தைக் கிருத்திகை! ஆண்டார்க்குப்பம் முருகர் தரிசனம்!

தைக் கிருத்திகை! ஆண்டார்க்குப்பம் முருகர் தரிசனம்!ஸ்ரீ காங்கேயம் வஹ்நிகர்பம் சரவணஜநிதம்
ஞான சக்திம் குமாரம் ப்ரஹ்மண்யம் ஸ்கந்த தேவம்
குஹம் அமலகுணம் ருத்ர தேஜஸ்வரூபம் ஸேநாந்யம்
தார்கக்நம் குரும் அசலமதிம் கார்த்திகேயம் ஷடாஸ்யம்
ஸுப்ரஹ்மண்யம் மயூர த்வஜ ரத ஸஹிதம்
தேவ தேவம் நமாமி!

சென்னை –நெல்லூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 35கி.மீட்டர் தொலைவில் உள்ளது தச்சூர் கூட்டுச்சாலை. இங்கிருந்து பொன்னேரி செல்லும் பிரிவுச்சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் ஆண்டார்க்குப்பம். கோயிலுக்குச்செல்லும் நுழைவாயில் அமர்க்களமாய் நம்மை வரவேற்கும். வளைவினுள் நுழைந்த் சுமார் ஒருகிலோமீட்டர் சென்றால் முருகனின் கோபுர தரிசனம் கிடைக்கும்.

புராணகாலத்தில் பாலசுப்ரமண்யர் இத்தலத்தில் உரோமச முனிவருக்கும் சம்வர்த்தனருக்கும் காட்சி அளித்தார். இந்த ஊர் சுப்ரமண்யபுரம் என்று வழங்கலாயிற்று.
வணங்கும் அடியார்களைக் ஆண்டு கொண்டு அருள்புரியும் ஆண்டவன் கோயில் கொண்டுள்ள தலமாதலால் ஆண்டிகள் குப்பம் எனவழங்கி பின் ஆண்டார்க்குப்பம் எனமறுவி வழங்கி வரப்படுகிறது.
  சுமார் 5000 த்திற்கு மேற்பட்ட குடும்பத்தினரின் குலதெய்வம் இந்த ஆண்டார்குப்பம் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டார்க் குப்பத்து முருகன் அழகன். கருவறையில் ஆஜானுபாகுவாக கம்பீரமாக காட்சியளிக்கிறார் கந்தன். அவரது முகம் அருள்மழை பொழியும் வண்ணம் அமைந்துள்ளது. தனது இரு கரங்களையும் இடுப்பில் ஊன்றி நின்று பிரம்மசாஸ்தாவாக நின்று கொண்டிருக்கிறார் முருகக் கடவுள். இவரது எதிரிலே சிறைபட்ட பிரம்மன் தாமரை மீது அமர்ந்திருக்கிறார்.
     அது என்ன பிரம்ம சாஸ்தா? பிரம்மன் ஏன் சிறைபட்டார்?
சிவ தாண்டவம் காண கைலாயத்திற்கு அனைத்து தேவர்களும் சென்று கொண்டிருந்தனர். அனைவரும் கைலாயத்தில் நுழையும்போது முதலில் விநாயகர், பின் முருகர் என வணங்கி பின் சிவதாண்டவம் பார்த்து வந்தனர். அப்போது பிரம்மன் அவசர அவசரமாக உள்ளே நுழைய அவரை தடுத்தார் முருகன். என்னப்பா விளையாடுகிறாய்? சிவதரிசனம் செய்ய வேண்டும்! நேரமாகிறது? என்றார் பிரம்மா!
    பிள்ளை விளையாட்டு அதோடு நிற்கவில்லை! சரி சரி! நீர் யார் என்று சொல்லிவிட்டு பின்னர் தரிசனம் செய்ய செல்லுங்கள்! என்றார் கந்தன். அட! என்னை தெரியாதா? என்னை பிரம்மன் என்பார்கள் முப்பெரும் தேவர்களில் நான் தான் முதல்வன்! என்றார் பிரம்மா!
    அப்படியா? பிரம்மனே! உனது தொழில் என்ன? என்னப்பா கேள்வி மேல் கேள்வி கேட்டு உயிரை எடுக்கிறாய்? அது எமனின் தொழிலாயிற்றே! நான் உங்களின் தொழிலைக் கேட்கிறேன்! என் தொழில் படைப்பது! சகல ஜீவராசிகளையும் படைப்பவன் நான் தான்! கர்வமாக சொன்னார் நான்முகன்.
   நான்முகரே! படைப்பது உம் தொழில் என்றால் அதன் ஆதாரம் எது? எதைக்கொண்டு படைக்கிறீர்!  ‘ஓம்” என்று ஆரம்பித்தார் பிரம்மா! முதலில் இந்த ஓமிற்கு அர்த்தம் சொல்லும்!
முழித்தார் பிரம்மா! என்ன இதன் அர்த்தம் தெரியாமல் நீர் என்ன படைப்பது? நானே படைக்கிறேன்! இதோ உன்னை சிறையில் அடைக்கிறேன்! என்று பிரம்மனை சிறை வைத்து காவலாய் எதிரே நின்றார் கந்தன்.
   அப்படி பிரம்மனை சிறைவைத்து காவலாய் நின்ற தலமே ஆண்டார்க்குப்பம். இதனால்தான் இங்கு அபயவரத ஹஸ்தம் கிடையாது. இரு கரங்களையும் இடுப்பில் ஊன்றி காட்சி தருகிறார்.
 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்! இறைவனை தரிசிக்க முடியாவிடினும் இறைவன் வசிக்கும் ஆலய கோபுர தரிசனம் செய்தல் விசேஷமாகும். இந்த ஆலயத்தில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காட்சி அளிக்கிறது. முருகனின் புராணச் சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள் இந்த கோபுரம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. கொடிமரம், மயூர வாகனம், பலிபீடம் அடுத்து பதினாறுகால் மண்டபத்தில் நுழைந்தால் அங்கே சிறையில் அடைபட்ட பிரம்மன் தாமரை பூவில் அரூப நிலையில் காணப்படுகிறார். இந்த பதினாறு தூண்களில் சிறப்பான சிற்பங்கள் உள்ளன.
 உள்ளே பிரசன்ன விநாயகரை தரிசனம் செய்து நுழைந்தால் கருவறை. குமரக்கடவுள் கருணை உருவாக காட்சி தருகிறார். கந்தனின் அருளைப்பெற்று திரும்பி வருகையில் காசிவிஸ்வ நாதரும் பின் விசாலாட்சி அம்பிகை சன்னதிகளும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் நவக்கிரகமும் உள்ளது.
 உற்சவர் சன்னதிகளும் உள்ளன. பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தினை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

 கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் வழிபாடு செய்தால் கடன் தீரும்.
  இத்தலத்தின் விருட்சம் சரக்கொன்றை! இந்த தலவிருட்சத்தை வணங்கினால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏராளமான பக்தர்கள் இதை வணங்கிச்செல்கிறார்கள்.
 கிருத்திகை, சஷ்டி, விசாகம்  நாட்களில் இந்த முருகனை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை!
   குழந்தைப்பேறு விரும்புகிறவர்கள் இத்தலத்தில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தன்று  இரவு தங்கி காலையில் கந்தனை வழிபட வேண்டும். மூன்று கிருத்திகை இவ்வாறு வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
  சுமார் ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக காட்சியளிக்கும் குமரக்கடவுள் இங்கே காலையில் பாலகனாகவும், பகலில் குமரனாகவும், இரவில் வயோதிகனாகவும் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி அளிப்பது விசேஷமாகும்.

  பாவவினை போக்கிடும் பாலநதி வளர்கின்ற
  பதியில் ஆண்டார் குப்பம் வாழ்
  பரமனின் மைந்தனே! வரமருள் முருகனே!
  பால சுப்ரமணியனே!

தைக் கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் சுகம் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
 


Comments

  1. விசேசமான அலங்காரம் தகவல் உட்பட காவலாய் நின்ற தலத்தின் சிறப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
  2. சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2