன்றுவேளை சாப்பாடு அவனுக்கு கிடைத்தது. இப்படியே வடித்துக்கொட்டினால் நம் கதி என்னாவது? என்று புலம்ப ஆரம்பித்தாள் பண்ணையாரின் மனைவி.
      நல்லா உழைக்கிறான்! பசிக்கத்தான் செய்யும்! சாப்பிடட்டும் ஆண்டுக்கு ஒரு நெல் கூலிதானே! போகிறது என்றார் பண்ணையார்.
   ஒரு வருடம் ஓடிப்போனது. வடிவேலனை அழைத்த பண்ணையார் இந்தா! உன் ஒரு ஆண்டுக் கூலி ஒரு நெல். இதை பாதுகாப்பாக வை! எலி, குருவி எவையேனும் கொத்திச் சென்றுவிடப்போகிறது! என்று கேலியாகச் சொன்னார் பண்ணையார்.
    வடிவேலன், பணிவாக இதை விதைக்க உங்கள் நிலத்தில் இடம் கொடுக்க வேண்டும்! என்றான். பண்ணையார் சிரித்தபடி! ஆகா! ஏதோ ஒரு மூலையில் விதைத்துக் கொள்! என்று சொல்லிவிட்டார். வடிவேலன் அதை நிலத்தில் ஒரு மூலையில் விதைத்தான். அந்தப் பயிர் முளைத்து வளர்ந்ததும் தன் வேலைக்கிடையில் அதை கண்ணும் கருத்துமாக கவனித்தான்.அது மூன்றே மாதத்தில் ஒரு கைப்பிடி நெல்லை அவனுக்குத்தந்தது. அதை எடுத்து சென்ற வடிவேலன் பண்ணையாரிடம் இதை விதைக்க அனுமதி கேட்டான். அவரும் சரி விதைத்துக்கொள் என்று அசட்டையாக சொல்லிவிட்டார். அந்த நெல்லை விதைத்ததும் அது வளர்ந்து ஆறுமாதத்தில் ஒரு கூடை நெல் அவனுக்கு கிடைத்தது. அதை விதைக்க நிலம் கேட்டான்.

    இப்படி பண்ணையாரிடம் வேலைப் பார்த்துக் கொண்டே ஒரு நாலு வருடத்திற்குள் அவரது நிலம் மொத்தத்தையும் கைப்பற்றிவிட்டான் வடிவேலன். இப்போதுதான் பண்ணையாருக்கு நாம் வசமாகச் சிக்கிக்கொண்டோம் என்று புரிந்தது. இனி அவரிடம் தருவதற்கு நிலம் இல்லை என்ன செய்வது?
    வடிவேலனை அழைத்து! இளைஞனே! எனக்கு புத்திவந்தது! இனி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் நிலம் இல்லை! நிலம் இல்லாத நான் உனக்கு வேலையும் தர முடியாது. என்னை விட்டுவிடு! என்றார்.
    வடிவேலனோ ஒப்பந்தப்படி கட்டைவிரலை கொடுங்கள்! சென்றுவிடுகிறேன்! என்றான்.
   ஊர் மக்களும் பண்ணையாரின் மேல் பரிதாபம் கொண்டு, வடிவேலா! பாவம் விட்டுவிடு! என்றார்கள்.வடிவேலனோ, இவருக்கா பரிதாபம் பார்க்கிறீர்கள்! இவர் பண்ணையார் என்ற திமிரில் உங்களை எல்லாம் கசக்கி பிழியவில்லையா? ஒப்பந்தப்படி கட்டை விரலை இழக்க சம்மதிக்கச் சொல்லுங்கள்! நான் அவருடைய எல்லா நிலங்களையும் திருப்பித்தந்து விடுகிறேன்! என்றான்.
    பண்ணையார், தன்னுடைய அகம்பாவச் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இளைஞனே! எனக்கு புத்திவந்துவிட்டது! இனி யாருக்கும் துன்பம் செய்யமாட்டேன்! எனக்கு நல்லபாடம் புகட்டினாய்! நான் என் கட்டை விரலை இழக்க சம்மதிக்கிறேன்! பிரதி உபகாரமாய் ஒன்று மட்டும் கேட்கிறேன். என்னுடைய மகளை நீ மணந்துகொள்ள வேண்டும் என்றார்.
    அனைவரும் திருந்திய பண்ணையாரை மன்னித்துவிடும்படி கூறினார்கள். ஒரு நல்ல நாளில் பண்ணையாரின் மகளை வடிவேலன் மணந்து கொண்டான். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

 {செவிவழிக்கதை}


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இது மாதிரி கதைகளெல்லாம் நான் சின்ன வயதாக இருக்கும்போது என் பாட்டி இன்னும் சுவைபடக் கூறுவார்... இதுபோன்ற தரமான கதைகள் இப்போது சிறுவர் மலர்களில் வருவதில்லை... பாவம் நம் குழந்தைகள்...

    ReplyDelete
  2. நம் குழந்தைகளுக்கு இம்மாதிரியான கதைகள் வாசிக்க கிடைக்காதது வேதனையான ஒன்று...!

    ReplyDelete
  3. அன்புள்ள சுரேஸ் அண்ணா,

    தங்களுடைய பின்னூட்டம் ஒன்றில் முக நூல் வாயிலாக வந்தேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் இன்னும் சில பல இடங்களிலும் சிலர் முக நூல் என்று எழுதி இருப்பதைக்கூட பார்த்திருக்கிறேன். அது என்ன என்றே எனக்கு புரியவில்லை. மடிக்கனணி என்கிறார்களே அது போன்ற வஸ்துவா இல்லை ஏதேனும் சஞ்சிகையா ?

    எனக்கு அறியத்தாருங்கள்.

    கதிர் முருகன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறீர்களா கதிர்?! முகநூல் என தமிழில் வழங்கப்படுவது ஃபேஸ்புக்

      Delete
  4. தெரியாத இந்த மாதிரி செவிவழிக் கதைகளை உங்களின் எழுத்து மூலம் நான் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  5. மிகவும் சிறப்பான கதை..குழந்தைகளுக்கு கூறப்படவேண்டியவை..பகிர்விற்கு மகிழ்ச்சி..:)

    ReplyDelete
  6. நல்ல கதை. பகிர்ந்ததற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2